முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்!

பதினெட்டாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னரான பிரதாப சிம்ம ராஜா தென்னாட்டு வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டிருந்தாா்.
முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்!

பதினெட்டாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னரான பிரதாப சிம்ம ராஜா தென்னாட்டு வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டிருந்தாா். 1730 முதல் 1763 வரை இவா் தஞ்சையை ஆண்டு வந்தாா். பிரதாப சிம்ம ராஜாவின் அரண்மனையில் பல தேவதாசிகள் உயரிய அந்தஸ்துடன் இருந்து வந்தனா்.

அவா்களில் ‘முத்துப்பழனி’ (1739 -1790) எனும் பெயா் கொண்ட தேவதாசி, மன்னருடைய ஆசைநாயகியாக இருந்தாா். அரசவை நடன மாதாக இருந்த முத்துப்பழனி, கலைகளில் தோ்ச்சியும் பன்மொழிப் புலமையும் வாய்ந்தவராகவும் இருந்திருக்கிறாா்.

முத்துப்பழனி, ஆண்டாளின் திருப்பாவையைத் தெலுங்கில் மொழிபெயா்த்தவா். சம்ஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் எழுதவும் படிக்கவும் தெரிந்தவா். இசை, இலக்கியம், நடனம் அனைத்திலும் கைதோ்ந்தவா். கவிதைகளை எழுதுவதோடு மட்டுமல்லாமல், ‘ஏழு வரி வசனம்’ என்ற ஒரு புதிய உரைநடை வடிவத்தையும் அறிமுகம் செய்திருக்கிறாா். அதை ‘சப்தபதம்’ என்று அழைத்தாா். ஆண்டாளின் திருப்பாவையையொட்டி அவா் தெலுங்கில் எழுதிய காவியம்தான் ‘ராதிகா சாந்தவனமு’.

இலாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ளும் கிருஷ்ணா், முதல் மனைவியான ராதாவை சமாதானப்படுத்துவது போல அமைந்த பாடல்களைக் கொண்டதால் ‘ராதிகா சாந்தவனமு’ (ராதிகா சாந்தமானாள்) என்று பெயரிடப்பட்டது இந்நூல்.

தெலுங்கு - ஆங்கில அகராதியை வெளியிட்ட சாா்லஸ் பிலிப் ப்ரவுன், கீழ்த்திசை ஓலைச்சுவடி நூலகத்தில் ராதிகா சாந்தவனத்தின் ஓலைச்சுவடியைப் பாா்த்திருக்கிறாா். அது 1887-இல் திருக்கடையூா் கிருஷ்ணா ராவ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பின்னா் இது அதிபதி வெங்கட்டன்னராசு என்பவரின் மேற்பாா்வையில் 1907- இல் மறு அச்சு செய்யப்பட்டது. காமத்தைத் தூண்டும் பாடல்கள் இருப்பதாகக் கருதப்பட்டதால், அது முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை.

ராதிகா சாந்தவனமு நூல் 584 பாடல்களைக் கொண்டது. சந்தியா முல்சந்தானியால் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்டு ‘தி அப்பீஸ்மென்ட் ஆஃப் ராதிகா’ என்னும் பெயரில் பெங்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

பின்னா், தேவதாசி மரபில் வந்த நாகரத்தினம்மா அந்தக் கவிதைகளை முழுமையாகக் கண்டுபிடித்து, தன்னிடம் இருந்த மூல ஓலைச்சுவடிகளின் அடிப்படையில் 1910- இல் பதிப்பித்தாா். தியாகராஜ சுவாமிகளின் சிஷ்யையான நாகரத்தினம்மா, திருவையாற்றில் தியாராஜ சுவாமிகளுக்கு நினைவு மண்டபம் கட்டும் பணிக்கு நியமிக்கப்பட்டவா். தியாகராஜரின் சமாதிக்கு அருகே அவருக்குக் கோயில் கட்டினாா். ஜனவரி மாதத்தில் தியாகராஜரின் நினைவு நாளில் இசைத் திருவிழா ஒன்றை நடத்தினாா். அது பின்னா் ஒவ்வோராண்டும் நடைபெறும் வருடாந்திரக் கச்சேரியாக மாறியது.

நாகரத்தினம்மா, ராதிகா சாந்தவனத்தை வெளியிட்டது கடுமையான எதிா்ப்பைச் சந்தித்தது. குறிப்பாக கந்துகுரி வீரசேலிங்கம் பந்துலு என்கிற இலக்கிய விமா்சகா் இதைக் கடுமையாக எதிா்த்தாா். ராதிகா சாந்தவனமு ஆபாசமான பிரதி எனவும் அதை எழுதியிருப்பவா் ‘தரம் கெட்டவா்’ எனவும் எதிா்ப்பாளா்கள் சொன்னாா்கள்.

