மறைந்தும் மறையாமல்... கண்ணின் ஒளியாய்!

டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத்.
டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத்.
Published on
Updated on
3 min read

உலகத்தின் தலைசிறந்த கண் மருத்துவ நிபுணர்களில் ஒருவரான டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் காலமானார் என்பது அவரிடம் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ள அனைவருக்கும் ஒரு சோகச் செய்தி. செங்கமேடு ஸ்ரீநிவாச பத்ரிநாத், 1940-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி பிறந்தவர். அவர் அண்மைக்காலமாக உடல்நலம் குன்றியிருந்தார். அவரது திடீர் மறைவு சமுதாயத்தின் சோகமாகிவிட்டது.
சர்வதேச பெருமைக்குரியவராக இருந்த பத்ரிநாத்துடன் சென்னை தியாகராய நகர் ராமகிருஷ்ண மிஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்தவன் என்பது எனக்குப் பெருமை. பள்ளிக்கூடத்தின் விழாக்களிலும் முன்னாள் மாணவர் சங்கக் கூட்டங்களிலும் இந்த நட்பை நான் ஒரு பெருமையாகச் சொல்லிக்கொண்டதுண்டு. அது மட்டுமல்ல, அந்தத் தங்கமான மனிதரின் பாதம் பட்ட இடமெல்லாம் தங்கம் என்றுதான் சொல்ல வேண்டும்.
உஸ்மான் சாலையில் இன்று ஜி.ஆர். தங்க மாளிகை இருக்கும் இடம்தான் அந்தக் காலத்தில் எஸ்.எஸ். பத்ரிநாத்தின் தமக்கையின் கணவர் கிருஷ்ணா ராவின் வீடு. அங்கிருந்து தியாகராயநகர் பாஷ்யம் செட்டி தெருவில் உள்ள ராமகிருஷ்ண உயர்நிலைப் பள்ளிக்கு நடந்து வருவார். அவரது பாதம் பட்ட இடங்களில் இன்று நகைக் கடைகள் இருக்கின்றன.
சங்கர நேத்ராலயாவில் நடைபெறும் சில மருத்துவ மாநாடுகளுக்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். அவற்றுக்குத் தவறாமல் சென்று வந்திருக்கிறேன். டாக்டர் பத்ரிநாத் சமுதாய நலம் குறித்தோ, மருத்துவத் துறை குறித்தோ ஆங்கிலத்தில் பேசினால் அரங்கில் உள்ள அனைவரும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவையோரை வசப்படுத்தும் பேச்சு அவருடையது. அந்தப் பேச்சில் எளிமை இருக்கும்; ஆடம்பரம் இருக்காது; ஆனால் அழுத்தம் இருக்கும்.
டாக்டர் பத்ரிநாத் எப்போதாவது எங்கள் கடைக்கு வந்து பேசிவிட்டுச் சென்றதுண்டு. அதையெல்லாம் பொன்னான மணித் துளிகள் என்று கருதினேன். அவரின் நேரம் அவ்வளவு மதிப்புமிக்கது. மருத்துவத் துறை தவிர அவருக்கு வேறு எந்த ஈடுபாடும் இருந்ததில்லை.  பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அவரை யாரும் கண்டதில்லை. அந்த அளவுக்கு தொழில் பக்தி கொண்டவர்.
அவர் பள்ளிப் படிப்பை முடித்ததும் சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) மருத்துவப் படிப்பை முடித்தார். கண் மருத்துவத்தை முக்கிய பாடப்பிரிவாகத் தேர்ந்தெடுத்தார். அதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. அவரது பால பருவத்தில் வீட்டில் ஒரு உறவுக்காரப் பெரியவர் தங்கியிருந்தார். அவர் பார்வையில்லாதவர். தினசரி அவர் படும்பாட்டையும், உறவினர்கள் அவருக்கு அனைத்து விதங்களில் உதவி வந்ததையும் பார்த்த அவர், அப்போது முதலே தான் ஒரு கண் மருத்துவராக வேண்டும் என்று விரும்பினார். பலருக்கு கண் மருத்துவம் செய்ய வேண்டும். பார்வையை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அதுவே அவருக்கு ஓர் உந்துசக்தியாகி அவரை பிரபல கண் மருத்துவராக்கியது.
