தமிழ் விக்கிப்பீடியாவின் இருபதாண்டுகள்!

தமிழ் விக்கிப்பீடியாவின் இருபதாண்டுகள்!
Published on
Updated on
3 min read

 விக்கிப்பீடியா என்பது ஓர் கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியம். இந்த இணையக் கலைக்களஞ்சியம் இன்றைக்கு 322 மொழிகளில் கிடைக்கிறது.
 இந்த இணைய கலைக்களஞ்சியத்தில் இந்திய மொழிகளில் ஒன்றான தமிழ் விக்கிப்பீடியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பெருமைக்குரிய தமிழ் விக்கிப்பீடியா கடந்த ஆண்டில் 1,50,000 தொகுப்புகளைச் சத்தமில்லாமல் கடந்தது என்றால், கடந்த செப்டம்பர் 30-ஆம் நாள் இரு தசாப்தங்களைக் கடந்துள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவின் இருபதாண்டு நிறைவுவிழா தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது.
 கலைக்களஞ்சியம் (என்சைக்லோபீடியா) என்பது எழுத்து வடிவில் உள்ள அறிவுத்தொகுப்பு ஆகும். கலைக்களஞ்சியங்களின் முக்கியத்துவத்தினை உணர்ந்த, 18-ஆம் நூற்றாண்டில் பிரான்சிய மொழி கலைக்களஞ்சியத்தினை வெளியிட்ட டென்னிசு டிட்ரோ, "கலைக்களஞ்சியத்தின் நோக்கம், உலகம் முழுதும் பரந்துள்ள மனித அறிவைச் சேமித்து மக்களுக்குப் பயன்படுமாறு தொகுத்து, நமக்குப் பின்வரும் தலைமுறையினருக்கு வழங்குவது ஆகும்' என்று தெரிவிக்கின்றார்.
 கலைக்களஞ்சியங்களின் தோற்றத்தை ஆராயும்போது இவை 18-ஆம் நூற்றாண்டின் அகரமுதலிகளிலிருந்து உருவானவை என்பதை அறியலாம். இக்கலைக்களஞ்சியங்கள், உள்ளடக்கம், எல்லை, ஒழுங்குபடுத்தும் முறை, உருவாக்கும் முறை என்ற நான்கு முக்கியக் கூறுகளை உள்ளடக்கியுள்ளன. கலைக்களஞ்சியங்கள் பொதுவானவையாகவோ (பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் போல்), குறிப்பிட்ட துறை சார்ந்த கூறுகளை உள்ளடக்கியதாகவோ (மருத்துவக் கலைக்களஞ்சியம்போல்) அமையலாம்.
 இதன் அமைப்பில் கொடுக்கப்படும் தகவல்களுக்கான நம்பிக்கைத் தன்மையினை அதிகரிக்கும் நோக்கில் மேற்கோள்களுடனும் எளிதில் தகவல்களைத் தேட அகர வரிசையிலும் அமைக்கப்பட்டன. காலப்போக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப இணையப் புரட்சி காரணமாக இந்தக் கலைக்களஞ்சியங்கள் பல்லூடகங்களை உள்ளடக்கிய இணையக் கலைக்களஞ்சியங்களாகக் கிடைக்கின்றன (விக்கிப்பீடியா).
 கலைக்களஞ்சியங்கள் வரலாற்றினை நோக்கும் போது கி.பி. 77-ஆம் ஆண்டில் உரோம அரசியலாளரான மூத்த பிளினியால் எழுதப்பட்ட இயற்கை வரலாறு என்று பொருள்படும் "நேச்சுரலிஸ் ஹிஸ்டோரியா' என்னும் இலத்தீன் மொழி ஆக்கமே இன்று கிடைப்பவற்றுள் மிகவும் பழமையான கலைக்களஞ்சிய ஆக்கம் ஆகும். இக்காலகட்டத்தில் பல கலைக்களஞ்சியங்கள் தோன்றியிருந்தாலும் இன்றைக்குக் கிடைத்த நூல் இது ஒன்றே.
 இடைக் காலத்தின் தொடக்கத்தில் செயின்ட் இசிடோர் என்பவர் "எட்டிமோலோஜியே 630' என்னும் கலைக்களஞ்சியத்தினை வெளியிட்டார். பார்த்தொலோமியசு ஆங்கிலிக்கசு என்பவர் 1240-இல் ஆக்கிய கலைக்களஞ்சியமே இடைக்காலத்தின் நடுப்பகுதியில் அதிகமாக வாசிக்கப்பட்ட கலைக்களஞ்சியமாகும்.