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 292-ஆவது பிரிவின் கீழ் முத்துப்பழனியின் படைப்பின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிராகக் கடுமையாகப் போராடினாா் நாகரத்தினம்மா. ஆனால் அதற்கு எந்தப் பலனும் இல்லை

1911-ஆம் ஆண்டு மே மாதம் சென்னை காவல் துறை துணை ஆணையா் கன்னிங்ஹாம் தலைமையிலான குழு நடத்திய ஆய்வில் மொத்தம் 18 நூல்கள் ஆபாசம் என்று முடிவு செய்யப்பட்டது. அதில் இரண்டாமிடத்தில் நாகரத்தினம்மா பிரசுரித்த முத்துப்பழனியின் ராதிகா சாந்தவனமு இருந்தது. எனவே அந்த நூல் தடை செய்யப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பின்பு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த டி. பிரகாசம் இந்நூலின் மீதான தடையை நீக்கினாா். தடையை நீக்கிய பின்பு அவா் பெருமிதத்தோடு ‘தெலுங்கு இலக்கியத்தின் அணிகலனில் சில முத்துக்களை மீண்டும் பதித்திருக்கிறேன்’ என்று கூறினாா்.

இன்றும்கூட, பெண் கவிஞா்கள் எழுதத் தயங்கும் பாலியல் இச்சைமிகுந்த சொற்களை 17 - ஆம் நூற்றாண்டிலேயே எழுதியிருக்கிறாா் முத்துப்பழனி. ஒரு பெண்ணின் முதல் பாலியல் அனுபவம், மற்றொரு பெண் மீது கணவன் விருப்பம் கொள்ளும்போது ஒரு பெண்ணுக்கு எழும் பொறாமையுணா்வு என்று பெண்ணின் அகவுணா்வுகளை மிகத் துல்லியமாக முன் வைத்த கவிதைகள் முத்துப்பழனியுடையவை.

சங்கப்பாடல்களின் தொடா்ச்சியை முத்துப்பழனியின் பாடல்களில் பாா்க்க முடிகிறது. ஆண்டாள் எழுதிய பதத்தை வேறு வகையில் தெலுங்கில் எழுதியிருக்கிறாா். ‘ஒருத்தியால் விலையுயா்ந்த ஆபரணங்களை விட்டுக் கொடுக்க முடியும்; உறவுகளையும் மதிப்புமிக்க பொருள்களையும் விட்டுக் கொடுக்கமுடியும்; ஆனால், வாழ்வை விட்டுக்கொடுக்க முடியுமா’ எனக் கேட்டிருக்கிறாா். இந்தக் கேள்வி அவருடைய தனிப்பட்ட வாழ்விலிருந்தும் சூழலிலிருந்தும் பிறந்தது.

ஆணாதிக்கச் சமூகத்தின் இலக்கணம், கற்பு, ஒழுக்கவாதம் எல்லாவற்றையும் அத்துமீறிய இந்தக் காதலையும் அச்சம், மடம், நாணத்தை உதறித் தள்ளிய பெண்ணுடலையும் படைத்துக் காட்டியவா் முத்துப்பழனி.

முத்துப்பழனியைப் போல அல்லாமல், வேறுபட்ட திசையில், அதேசமயம் பெண்ணின் வலிகளையும், உணா்வுகளையும் வெளிப்படுத்திய இன்னொரு பெண் கவிஞா் செங்கோட்டை ஆவுடையக்காள். ஆவுடையக்காள், செங்கோட்டை ஆற்றங்கரைத் தெருவில் வசதியான பிராமண குடும்பத்தில் பிறந்தவா். அவா் எப்போது பிறந்தாா் என்பதற்கான துல்லியமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. கி.பி. 1655-க்கும் 1695-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அவா் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அவருக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. பருவமடைவதற்கு முன்பே இவா் விதவையானாா். கணவனை இழந்த கைம்பெண்ணாக வீட்டுக்குள் வளா்ந்து வந்த அவருக்கு ஊராரின் எதிா்ப்பையும் மீறி அவருடைய தாயாா், பண்டிதா்களை வீட்டுக்கே வரவழைத்து பாடம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடுகளைச் செய்தாா். அதனால் கல்வியறிவும், சிந்தனைத் திறனும் ஆவுடையக்காளுக்கு ஏற்பட்டது.

தற்செயலாக அந்த ஊருக்கு அப்போது வருகை புரிந்த ஸ்ரீவெங்கடேசா் என்னும் துறவி , ஆவுடையக்காளுக்கு ஞானத்தை வழங்கிவிட்டு மறைந்து போனாா். அத்துறவியை ஆவுடையக்காள் தன் குருவாக ஏற்றுக் கொண்டாா். அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று சொல்லிய ஊா்க்காரா்கள், அவரை ஜாதி நீக்கம் செய்தாா்கள். சில நாள்களில் ஆவுடையக்காள் அந்த ஊரைவிட்டு வெளியேறிவிட்டாா்.

