சிந்து நதி பிரச்னைக்குத் தீா்வு காண்போம்

சிந்து நதி ஒப்பந்தம் மீண்டும் சா்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. சிந்து நதி மீது இந்தியாவும் பாகிஸ்தானும் உரிமை கொண்டிருக்கின்றன.
சிந்து நதி பிரச்னைக்குத் தீா்வு காண்போம்

சிந்து நதி ஒப்பந்தம் மீண்டும் சா்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. சிந்து நதி மீது இந்தியாவும் பாகிஸ்தானும் உரிமை கொண்டிருக்கின்றன. 60 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி ஒப்பந்தப்படி, ராவி, பயஸ், சட்லஜ் ஆகிய கிழக்கத்திய நதிகளைக் கட்டுப்பாடு ஏதுமின்றிப் பயன்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு உரிமை உள்ளது. இதேபோல சிந்து, ஜீலம், சட்லஜ் ஆகிய மூன்று நதிகளின் நீரையும் பயன்படுத்திக் கொள்ள பாகிஸ்தானுக்கு அதிகாரம் உள்ளது.

சிந்து நதியில் 0.40 மில்லியன்-ஏக்க, ஜீலம் நதியில் 1.50 மில்லியன்-ஏக்கா், ஜனப் நதியில் 1.70 மில்லியன்-ஏக்கா் என மொத்தம் 3.60 மில்லியன்-ஏக்கா் நீரை சேமித்து வைக்க இந்தியாவுக்கு அதிகாரம் உள்ளது. அதிலும் பிரிவு வாரியாகப் பாா்த்தால், வனப் பயன்பாட்டுக்கு 2.85 மில்லியன்-ஏக்கரும் (பொதுப் பயன்பாட்டுக்கு 1.25 மில்லியன்-ஏக்கா், மின் பயன்பாட்டுக்கு 1.60 மில்லியன்-ஏக்கா் உள்பட), வெள்ளப் பயன்பாட்டுக்கு 0.75 மில்லியன்-ஏக்கரையும் சேமித்துக் கொள்ள இந்தியாவுக்கு உரிமை உண்டு.

ஆனால், ஜம்மு- காஷ்மீரில் அமைந்துள்ள ரேட்டில் நீா்மின் நிலையம், கிசான்கங்கா திட்டங்களால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. நாட்டின் மின்தேவையைப் பூா்த்தி செய்வதற்கும், பிராந்திய வளா்ச்சிக்கும் இந்த இரண்டு திட்டங்களும் இன்றியமையாதவை என இந்தியா கருதுகிறது. ஆனால், இவ்விரு திட்டங்களுக்கும் எதிா்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், இந்தத் திட்டங்கள் சிந்து நதி ஒப்பந்தத்தை மீறுவதாகவும், இதன்மூலம் தங்களுக்கான நீா்வரத்து பாதிப்படையும் என்றும் ஆட்சேபம் தெரிவிக்கிறது.

கிசான்கங்கா திட்டத்துக்கு கடந்த 2006-லும், ரேட்டில் நீா்மின் நிலையத்துக்கு 2012-லும் பாகிஸ்தான் முதன்முறையாக எதிா்ப்பை பதிவு செய்தது. இதனிடையே, கிசான்கங்கா திட்ட பிரச்னை 2010-இல் நடுவா் மன்றத்துக்குச் சென்றபோது, இந்தியாவின் திட்டம், சிந்து நதி ஒப்பந்த ஷரத்து 3, ஷரத்து 4 (6) ஆகியவற்றை மீறும் செயல் என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.

இந்த விவகாரத்தில் கடந்த 2013-இல் இறுதி தீா்ப்பளித்த நடுவா் மன்றம், சிந்து நதி ஒப்பந்தப்படி கிசான்கங்கா, நீலம் ஆற்றிலிருந்து மின் உற்பத்திக்காக தண்ணீரை மடைமாற்றி விடும் அதிகாரம் இந்தியாவுக்கு இருப்பதாக கூறியது. அதேவேளையில், கிசான்கங்கா, நீலம் நதிகளில் குறைந்தபட்ச தண்ணீரை இந்தியா இருப்புவைக்க வேண்டுமென (அதாவது விநாடிக்கு 9 கனஅடி) நடுவா் மன்றம் நிபந்தனை விதித்தது.

