உதவியால் வரும் பெருமிதம்

நாம் மனிதர்களை உற்று நோக்கும்போதுதான் மனிதநேயம் மிக்கவர்கள் இன்னும் ஆங்காங்கே இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

அண்மையில் ஒருநாள் நான் நகரப் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். பேருந்தில் ஒரு காலை ஊன்றி இன்னொரு காலை ஊன்ற முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல்  இருந்தது. அப்போது ஒரு நிறுத்தத்தில் இளைஞர் ஒருவர் தன்னுடைய வயது முதிர்ந்த தாயுடன் பேருந்தில் ஏறினார். அந்த இளைஞனின் தாயார் நிற்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார் என்பது தெரிந்தது.

அந்த அம்மாவைச் சுற்றி இருந்த அத்தனை பேரும், அவரின் நிலையறிந்தும் அதனைக் கண்டும் காணாதது போல் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் இளைஞர்களும் இளம் பெண்களும் கூட அடங்குவர். அப்போது திடீரென ஒரு இளைஞர் எழுந்து "இங்க உக்காருங்கம்மா' என்று வாஞ்சையுடன் தன் இருக்கையை அந்த அம்மாவுக்காக விட்டுக்கொடுத்தார். அந்த அம்மா அந்த இளைஞரை நன்றியோடு பார்த்துவிட்டு அந்த இருக்கையில் அமர்ந்தார். அந்த அம்மாவின் மகன் பேருந்தின் பின்பகுதியில் நின்றுகொண்டார். 

சிறிது நேரத்தில் பேருந்தின் பின்பகுதியில் ஒரு இருக்கை காலியானது. அந்த இருக்கையை யாருக்கும் விட்டுத் தராமல் தனது அம்மாவுக்காக விட்டுக் கொடுத்த அந்த இளைஞரை அழைத்து மரியாதையோடு அமரச் செய்தார் அந்த அம்மாவின் மகன். 

ஓர் இளைஞனின் மனித நேயமும் அந்த மனித நேயத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்னொரு இளைஞன் தனது நன்றியுணர்வை வெளிப்படுத்திய விதமும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. தனது இருக்கையை விட்டு கொடுத்த அந்த இளைஞன் என் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தான்.
இதே போல், மற்றொரு முறை ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணிக்காக அவர் கணவர் ஒரு இளைஞனிடம் அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த கீழ் படுக்கையை விட்டுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். 

அந்தப் பெண்மணிக்கு முழங்கால் வலி உள்ளதால் அவரால் மேலே ஏற முடியாது என்று எவ்வளவோ எடுத்துரைத்தார். ஆனால் அந்த இளைஞனோ, "அதெல்லாம் தர முடியாது" என்று முகத்தில் அறைந்தது போல் சொல்லிவிட்டான். வேறு வழியின்றி, அந்தப் பெண்மணி தரையில் துணியை விரித்து தூங்க ஆயத்தமானார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொருகீழ் படுக்கை இளைஞன், தனது கீழ் படுக்கையில்  தூங்குமாறு அந்தப் பெண்மணியைக் கேட்டுக் கொண்டான். பெரியவர்கள் இருவரும் மனதார அந்த இளைஞருக்கு நன்றி கூறினார்கள். 
அப்போது தன்னால் முடிந்த ஓர் உதவியை ஒருவருக்கு செய்தோம் என்ற மனநிறைவால் அந்த இளைஞனின் முகத்தில் ஒரு பெருமிதம் தெரிந்தது. சட்டென்று, பேருந்தில் ஓர் அம்மாவுக்கு உதவி செய்த அந்த இளைஞனின் முகம் என் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. அவரின் முகத்திலும் அதே பெருமிதம்! அதே பிரகாசம்!

இந்தப் பெருமிதமும் மனநிறைவும் ஒருவருக்கு உதவி செய்யும் போது மட்டுமே கிடைக்கிறது. குறிப்பாக, முகம் தெரியாதவர்களுக்கு உதவி செய்யும் போது சற்று கூடுதலாகவே கிடைக்கிறது. பேருந்திலும் ரயிலிலும் முதியவர்களுக்கு உதவி செய்த அந்த இளைஞர்களுக்கு வேண்டுமானால் அந்த முதியவர்களின் முகம் மறக்கலாம். ஆனால் தகுந்த நேரத்தில் உதவிய அந்த இளைஞர்களின் முகம் அந்த முதியவர்களுக்கு நிச்சயம் மறக்காது.

