அருகி வரும் தேனீக்கள் இனம்

அருகி வரும் தேனீக்கள் இனம்

உலகின் 85 சதவீத பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு காட்டு தேனீக்களும் வளர்ப்பு தேனீக்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள தேனீக்களின் வீழ்ச்சி உணவுப் பாதுகாப்பிலும் பல்லுயிர் பெருக்கத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 ஒடிஸாவில் 2017-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ஏபிஸ் செரானா, ஏபிஸ் டோர்சாட்டா, ஏபிஸ் புளோரியா, அமேகில்லா எஸ்பிபி, சைலோகோபா எஸ்பிபி ஆகிய ஐந்து வகையான தேனீக்களில் ஏபிஸ் டோர்சாட்டா தவிர மற்ற நான்கு இனங்களில் 70 முதல் 90 சதவீதம் வரை அழிந்துவிட்டன என்று தெரியவந்துள்ளது.
 பெங்களூரில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் வேளாண்மையியல் மகரந்தச் சேர்க்கை ஆய்வு மையம் நடத்திய ஆய்வும் தேனீக்களின் எண்ணிக்கை 20 சதவீதம் வரை குறைந்துள்ளது எனக் கூறுகின்றன. இந்திய ராட்சத தேனீக்கள் குறித்த ஆய்வு முடிவு,அவை இந்தியாவில் அழியும் அபாயத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
 45 ஆண்டு கால உணவு, விவசாய தரவுகளை பயன்படுத்தி 2011-ஆம் ஆண்டு மகரந்தச் சேர்க்கை சார்ந்த காய்கறி உற்பத்திக்கான முதல் ஆய்வு இந்தியாவில் நடத்தப்பட்டது. அதன் முடிவின்படி 1999-ஆம் ஆண்டு வரை விளைவிக்கப்பட்ட மகரந்தச் சேர்க்கை சார்ந்த பயிர்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது.
 அதன் பின் விளைவிக்கப்பட்ட மகரந்தச் சேர்க்கை சார்ந்த பயிர்களின் பரப்பு குறைந்து வருகிறது. மகரந்தச் சேர்க்கை சார்ந்த பயிர்களின் ஒப்பீட்டு மகசூல் வளர்ச்சி விகிதம் 1993-ஆம் ஆண்டுக்கு பிறகு குறைந்துள்ளது.
 நாடு முழுவதும் ஐந்து கோடி ஹெக்டேரில் பயிரிடப்படும் பயிர்கள் தேனீக்களின் மகரந்தச் சேர்க்கையை சார்ந்திருப்பதால், தேனீக்களின் வீழ்ச்சி இந்திய விவசாயத்தை அதிக அளவில் பாதிக்கும். மகரந்தச் சேர்க்கைக்கு உதவியாக இருக்கும் தேனீக்கள் மீது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
 தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தேனீ வளர்ப்போரும் விவசாயிகளும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் மீதான மத்திய அரசின் முடிவை திரும்பப் பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 மரபணு மாற்றப்பட்ட கடுக்காய் வணிக ரீதியாகப் பயிரிடப்படுவதை தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின்போது, மரபணு மாற்ற பயிர் சாகுபடி பாதுகாப்பானது என்றும் இப்பயிர்கள் தேனீக்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 விவசாயத்தையே பெரிதும் சார்ந்திருக்கும் இந்தியா, அதன் விளைச்சலை மேம்படுத்த 70 சதவீதம் தேனீக்களால் நிகழும் மகரந்தச் சேர்க்கையை நம்பியுள்ளது. தேனீக்களின் எண்ணிக்கை குறைவதால் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள் போன்ற சத்தான உணவுகளின் உற்பத்தியிலும் அவற்றின் விலையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 தேனீக்களின் எண்ணிக்கையில் ஏற்படும் வீழ்ச்சி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். கடன் சுமையால் போராடி வரும் இந்திய விவசாயம் தேனீக்களின் வீழ்ச்சியினால் குறைந்த பயிர் விளைச்சலுடன் நிதி நெருக்கடியையும் எதிர் கொள்கிறது.
 உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும் சுமார் 5,00,000 அகால மனித இறப்புகளுக்கும் தேனீக்களின் எண்ணிக்கை குறைபாடுக்கும் தொடர்பு இருப்பதாக "சுற்றுச்சூழல் சுகாதார கண்ணோட்டம்' என்ற இதழில் (டிசம்பர், 2022) வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.
 புற்றுநோய், நீரிழிவு, பக்கவாதம் போன்ற தொற்றா நோய்கள் உள்ள இந்தியா போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இந்த மனித இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
 தேனீக்களின் வீழ்ச்சியினால் ஏற்படும் மகரந்தச் சேர்க்கை குறைபாட்டை சரி செய்ய சீன விவசாயிகள் கையால் மகரந்தச் சேர்க்கை செய்வதற்கு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். இது கால விரயத்துடன் பணச் செலவினையும் அதிகரிக்கிறது.
 தேனீக்களைப் போல ஆப்பிள், சுரைக்காய் போன்ற பயிர்களில் மகரந்தச் சேர்க்கை நிகழ்த்துவதற்கு, வண்ணம் தீட்டும் தூரிகைகளைப் பயன்படுத்தவேண்டும். இல்லை என்றால் இழப்பை சந்திக்க நேரிடும் என்கின்றனர் வல்லுநர்கள்.
 ஹிமாசல பிரதேச மாநிலத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் சுமார் ரூ. 4,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி தரும் ஆப்பிள் வர்த்தகம், இந்த ஆண்டு சுமார் 20 சதவீதம் வரை இழப்பை ஏற்படுத்தும் என்று அம்மாநில ஆப்பிள் தோட்ட வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த ஆண்டு நிகழ்ந்த வானிலை மாற்றத்தாலும் அதனால் நேரிட்ட தேனீக்களின் அழிவாலும் மகரந்தச் சேர்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதே இந்த இழப்பிற்கான முக்கிய காரணம்.
 இயற்கை தேனீக்கள் இல்லை என்ற நிலையில் அபிஸ் மெல்லிபெரா என்று அழைக்கப்படும் இத்தாலிய தேனீக்கள் 1962- ஆம் ஆண்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு ஹிமாசல பிரதேசத்தின் நக்ரோட்டாவில் வளர்க்கப்பட்டன.
 ஹிமாசல பிரதேசத்தில் வசிக்கும் 2,00,000- க்கும் மேற்பட்ட ஆப்பிள் தோட்டக்காரர்களில் பெரும்பாலானோர் இந்த ஆண்டு ஆப்பிள் பூ பூக்கும் ஏப்ரல் மாதத்தில் தேனீக்களை 1,200 முதல் 2,000 ரூபாய் வரை மாத வாடகைக்கு வாங்கினர். வாடகைக்கு வாங்கப்பட்ட தேனீக்களில் பாதி தேனீக்கள் அவை வசித்த பெட்டிகளில் இறந்து கிடந்தன.
 தேனீக்களின் மைய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நியோனிகோட்டினாய்டுகளைக் கொண்ட பூச்சிக்கொல்லிகள், கிளைபோசேட்களைக் கொண்ட களைக்கொல்லிகள் போன்றவை தேனீக்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும்.
 நியோனிகோடினாய்டுகள் உட்பட 28 நச்சு பூச்சிக்கொல்லிகளை இந்திய அரசாங்கம் தடை செய்திருந்தாலும் உலகின் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட தேனீக்கொல்லிகளான கொடியனிடின், இமிடாக்ளோபிரிட், தியாமெதோக்சம், டைனோட்ஃபுரான், ஃபிப்ரோனில், கிளைபோசேட் போன்றவற்றின் பயன்பாடு இன்னும் இருக்கிறது.
 இயற்கைப் பேரிடராலும் தொற்றுநோயாலும் தேனீக்களுக்கு ஏற்படும் இறப்பைத் தவிர்க்க, கடந்த ஜனவரி மாதம் "டாலன் அனிமல் ஹெல்த்' எனப்படும் ஜார்ஜியா உயிரி தொழில்நுட்ப நிறுவனம் தேனீக்களுக்கு தடுப்பூசியை வடிவமைத்து அமெரிக்க வேளாண்மைத் துறையின் உரிமத்தைப் பெற்றுள்ளது. இனியாவது தேனீக்கள் நீண்டு வாழட்டும்; வேளாண் உலகையும் வளமாக்கட்டும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com