 எனினும் பிந்தைய இடைக் காலத்தில் 1260-ஆம் ஆண்டு அளவில் வின்சென்ட் என்பவர் 3 மில்லியன் சொற்களைக் கொண்ட கலைக்களஞ்சியத்தினைத் தொகுத்தார். இதனைத் தொடர்ந்து பாரசீகத்தில் முஸ்லிம்களால் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியமும், சீனாவில் 11,000 தொகுதிகளுடன் உலகின் மிகப்பெரிய கலைக்களஞ்சியங்களுள் ஒன்றும் உருவாக்கப்பட்டன.
 அச்சுத் தொழிற்நுட்பம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னர், இக்கலைக்களஞ்சியத் தொகுப்புகள் கைகளால் நகலெடுக்கப்பட்டவையாக அமைந்தன. எனவே, இதனை உருவாக்க ஆகும் பொருட்செலவு காரணமாக இக்கலைக்களஞ்சியம் பொதுப்பயன்பாட்டில் இல்லை. மறுமலர்ச்சிக் காலத்தின்போது, அச்சுக் கலை மேம்பாடடைந்ததன் காரணமாகக் கலைக்களஞ்சியம் பரந்த அளவில் பயன்படத் தொடங்கியது. அறிஞர்கள் பலர் தமக்கென நகல் ஒன்றினை வைத்திருக்க வாய்ப்பாக அமைந்தது.
 இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கணினியில் பயன்படுத்தக் கூடிய "சிடி-ரோம்' வகை கலைக்களஞ்சியங்கள் வெளியிடப்பட்டன. பின்னர் அவை "டிவிடி' தட்டுகளாக மாறின. பொதுமக்களிடையே 2000 ஆண்டுகளின் நடுப்பகுதியில் இணையப் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக இணையக் கலைக்களஞ்சியங்கள் தோன்றின.
 இணையக் கலைக்களஞ்சியங்கள் இணையத்தின் மூலம் அணுகக்கூடிய எண்ம கலைக்களஞ்சியங்களாகும். விக்கிப்பீடியா, என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா மற்றும் என்சைக்ளோபீடியா டாட் காம் ஆகியவை இந்த வகையில் அடங்கும் இணையவழிக் கலைக்களஞ்சியங்களாகும். இவற்றில் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியமே காலத்தால் முதலில் தோன்றியதாகும்.
 கட்டணமின்றி இணையக் கலைக்களஞ்சியப் பயன்பாடு குறித்த கருத்து 1993-இல் யூஸ்நெட்டில் இன்டர்பீடியா முன்மொழிவுடன் தொடங்கியது. இத்தகைய இணைய அடிப்படையிலான கலைக்களஞ்சியத்தில் எவரும் உள்ளடக்கத்தை சமர்ப்பிக்கலாம். இத்தகைய கலைக்களஞ்சியங்களைப் பயனர் எவரும் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் அணுகலாம்.
 இந்த வரிசையின் ஆரம்ப திட்டமாக "எவரிதிங் 2' மற்றும் "ஓபன் சைட்' ஆகியவற்றைச் சொல்லலாம். 1999-இல், ரிச்சர்ட் ஸ்டால்மேன் குனூ என்பவர் இணையக் கலைக்களஞ்சியத்தை முன்மொழிந்தார். "நுபீடியா' என்ற இணைய கலைக்களஞ்சியச் செயல்பாட்டினைப் புரிந்துகொண்ட, விக்கிப்பீடியாத் திட்டங்களை முன்னின்று நடத்தும் விக்கிமீடியா அமைப்பின் நிறுவனரும், பிற விக்கி திட்டங்களை நடத்தும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்மி வேல்சும் அமெரிக்க மெய்யியலாளரும், லாரன்சு மார்க் லாரி சாங்கரும் இணைந்து கட்டற்ற பன்மொழிக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை ஆரம்பித்தனர். நியூபீடியா மற்றும் விக்கிப்பீடியா இணையத்தில் தோன்றும் வரை, நிலையான இலவச கலைக்களஞ்சிய திட்டத்தை இணையத்தில் நிறுவ முடியவில்லை.
 2001-இல் விக்கிமீடியா அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட ஆங்கில விக்கிப்பீடியா, தற்பொழுது 67,00,000 கட்டுரைகளுடன் உலகின் மிகப்பெரிய கலைக்களஞ்சியமாக உள்ளது. விக்கிமீடியா அறக்கட்டளை 335 மொழிகளில் விக்கிப்பீடியா இணையக் கலைக்களஞ்சியங்களை உருவாக்கியுள்ளது. 322 மொழிகளில் இக்கலைக்களஞ்சியங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்திய மொழிகள் பலவற்றிலும் இக்கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டு தன்னார்வலர்களால் மேம்படுத்தப்பட்டுள்ளன.
