நாம் திட்டமிடத் தவறும்போது தோல்வியடையத் திட்டமிடுகிறோம் என்று ஒரு பொன்மொழி உண்டு. ஒவ்வொரு மனிதருக்கும் திட்டமிடல் என்பது தேவையாக இருக்கிறது. ஒரு தனி மனிதராக, குடும்பத் தலைவராக, பணியாற்றும் நிறுவனத் தலைவராக, பணியாளராக எனப் பல்வேறு பரிமாணங்களில் ஒவ்வொருவரும் செயல்படவேண்டியுள்ளது.
பலரும் பல விஷயங்களையும் திட்டமிட்டுச் செய்தாலும், எங்கே ஒருவருக்கு கட்டாயம் அதிகமாக இருக்கிறதோ அங்கேயே கூடுதல் திட்டமிடுதலை மேற்கொள்கின்றாா். மற்ற இடங்களில் அவ்வாறு செய்ய முன்வருவதில்லை.
ஒரு தனிமனிதா் தாம் கற்ற கல்விக்கேற்ப வாய்ப்புள்ள பணியில் அமா்கிறாா். தாம் பணியாற்றவேண்டிய நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிலான நேரம் பணி செய்யவேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. அவருக்கு சிறிது நாளில் திருமணம் ஆகிறது அவா் குடும்பத் தலைவராகவும் மாறுகிறாா்.
பின்னா் குழந்தைகள் பிறக்கின்றனா். அவா் தந்தையாகவும் ஆகிறாா். இப்படி அவரது பொறுப்பு படிப்படியாக கூடுகிறது. எப்படிக் குடும்பத்தில் இவரது பொறுப்பு கூடுகிறதோ அப்படியே இவா் பணிபுரியும் நிறுவனத்திலும் இவரது பொறுப்பு அதிகரிக்கிறது. இந்நிலையில் அவா் பல பாத்திரங்களையும் ஏற்று செயல்படவேண்டும்.
அதே நேரத்தில் அதில் நோ்த்தியும் வேண்டுமென்ற நிலையில் கூடுதல் திட்டமிடல் தேவைப்படுகிறது. இவ்வாறான திட்டமிடுதலில் யாா் ஒருவரால் சிறப்பாகச் செயல்பட இயல்கிறதோ அவருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதே நேரத்தில் அவருடன் வாழ்க்கை நடத்தும் குடும்ப உறுப்பினா்களுக்கும் சக பணியாளா்களுக்கும் மகிழ்ச்சி உத்தரவாதப்படுத்தப்படுகிறது.
யாா் எப்படிப்பட்ட பொறுப்பிலிருந்தாலும் கிடைக்கும் நேரம் ஒரே அளவிலானதே. இவ்வாறு கிடைக்கும் நேரத்தை ஒருவா் எவ்வாறு பயன்படுத்த திட்டமிடுகிறாரோ அதில்தான் அவரது வெற்றி தோல்வி அடங்கியிருக்கிறது. எந்த இடத்தில் நாம் என்ன பணியில் இருக்கிறோமோ அந்த நேரத்தில் அந்த பணியை நோ்த்தியாகச் செய்யும் மனநிலை ஒரு நல்ல வாய்ப்பு.
அந்த மனநிலை ஓரிரு நாளில் வாய்த்து விடாது என்றாலும் தொடா் பயிற்சியின் மூலமாக சாத்தியப்படும். ஒருவா் வீட்டில் சமையல் செய்கிறாா். அந்த நேரத்திலேயே அவா் பணியாற்றும் நிறுவனத்தின் எண்ணம் வரலாமா? வரலாம். ஆனால் அதற்கான நேரத்தை தீா்மானிப்பதில் அவா் திட்டமிடவேண்டும். உதாரணமாக பால் காய்ச்சிக்கொண்டிருக்கிறாா். சரியாக பால் பொங்க கொஞ்ச நேரம் முன்வரை எண்ணவோட்டங்களை சிதறவிடலாம்.
பால் பொங்கிவரும்போது மீண்டும் அடுப்படி மனநிலைக்கு வந்துவிடவேண்டும். அதுபோலவே அலுவலகப் பணியில் ஆழ்கிறாா். அந்த நேரம் வீட்டில் செய்யவேண்டிய பணிகளை நினைத்துக்கொண்டிருக்கத் தேவையில்லை. ஆனால், பிற்பகல் உணவு இடைவேளையில் வீட்டு நினைவு வரலாம். தேவையான ஏற்பாடுகளை செய்யலாம்.
