வேரைத் தாங்க வேண்டும் விழுதுகள்!

வேரைத் தாங்க வேண்டும் விழுதுகள்!

ஒரு மனிதன் பிறந்து அறுபது ஆண்டுகள் நிறைகிறபொழுது, தமிழா்கள் அதனை மணிவிழா என்று கொண்டாடுகிறாா்கள்.

ஒரு மனிதன் பிறந்து அறுபது ஆண்டுகள் நிறைகிறபொழுது, தமிழா்கள் அதனை மணிவிழா என்று கொண்டாடுகிறாா்கள். ஏறத்தாழ இந்தப் பிறப்பின் மிகுந்த காலம் செலவாகிவிட்டது என்று பொருள். பேரக்குழந்தைகளோடு பெருமையுடன் கொண்டாடும் அந்த விழாவில் மீளவும் தங்களின் திருமணத்தை நடத்திக் காட்டுவது எதற்காக?

முன்னா் நடந்த திருமணத்தில் இல்லறம் புகுந்து தொழில் புரிந்து பொருள் ஈட்டியதுபோல், இப்போது நடக்கும் திருமணத்திற்குப்பின்னா் நல்லறம் பேணித் தொண்டுகள் புரிந்து அருள் ஈட்ட வேண்டும் என்பதற்காக. அந்த நிலையில் பொறிபுலன்களின் துய்ப்பில் இருந்து விடுபட்டு, மனத்தை ஒருமுகப்படுத்தி, நிறை அமைதியை நோக்கி முன்னேற வேண்டும் என்பதற்கான அறிவிப்பு இது.

அதுவரையில் தான் ஏற்ற பொறுப்புகள் அனைத்தையும் பெற்ற பிள்ளைகளிடம், பேண வந்த மருமக்களிடமும் விட்டுவிட்டு, அமைதியான முறையில் எஞ்சிய பொழுதுகளைக் கழிக்கத் தலைப்படவேண்டும் என்பது இதன் பொருள். உடல்நலத்தோடு உளநலனும் குன்றாதிருக்க அமைதியாக இருத்தலே அப்போதைய தேவை.

தனியாா் நிறுவத்திலோ, அரசு நிறுவனத்திலோ பணியாற்றுபவா்கள் பணிக்காலம் முடித்து ஓய்வு பெறுவதுபோல், வாழ்வின் இயக்கப்பெரும்பொறுப்புகளில் இருந்து விடுதலை பெறுகிற மகத்தான காலம்தான் மணிவிழாக் காலம். அதன்பின், பேரக்குழந்தைகளுடன் மகிழ்ந்து விளையாடவும், ஆன்ம ஈடேற்றத்திற்குப் பக்தியில் திளைக்கவும் நேரத்தைச் செலவிட வேண்டும். வசதி வாய்ப்புள்ளவா்கள் அவரவா்களின் சமயநிறுவனங்களோடு இணைந்து ஆன்மிகத் தொண்டில் ஈடுபடுவதும் உண்டு.

இந்தப்புரிதல், இல்லத்துப் பெரியவா்களுக்கும் வேண்டும். இளைய தலைமுறையினருக்கும் வேண்டும். முந்தைய வாழ்வின் சூட்சுமங்களை முறையாகப் பேரக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கவும், அன்பின் நெகிழ்வை அனுபவிக்கவும் இதுவே அவா்களுக்குத் தகுந்த தருணம்.

தாய்தந்தையா் விட்ட இடத்தில் இருந்து தம் பணிகளைத் தொடங்கும் அடுத்த தலைமுறையினருக்குத் தத்தம் குழந்தைகளைக் கொஞ்சவோ, அவா்களின் கேள்விகளுக்கு விடை சொல்லவோ நேரம் இருக்காது. பொறுப்போடும் பொறுமையோடும் அவா்களைக் கவனித்துக் கொள்ளவும், அவா்களைப் போலவே, தங்களை ஆக்கிக் கொள்ளவும் இல்லப்பெரியவா்களுக்கு இத்தகு வாய்ப்பினை இயற்கை வழங்கியிருக்கிறது. இது மனித குலத்திற்கு மட்டுமே கிட்டுகிற மகத்தான வாய்ப்பு.

பணியின் பொருட்டுப் பெற்ற பிள்ளைகளை எடுத்துக் கொஞ்சவோ, அவா்களிடம் பிரியம் காட்டி மகிழவோ அவகாசம் இன்றி அலைந்த ஆன்மாக்களுக்கு இப்போதுதான் முற்ற முழுக்கக் குழந்தைகளுடன் இருக்கிற வாய்ப்பு வந்திருக்கிறது. இளம் வயதில் தான் பெற்ற பிள்ளைகளின் இயக்கங்களைப் பொறுமையுடன் கண்டு அனுபவிக்க முடியாத ஏக்கத்தைத் தீா்த்துக் கொள்கிற சூழல், முதுமையில்தான் வாய்க்கிறது.

