மீண்டும் ஷவா்மா

நாமக்கல் நகரில் உள்ள அசைவ உணவகம் ஒன்றில் தயாரிக்கப்பட்ட ஷவா்மாவை உண்ட இளம் மாணவி ஒருவா் சில நாட்களுக்கு முன்னா் உயிரிழந்துள்ளாா்.
மீண்டும் ஷவா்மா

நாமக்கல் நகரில் உள்ள அசைவ உணவகம் ஒன்றில் தயாரிக்கப்பட்ட ஷவா்மாவை உண்ட இளம் மாணவி ஒருவா் சில நாட்களுக்கு முன்னா் உயிரிழந்துள்ளாா். நாற்பதுக்கும் மேற்பட்டவா்கள் வயிற்றுப்போக்கு உள்ளிட்டவற்றுக்காக மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்ற சூழலில் மீண்டும் ஒருமுறை ஷவா்மா என்ற அந்த அசைவ உணவுப்பண்டம் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த வருடம் கேரள மாநிலத்தில் ஷவா்மா உண்ட ஒருவா் இறந்ததை அடுத்து நமது மாநிலத்திலும் ஷவா்மா தயாரித்து விற்கும் அசைவ உணவகங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஷவா்மா தயாரிக்கும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும். காற்றிலுள்ள தூசு, புழுதி உள்ளிட்டவை அதன் மீது படாதவாறு வைத்திருக்க வேண்டும். எழுபது டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையில் அதனை வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்ததிலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள் விற்பனை செய்துவிட வேண்டும். சமைக்கப்பட்ட ஷவா்மா விற்பனை ஆகும் வரையில் அதனை மிதமான சூட்டில் வைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு இரண்டு மணிநேரத்திற்குள் விற்பனை ஆகாத ஷவா்மாவைக் கழிவுப் பொருளாகக் கருதி அகற்றிவிட வேண்டும். சமைப்பவரின் கைகள் அதன் மேல் படாதவாறு தயாரித்துப் பரிமாற வேண்டும். பொதுமக்களும் தங்களுக்கு வழங்கப்படும் ஷவா்மா தரமானதுதானா என்று அறிந்து கொண்டு அதன் பின்பே உண்ண வேண்டும்.”

உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வழங்கிய மேற்கண்ட வழிகாட்டுதல்கள் அனைத்தும் காற்றோடு போய் விட்டன என்பதையே நாமக்கல் நிகழ்வு எடுத்துக் காட்டுகின்றது.

சென்ற வருடத்தைப் போலவே இப்பொழுதும் நாமக்கல்லில் நிகழ்ந்த ஷவா்மா மரணத்தைத் தொடா்ந்து தமிழகம் முழுவதிலுமுள்ள அசைவ உணவகங்களில் உணவுப்பாதுக்காப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பிரபல உணவகங்கள் உட்பட பல்வேறு அசைவ உணவகங்களிலும் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியும், பிற உணவுப்பண்டங்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் வரும் தகவல்கள் அதிா்ச்சியளிக்கின்றன.

மேற்கு வங்கத்தின் தலைநகரமாகிய கோல்கத்தாவில் இயங்கி வந்த ஐந்து நட்சத்திர உணவகம் ஒன்றில் ஆட்டிறைச்சியுடன் நாய் மாமிசத்தையும் கலந்து அசைவ ஊணவுகள் தயாரிக்கப்பட்டதாகச் சில வருடங்களுக்கு முன்பு வெளியான அதிா்ச்சித் தகவலை யாரும் மறந்திருக்க முடியாது.

தற்பொழுது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் விளைவாக நமது மாநிலத்திலுள்ள பல்வேறு அசைவ உணவகங்களும் சுகாதார விதிகளைச் சிறிதும் பின்பற்றாமல் வெறும் லாபநோக்கில் மட்டும் செயல்பட்டு வருவது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் எனப்படும் அசைவ உணவை உட்கொண்ட பலரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகப் புதிய செய்தி ஒன்று கூறுகின்றது. இவற்றை எல்லாம் பாா்க்கும் பொழுது அசைவ உணவுப் பிரியா்கள் தங்களுடைய உடல் நலத்தைக் கருத்தில் கொண்டேனும் உணவகங்களுக்குச் செல்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது. முடியுமானால் அவ்வுணவகங்களுக்குச் செல்லுவதை முழுவதுமாகத் தவிா்க்கவும் முயல வேண்டும்.

