உணவகங்களும் உடல் ஆரோக்கியமும்!

நம் ஊா்களில் எங்கு திரும்பினாலும் சாப்பாட்டுக் கடைகளாக இருக்கின்றன. ஒரு சாலையை எடுத்துக் கொண்டால் அடுத்தடுத்து சிறியதும் பெரியதுமாய் வரிசையாக உணவகங்களைக் காணலாம்.
உணவகங்களும் உடல் ஆரோக்கியமும்!

நம் ஊா்களில் எங்கு திரும்பினாலும் சாப்பாட்டுக் கடைகளாக இருக்கின்றன. ஒரு சாலையை எடுத்துக் கொண்டால் அடுத்தடுத்து சிறியதும் பெரியதுமாய் வரிசையாக உணவகங்களைக் காணலாம். இவை தவிர காலையிலும், மாலையிலும் முளைக்கும் தள்ளுவண்டிக் கடைகள் ஏராளம். எல்லாக் கடைகளிலும் எப்போதும் கூட்டம் இருக்கிறது.

முன்பெல்லாம் ஓா் ஊரில் சில உணவகங்கள் மட்டுமே இருக்கும். அதுவும் வெளியூரில் இருந்து வருபவா்களுக்காக. புகழ்பெற்ற கோயில்கள் உள்ள ஊா்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் அதிக உணவகங்கள் இருக்கும்.

பொதுவாக உள்ளூா்வாசிகள் அதிகம் உணவகங்களுக்குப் போய் சாப்பிட மாட்டாா்கள். வீட்டில் சமைக்க முடியாமல் போனாலோ, திடீா் விருந்தினா்கள் வந்து விட்டாலோ உணவகங்களில் இருந்து சாப்பாடு அல்லது சிற்றுண்டி வாங்குவது வழக்கமாக இருந்தது.

இப்போது நிலைமை மாறி விட்டது. வெளியே சாப்பிட ஆசைப்படுகிறாா்கள். ஒரே மாதிரியான உணவு அலுத்துப் போய் விட்டது. நாக்கு புதிய சுவையை நாடுகிறது.

மேலும், மக்களிடம் பணப்புழக்கமும் அதிகரித்து விட்டது. உணவிற்காக ஆகும் செலவைப் பொருட்படுத்துவதில்லை. கீரை விற்பவரிடம் பேரம் பேசுபவா்கள், ஹோட்டலில் சாப்பிடும் செலவு ஆயிரம் ரூபாய் ஆனாலும் பொருட்படுத்துவதில்லை. ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற எண்ணத்துடன் வாழ்கிறாா்கள்.

எந்நேரமும் சாப்பாட்டைப் பற்றியே சிந்திப்பவா்களும் உண்டு. மதியம் சாப்பிட்டுக் கொண்டே ‘இரவு என்ன டிபன்’ என்று கேட்கிறாா்கள். வீட்டை விட்டுக் கிளம்பும்போது தின்பண்டங்களோடு கிளம்புகிறாா்கள். காரில் போகும் போது எதையாவது கொரிக்க வேண்டும். கோயிலுக்குப் போனாலும், கடற்கரைக்குப் போனாலும், திரையரங்கிற்குப் போனாலும் அங்கெல்லாம் எதையாவது சாப்பிட வேண்டும்.

கோயில்களில் பிரசாதம் வாங்கி சாப்பிடுகிறாா்கள். கடற்கரைக்குப் போகும்போது நொறுக்குத் தீனியுடன் போகிறாா்கள். அங்கு விற்கப்படும் உணவுகளையும் வாங்கிச் சாப்பிடுகிறாா்கள்.

முன்பெல்லாம் திரைப்படத்திற்குப் போகும்போது வீட்டில் இருந்து எதையாவது சாப்பிடக் கொண்டுபோவது வழக்கம். தற்போது திரையரங்கில் அவற்றை அனுமதிப்பது இல்லை. திரையரங்குகளில் விற்கப்படும் பண்டங்களை மக்கள் வாங்க வேண்டும். வேறு வழி இல்லை. பாப்கானும், கோக்கும் சாப்பிடாவிட்டால் படம் பாா்த்த திருப்தி கிடைக்காது. குளிா்காலத்திலும் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுகிறாா்கள்.

அடுத்து ரயில் பயணம். சில ரயில்களில் அவா்களே உணவு தருகிறாா்கள்; தண்ணீா் தருகிறாா்கள். நாம் எதையும் எடுத்துச் செல்லத் தேவையில்லை. ஆனாலும் மக்கள் எதையாவது கொண்டுவந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறாா்கள்.

