மொழிப்போர் தியாக வரலாறு!

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

 மொழிப் போராட்டம் என்பதும் மொழிக்காகக் குரல் கொடுப்பது என்பதும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக அளவில் பல நாடுகளிலும் நடந்திருக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐரோப்பிய நாடுகளில் ஒருவர் கிறிஸ்துவப் பாதிரியாராக வேண்டுமென்றால் லத்தீன் மொழியில்தான் பைபிளைப் படிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.
 அப்படிப்பட்ட காலத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் விக்ளிப் என்பவர், "எனது தாய்மொழியான ஆங்கிலத்தில்தான் பைபிளைப் படிப்பேன்; லத்தீன் மொழியில் படிக்க மாட்டேன்' என்று மறுத்த காரணத்தால் அன்றைய இங்கிலாந்தின் சட்டதிட்டத்தின்படி சாட்டையால் பலமுறை அடிக்கப்பட்டார். அதனால் ஏற்பட்ட நோயின் காரணமாக அவர் மரணமடைந்தார். சில ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அவர் படம் திறக்கப்பட்டு "தாய் மொழிக்காக உயிர் நீத்த தனயன்' என்று அவர் போற்றப்பட்டார்.
 அதைப்போல் செக்கோஸ்லோவியா நாட்டில் "பைபிளை லத்தீன் மொழியில் படிக்க மாட்டேன்; என்னுடைய தாய்மொழியான செக் மொழியில்தான் படிப்பேன்; லத்தீன் மொழியில் படித்தால்தான் கர்த்தருடைய அருள் கிடைக்குமென்றால் அத்தகைய கர்த்தருடைய அருளே எனக்குத் தேவையில்லை' என்று முழக்கமிட்டார் ஜான்கஸ் என்பவர். அவர் கூறியதைக் கேட்டுக் கொதிப்படைந்த பாதிரியார்களின் சூழ்ச்சியால் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டார் ஜான்கஸ். அதன்பின் ஆண்டுதோறும் அவர் பிறந்தநாளை "செக்' மொழிக்காக உயிர்விட்ட தியாகியின் பிறந்தநாள் என்று போற்றி அரசாங்கமே அவர் புகழைப் போற்றி வருகிறது.
 துருக்கி நாட்டு அதிபராக முஸ்தபா கமால் பாட்சா பொறுப்பேற்றபோது துருக்கி மொழியில் ஏராளமான அரபிச் சொற்களும், பாரசீகச் சொற்களும் கலந்திருப்பதைக் கண்டு கோபமுற்றார். அவற்றையெல்லாம் நீக்கிவிட்டு தூய துருக்கி மொழிச் சொற்களை உருவாக்க வேண்டுமென்று மொழியறிஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், மக்கள் அவர் கருத்தை எதிர்த்தனர்.
 "அரபிச் சொற்களை நீக்க வேண்டும் என்கிறீர்களே, அப்படியென்றால் திருக்குரானை எந்த மொழியில் படிப்பீர்கள்' என்று மக்கள் கேட்டனர். ஏனென்றால் இஸ்லாமிய நாடுகளில் திருக்குரானை அரபி மொழியில்தான் படிக்க வேண்டும் என்ற விதிமுறை இன்றும் இருக்கிறது.
 துருக்கி மக்கள் அவ்வாறு கேட்டவுடன் "மதத்தின் பெயரால் கூட எனது தாய்மொழியை இன்னொரு மொழி அடிமைப்படுத்துவதை நான் விரும்பவில்லை. எனது மக்களும் அப்படியே இருக்க வேண்டும்' என்று சொல்லிவிட்டு இருபதாயிரம் அரபி, பாரசீகச் சொற்களை நீக்கிவிட்டு 1 லட்சத்து 58 ஆயிரம் தூய துருக்கி மொழிச் சொற்களை உருவாக்கி நாட்டில் உலவவிட்டார்.