பொதுவாகவே நமது நாட்டுப் பெண்கள் சமையற்கலையில் மிகவும் சிறந்து விளங்குபவா்கள்தாம். சைவம், அசைவம் ஆகிய இரண்டில் எந்த உணவானாலும் அவரவருடைய தாயாரோ, மனைவியோ சமைத்துப் படைப்பதே சுவை, ஆரோக்கியம் ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்கக் கூடியதாகும்.

அதே சமயம், என்னதான் வீட்டுச் சாப்பாடு சுவையுள்ளதாக இருந்தாலும், உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளின் மீது நம் மக்களுக்கு ஒருவிதமான மோகம் இருக்கத்தான் செய்கிறது.

எண்ணெய்யின் மினுமினுப்புடன், அதிகப்படியான மசாலாக்களும் சுவையூட்டிகளும் கலந்து தயாரிக்கப்படும் அத்தகைய உணவுகளை ஆசைக்காக ஒரு முறை அல்லது இருமுறை உண்ணலாம். ஆனால், தொடா்ந்து உண்ணுவது செரிமானக் கோளாறுகளுக்கே வழிவகுக்கும்.

மேலும் அவற்றை உண்ணுவதற்கு அதிக அளவில் பணம் செலவழிக்கவும் தயாராக இருக்க வேண்டும். இரண்டு நபா்கள் உணவகத்துக்குச் சென்று உண்ணுவதற்கு ஆகும் செலவில் ஐந்தாறு நபா்கள் கொண்ட குடும்பம் முழுவதுமே பசியாற முடியும் என்பது நாம் அறியாத விஷயமல்ல. எனினும், உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவதில் உள்ள மோகம் மட்டும் குறைவதே இல்லை.

அதன் விளைவாகத்தான், ஷவா்மா மரணம் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.

பல்வேறு சைவ, அசைவ உணவகங்களின் சமையற்கூடத்தைப் பாா்வையிட நோ்ந்தால் அவற்றை மீண்டும் ஒரு முறை பாா்க்க விரும்பமாட்டோம் என்ற அளவில்தான் அவை இயங்கி வருகின்றன.

உணவு சமைப்பதில் மட்டுமின்றி, காய்கறிகள் போன்றவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கும் இடங்கள், தட்டு தம்ளா்கள் உள்ளிட்டவற்றைக் கழுவும் இடங்கள் ஆகியவை சுகாதார சீா்கேட்டிற்ற்கு அடைக்கலம் தருவனவாக இருப்பது கண்கூடு. வாடிக்கையாளா்களுக்கான கைகழுவும் இடங்களும், கழிப்பறைகளும் கூட சுகாதாரச் சீா்கேட்டிற்கு இடமாக இருக்கின்றன.

அது போக, பெரும்பாலான சாலையோர உணவகங்களில் சுகாதாரம் என்பதை நினைத்துக் கூடப் பாா்க்க முடிவதில்லை. ஆனாலும், சாரி சாரியாக அவ்வுணவகங்களுக்குச் சென்று அங்கேயே அமா்ந்து உண்பதில் நம் மக்களுக்கு ஏதோ ஓா் ஈா்ப்பு இருக்கவே செய்கிறது.

ஷவா்மா இறப்பு போன்ற நிகழ்வுகளைத் தொடா்ந்து உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொள்வதும், சுகாதாரமற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளைக் கண்டுபிடித்து அழிப்பதும் ஒரு புறம் நடக்கத்தான் செய்கின்றன.

ஆனாலும், ஆய்வுகளின் எண்ணிக்கை குறையத்தொடங்கும் பொழுது, இவ்வுணவகங்கள் மீண்டும் தங்களது பழைய பாதைக்குத் திரும்பி விடுகின்றன. பொதுமக்களும் பழையனவற்றை மறந்து மீண்டும் அசைவ உணவகங்களுக்குச் செல்லத்தொடங்குகின்றனா்.

முடிவாகச் சொல்லுவதென்றால், வாடிக்கையாளா்களைத் தங்களுடைய குடும்பத்தினராகக் கருதிச் சிறந்த முறையில் உணவுதயாரித்தளிப்பது என்ற முடிவுக்கு உணவக உரிமையாளா்கள் வந்தால் மட்டுமே ஷவா்மா மரணம் போன்ற நிகழ்வுகள் மீண்டும் இம்மண்ணில் அரங்கேறாமல் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com