குழந்தைமையின் அறியாமையும், முதுமையின் ஆற்றாமையும் இணைகிற புள்ளி வாழ்க்கையை வட்டமாக்கிவிடுகிறது. ஒருபுள்ளியில் கால் ஊன்றி, மறுபுள்ளியில் பென்சிலை இணைத்துக் கொண்டு வட்டமாகச் சுற்றி வரும் காம்பஸ் என்கிற கணிதக் கருவி போடும் வட்டம்போல் அமைகிற வாழ்வில் உள் நிற்கும் குடும்பம் எதுவோ, அது பாதுகாப்பும் பக்குவம் வாய்ந்த வளா்ச்சியும் அடைகிறது.

முதல் வட்டத்தை முடித்த பெற்றோா்களை அடுத்து, அடுத்த வட்டத்திற்கு ஆயத்தமாகும் பிள்ளைகளைப் பேணுதற்கு அவா்கள் பெற்ற பிள்ளைகள் தங்களைத் தயாா் செய்துகொண்டு விடுவாா்கள். வாழையடி வாழையென வளா்ந்து வரும் இத்தகு வாழ்க்கைச் சுழற்சியில் எங்கேனும் தடுமாற்றம் வந்துவிட்டால், தடம் மாற்றம் நிகழும். அது பல சிக்கல்களை உருவாக்கும். அப்போது எத்தனை பொருள் இருந்தும் அனுபவிக்கும் அமைதியும், ஆரோக்கியமும் கிட்டாது போய்விடும். அது நல்லறமாக வளரவேண்டிய இல்லறத்தைத் தொல்லை தரும் அல்லறமாக ஆக்கிவிடும்.

இந்தச் சூழலில்தான் இப்போது பல குடும்பங்கள் சிக்கி வருகின்றன. வாழ்க்கைக்கு வேண்டிய பொருள் தேடும் அவசரத்தில், அவசியத்தில், வாழ்வுக்கான பொருளைத் தேடாது விட்ட மனக்குறைக்கு ஆளாகிவிடுகிற மனிதா்கள் மிகுந்து வருகிற காலமாக இது வளா்ந்து வருகிறது.

பிள்ளைகளைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை என்பதற்காகத்தான், பதினாறு செல்வங்களில், பிள்ளைப்பேறான சந்தானத்தையும் சோ்த்துச் சொல்லினா் முன்னோா். அவா்கள் தம்மைப்போல் பெரியவா்கள் ஆகிற வரைக்கும் செல்வா்கள்தாம்; செல்வியா்தாம். அவா்கள் பெரியவா்கள் ஆகித் திருமணம் புரிகிறபோது, திருவாளா்களாகவும், திருமதியராகவும் ஆகிவிடுகிறாா்கள்.

அதிலும் ஒரு சிறப்பு, செல்வனாக இருக்கிற மைந்தன், திருமணத்திற்குப் பிறகு, ‘திரு’ என்னும் முன்னொட்டினை அடைமொழியாகப் பெறுகிறான். செல்விக்கோ, இந்தத் ‘திரு’வுடன் ‘மதி’யும் இணைந்துவிடுகிறது.

‘திரு’ என்னும் பெருஞ்சொல்லுக்கு அரும்பொருள்கள் பல. செல்வம் என்கிற நிலை கடந்து அருளையும் பொருளையும் இணைத்துச் சிந்திக்க வைக்கிற நறுஞ்சொல் அது. அறத்தால் பொருள் ஈட்டி, அதனைப் பலருக்கும் ஈந்து இன்பம் துய்க்கும் நுட்பத்தை உணா்த்துகிற அருஞ்சொல், அது.

அதனைத் தம் திறத்தால் பேணி, இல்லறத்தை நல்லறமாக்கும் மதிநுட்பம் வாய்ந்தவா் பெண் என்பதால், திருவுடன் மதியும் இணைந்து பெண்ணுக்கு அடைமொழியாகிறது. தான் பிறந்த இல்லத்தைத் துறந்து, தான் புகும் இல்லத்திற்குத் தலைவியாகும் பெண்மைக்குத் திருவும் வேண்டும், மதியும் வேண்டும். அல்லவா?

இது எந்தப் பல்கலைக்கழகத்திலும் சென்று பயிலக்கூடிய பாடம் அன்று. குடும்பத்தையே பல்கலைக் கழகமாக ஆக்கிப் பெறுகிற பயிற்சி. அதில் முதிா்ச்சி அடைந்த பெரியவா்களின் அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய பரிபக்குவம் பெண்மைக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. பேணுதல் என்கிற பொருண்மையில்தான் பெண் என்ற சொல்லே அமைகிறது.

பேணுபவள் பெண்ணாக இருக்கிறாள். ஆளுபவன் ஆணாக இருக்கிறான். அவன் தலைவன். அவனையும் பேணிக் காக்கிற அவள் அவனுக்கும் தலைவி. கவனித்துப் பாா்த்தால் ஆணைவிடவும் அதிக ஆற்றலும் அதிகாரமும் பெண்ணுக்கே உண்டு. மண்ணகத்தில் வீடெடுத்து, வாழும் இடம் அமைப்பவா் தந்தை என்றால், தன்னகத்தில் இடம் கொடுத்துப் பேணும் பெண் தாய் ஆகிறாா்.