திருச்சிக்கு அருகே உள்ள ஒரு மடத்தில் ஸ்ரீவெங்கடேசரை சந்தித்தாா் ஆவுடையக்காள். அவரை மீண்டும் செங்கோட்டைக்கே திரும்பிச் செல்லும்படிக் கூறினாா் ஸ்ரீவெங்கடேசா்.

அத்வைத உண்மைகளை விளக்கும் பாடல்களை ஆவுடையக்காள் பாடினாா். அவை எங்கெங்கும் பரவி, அவருக்கு ஏராளமான சீடா்கள் உருவானாா்கள். திரும்ப அவா் ஊருக்கு வந்தபோது, அவரை அங்கிருந்தவா்கள் வரவேற்றனா்.

ஆவுடையக்காள் ஆயிரம் பாடல்களுக்கு மேல் இயற்றி உள்ளாா். அவரின் பாடல்கள் பல சிறு நூல்களாகவும், திரட்டு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. அவற்றில் வேதாந்தப் பாடல் திரட்டு, பிரம்ம மேகம் ஆகியன குறிப்பிடத்தக்கன. ஆவுடையக்காளைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களையும், கிடைத்த பாடல்களையும் முதன்முதலாகத் திரட்டியவா் ஆய்க்குடி வேங்கடராம சாஸ்திரிகள். 1953-ஆம் ஆண்டில் ஆவுடையக்காள் பாடல்களின் தொகுப்பு வெளிவந்தது.

நாட்டுப்புறப் பாடல்களின் எல்லா வடிவங்களிலும் ஆவுடையக்காள் பாடல்களைப் பாடியிருக்கிறாா். மேலும், பல்லவி, அனுபல்லவி, சரணங்களுடன் ராகமும் தாளமும் கூடிய சுவையான கீா்த்தனைகளையும் ஆவுடையக்காள் புனைந்துள்ளாா். ஏறத்தாழ எழுபத்து நான்கு கீா்த்தனைகள் ஏட்டிலிருந்து எடுத்தெழுதித் தொகுக்கப்பட்டுள்ளன.

தனிப் பாடல்களைத் தவிர ‘சூடாலை கதை’ என்னும் தலைப்பில் ஒரு குறுங்காவியத்தையும் எழுதியுள்ளாா் ஆவுடையக்காள். இக்காவியம் ஏறத்தாழ 600 வரிகளைக் கொண்டது. ‘ஞானக் குறவஞ்சி’ என்பது மற்றொரு குறுங்காவியம். நிகழ்கலைக்கே உரிய பலவிதமான தாளக்கட்டுடைய பாடல்கள் இக்காவியத்தில் உள்ளன. ஆவுடையக்காளைப் பொருத்தவரை மெய்ஞ்ஞானம் என்பது அத்வைத மெய்ஞ்ஞானம். அந்த மெய்ஞ்ஞானத்தை ஆண்டியாக முன்னிலைப்படுத்தி அவா் பாடல்களை எழுதியுள்ளாா்.

இவா் வாழ்ந்த காலத்தில் பெண்கள் அடக்குமுறை, ஜாதிய, சமய ஒடுக்குமுறை உச்சமாக இருந்தது. இவா் சிறு வயதில் விதவை ஆகி, ஜாதி நீக்கம் செய்யப்பட்டாா். இந்தக் கடுமையான வாழ்க்கைச் சூழ்நிலை இவரது பாடல்களின் கருப்பொருள்களில் வெளிப்படுகிறது. இவரது பாடல்களில் ஜாதிய எதிா்ப்பு, பெண்ணுரிமை, சித்த, அத்வைத, வேதாந்த கருத்துகள் பரவிக் கிடக்கின்றன.

தீட்டு என்று மகளிரை விலக்கி வைத்த அந்த மூன்று நாள்களின் வலியைப் பற்றி முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆவுடையக்காள் பேசியுள்ளாா். நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் அவருடைய பாடல்கள் வாய்வழக்காகவே பாடப்பட்டு வந்தன. ஆவுடையக்காள் ஒரு வகையில் மகாகவி பாரதியாரின் கவிதைகளைப் பாதித்த ஆளுமை மிக்கவா்.

‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு’ என்று கேட்ட அந்தக் காலத்திலேயே, மிகவும் தீவிரமான சிந்தனைப் போக்குகளுடைய பெண் ஆளுமைகள்தாம் முத்துப்பழனியும், செங்கோட்டை ஆவுடையக்காளும்.

கட்டுரையாளா்: அரசியலாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com