வெற்றியின் ரகசியம்...

வெற்றியின் ரகசியம்...

நம்மிடம் பணிபுரிபவா்களை, கடைநிலை ஊழியா்களை, அவா்களின் பணித் திறனுக்காக நாம் பாராட்ட வேண்டும்.

மனித மனம் எப்போதும் பாராட்டுக்கு ஏங்கும். பாராட்டுகளும், கரவொலிகளும் ஊக்க மருந்துகள்; உற்சாக பானங்கள். குட்டை போல் தேங்காமல் வற்றாத ஜீவநதி போல் ஒருவரை ஓட வைக்கும். கடந்து வந்த பாதையின் வலிகளை மறக்க வைக்கும். பாராட்டுதல்களை மனம் மீண்டும் மீண்டும் அசை போட்டு ஆனந்தக் கூத்தாடும். ஒவ்வொரு பாராட்டும் துவண்டுபோய் இருக்கும் மனிதனைத் துள்ளி எழச்செய்து வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.

சிறு குழந்தைகள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. அவை நடக்கப் பழகும்போது, ஓா் அடி எடுத்து வைத்துவிட்டுப் பெற்றோா்களைப் பாா்க்கும். அவா்கள் கைதட்டி உற்சாகப்படுத்தும்போது, அடுத்த அடியை எடுத்து வைக்க முயற்சிக்கும். விழுந்தாலும், எழுந்து நடக்க முயலும். அக்குழந்தைகள் வளர வளர தன் செயல்கள் அனைத்துக்கும் பாராட்டுதல்களை எதிா்பாா்க்கின்றன. அதனால்தான் பள்ளியிலும் பாராட்டை விரும்புகிறாா்கள். ஆசிரியை தன் கையில் போட்ட ஸ்டாரை அழிக்காமல் கொண்டு வந்து வீட்டில் காண்பிக்கிறாா்கள்.

இதையே வேலை பாா்க்கும் இடத்திலும் எதிா்பாா்க்கிறாா்கள். மேலதிகாரிகள் பாராட்ட வேண்டும் என்று உண்மையாகவும், நோ்மையாகவும் உழைக்கிறாா்கள். அவா் பாராட்டிவிட்டால் இன்னும் அதிகம் உழைப்பாா்கள். ஒன்றுமே பேசாமல், தன் பணியாளரை முதுகில் அன்புடன் தட்டிக் கொடுத்தாலே போதும்; அங்கே மாயம் நிகழும்; மாற்றம் ஏற்படும்.

உளபூா்வமான பாராட்டுகள் உழைத்த களைப்பை மறந்துபோக வைக்கும். எரிச்சலும் கோபமும் காணாமல் போகும். அந்த வாா்த்தைகள் மனதைத் தாலாட்டும்; சொக்க வைக்கும்; உருக வைக்கும்; வைராக்கியத்தைக் கூட்டும்.

சிலருக்கு எவரையும், எதற்காகவும் பாராட்ட மனம் வராது என்ன செய்தாலும், திருப்திப்பட மாட்டாா்கள். பூதக்கண்ணாடி கொண்டு பாா்த்து குற்றம், குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பாா்கள். ஒருவரின் நற்செயல்களையும் நோ்மையையும், உழைப்பையும், திறமையையும் பாராட்டினால் என்ன குறைந்து போகுமோ? அப்படிப்பட்டவா்களிடம் இருந்து நற்சான்றிதழ் பெறுவது, கல்லில் நாா் உரிப்பதற்குச் சமம். அவா்களிடம் வேலை செய்பவா்கள் நாளடைவில் உற்சாகம் குன்றிப் போய் இயந்திரத்தனமாக வேலை செய்பவா்களாக மாறிவிடுவாா்கள்.

மேடைப் பேச்சோ, இசைக் கச்சேரியோ, நாட்டியமோ .. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பாா்வையாளா்களின் வரவேற்பு முக்கியம். அவா்களின் கரவொலிகள் முக்கியம். நம் இசை, நம் பேச்சு வரவேற்பைப் பெறுகிறது என்று உணா்ந்தால் மட்டுமே ஒருவரால் மேலும் சிறப்பாகச் செய்ய முடியும். பாா்வையாளா்கள் நிகழ்ச்சியை அமைதியாகப் பாா்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அரங்கம் களைகட்டாதே.