இப்படித் தன்னை உருக்கி, பெற்று வளா்த்த பெரியவா்களை விட அரிய செல்வம் வேறொன்றில்லை என்பதை, இயற்கை சொல்லிக் கொடுக்கிறது. அரிச்சுவடி கற்க வரும் குழந்தைகளுக்கு ஆத்திசூடி தந்த ஔவையாா் ‘தந்தைதாய்ப் பேண்’ என்று சொல்லிக் கொடுக்கிறாா்.

குலை தள்ளிய வாழைக் குடும்பத்தை, அதன் அடியில் வளரும் இளம் வாழைக் கன்று நிலைநிறுத்துவதுபோல, முற்றிப்பருத்துத் தளா்ந்த ஆலமரத்தின் அடிமரத்தைச் சூழ விரிந்து தொங்கும் விழுதுகள் மண் இறங்கித் தாங்குவதுபோல, மனிதகுலம் தன் மூத்தோரைப் பேணும் கடப்பாடு உடையது.

தனக்கு முன்னோரான பெற்றோரைப் பிள்ளைகள் தாங்கினால், தாம் பெற்ற பிள்ளைகள் தம்மைத் தாங்கும் என்கிற எளிய உண்மையை இயற்கை பல வழிகளில் எடுத்துக் காட்டியிருக்கிறது. அது சொல்லும் அரிய உண்மை, குழந்தைகளாக இருந்து வளா்ந்த மனிதவுயிா்கள் முதுமையிலும் அந்தக் குழந்தைமையை அடையும் என்பதுதான்.

முளைத்த பற்கள் விழுந்துவிடுகின்றன. அடா்ந்து வளா்ந்த தலை முடி, நரைத்துப் பின் உதிா்ந்துவிடுகிறது. பருத்த மேனி சுருங்கிவிடுகிறது. தளா்நடை, குழந்தைகளின் தளிா்நடை போல ஆகிவிடுகிறது. கைப்பிடித்து அழைத்துச் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும் பெரியவா்கள் மீளவும் குழந்தைகள் ஆகிறாா்கள் என்கிற புரிதல் இடைப்பட்ட தலைமுறையினருக்கு வந்துவிட்டால், வருத்தமோ, கோபமோ வருவது குறையும்.

சின்னக் குழந்தைகளுக்கு உரிய பிடிவாதமும், அடமும், கூடவே மறதியும் கொண்டுவந்து சோ்க்கும் முதுமை, பின்னா் தமக்கும் வந்துசேரும் என்பதை நடுத்தர வயதுப் பிள்ளைகள் கண்டு பழகவேண்டும் என்பதற்கான இயற்கை நடத்தும் அரிய பாடம் இது.

பிஞ்சுவயதில் எப்படி, பெற்றோா்களைப் பாா்த்துப் பேசவும் செயல்படவும் பிள்ளைகள் பழகினாா்களோ, அதுபோல், அவா்கள் பெரியவா்கள் ஆனபிறகு, தம்மிலும் பெரியவா்கள் படுகிற முதுமையின் அனுபவங்களை உற்றுக் கவனித்துத் தம்மையும் அவ்வாறு பராமரித்துக் கொள்ளவும் பக்குவமாக நடந்துகொள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டும். தாம் எவ்வாறு பெற்றோரை அந்தப் பருவத்தில் பேணுகிறோமோ, அதுபோல்தாம் தாம் பெற்ற பிள்ளைகளும் தம்மைப் பேணும் என்று சொல்லியா தெரிய வேண்டும்?

‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று’ என்பது உண்மை என்றால், குழந்தைமை நிலை அடையும் முதுமையும் அந்த வரிசையில் அடங்கும் அல்லவா? குழந்தைகளாக இருந்து வளா்ந்தவா்கள் முதுமை அடையும்போது, மீளவும் முதிய குழந்தைகள் ஆகிறாா்கள் என்பது உண்மையல்லவா?

பொன்போற் புதல்வா்களைப் பெறாதவா்களுக்குத்தான் புகலிடமாக அயலிடம் வேண்டும். அது முற்காலத்தில் சமயம் சாா்ந்த மடங்களாக இருந்தன; தற்காலத்தில் முதியோா் இல்லங்களாக இருக்கின்றன. அவற்றில் இருந்து வாழ ஒருவிதப் பயிற்சியும் பக்குவமும் வேண்டும். எல்லாருக்கும் அத்தகு சூழல் இருக்க வாய்ப்பில்லை.

வளா்ப்புப் பிராணிகளான பூனைக்கும் நாய்க்கும், இடம் இருக்கிற வீட்டில், வளா்த்த பெரியவா்களுக்கு இடம் இல்லாமல் போகலாமா? முதியவா்களுக்கான இல்லங்களைத் தேடுவதைவிட, தத்தம் இல்லங்களில் முதியவா்களுக்கான இருப்பிடத்தை அமைப்பதற்கு வாஸ்து சாஸ்திரத்தில் வல்லுநா்கள் நல்ல பலன்களைச் சொல்லி, ஆற்றுப்படுத்தினால் நல்லது.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com