பருவநிலை மாற்றம்: ஓர் எச்சரிக்கை

பருவநிலை மாற்றம்: ஓர் எச்சரிக்கை
Updated on
2 min read

 கத்திரி வெயிலின் தாக்கம் தொடங்கியிருக்கும் வேளையில் அதை உணரமுடியாத வகையில் குளிரின் தாக்கமும் அதிகரித்திருப்பது விந்தையாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாத்தில் இருந்த வெப்ப அலை நடப்பு மே மாதத்தில் மிகவும் குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
 எதிர்பாராத பரவலான மழை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் என இந்த கோடை காலத்திற்கு சவால் விடும் வகையில் இயற்கை மாறியுள்ளது. கடந்த ஜனவரி இறுதியிலும் பிப்ரவரியிலும் பருவம் தவறிப் பெய்த மழையினால் பெரும்பாலான இடங்களில் விளைச்சலுக்கு தயார் நிலையில் இருந்த விவசாய பயிர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளானது. பருவம் தவறிய மழையால் தமிழகத்தில் மட்டும் சுமார் 93,874 ஹெக்டேர் விவசாயப் பரப்பு சேதமடைந்ததாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
 பருவம் தவறிய மழையால் தமிழகத்தில் டெல்டா மாவட்ட நெல் சாகுபடி விவசாயம் மட்டுமல்லாது மா, வாழை, முந்திரி போன்ற பிற பயிர்களும் மிகவும் பாதிப்படைந்தன. மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் பிற மாநிலங்களிலும் கூட இந்த நிலை ஏற்பட்டது.
 மகாராஷ்டிரத்தில் பருவம் தவறிப் பெய்த மழையால் நாசிக் மாவட்டத்தில் 1,800 ஹெக்டேர் பரப்பில் வெங்காயம், கோதுமை விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. விதர்பா மாவட்டத்தில் மட்டும் சுமார் 50,000 ஹெக்டேர் விவசாயப் பரப்பு பாதிப்படைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டில் இங்குதான் விவசாயிகளின் தற்கொலை அதிகம் நிகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 தமிழகத்தில் மலைப் பயிர்களான கேரட், உருளைக்கிழங்கு, பீட்ருட் போன்ற இதர விளைபொருட்களும் பெருமளவு பாதிப்படைந்துள்ளன. அண்டை மாநிலங்களில் கோடை காலத்திற்கென்று தர்பூசணி, வெள்ளரி சாகுபடி செய்த விவசாயிகளும் பருவம் தவறிய மழையால் பெருமளவில் இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.
 இவ்வகை பாதிப்புகளுக்கு, இயற்கையை சிதைக்கும் நம் செயல்பாடுகளே முக்கியக் காரணமாகின்றன. குறிப்பாக புவி வெப்பமயம் எனப்படும் புவியின் வெப்பத்தை அதிகரிக்கும் செயல்களான வனங்களை அழித்தல், விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுதல், மின்கழிவுகளை அதிகரித்தல், நெகிழிப் பயன்பாட்டைக் கைவிடாமை ஆகியவை முக்கியமான இயற்கைச் சிதைப்பு முறைகளாகும்.
 மின்னணு, நெகிழி போன்ற கழிவுகள் மண்ணில் சேர்வதால் மண்வளம் பாதிப்படைகிறது. விளைவு வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் தாக்கம் அதிகரித்து புவியின் வெப்பமும் அதிகரிக்கிறது. பருவநிலை மாற்றத்திற்கு இது ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.
 வளிமண்டல வெப்பம் உயர மற்றொரு முக்கிய காரணியாக இருப்பது மரபுசார் எரிபொருள்கள் பயன்பாடு ஆகும். இவற்றில் மிக முக்கியமானது நிலக்கரி. நிலக்கரி பயன்பாட்டின் வெப்ப உமிழ்வால் பெருமளவு வெப்பம் வளிமண்டத்தில் அடைபட்டு நிற்பதால் வெப்பநிலை உயருகிறது. எனவே தற்போதைய சூழலில் நிலக்கரியின் பயன்பாட்டை குறைக்க வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.
 இயற்கையின் மாறுபடும் பருவநிலை பல இடர்களுக்கு வித்திடுகிறது. கத்திரி வெயிலின் தாக்கத்தில் மனிதர்களுக்கு நோயை பரப்பும் சில கிருமிகளின் வளர்ச்சிகள் தடைபடலாம். ஆனால், தற்போது கத்திரி வெயிலிலும் குளிர் நிலவுவது, கரோனா போன்ற புதிய தீநுண்மிகளின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையலாம். இதனால் புதிய நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உருவாகலாம்.
 பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் 2021-இல் நடந்த பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு, உலகில் எரிபொருள் வாயிலாக வெளிப்படும் உமிழ்வுகளை எவ்விதம் கட்டுப்படுத்தலாம் என்பதையே முக்கிய கருப்பொருளாக கொண்டிருந்தது.
 இதே போல் பருவநிலை குறித்த 2015-ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தம், 2050-க்குள் நிகர எரிபொருள்களின் உமிழ்வுகளை உலக அளவில் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதையும் மையப்படுத்தியிருந்தது.
 இயற்கை இவ்வாறு தன் போக்கை மாற்றிக்கொள்வது மனித குலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமையும். வழக்கமாக வடகிழக்குப் பருவமழை காலங்களில் மட்டும் புயல் என்ற வார்த்தையை கேட்டு வந்த நமக்கு, கோடையிலும் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 இந்த ஆண்டு, வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ஏப்ரல் 29 முதல் மே 2 வரை இயல்பை விட 10 டிகிரி வெப்பம் குறைவாக இருந்தது எனவும் இதனால் பல இடங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது எனவும் பல இடங்களில் ஆலங்கட்டி மழை பொழிந்து மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
 இயற்கைக்கு மாறான இந்த நிகழ்வுகளால் தனிமனித வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. பருவ மழை பொய்த்தால் ஒட்டுமொத்த விவசாயமும் பாதிக்கப்படலாம். ஆனால் பருவம் தவறிப் பெய்யும் மழையினால் வழக்கமான பல பணிகளும் உற்பத்தியும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் நாட்டின் வருவாயும் பாதிப்படையும். பணவீக்கம் உருவாகக்கூடிய நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது.
 இந்த இக்கட்டான பருவநிலை மாற்ற காலத்தில் நாம் இயற்கையை பாதுகாப்பது என்பது மிகுந்த அவசியமாகிறது. நாட்டில் 33% வனப்பகுதி என்பது அரசின் குறிக்கோளாக அமைய வேண்டும். வனங்களை உருவாக்குவதில் தனி மனித முனைப்பு அவசியமாகிறது. அனைத்துத் தரப்பினரும் நெகிழியைத் தவிர்த்து துணிப்பை பயன்படுத்தும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
 சுற்றுசூழல் பாதிப்பு, கடல் நீரோட்டங்களின் முரண்பாடு, எல் நினோ போன்ற நிகழ்வுகளால் இயற்கை கூட குழப்பத்தை சந்திக்க நேரிடுகிறது. இயற்கையின் மறுபாடு நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக அமையும் என்பதை அனைவரும் உணர வேண்டும். இயற்கை வளங்களை நம்மால் உருவாக்க முடியாது; ஆனால் அவற்றைப் பாதுகாப்பது நம் கைகளில்தான் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com