 பலவகைச் செய்திகளை, குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், சமூகம் தொடர்பான தகவல்களைத் தொகுத்துத் தரும் கலைக்களஞ்சியங்கள் தமிழ் மொழியில் 20-ஆம் நூற்றாண்டு வரை தோன்றவில்லை. "அபிதானகோசம்', மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையினால் தொகுக்கப்பட்டு, யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டு, 1902-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதுவே தமிழில் வெளியிடப்பட்ட முதல் கலைக்களஞ்சியம் ஆகும்.
 மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910-ஆம் ஆண்டு "அபிதான சிந்தாமணி' ஆ. சிங்காரவேலு முதலியாரின் கடின உழைப்பின் காரணமாக வெளிவந்தது. பெரியசாமித் தூரன் தலைமையில் 1954-இல் வெளிவந்த "தமிழ்க் கலைக்களஞ்சியம்' சிறந்த கலைக்களஞ்சியப் படைப்பாகும். இதன் பின்னர் 1980-களில் துறைசார் கலைக்களஞ்சியங்களை வெளியிடும் முயற்சியில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஈடுபட்டது. தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான அறிவியல் கலைக்களஞ்சியமும் வாழ்வியற் களஞ்சியமும் இங்குக் குறிப்பிடத்தக்கன.
 தமிழர்கள் இணையத்திலும் தமிழ் கலைக்களஞ்சியங்களை உருவாக்குவதில் ஆதிக்கம் செலுத்தினர். தமிழ் விக்கிப்பீடியா 2003-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் நாள் தொடங்கப்பட்டது. பெயர் தெரிவிக்கப்படாத பயனர் ஒருவரால் தமிழ் விக்கிப்பீடியாவின் முதற் பக்கத்தின் முதல் தொகுப்பு செப்டம்பர் 30-ஆம் நாள் நிகழ்ந்துள்ளது. இதன் பின்னர் முதல் கட்டுரை, கொலம்பசு 2003 திசம்பர் 3-இல் வெளியானது.
 இதனைத் தொடர்ந்து இலங்கையைச் சேர்ந்த மயூரநாதன் வருகையினை அடுத்து தமிழ் விக்கிப்பீடியா குறிப்பிடத்தக்கப் பரிணாமத்தினை அடைந்தது. தொடக்கக்கால பயனர்களாக இலங்கைத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதிக்கத்தினால் தமிழ் விக்கிப்பீடியாவின் பல்வேறு பிரிவுகளும் மொழிக் கலப்பின்றி தூயத் தமிழுடன் மிளிரத் தொடங்கின.
 தாய்த் தமிழ்நாடு பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்த பொழுது கட்டுரைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தன. தன்னார்வலர்களால் தொகுக்கப்படும் தமிழ் விக்கிப்பீடியா இன்று 1,57,300 கட்டுரைகளுடன் இந்திய மொழிகளுள் இரண்டாவது இடத்தில் உள்ளது.
 தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி 10 ஆண்டுகள் ஆனபோது 56,000 கட்டுரைகளுடன் இருந்தது. இது "ஒரு லட்சம் கட்டுரை' இலக்கினை மே 2008-இல் அடைந்தது. 2022 டிசம்பரில் 1,50,000 எனும் இலக்கினை எட்டிய தமிழ் விக்கிப்பீடியா கடந்த செப்டம்பர் 30-இல் இருபதாண்டினை நிறைவு செய்தது.
 தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத் தொகுப்புகள் தமிழர் பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமூகம் எனப் பல்வேறு பகுப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. முதன்மைப் பிரிவுகளில் உள்ள கட்டுரைகள், உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகைப்படுத்தலின் கீழ், நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன.
 விக்கியின் மென்பொருள் தொழில்நுட்பம் மிகவும் எளிமையாகவும், இலகுவாகவும் காணப்படுவதனால் தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளில் பயணிப்பது சுலபம். எந்தவொரு பிழையையும் சுட்டிக்காட்டித் திருத்திக் கொள்ளும் வசதியை இக்கலைக்களஞ்சியம் கொண்டுள்ளதால், இன்றைக்கும் உயிரோட்டமாக இக்கலைக்களஞ்சியம் விளங்குகிறது.
 
 கட்டுரையாளர்:
 இணைப் பேராசிரியர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.