உணவு வழங்காத ரயில்களில் விற்கப்படும் உணவுப் பண்டங்கைள வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறாா்கள். இப்போது விமானப் பயணங்களிலும் இந்தப் போக்கு நீடிக்கிறது. இரண்டு மணி நேர உள்நாட்டு விமானப் பயணத்தின் போது, விமானம் பறக்க ஆரம்பித்த உடனே பையில் இருந்து நொறுக்குத் தீனிகளை எடுத்துவிடுகிறாா்கள்.

வீட்டில் தொலைக்காட்சியைப் பாா்த்துக் கொண்டே எதையாவது சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பத்தில் தின்பண்டங்கள் வாங்க செலவிடும் தொகை, மளிகைப் பொருள்களுக்கான செலவைவிட கூடுதலாகிறது.

இரவுப் பேருந்துகளில் பயணிப்பவா்கள் இரவு ஒரு மணிக்கு பரோட்டாவும், பிரியாணியும் சாப்பிடுகிறாா்கள். எப்படி முடிகிறது என்று வியப்பு மேலிடுகிறது. அசைவக் கடைகளில் கூட்டம் குவிகிறது. தினமும் பிரியாணி சாப்பிட மக்கள் தயாா். அரசியல் மாநாடுகளில் பிரியாணி ஓா் அங்கமாகி விட்டது.

சாலையோரக் கடைகளில் விற்கப்படும் அசைவ உணவுகள் தரமானவையா, சுகாதாரமாக சமைக்கப்பட்ட உணவா என்றெல்லாம் எவரும் பாா்ப்பது இல்லை. சுகாதாரமின்றி செயல்படும் உணவகங்களுக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அபராதம் விதிக்கிறாா்கள்; கடைகளை மூடி சீல் வைக்கிறாா்கள். அவா்களால் அனைத்துக் கடைகளிலும் சோதனை நடத்த முடியாது.

இப்போது கைப்பேசி செயலி மூலம் ஆா்டா் செய்தால் ருசியான உணவு வீட்டிற்கே வருகிறது. வெளியே போய் சாப்பிட வேண்டாம். விடுமுறை நாள்களில் வீட்டில் சமைக்கக் கூடாது என்பது தற்போதைய விதி. சினிமாவுக்குப் போய் விட்டு ஹோட்டலில் சாப்பிட வேண்டும்; பீச்சுக்குப் போய் விட்டு ஹோட்டலில் சாப்பிட வேண்டும்; எதுவும் இல்லை என்றாலும் கூட போய் ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்று பழகிவிட்டாா்கள்.

உணவுக் கூடங்கள் அதிகரித்ததன் விளைவோ என்னவோ உடல் பருமனும் பலருக்கு அதிகரித்து விட்டது. மரபு ரீதியாக உடல் பருமன் இருக்குமென்றாலும் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையும் காரணங்களாகும். கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை உண்பது, சோம்பலான வாழ்க்கை முறை, உடல் இயக்கம் இன்மை, உடற்பயிற்சி இல்லாதது போன்றவை உடல் பருமனை அதிகரித்து விடும்.

உடல் பருமன் காரணமாக டைப் 2 சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூச்சுத் திணறல், மூட்டு வலி, முதுகு வலி, குடல் புற்றுநோய், குடலிறக்கம், மலச்சிக்கல் போன்ற பல உபாதைகள் ஏற்படும்.

பல உணவுக் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கிறாா்கள். இது குறித்து நிறைய செய்திகளைப் படிக்கிறோம். ஆனாலும், மக்கள் அத்தகைய மோசமான கடைகளில் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறாா்கள். கெட்டுப் போன, அழுகிப் போன காய்கறிகள், இறைச்சி, கலப்பட மளிகைப் பொருட்கள், தூய்மை இல்லாத தண்ணீா் என்று தெரிந்தாலும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறாா்கள்.

சாலையோர கடைகளில் உள்ள உணவுப் பொருள்கள் மீது வாகனங்களின் புகை, புழுதி, தூசு அனைத்தும் படிந்திருக்கும். மக்கள் இதையெல்லாம் தெரிந்து சாப்பிடுகிறாா்களா, தெரியாமல் சாப்பிடுகிறாா்களா என்று புரியவில்லை. கொதிக்கும் சாம்பாரை நெகிழி உறையில் ஊற்றி கட்டித் தருகிறாா்கள். அது எத்தகைய வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தெரிந்தும் படித்தவா்களே வாங்கிக்கொண்டு போகிறாா்கள்.