சென்னையில் 1962-இல் மருத்துவப் படிப்பை முடித்த அவர், அடுத்த ஆறு ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கியிருந்து கண் மருத்துவத் துறையில் உயர்கல்வியும் பயிற்சியும் பெற்றார். அதன்பிறகு அங்கேயே இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். இந்தியாவுக்கு 1970-இல் திரும்பிய அவர், அடையாறில் வி.எச்.எஸ். மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அதையடுத்து விஜயா மருத்துவமனையில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போதே அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.
இதற்கிடையே மருத்துவத் துறையில் அதிக செலவில்லாமல் குறைந்த கட்டணத்தில் எல்லோரும் மருத்துவ வசதி பெறுவதற்கான அமைப்பை மருத்துவர்கள் உருவாக்க வேண்டும் என்று அவரிடம் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கேட்டுக்கொண்டார். 
இது பத்ரிநாத்துக்கு ஓர் உந்து சக்தியாக இருந்தது. அவர் 1978-இல் "சங்கர நேத்ராலயா' என்ற மருத்துவமனையை "மெடிக்கல் ரிசர்ச் பெளண்டேஷன்' என்ற அமைப்பின் மூலம் தொடங்கினார். நன்கொடையாளர்களின் உதவியால் பெரிய பெரிய கட்டடங்கள் எழும்பின.
அதிநவீன கருவிகள் வாங்கப்பட்டன. பல மருத்துவர்கள் அங்கே பணி செய்ய முன்வந்தார்கள். இன்று "சங்கர நேத்ராலயா' உலகப் புகழ்பெற்ற மருத்துவமனை. தாமாக முன்வந்து நன்கொடையாளர்கள் கட்டடங்கள் கட்டித் தந்தார்கள் என்பது பத்ரிநாத்தின் தன்னலமற்ற, லாப நோக்கம் பாராத பொதுப் பணியின் சிறப்பைக் காட்டுகிறது.
தேசத்தின் தலைசிறந்த வழக்குரைஞராகவும், ஒரு கட்டத்தில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகவும் இருந்த நானி பால்கிவாலா ஒரு பெரிய கட்டடம் கட்டிக் கொடுத்தார். அதேபோல் ஜெயின் இனத்தைச் சேர்ந்த சுகால்சந்த் ஜெயின் ஒரு பெரிய கட்டடம் கட்டிக் கொடுத்தார். சென்னை பிராட்வே பகுதியில் உள்ள ராமகிருஷ்ண லஞ்ச் ஹோம் உரிமையாளர் ராமகிருஷ்ண ஐயர் ஒரு கட்டடத்தை கட்டிக்கொடுத்தார். இப்படி வேறு சிலரும் உதவியிருக்கிறார்கள். இவை தவிர கிளைகள் அமைப்பதற்கு சில தனவந்தர்கள் மனை கொடுத்தார்கள்.
பல உதவிகள் பத்ரிநாத்துக்கு கேட்காமலேயே கிடைத்தன என்பதுதான் அவரது சிறப்பு. அந்த அளவுக்கு நன்கொடையாளர்கள் அவரின் உத்தமமான பணியைப் புரிந்துகொண்டிருந்தனர். அதனால்தான் பல ஏழை நோயாளிகளுக்கும் அங்கே இலவசமாக கண் மருத்துவம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் "ஆப்டோமெட்ரி' எனப்படும் கண் பரிசோதனை செய்யும் படிப்பும், பயிற்சியும் "சங்கர நேத்ராலயா'வில் அளிக்கப்படுகின்றன. இங்கு பயின்றவர்கள் வேறு மருத்துவமனைகளில் கண் பரிசோதனையாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.
இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கண் சார்ந்த பிரச்னைகளுக்காக பலர் "சங்கர நேத்ராலயா'வுக்கு வருகிறார்கள், குணமாகி திரும்புகிறார்கள். தன் சிறப்பான பணிக்காக பத்ரிநாத் "பத்மபூஷண்' விருதையும் பெற்றார்.