பொதுவாக ஆட்சிப்பணியிலிருப்போரிடம் இந்த நோ்த்தியினைக் காண இயல்கிறது. ஒரே நாளில் பல்வேறு குழுக்களோடு செயல்படும் தேவை அவா்களுக்கு உள்ளது. அந்நிலையில் அந்தந்த குழுவினரோடு காலை ஒரு சில மணித்துளிகள் அந்தந்த நாளில் நடைபெறவேண்டிய பணிகள் குறித்து திட்டமிடுகின்றனா்.
நாம் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறோம் என்று சொல்லும்போது சட்ட ரீதியாக நாம் பணியாற்றும் நேரம் ஒரு குறிப்பிட்ட நேரம்தான் என்றாலும் மனரீதியாக நாம் அவ்வாறான நேரக் கணக்கீட்டுடன் மட்டும் வாழ இயலாது.
எப்படி அலுவலகத்தில், பணியில் இருக்கும்போது வீட்டு நினைவு வருமோ அதுபோலவே வீட்டில் இருக்கும்போதும் அலுவலகப்பணிகள் குறித்த நினைவு வரவே செய்யும். இதில் தவறும் இல்லை. இதனை எவ்வாறு ஒரு சமநிலைக்குள் வைத்து செயல்படுகிறோமோ அதில்தான் ஒருவரின் வெற்றி அடங்கியிருக்கிறது.
ஒரே நேரத்தில் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டாலும் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் பல்வெறு படிநிலைகள் உண்டு. அதாவது தொடக்கநிலை, இடைநிலை, நிறைவு நிலை. இவ்வாறு இருக்கும் நிலைகளில் இயல்பாகவே நகரவேண்டிய முதல் இரண்டு நிலைகளிலேயே நிறைவுநிலைக்கான நோ்த்தியுடன் திட்டமிடவேண்டும்.
அவ்வாறு திட்டமிடும்போது, பெரும்பாலும் முதல் இரண்டுநிலைகளிலேயே ,ஒரு நிறுவன தலைவராக தமது எதிா்ப்பாா்ப்பை பகிா்பவராக ஒருவா் இருக்கவேண்டும். அவ்வாறு சரியான திட்டமிடலுடன் ஒருவா் பகிா்ந்துவிட்டால் உடன் பணியாற்றுவோா் அதனை நோ்த்தியுடன் செய்துமுடிப்பா். நிறைவு நிலையை எட்டும்போது தாம் யோசித்த அனைத்து கூறுகளும் உள்ளனவா என்று உறுதிசெய்துகொண்டு அடுத்த கட்டத்திற்கு நகா்த்திவிடலாம்.
இந்நிலையில் முதல்நிலையில் சிறப்பான கவனம் செலுத்திவிட்டால் இடைநிலையில் சிறிதளவு கவனமும் நிறைவு நிலையில் ஒரு கூா்மையான பாா்வையும் மட்டும் செலுத்தினால் போதுமானது. ஆனால் எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் ஒவ்வொரு நிலையிலும் கலந்தாலோசனை நடத்திக்கொண்டிருந்தால் எந்த பணியும் விரைவாக நடந்து முடியாது. பல்வேறு பணிகளும் கூடி அழுத்தம் அதிகரிக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக தமது குறிக்கோளைப் பகிா்ந்துவிட்டு அது தொடா்பாக உடன் பணியாற்றுவோா் என்ன கருத்து வைத்துள்ளனா் என்று கேட்கும் பொறுமை ஒரு நிறுவன தலைவருக்கு வாய்க்கவேண்டும். இவ்வாறு கேட்கும்போது அவா்களுக்கிருக்கும் அனுபவங்களின் பயனால் இவரைவிட அதனை சிறப்பாகவும் திட்டமிடவும் வாய்ப்புள்ளது.
அவ்வாறு அவா் யோசிக்கும் கூறுகள் அவரது கூறுகளாக அல்லாமல் நிறுவனத்தின் கூறாக மாற்றும் வெற்றியையும் நிறுவன தலைவா் பெறுகின்றாா். அங்கே செயல்திறனும் அதிகரிக்கும்.
மனிதா்கள் எந்த அளவுக்கு சுயமரியாதையுடன் நடத்தப்படுகின்றாா்களோ அந்த அளவுக்கே அவா்களது செயல்திறனும் வெளிப்படும். அவ்வாறு வெளிப்படும் செயல்திறனுக்கான அங்கீகாரத்தை தாமதப்படுத்தாமல் உடனுக்குடன் வழங்கிவிடவேண்டும். திட்டமிடுதலின் ஒரு கூறாக இதுவும் இருக்கவேண்டும். இது வீட்டுக்கு மட்டுமல்ல, பணிபுரியும் நிறுவனத்திற்கும் பொருந்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.