 அவர் காலத்தில்தான் உலகம் அறிந்த கான்ஸ்டாண்டி நோபிள் என்னும் ஊரின் பெயர் இஸ்தான்புல் என்று மாற்றப்பட்டது. இந்த இஸ்தான்புல்தான் அந்த நாட்டின் தலைநகரம் இப்போது.
 தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் கட்டமாக 1937-இல் இருந்து 1940 வரையிலும், இரண்டாவது கட்டப் போராட்டம் 1965-லும் நடைபெற்றது. இதில் இரண்டாவது கட்டப் போராட்டம்தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய போராட்டமாகும். முதல் கட்டப் போராட்டத்தில் இரண்டு பேர்தான் இறந்தார்கள். இரண்டாம் கட்டப் போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
 1937-இல் நடந்த பொதுத் தேர்தலில் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்ததும் 1937 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி சென்னை தியாகராய நகரிலுள்ள இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ராஜாஜி, "ஹிந்தியைக் கட்டாயப் பாடமாகப் பள்ளிகளில் ஆக்கப் போகிறேன்' என்று அறிவித்தார்.
 முதன் முதல் ஹிந்தி எதிர்ப்புக் கூட்டம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலே 1937-ஆம் ஆண்டு ஆகஸ்டு 27-இல் நடைபெற்றது. மறுநாள் ஆகஸ்டு 28-ஆம் தேதி திருவையாற்றிலே மிகப்பெரிய ஹிந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளும்தான் பின்னாட்களில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குக் கால்கோள் நாட்டிய நிகழ்ச்சிகளாகும்.
 அதன்பின் 1938 ஏப்ரல் 21-ஆம் தேதி சென்னை மாகாணப் பள்ளிகளில் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கி அரசாங்கம் ஆணை பிறப்பித்தது. அதன்படி கர்நாடகத்தில் நான்கு பள்ளிகளிலும், கேரளத்தில் ஏழு பள்ளிகளிலும், ஆந்திரத்தில் 54 பள்ளிகளிலும், தமிழ்நாட்டில் 60 பள்ளிகளிலும் ஹிந்தி கட்டாயப் பாடம் ஆகியது. அப்போது ஆந்திரம், கேரளம், கர்நாடகத்தின் பல பகுதிகள் எல்லாம் சென்னை மாகாணத்திற்குள் இருந்தன.
 ராஜாஜியின் இந்த ஆணையை எதிர்த்து அவர் வீட்டுக்கு முன் பல்லடம் பொன்னுச்சாமி என்ற காங்கிரஸ்காரர் உண்ணாவிரதம் இருந்தார். அவர் கைது செய்யப்பட்டு ஆறு வாரம் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப் பெற்றார். முதல் கட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதலில் கைதானவர் இவர்தான். அவர் ஒரு காங்கிரஸ்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
 நவம்பர் 24-ஆம் தேதி வடசென்னை செளகார்பேட்டையிலுள்ள ஹிந்து தியாலாஜிகல் பள்ளிக்கு முன்பு ஹிந்தியைக் கண்டித்து பெண்கள் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முதன் முதல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண்கள் அணியினர் இவர்கள்தாம். அதற்கு அடுத்த வாரம் உண்ணாமலை அம்மையார் தலைமையில் நடந்த போராட்டத்தில் ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
 இந்தப் போராட்டத்தில் கைக்குழந்தையோடு கைது செய்யப்பட்ட தாய்மார்கள் பலர். அதில் புவனேசுவரி அம்மையாரும் ஒருவர். இவர் தனது இரண்டரை மாதக் கைக் குழந்தையோடு கைது செய்யப்பட்டார். அப்படிக் கைது செய்யப்பட்ட அந்தக் குழந்தை தான் பின்னாளில் வளர்ந்து தி.மு.க.வின் மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்த என்.வி.என். சோமு. பின்னர் இவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்.