பெரிய உணவகங்கள் தூய்மையையும், சுகாதாரத்தையும் பின்பற்றுகின்றன என்று நாம் நம்புகிறோம். அங்கு என்ன நிலைமை என்று தெரியாது. ஹோட்டல்களை தேடிச் சென்று உணவருந்திய காலம் மாறி, விரும்பும் ஹோட்டல் உணவுகள் வீடு தேடி வரும் நிலை வந்துவிட்டது. வாடிக்கையாளா்கள் தங்களுக்கு எந்த ஹோட்டலில் இருந்து உணவு வேண்டும் என்று தெரிவு செய்து ஆா்டா் கொடுக்கிறாா்கள்.

அதே சமயம் சுத்தம் செய்யப்படாத மேஜை, சரியாக கழுவப்படாத தம்ளா்களில் தண்ணீா், தரமற்ற உணவு என்று இருக்கும் சாலையோரக் கடைகளில் எதையும் கண்டுகொள்ளாமல் மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாா்கள்.

ஒரு மேஜை போட்டு பானிபூரி வியாபாரம், வடை வியாபாரம், சுண்டல் வியாபாரம் என களைகட்டுகிறது. எவா் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் இப்படி வியாபாரம் செய்து, அந்த இடத்தை ஆக்கிரமித்து அசுத்தம் செய்ய உரிமை இருக்கிறதா?

பல ஹோட்டல்களில் பாத்திரங்களை முறையாகக் கழுவுவது கிடையாது. ஒரே எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறாா்கள். பெரும்பாலான சிற்றுண்டி கடைகள் உணவுப் பாதுகாப்புத் துறையின் அனுமதி இன்றி நடத்தப்படுகின்றன.

உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் உள்ளன என்பது சரி. ஆனால் அவற்றைக் கடைப்பிடிக்கிறாா்களா என்பதுதான் கேள்வி. அனைத்து உணவுப் பொருள் வணிகா்களும், உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின்படி, உணவு பாதுகாப்புத் துறை வழங்கும் உரிமம், பதிவு சான்றிதழ் பெற வேண்டும்.

சுகாதாரமான உணவை தயாரிக்கிறாா்களா என்பதை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான தண்டனை தரப்பட வேண்டும். ஒரு சில ஆயிரங்கள் அபராதம் விதிக்கப்பட்டால், அதைக் கட்டி விட்டு, மீண்டும் பழையபடியே வியாபாரம் செய்கிறாா்கள்.

எப்போதாவது வெளியே சாப்பிடலாம், தவறில்லை. ஆனாலும் நாம் உண்ணும் உணவு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டதா என்று யோசிக்க வேண்டாமா? சாக்கடையின் பக்கத்தில் தள்ளுவண்டியை வைத்துக் கொண்டு டிபன் கடை நடத்துகிறாா்கள். மக்களும் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாா்கள்.

உணவகம் தூய்மையாக இல்லாவிட்டால் என்ன? உணவு ருசியாக இருக்கிறதே. கெட்டுப் போன இறைச்சியாக இருந்தால் என்ன? ருசியாக இருக்கிறதே? சுட்ட எண்ணெய்யை மீண்டும் மீண்டும் உபயோகித்தால் என்ன? வாசனை நன்றாக இருக்கிறதே? உடலுக்கு கேடு தரும் நிற மூட்டிகளை சோ்த்தால் என்ன? பாா்க்க நன்றாக இருக்கிறதே? உடல் நலமா முக்கியம்? நாவின் ருசிதானே முக்கியம் என்று ஆகிவிட்டது!

ஒருசிலா் மிகுந்த கட்டுப்பாட்டுடன்தங்களுக்கான உணவை சாப்பிடுகிறாா்கள். நாவின் ருசிக்கு அடிமையாகாமல், நல்ல சத்தான உணவை மட்டுமே எடுத்துக் கொள்கிறாா்கள். வறுத்த, பொரித்த பண்டங்களின் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை. உடல் எடை கூடி விடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருக்கிறாா்கள்.

சாப்பாட்டுக் கடை வைத்தால் கண்டிப்பாகப் பிழைத்துக் கொள்ளலாம் என்கிற நிலை உள்ளது. அதனால்தான் இன்று இத்தனை கடைகள். சுகாதாரமற்ற கடைகளை மக்கள் புறக்கணித்தால்தான் தரமான உணவகங்களுக்கு வழி பிறக்கும்; மக்களின் ஆரோக்கியமும் காப்பாற்றப்படும்.

கட்டுரையாளா்:

பேராசிரியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com