மனித உயிர்கள் மலிவுப் பதிப்பல்ல

மானிடப்பிறவி மகத்தானது. "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்றார் ஒளவையார். "மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்றார் அப்பரடிகள்.
மனித உயிர்கள் மலிவுப் பதிப்பல்ல

மானிடப்பிறவி மகத்தானது. "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்றார் ஒளவையார். "மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்றார் அப்பரடிகள்.

"பிறவிகளிலேயே மனிதப்பிறவி அதிசயமானது' என்றார் மார்க்ஸிம் கார்க்கி.  புல்லாகி, பூடாகி, புழுவாகி, குரங்காகிப் பின் மானுடம் வந்துற்றது. அப்பொழுது சார்லஸ் டார்வினைப் பார்த்து, "மனிதப் பிறவிக்கு அடுத்த பரிமாணம் என்ன' எனக் கேட்டனர். அதற்கு டார்வின், "பரிமாணக் கொள்கையின் இலட்சியமே மனிதப்பிறவியை அடைவதுதான்' என்றார்.

அப்படிப்பட்ட மனித உயிர்கள் இன்று புழுக்களைப்போல் கொல்லப்படலாமா?
1930-இல் ஹிட்லரால் ஐந்து லட்சம் யூதர்கள் கொல்லப்பட்ட பிறகும், மானுடம் பாடம் கற்கவில்லையே! மும்பையிலிருக்கும் இஸ்ரேலிய தூதரகம் 1960-இல் ஒரு கையேட்டை வெளியிட்டது. அந்தக் கையேடு, உலகம் முழுதும் உயிருக்குப் பயந்து ஓடிய யூதர்களில், இந்தியாவிற்கு வந்த யூதர்கள் மட்டுந்தான் எந்தவிதப் பாதிப்புக்கும் ஆளாகாமல் நாடு திரும்பியதாகச் சொல்லுகிறது.

காஸாவில் நிகழ்த்தப்பட்ட படுகொலையில் 500 பேர் கொல்லப்பட்டார்கள். 700 குழந்தைகள் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிச் சிதைக்கப்பட்டிருக்கின்றனர். காஸô மருத்துவமனையில் படுக்கைகளே இல்லை; நோயாளிகளுக்கு மருந்துகள் இல்லை; பச்சைக் குழந்தைகள் தாய்ப்பாலின்றித் தவிக்கின்றன. இதைப்போலவே அக்டோபர் 7-இல் இஸ்ரேல் மீது 250 கி.மீ. வேகத்தில் ஏவப்பட்ட ஏவுகணைகளால் 1,500 யூதர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெணகளும் குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் கிடையாது.  இரண்டு நாட்டின் எல்லைகளும் முற்றுகையிடப்பட்டிருக்கின்றன.
அக்டோபர் முதல் வாரம் யூதர்கள் "சுகோத் விழா' என்ற விழாவை மகிழ்ச்சியோடும், அழுகையோடும் கொண்டாடுகின்றனர்.

அங்கிருக்கும் மலைப்பாதையில் தலை சாய்ந்துத் தங்களுடைய தேவன் எப்பொழுது வருவார் எனக் கண்ணீர் விட்டு அழுவார்களாம். அங்கிருக்கும் மலை மூன்று மதத்தவர்களும் போற்றி வணங்குகின்ற மலை.  ஆனாலும் இருதரப்பினரும் ஏவுகணைகளை ஏவிப் போராடுகின்றபோது, அந்த மலை பாதிக்கப்படாதா?  அங்கு தெய்வங்கள் வந்து தங்கியதாக, தங்குவதாக நம்பப்படும் மலையை இருதரப்பினரும் போற்றிப் பாதுகாக்க வேண்டாமா? இத்தனைக் கொடுமைகளுக்கு இடையிலும் ஐ.நா. சபை, நிராயுதபாணியாக நிற்பது பரிதாபமல்லவா?

இருதரப்பினரும் அடைபட்டுக் கிடக்கும் இந்தச் சூழ்நிலை, சங்க காலத்திலும் இருந்திருக்கிறது. சோழர்கள் நலங்கிள்ளியும் - நெடுங்கிள்ளியும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். நலங்கிள்ளி உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான்; நெடுங்கிள்ளி ஆவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். மண்ணாசையாலும், பதவியாசையாலும் இருவருக்கும் இடையில் போர் மூண்டது.  நலங்கிள்ளி படைபலம் வாய்ந்த மன்னன்; நெடுங்கிள்ளி பலவீனமான மன்னன்.

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளியின் ஆவூர் மீது படையெடுத்தான். போருக்குப் பயந்து நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டையை மூடிவிட்டான். பல நாட்கள் ஆகியும் திறக்கவில்லை. அதனால், பசி மிகுந்த யானைகள் உணவு பெறாது, கட்டிய கம்பத்தைச் சாய்த்து, நிலத்தில் புரண்டுப் பிளிறின. வீடுகளில் குடிநீர் இல்லாமல் மக்கள் தவித்தனர். மங்கையர் பூவில்லாமல் கூந்தலை முடிந்தனர் (புறநானூறு - 44).