டாக்டர் பத்ரிநாத்தின் புகழ் உலகம் முழுவதும் பரவியதற்கு ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஒருமுறை அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் வெளிநாட்டுக்கு பயணம் செய்து, அந்த நாட்டில் கண் பரிசோதனை செய்துகொண்டார். அங்கிருந்த மருத்துவர்கள் பின்வருமாறு கூறினார்களாம்: "சென்னையில் இருந்தா இங்கு வந்திருக்கிறீர்கள்? இங்கு யாருக்காவது கண் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், சென்னையில் உள்ள டாக்டர் பத்ரிநாத்திடம்தானே நாங்கள் அனுப்புவோம்'.
மகாபெரியவர் என்று அழைக்கப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற ஞானிக்கு கண் அறுவை சிகிச்சை செய்த பெருமைக்குரியவர் டாக்டர் பத்ரிநாத் என்பது அவர் தனது வாழ்க்கையில் பெற்ற பெரும் பேறு.
தன்னை வெளியில் அதிகம் பிரபலப்படுத்திக் கொள்ளாதவர் டாக்டர் பத்ரிநாத். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தவர். கண் மருத்துவம் தொடர்பான மாநாடுகளில் மட்டும் அவரைப் பார்க்க முடியும். மற்றபடி எப்போதும் "சங்கர நேத்ராலயா'வில்தான் இருப்பார். அவரின் மனைவி வசந்தி பத்ரிநாத்தும் ஒரு மருத்துவர். "காரியம் யாவினும் கைகொடுத்து' என்று பாரதியார் சொன்னபடி "சங்கர நேத்ராலயா' பணிகளுக்கு கணவருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.
தன்னை அதிகம் பிரபலப்படுத்திக் கொள்ளாத டாக்டர் பத்ரிநாத் குறித்து ஓர் ஆவணம் தயாரிக்க வேண்டுமென்று சென்னை வானொலி நிலையம் விரும்பியது. அப்போதைய இயக்குநரான பி.ஆர். குமார் என்பவர் இதற்கு பெருமுயற்சி எடுத்தார். எளிதில் ஒப்புக்கொள்ளாத டாக்டர் பத்ரிநாத்தை ஒரு பேட்டிக்கு ஒப்புக்கொள்ள வைத்தார். அந்த ஆவணம் இப்போது சென்னை வானொலி நிலையத்தின் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. டாக்டர் பத்ரிநாத்தின் குரலை அதில் கேட்கலாம். பேட்டி கண்டவர் ஹிந்து பத்திரிகையில் பணிபுரிந்த ஆர். நடராஜன். 
இது ஒன்றே நமக்கு கிடைத்துள்ள பத்ரிநாத்தின் சுயசரிதை ஆடியோ பதிவு ஆவணம். அவர் தன்னைப் பற்றி வேறு எங்கும் ஆடியோ பதிவு செய்ததாகத் தெரியவில்லை. அந்த ஆவணம் பதிவு செய்யபட்டபோது இருந்த நிபந்தனை என்னவென்றால், பேட்டி கொடுத்தவரின் வாழ்வுக்குப் பிறகே அது வெளியிடப்படும் என்பது. இனிமேல் ஒருவேளை சென்னை வானொலி நிலையம் அதை ஒலிபரப்பலாம்.
டாக்டர் பத்ரிநாத், தன் மறைவுக்குப் பிறகு விரிவான சடங்குகள் எதையும் செய்ய வேண்டாம் என்றும், "சங்கர நேத்ராலயா'வில் மருத்துவப் பணிகள் ஒரு நிமிஷம்கூட நிறுத்தப்படக் கூடாது என்றும், மருத்துவர்களும் மற்றும் ஊழியர்களும் தங்கள் துக்கத்தை தெரிவிக்க விரும்பினால் கையில் கருப்புப் பட்டை அணிந்துகொண்டு வந்தால் போதும் என்றும் தெரிவித்தார். இவரைப் போன்றவர்கள்தான் இறந்த பிறகும் வாழ்கிறார்கள்.

கட்டுரையாளர்:
தொழிலதிபர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.