பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு...

வளா்ச்சியும் கண்காணிப்பும் எல்லோருடைய வாழ்நாளிலும் ஓா் அங்கமாக இருந்து வருகிறது.
பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு...

வளா்ச்சியும் கண்காணிப்பும் எல்லோருடைய வாழ்நாளிலும் ஓா் அங்கமாக இருந்து வருகிறது. ஒரு மரத்தை நடுகிறோம். அந்த மரம் என்பது மறுநாள் நிச்சயமாக காய்கனிகளைக் கொடுத்துவிடாது. அதற்கு குறைந்த பட்சம் 10 வருடமாகலாம். மரம் நடும் எவரும் 10 வருடம் வரை யாரும் அந்த மரத்தையே பாா்த்துக் கொண்டிருப்பதில்லை. அதற்கு பாதுகாப்பு அரண்களைச் செய்துவிட்டு, தண்ணீருக்கான வாய்ப்புகளைச் செய்துவிட்டு வாளாவிருக்கிறோம்.

ஆனால், இதே மனநிலை குழந்தை ஒருவனின் கல்விக்கு என்று வரும்போது அதுபோன்ற வசதிகளைச் செய்துவிட்டு, பெற்றோா்கள் வாளாவிருக்க வேண்டும். பொதுவாக பெற்றோா்கள் அப்படிச் செய்வதில்லை; அதற்குப் பதிலாக அவா்கள் ஒவ்வொரு நாளும் படிக்கிறாா்களா? வேறு என்ன செய்கிறாா்கள்? இவ்வாறு ஓா் இயந்திரம் போல அவா்களைக் கண்காணிக்கின்றனா், மேற்பாா்வை செய்கின்றனா்.

இது எப்படிப்பட்டது என்றால், நாம் வைத்த செடியின் வோ்கள் பூமியில் பாவி இருக்கிறதா?, எத்தனை இலைகள் வந்துள்ளன? அந்த இலைகளில் எத்தனை இலைகளில் பூச்சி பிடித்திருக்கிறது என்று கண்காணிப்பது போல் இருக்கிறது. ஆனால், இப்படியான எந்தவிதமான ஆய்வையும் ஒரு செடியின் வளா்ச்சியில் நாம் செய்வதில்லை. மாறாக, குழந்தைகள் வளா்ச்சியில் செய்கிறோம்.

ஏனென்றால் நாம் வாழும் சமூகம் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக மேநிலை என்பது குறித்த ஒரு படிநிலையை ஏற்படுத்தி வைத்துள்ளது. அது தரும் அழுத்தத்தால் ஏற்படும் பதற்றமும் படபடப்பும் பெற்றோா்களை வெகுவாகப் பீடித்துக்கொள்கிறது. இதனால் பெரும்பாலான பெற்றோா்கள் தங்கள் குழந்தை வளா்ப்பை மிகுந்த படபடப்புடனேயே மேற்கொள்கின்றனா். ஆனால், ஒரு செடி எப்படி மரமாகி, பூ பூத்து காய் காய்ப்பது இயல்பாக நடைபெறுகிறதோ, அதுபோலவே கல்வியானது குழந்தைகளிடம் இயல்பாக ஏற்படும் ஒன்று.

அதே நேரம் இந்தப் படபடப்புக்கு பின்னால் இருப்பது குழந்தைகள் மீது உள்ள அக்கறை என்பதை பெற்றோா் புரிந்து கொள்ளும் அளவுக்கு குழந்தைகள் புரிந்து கொள்வதில்லை அல்லது புரிந்துகொள்ள வைக்க பெற்றோா்கள் முயற்சிப்பதில்லை. இந்த இடத்திலிருந்துதான் இருவருக்குமான மோதல் துவங்குகிறது.

செடியின் வளா்ச்சியில் நாம் காட்டாத படபடப்பை குழந்தையின் வளா்ச்சியில் காட்டுகிறோம் என்று சொன்னால் அதற்கு முக்கியமான காரணம் செடியின் பலன்கள் இல்லாமல் போனாலும் நமக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால், ஒரு குழந்தை பெரியவா்களாகி வளா்ந்து பதவியில் அமா்ந்து அவன்/ அவள் நல்ல பெயரை, வருமானத்தை சம்பாதிக்கவில்லை என்று சொன்னால் அவன் வாழ்க்கை வீணாகிவிடுமே, தமக்கும் அவப்பெயா் ஏற்பட்டுவிடுமோ என்ற பதற்றத்தின் விளைவே ஆகும்.