பேருந்திலும் ரயிலிலும் நடந்த இந்த இரண்டு நிகழ்வுகளையும் என் நண்பனிடம் சொன்ன போது பதிலுக்கு அவன் ஒரு உருக்கமான நிகழ்வை விவரித்தான். என் நண்பனின் குடும்பம் அவனுடைய சிறு வயதில் வறுமையில் வாடியிருக்கிறது. அவன் தந்தை ஒரு குவாரியில் கல்லுடைக்கும் வேலை செய்து வந்தார். தீபாவளிக்கு அவனுக்குப் புத்தாடை வாங்கிக் கொடுக்க கூடப் பணமில்லாமல் அவன் தந்தை தீபாவளிக்கு முதல் நாளன்று தனியாக அமர்ந்து கண்கலங்கி கொண்டிருந்தாராம்.

இதைப் பார்த்த அவன் தந்தையுடன் பணிபுரியும் சக தொழிலாளி ஒருவர், நூறு ரூபாய்க்கு ஒரு புதுச் சட்டை வாங்கிக் கொடுத்துவிட்டு, "அடுத்த வருஷம் இதே போல என் மகனுக்கு நீங்க வாங்கிக் கொடுத்திறனும்" என்று விளையாட்டாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாராம். உணர்ச்சி தாளாமல் அவர் பின்னால் ஓடி வந்து கட்டி அணைத்து கண்கள் நிறைய நன்றி சொன்னாராம் அவன் தந்தை.

 ஏனென்றால், அந்த காலகட்டத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து வேலை செய்தால் மட்டும்தான் நூறு ரூபாய் சம்பாதிக்க முடியும். அந்த சக தொழிலாளியின் மனிதநேயத்தைப் பற்றி, தான் இறக்கும்வரை தந்தை சொல்லிக் கொண்டிருந்தார் என்று என் நண்பன் கூறிய போது என் கண்கள் கலங்கின.

எனது பக்கத்து வீட்டுக்காரர் ஒரு தனியார் நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகிறார்.ஆனாலும் செலவைப் பொருட்படுத்தாமல், தினமும் காலை எழுந்தவுடன் ஐம்பது ரூபாய்க்கு வடை வாங்கி வருவார். அவற்றை  பிய்த்துப் போட்டு  மாடியில் உள்ள காக்கைகளுக்கு உணவு படைப்பார்.

அதனால், தினமும் காலை ஏழு மணிக்கு அவர் வீட்டு மாடியில் வடைக்காக காத்திருக்கும் காக்கைகளின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டும். "எதற்காக இப்படிச் செய்கிறீர்கள்' என்று நான் அவரிடம் கேட்ட போது, "காலை எழுந்தவுடன் இப்படிச் செய்வதால் ஒரு மன நிறைவு கிடைக்கிறது. அந்த மன நிறைவுடன் அந்த நாள் முழுவதும் என்னால் சந்தோஷமாக பிற செயல்களில் ஈடுபட முடிகிறது' என்று கூறினார். எனக்கு அவர் மீதிருந்த மரியாதை பன்மடங்காக உயர்ந்தது.

வங்கியில், எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு பணம் எடுப்பதற்கான படிவத்தை நிரப்புவதில் இருந்து, நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து பைக்கை தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருப்பவருக்கு பெட்ரோல் வாங்கிக் கொடுப்பது வரை எல்லாமே மனிதநேயம்தான். உதவியில் பெரிது, சிறிது என்கிற வேறுபாடு இல்லை. மனதார செய்கிற எல்லா உதவியுமே விலை மதிப்பு மிக்கவைதான்.

இப்படி நாம் மனிதர்களை உற்று நோக்கும்போதுதான் மனிதநேயம் மிக்கவர்கள் இன்னும் ஆங்காங்கே இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. முகம் தெரியாதவர்களுக்கு காலம் கருதி உதவி செய்பவர்களால்தான் இன்னும் மனிதநேயம் பூமியில் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com