இந்த நிலையைக் கேள்விப்பட்ட கோவூர்க்கிழார் எனும் புலவர் நெடுங்கிள்ளியை நோக்கி "நெடுங்கிள்ளியே! நீ அறவாழியாக இருந்தால் கோட்டைக் கதவைத் திற! வீரனாக இருந்தால் போருக்குப் புறப்படு! கோட்டைக் கதவை மூடி வைப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும்' எனக்கூறிவிட்டு, நலங்கிள்ளியிடம் செல்லுகிறார்.

"நலங்கிள்ளியே! நீ அணிந்திருப்பது சேரமன்னனுடைய பனைமாலை அன்று; பாண்டியனுடைய வேப்பமாலையும் அன்று; நீங்கள் இரண்டு பேரும் அணிந்திருப்பது ஆத்திமாலையே! உங்களில் ஒருவர் தோற்றாலும், தோற்பது சோழர் குடியே! இரண்டு பேரும் வெல்லுதல் நடக்காத ஒன்று! அதனால் போரைத் தவிருங்கள் (புறநானூறு - 45) என அறிவுறுத்தியவுடன், நலங்கிள்ளியும் போரைக் கைவிட்டான்; நெடுங்கிள்ளியும் கோட்டையைத் திறந்தான். ஆவூர் மக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வு கிட்டியது. அன்று ஆவூர் மக்களைக் கோவூர்க்கிழார் காப்பாற்றியதுபோல், இன்று இஸ்ரேல் மக்களையும் - காஸô மக்களையும் காப்பாற்றுவதற்கு யாரும் இல்லாமல் போனது ஏன்?

அன்றிருந்த போர் தருமங்கள் எதுவும் இன்று இல்லை. அன்று ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் போர் வந்தால், முன்கூட்டியே தூது அனுப்பித் தெரிவிப்பார்கள். திருவள்ளுவர் தூதுக்குரிய தகுதிகளைச் சொல்லுவதற்கு ஓர் அதிகாரத்தையே ஒதுக்கியிருக்கிறார். சேரமானுக்கும் - அதிய
மானுக்கும் போர் மூளுகின்ற தருவாயில், ஒளவையாரே தூது போய் நடக்கவிருந்த போரை நிறுத்தியிருக்கிறார்.

பண்டைக் காலத்தில் எந்தெந்த உயிர்கள் போர்க்காலங்களில் காக்கப்பட வேண்டும் என்ற நியாயம் இருந்தது.  சங்க காலத்தில், "பசுமாடுகள், அந்தணர்கள், நோயாளிகள், இறந்தவர்களுக்கு வருடந்தோறும் செய்ய வேண்டிய திவசங்களைச் செய்வதற்குக் கடமைப்பட்டவர்கள், பிள்ளைகளைப் பெறாதவர்கள் ஆகிய அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று சேருங்கள்' என முரசறைந்து தெரிவிப்பார்கள் (புறநானூறு - 9) என நெட்டிமையார் எனும் பெண்பாற் புலவர் பாடியிருக்கிறார்.

இளங்கோவடிகள் காலத்திலும் இந்த அறம் கடைப்பிடிக்கப்பட்டதைக் கண்ணகி வாக்குமூலமாகத் தருகிறார் காப்பிய ஆசிரியர். கண்ணகி மதுரையை எரிப்பதற்கு அங்கியங்கடவுள் ஏவல் கேட்டு நிற்கிறது. அப்பொழுது யார் யாரை எல்லாம் எரிக்கக்ககூடாது எனப் பட்டியல் தருகின்றாள் கண்ணகி.
பார்ப்பார் அறவோர் பசுப் பத்தினிப் பெண்டிர்

மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க 

என்று தெய்வத்திற்கே வேண்டுகோள் விடுகிறார். இவற்றைத் தவிர, எழுத்தில் வராத சில நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டிருக்கின்றன. போர்க்களத்தில் ஒரு வீரன் தன்னுடைய குடுமியை இழுத்து முடிகின்ற நேரத்தில், அம்பு போடக்கூடாது. புறமுதுகிட்டு ஓடுவோர் மீது அம்பு போடக்கூடாது. எந்த ஆயுதமும் இல்லாமல் நிராயுதபாணியாக நிற்கின்றவர்கள் மீதும் ஆயுதங்களை ஏவக்கூடாது.  இராமாயணத்தில் இராவணன் நிராயுதபாணியாக நிற்கின்றபோது, அவன்மீது அம்பு போடாமல், "இன்று போய் நாளைக்கு வா' எனச் சொல்லியனுப்புகிறான் இராமன்.