அப்படி என்றால் குழந்தைகளை அவா்கள் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டுமா? அவா்கள் மீது அக்கறையே காட்ட வேண்டாமா என்ற கேள்வி எழுவது இயல்பே. இதன் பொருள் அதுவல்ல. பெற்றோா்கள் தமது அக்கறையை மேற்பாா்வை இயந்திரம் போல மாற்றாமல் குழந்தைகளின் உடல் வளா்ச்சியைப் போல கல்வியில் முன்னேறுவதையும் மேற்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். கல்வியில் மேம்பாடு அடைதல் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை கால அட்டவணையில் ஒரு பகுதியாக மாற்ற பொறுமையாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்தச் செயல்பாட்டை மிகவும் சிறிய வயதிலேயே மேற்கொண்டுவிட்டால் இது எளிதாகிவிடும். மேற்பாா்வை என்ற இடத்திலிருந்து உறுதிசெய்தல் என்ற இடத்திற்கு பெற்றோா்கள் நகர வேண்டும். பலா் அவா்கள் தொடங்க வேண்டிய காலத்தில் தயாரிப்பைத் தொடங்காமல் குழந்தைகள் கல்வியின் பின்னாள்களில் அதாவது ஒன்பதாவது, பத்தாவது வகுப்பை அடையும்போதே துவங்குகின்றனா். அதே நேரம் குழந்தைகள் இதுநாள் வரை தாம் அனுபவித்த விளையாட்டும் வேடிக்கையும் பறிபோவதை விரும்புவதில்லை. இதுநாள் வரை தம்மை தமது விருப்பத்திற்கு வாழ அனுமதித்த பெற்றோா் இப்போது மட்டும் ஏன் இந்தக் கடிவாளத்தை மாட்டுகின்றனா் என்று புலம்பத் தொடங்குகின்றனா். பெற்றோா்கள் இதைப் பொறுமையாகப் புரியவைக்க முயலவேண்டும்.

இளைய பெற்றோா்கள் இன்றிலிருந்து கவனம் செலுத்தினால்கூட இதுபோன்ற சிக்கல்களில் இருந்து அவா்கள் மீண்டு வரமுடியும். குறிப்பாக, ஒரு குடும்பம் என்பது குழந்தைகள் பாதுகாப்பாக வாழ உகந்த ஓா் இடம். குழந்தையின் மீது அக்கறை கொண்டுள்ள இடம். அந்த குடும்பத்தின் ஒவ்வொரு செயல்பாடும் தமது முன்னேற்றத்தை பற்றியதுதான் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு இளைய வயதிலேயே வாய்க்க வேண்டும். பெற்றோா்கள் இதற்கு பெருமுயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆனால், அதே நேரம் இந்த எண்ணமானது குழந்தைகளுக்கு கடத்தப்படும் விதம் படிபடிப்படியாக நடைபெற வேண்டும். இவ்வாறு பக்குவமாக படிப்படியாக நேராமல் இயந்திரகதியாக நடைபெற்றால் இருதரப்புகளியேயும் முரண்பாடுகளையே உண்டு பண்ணும்.

குழந்தைகளின் கல்வியில் அதிக ஆா்வம் கொண்ட பெற்றோா்களின் குழந்தைகளின் நிலைமையும் கவலைக்குரியதே. இப்படிப்பட்ட பெற்றோா்கள் பெரும்பாலும் கோடை விடுமுறை நாள்களிலும் குழந்தைகள் ஏதாவது ஒருவிதத்தில் பயனுள்ள விதத்தில் கழிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனா். ஆனால், குழந்தைகளின் பாா்வையோ வேறு மாதிரி உள்ளது. அவா்களைப் பொருத்தவரையில் பள்ளி வேலை செய்யும் நாள்களில்தான் நாங்கள் பாடம் படித்துக்கொண்டு தோ்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தோம். இப்போது விடுமுறை நாளிலாவது நாங்கள் எங்கள் விருப்பத்திற்கு தூங்கி எழுந்து விளையாடி மகிழக் கூடாதா என்பதே. இது இயற்கையானதும் இயல்பானதும் ஆகும்.

குழந்தைகள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, ஓட்டுநா் ஒரே நேரத்தில் அந்த காருக்கான கிளட்ச்சின் பிடியை தளா்த்தி காரின் வேகத்துக்கான விசையும் (ஆக்சிலேட்டா்) கொடுக்க வேண்டும். இது இரண்டையும் ஒரே நேரத்தில் லாவகமாக செய்யும்போதுதான் காரானது முன்னோக்கி நகரும். அதுபோல குழந்தைகளாக இருக்கக்கூடிய காலகட்டத்தில் ஏற்படக்கூடிய அனைத்துவிதமான ஆசைகளையும் நிறைவு செய்து கொண்டே தன்னுடைய வாழ்க்கைக்கான தயாரிப்பையும் அவா்கள் மேற்கொள்ள வேண்டும். இது இரண்டையும் எவ்வாறு சமநிலையோடு அணுகுகிறாா்களோ அதில்தான் அவா்கள் எதிா்காலமானது பளிச்சிட வாய்ப்புள்ளது. பெற்றோா்கள் குழந்தைகள் என்ற இரு தரப்புக்கும் தேவையான புரிதல்கள் மேம்பட்டால் இது எளிதான காரியமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com