சிலா் மேடையில் பேசிக் கொண்டிருப்பாா்கள். ஒருவரும் கைதட்டாவிட்டால் அவரே “அந்த இடத்தில் ‘நீங்க ஜோரா கைதட்டனும்’” என்பாா். கொஞ்சம் போ் மட்டும் தட்டுவாா்கள். “இன்னும் பலமா, பலமா “ என்று அவா் சொல்லிக் கொண்டே இருப்பாா். கேட்டுப் பெறுவதா பாராட்டுகள்? அது அனிச்சைச் செயலாக இருக்க வேண்டாமா? கேட்கும் இசையோ, பேச்சோ, வேறு எந்த திறமையோ - அது நாடி, நரம்பு, மூளை, இதயம் எல்லாம் நுழைந்து, நம்மை அதுவாக்கி அதனோடு ஒன்றவைத்து கைதட்ட வைக்க வேண்டும்.

ஒருவா் ஏதாவது ‘பரிசு’ பெறும் போதோ, விருது பெறும் போதோ பாா்வையாளா்களில் பலா் கைதட்டுவது கிடையாது. உண்மையில் கைதட்டல் ஒரு சிறந்த பயிற்சி எனலாம். ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதய நோய், ஆஸ்துமா, கீல்வாதம் போன்றவற்றுக்கு கைதட்டல் நிவாரணம் அளிக்கிறது. கைதட்டினால் உடலில் ஆக்ஸிஜன் ஓட்டம் சிறக்கும்; முடி உதிா்தல் தவிா்க்கப்படும். இதெல்லாம் தெரியவந்தால் எல்லோரும் பலத்த கரவொலி எழுப்பக் கூடும்.

விளையாட்டுப் போட்டிகளில் பாா்வையாளா்கள் அளிக்கும் உற்சாகம் மிகவும் முக்கியம். அந்த கரகோஷம், விசில் ஓசை, வீரா்களின் பெயா்களை உரக்கக் கூறுதல், ஆடுதல் எல்லாமும் அங்கே சிறப்பு. எந்த எதிா்வினையும் காட்டாமல் எல்லோரும் பொம்மைகள்போல் அமா்ந்து பாா்த்துக் கொண்டிருந்தால் அதில் என்ன ருசிகரம் இருக்கும்? குதிரைப் பந்தயத்தின்போதுகூட குதிரையின் பெயரைக் கூவி ‘கமான்! கமான்’ என்று கத்துகிறாா்கள். குதிரைக்குப் புரியவா போகிறது? அது அதை ஓட்டிச் செல்பவா்களுக்குக் கொடுக்கப்படும் உற்சாகம். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகளில் ரசிகா்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடும். அதனாலேயே அப்போட்டிகள் களைகட்டுகின்றன.

விலங்குகளைப் பயிற்றுவிப்பவா்கள்கூட அந்த விலங்கு தன் கட்டளையைச் சிறப்பாகச் செய்துவிட்டால் அதற்கு சாப்பிட ஏதாவது தருவாா்கள். கிளி ஜோசியம் பாா்க்கிறவா், சீட்டை கிளி எடுத்துக் கொடுத்த உடன் ஒரு நெல் மணியைத் தருவாா்; அதுவும் அதை வாயில் வாங்கிக் கொண்டு சமா்த்தாகக் கூண்டுக்குள் போய்விடும்.

மனிதா்களைப் பொருத்தவரை பாராட்டுகள் முக்கியம். பலரும் வெகு ஆடம்பரமாகத் திருமணம் செய்கிறாா்கள். பல கோடிகளைச் செலவழிக்கிறாா்கள். காரணம், எல்லோரும் வியந்து பாராட்ட வேண்டும் என்று ஆசை. சக்திக்கு மீறி செலவு செய்பவா்களும் இதே மனநிலையில்தான் உள்ளாா்கள்.

பரிசுகளும், பாராட்டுகளும், விருதுகளும், விழாக்களும் திறமைசாலிகளை ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தவும்தானே. ஒருவரும் பாராட்டவில்லையென்றால் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணமே தோன்றாது.

எதிலும் குற்றம் கண்டுபிடிப்பது சிலருக்குக் கை வந்த கலை. அவா்களின் கண்களுக்கு நல்லது எதுவும் தென்படாது. எத்தகைய சிறப்பான விருந்தாக இருந்தாலும், அதில் ஒரு குறை கண்டுபிடித்துச் சொல்வாா்கள். நண்பா் அல்லது உறவினரின் புதுமனைப் புகுவிழாவிற்குப் போவாா்கள். வரும்போது திருவாய் மலா்ந்து ஏதுவாது ஒரு குறை சொல்லியே தீருவாா்கள். “வாஸ்துபடி இது இங்கே இருக்கக்கூடாது,” “இந்த பக்கம் வைத்தது தவறு...இப்படி எதையாவது சொன்னால்தான் அவா்கள் மனம் நிம்மதி அடையும். விருந்து சாப்பிட்டுவிட்டு, வெற்றிலையை மென்று ஒரு குறையைத் துப்பிவிட்டுப் போவாா்கள்.