 1938 ஜூன் மாதம் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புக் கண்டனக் கூட்டத்தில் பேசியதற்காக அண்ணா செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு நான்கு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப் பெற்றார். அரசியல் களத்தில் அண்ணா கைது செய்யப்பட்டது அதுதான் முதல்முறை. இதே ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி ஈ.வெ.ரா பெரியார் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார். கர்நாடகத்தில் உள்ள பெல்லாரி சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.
 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியன்று இரண்டாவது உலகப் போர் தொடங்கியது. செப்டம்பர் மூன்றாம் தேதி இங்கிலாந்து போர்ப் பிரகடனம் செய்தது. இந்தியாவுக்கு முழுமையான விடுதலை கொடுத்தாலன்றி இந்தியா, இங்கிலாந்தை ஆதரிக்க இயலாது என்று காங்கிரஸ் மகாசபை தீர்மானம் நிறைவேற்றிப் பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பியது. அதனால் இந்தியாவில் பல மாகாணங்களில் இருந்த காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. அதன்படி ராஜாஜி அமைச்சரவை 1939-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி பதவி விலகியது. 1940-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஹிந்தி கட்டாயப் பாடம் என்கிற தீர்மானத்தை அரசு ரத்து செய்தது. இதுதான் முதல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு.
 1965 ஜனவரி 26 குடியரசு நாள் முதல் ஹிந்தி ஆட்சி மொழி என்று மத்திய அரசு அறிவித்தது. அதனால் தமிழகத்தில் அதற்கு முதல் நாள் 25-ஆம் தேதி மாணவர்கள் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிந்திப் பாடப் புத்தகங்களைக் கொளுத்தினர். "தமிழ்வாழ்க' "ஹிந்தி ஒழிக' என முழக்கமிட்டனர். மெரீனா கடற்கரையில் மிகப் பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தினர்.
 மதுரையில் நடந்த ஊர்வலத்தில் காங்கிரஸ்காரர்களால் கா. காளிமுத்து, நா. காமராசன், விருதுநகர் சீனிவாசன் போன்ற இளைஞர்கள் தாக்கப்பட்டார்கள். சிலர் தங்களைத் தாங்களே சுட்டுக் கொண்டு "தமிழ் வாழ்க' "ஹிந்தி ஒழிக' என்று சொல்லியபடி தங்கள் இறுதி மூச்சை விட்டனர். இந்தப் போராட்டத்தில் 55 பேர் இறந்தார்கள் என்று காவல்துறை தரப்பு கூறியது. ஆனால் 700-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பார்கள் என்று தலைவர்களும் தமிழறிஞர்களும் கூறினார்கள்.
 மாணவர்களின் இந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தால்தான் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வேரற்ற மரம்போல் விழுந்தது. அண்ணா தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. அதன் பிறகுதான் 1967-68-இல் ஹிந்தியுடன் ஆங்கிலமும் இணை ஆட்சிமொழியாக இருக்கும் என்று சட்டம் செய்தது மத்திய அரசு.
 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஏன் நடத்தினோம்? தமிழ் ஆட்சி மொழி ஆக வேண்டும் என்றும் ஹிந்தி ஆட்சிமொழியானால் தமிழுக்குக் கேடுவரும் என்றும் நினைத்து நடத்தினோம். ஆனால் நடந்தது என்ன? இன்று ஹிந்தி இருக்குமிடத்தில் தமிழா இருக்கிறது?
 இருமொழிக் கொள்கையைக் கொண்டு வந்தார் அண்ணா. ஆனால் ஆங்கிலம் என்ற ஒரு மொழிக் கொள்கைதான் இன்று இருக்கிறது. பயிற்று மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் தமிழ் இல்லை.
 இத்தனை பேர் ஹிந்தியை எதிர்த்துத் தீக்குளித்தது, போராட்டம் நடத்தியது எல்லாம் விழலுக்கிறைத்த நீராகிவிட்டது. இப்படியெல்லாம் ஆகுமென்று தெரிந்திருந்தால் அவர்கள் போராட்டக்களத்திற்கே சென்றிருக்க மாட்டார்கள்.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் அரசவைக் கவிஞர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com