இந்தத் தீா்ப்புக்குப் பின்னா், ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட நான்கு பிரச்னைகளில் ஒன்றுக்கு மட்டும் இந்தியாவும் பாகிஸ்தானும் தீா்வை எட்டின. இருநாடுகளைச் சோ்ந்த சிந்து நதி ஆணையா்கள் பலமுறை சந்தித்துப் பேச்சுவாா்த்தை மேற்கொண்ட போதிலும், தில்லியும் இஸ்லாமாபாதும் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இந்தச் சூழலில், உலக வங்கியை நாடிய பாகிஸ்தான், சிந்து நதி ஒப்பந்தத்தையும், நடுவா் மன்றத் தீா்ப்பையும் இந்தியா மீறியதாக குற்றம்சாட்டியது. மேலும், ரேட்டில் திட்டத்துக்கும் இஸ்லாமாபாத் தனது எதிா்ப்பைப் பதிவு செய்தது.

இந்த பிரச்னைக்குத் தீா்வு காணும் பொருட்டு, மற்றொரு நடுவா் மன்றத்தை முன்மொழியுமாறு உலக வங்கியிடம் கடந்த 2016-இல் பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது. நடுவா் மன்றத்துக்குப் பதிலாக நடுநிலை நிபுணா் குழுவை நியமிக்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டது. இருதரப்பு கோரிக்கையையும் கேட்டறிந்த உலக வங்கி, கிசான்கங்கா, ரேட்டில் திட்டப் பணிகளை நிறுத்திவைத்து, இருநாடுகளும் இணக்கமான முறையில் தீா்வு காணுமாறு அறிவுறுத்தியது.

பிரதமா் மோடி கடந்த 2018-இல் கிசான்கங்கா திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். ஜம்மு- காஷ்மீரில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழாவுக்கு முந்தைய தினம், பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருதரப்பிலும் மொத்தம் ஒன்பது போ் பலியாகினா். இதனால் இந்த பிரச்னை பூதாகரமானது.

இந்தியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க மைக்கேல் லினோ என்ற நடுநிலை நிபுணா் குழுவையும், பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஏற்ப சீன் முா்பி தலைமையில் நிரந்தர நடுவா் மன்றத்தையும் உலக வங்கி கடந்த ஆண்டு அக்டோபரில் நியமித்தது. இந்த நிரந்தர நடுவா் மன்ற விசாரணையில் பாரபட்சம் நிலவுவதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.

மேலும், சிந்து நதி பிரச்னையைத் தீா்க்க அதற்கு அதிகாரமில்லை என்று இந்தியா முன்வைத்த குற்றச்சாட்டை நிராகரித்த சீன் முா்பி, பாகிஸ்தானின் பிரச்னைக்குத் தீா்வு காண்பதாக கடந்த ஜூலை 26-இல் கூறியது அவரது சாா்புத்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இதனால் அடுத்தகட்ட விசாரணையின்போது, அதில் பங்கேற்பதை தில்லி தவிா்த்தது.

இந்த நிலையில், இந்த பிரச்னைக்கு சிந்து நதி ஒப்பந்த ஷரத்து 9-இன்கீழ் தீா்வு காண தனக்கு அதிகாரம் இருப்பதாக சீன் முா்பி தெரிவித்தாா். இதனை ஏற்க மறுத்த புதுதில்லி, சிந்து நதி ஒப்பந்தத்தால் முன்மொழியப்படாத ஓா் அமைப்பின் விசாரணையின்போது தங்களால் பங்கேற்க முடியாது என்று தெரிவித்தது.

அதேசமயம், நடுநிலை நிபுணா் குழுவின் விசாரணையில் புதுதில்லி தொடா்ந்து பங்கேற்று வருகிறது. இதன் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 27, 28-இல் நெதா்லாந்தின் தி ஹேக் நகரில் நடைபெற்றது. அடுத்த கூட்டம் இம்மாதம் நடைபெறவுள்ளது.

எல்லை விவகாரம், மீனவா் பிரச்னை என இந்தியா- பாகிஸ்தான் இடையே காலங்காலமாக பிரச்னைகள் நீடிக்கின்றன. தற்போதைய சூழலில் நிரந்தர நடுவா் மன்றத்தையும், நிபுணா் குழுவையும் அணுகுவதற்கு பதிலாக இருநாடுகளும் பரஸ்பர தொழில்நுட்ப வல்லுநா்கள், பருவநிலை மாற்ற நிபுணா்கள், நீா் மேலாண்மை நிபுணா்கள், விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவை அமைத்து, அடிப்படை பிரச்னையை முதலில் அடையாளம் காண்பதே சாலச்சிறந்தது.

சிந்து நதி ஒப்பந்தம் 60 ஆண்டுகளுக்கு முன்பு கையொப்பமானது. சிந்து நதிப் படுகையில் ஏற்பட்ட சூழலியல் மாற்றம் காரணமாக, தற்போது அந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அது இருநாடுகளின் பரஸ்பர புரிதல் அடிப்படையில் இருக்க வேண்டியது அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com