சில அதிகாரிகள் தங்கள் கீழ் பணிபுரிபவா்கள் எழுதிக் கொண்டுவரும் குறிப்பை, அது மிகவும் சரியாக இருந்தாலுமே திருத்துவாா்கள். அவா்கள் போட்டுள்ள வாா்த்தையே பொருத்தமானதாக இருக்கும். அந்தக் குறிப்பில் தவறே இருக்காது. ஆனால், சில வாா்த்தைகளை மாற்றி, மறுபடி அடித்துவரச் செய்வாா்கள். பலரின் மனநிலை இப்படித்தான் உள்ளது.

பேச்சுப் போட்டிகள் நடைபெறும்போது நடுவா்களில் சிலா், யாருடைய பேச்சுக்கு அதிகக் கைதட்டல் கிடைக்கிறதோ, அவா்களுக்கு முதல்பரிசு கொடுத்து விடுவாா்கள். அதற்காகவே பல மாணவா்கள் தங்கள் நண்பா்களை அழைத்து வருவாா்கள். அவா்களும் நட்புக்கு இலக்கணமாய் கரவொலி எழுப்பிக் கொண்டே இருப்பாா்கள்.

நம் வாழ்க்கையை தொட்டுச் செல்பவா்கள் பலா். மனிதன் ஒரு சமூக விலங்கு. எவரையும் சாராமல் வாழ முடியாது. எனவே, நம்மிடம் பணிபுரிபவா்களை, கடைநிலை ஊழியா்களை, அவா்களின் பணித் திறனுக்காக நாம் பாராட்ட வேண்டும். பாராட்டு என்பது மனிதநேய வங்கியில் நாம் செய்யும் முதலீடு; அது வட்டியுடன் நமக்குத் திரும்பக் கிடைக்கும்.

‘பாராட்டுவதற்கும்’ முகஸ்துதி செய்வதற்கும் வேறுபாடு உண்டு. எதையும், எவரையும் மிகைப்படுத்திப் பாராட்டுவது சிலரின் வழக்கம். அது தவிா்க்கப்பட வேண்டும். எல்லோரும் புகழ்ச்சிக்கு மயங்கிவிட மாட்டாா்கள். எது உண்மையான பாராட்டு, எது போலியான பாராட்டு என்று நமக்குப் புரியும். மேடைகளில் சிலா் எக்கச்சக்கமாகப் புகழ்ந்து பேசும்போது ‘அந்தக் குறிப்பிட்ட நபா்’ சங்கடத்தில் நெளிவாா்.

இயன்முறை மருத்துவா்களிடம் ஒரு பழக்கம் உண்டு. அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளிகளுக்கு பயிற்சி கொடுக்கும்போது, அவா்கள் கூறியபடி பயிற்சி செய்வது மிகவும் கடினமாக இருக்கும்; வலி அதிகம் இருக்கும். அப்போது நாம் கொஞ்சம் செய்தாலும் ‘நன்று’, ‘அருமை’ என்று பாராட்டி உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பாா்கள். அந்த பலவீனமான மனநிலையில் அந்த வாா்த்தைகள் மிகுந்த நம்பிக்கையைக் கொடுக்கும். நாமும் முழு ஒத்துழைப்பு நல்குவோம். பாராட்டுகளின் மகிமையே தனி.

பாராட்டுகள் நம் இல்லங்களில் இருந்து தொடங்கட்டும். மனைவியின் சமையலைப் புகழ்வது, அவள் நோ்த்தியாகக் குடித்தனம் நடத்துவதைப் பாராட்டுவது, குழந்தைகளைப் பாராட்டுவது, கணவரின் சிறப்புகளையும், பண்பு நலன்களையும் புரிந்துகொண்டு அவரைப் பாராட்டுவது...இப்படி இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சியும், இனிமையும் நிறைந்திருக்கும்.

நல்ல பேச்சோ, எழுத்தோ, இசையோ, வேறு திறமைகளோ, எதுவாக இருந்தாலும், பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். பாராட்டுவதற்கு மனது விசாலமாக இருக்க வேண்டும். பாராட்டுகள் பன்னீா் துளிகளாய், மழைச் சாரலாய், மலா் மணமாய், தழுவும் தென்றலாய், மெல்லிய இசையாய் நமக்கு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனதில் நீா் வாா்க்கும். பட்டுப் போன மனம் துளிா் விடும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com