மகாபாரதத்தில் கண்ணன் துணை வேண்டி, தருமனும் துரியோதனனும் துவாரகைக்கு விரைகின்றனர். கண்ணன் அனந்தசயனத்தில் இருந்ததால், கர்வம் பிடித்த துரியோதனன் கண்ணனின் தலைமாட்டில் அமர்கிறான். தருமன் கண்ணனின் திருவடி பக்கத்தில் அமர்கிறான். அப்பொழுது முதலில் கண்விழித்துத் தருமனின் முகத்தில் விழித்து, தருமனுக்குத் தன்னையே தருகிறான். துரியோதனன் கேட்டபொழுது, "நான் பாண்டவர்களுக்குக் குதிரை, தேரை ஓட்டுவேனேயன்றி, ஆயுதம் ஏந்தி போர் செய்ய மாட்டேன்' என வாக்குக் கொடுக்கிறான். அந்த வாக்குறுதியைக் கடைசி வரையில் காப்பாற்றுகிறான்.

மேலும், போர்க்களத்தில் ஒரு வீரனின் இடுப்புக்குக் கீழே ஆயுதங்களை ஏவக்கூடாது எனும் அறநெறியும் அக்காலத்தில் இருந்தது. அதனால்தான் தன்னுடைய உயிர், தொடையில் இருக்கும்படியாக வரம் வாங்குகின்றான், துரியோதனன். நம்முடைய இலக்கியத்தில் வேறோர் நயமான செய்தியும் உண்டு. போர்க்களத்தில் ஒரு வீரன் ஈட்டி ஏந்தி, எதிர்த்து வரும் யானையின் மேல் எறிய நினைக்கிறான். கடைசியில் அந்த யானை ஒரு கையோடு, துதிக்கையோடு வருகிறது.  இரு கையோடு இருக்கும் தான், அதன் மீது ஈட்டி எய்யக்கூடாது எனத் தவிர்த்து விடுகிறான்.

மானிடப் பிறவியின் மகத்துவத்தை மற்று எவரைக் காட்டிலும் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தவர், கம்பர். மனிதனாக வந்த இராமனைப் பார்த்தவுடன் சுக்கிரீவன், "நான்முகன், சிவபெருமான் மற்றுமுள்ள தெய்வங்கள் அனைத்தையும் மானுடம் வென்றுவிட்டது' என்பான். "ஆறுகொள் சடிலத்தாலும் அயலும் என்று இவர்களாதி, வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றது'  என்பது கம்பர் வாக்கு.

இன்றைக்கு உலகத்து மக்கள் அனைவரும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு மண்ணுலகில் நிறைய வாய்ப்புகள் இருந்தாலும், பேராசையாலும், போர் வெறியாலும் மனிதப் பிறவிகள் மலிவுப்பதிப்பு
களைப் போல் தெருவில் கிடக்கின்றன. "எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா! எங்கள் இறைவா' எனப் பாரதி எவ்வளவு எதிர்பார்ப்புகளோடு பாடியிருக்கிறார்.

மண்ணுலகில் பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் வாழத் தெரியாத மக்கள் வானுலகிலும் சந்திரமண்டலத்திலும் இடம் தேடுவது நியாயமில்லையே! மகா அலெக்சாண்டர் எப்போதும் நாடு பிடிப்பதிலேயே நாட்டம் கொண்டிருந்தபோது, அவனைத் திருத்துவதற்கு ஒரு வழி கண்டார்,

அவனுடைய குருநாதராகிய டையோஜினியஸ். போருக்குப் புறப்படும்போதெல்லாம் குருநாதரின் ஆசி பெற்றுச் செல்வது, அலெக்சாண்டரின் பழக்கம்.

அப்படியொரு முறை சென்றபோது, நான்கு மனித கபாலங்களை அடுக்கி வைத்து, "அலெக்ஸ்! இவற்றுள் உன் அப்பா பிலிப்பின் கபாலம் எதுவென்று சொல்லிவிட்டுப் போ' என்றார். சோதனையின் பொருளைப் புரிந்து கொண்ட அலெக்சாண்டர் அன்றிலிருந்து போருக்குப் போவதையே நிறுத்திவிட்டான்.
தானும் வாழாது, பிறரையும் வாழவிடாமல் செய்கின்ற மனிதர்களைப் பார்த்து, "ஒருபொழுதும் வாழ்வது அறியார், கருதுப கோடியும் அல்ல பல' என நெஞ்சில் நிற்கும்படியாகப் பாடியுள்ளார், திருவள்ளுவர்.  

மனித உயிர்கள் மனிதனால் படைக்கப்பட்டவை அல்ல. இறைவன் கொடுத்த உயிரைப் பறிப்பது நியாயமன்று. இந்த உலகில் எடுத்தபின், திருப்பித் தர முடியாதது உயிர் ஒன்றே!

கட்டுரையாளர்:
பேராசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com