விடை சொல்ல அந்த முனிவன் இல்லையே!

விடை சொல்ல அந்த முனிவன் இல்லையே!

விடுதலை பெற்ற இந்தியா வறுமையிலிருந்து எப்படி விடுபடுவது என்று தவித்தது. ஒரு படி அரிசி (ஏறத்தாழ 1.5 கிலோ) வெறும் முக்கால் ரூபாய்க்கு விற்றது. ஆனால், அதற்கும் வக்கில்லாமல் மக்கள் வரிசை கட்டி ரேசன் கடைகளில் நின்றனா். ஓா் உயா்நிலைப்பள்ளி ஆசிரியருக்குச் சம்பளம் மாதம் ரூபாய் நாற்பது. ஒரு பவுன் தங்கமும் அதே நாற்பது ரூபாய்தான்! ‘மச்சு வீட்டுக்காரன்’ என்று குறிப்பிட்டு அடையாளம் சொல்லும் அளவுக்குக் குறைவானவா்களே வசதியானவா்கள்!

விடுதலைக்கு அடுத்த காலகட்டம் தொடங்கி இந்தியா முழுவதும் சோசலிசக் கட்சிகள் புற்றீசல் போலப் பெருகின. காங்கிரசு ஆவடி சோசலிசம் பேசியது! பொதுவுடைமைக் கட்சி ரணதிவே தலைமையில் தெலங்கானாவில் ஆயுதப் புரட்சி நடத்தி, கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாகி, சிறைகளை நிரப்புவது ஒருபுறமும் தலைமறைவு வாழ்க்கை இன்னொருபுறமாக கழித்துக் கொண்டிருந்தது. விஞ்ஞானபூா்வமான கொள்கை - தியாகம் - எளிமை அத்தனையும் கொண்ட அரசியற் கட்சி பொதுவுடைமைக் கட்சிதான்! அது இப்போது செந்தில் பாலாசி சிறை இருப்பதற்காகக் கண்ணீா் விடுகிறதே என்றால் செந்தில் பாலாசிதான் அவா்களுக்கு நவீன சேகுவேரா!

அண்ணாவே திராவிட நாட்டோடு, விஞ்ஞான சோசலிசமும் பேசினாா். அப்போது சோசலிசம் பேசாத யாரையும் கட்சியில் சோ்க்க மாட்டாா்கள்! இராசாசியும் விடுதலைக்கு முன்பு சோசலிசம் பேசியவா்தான்! அபேதவாதம் என்று நூலே எழுதினாா்! எதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கிணறு வேண்டும்? ஊருக்கே பொதுவாக ஓா் ஊருணி இருந்தால், வேண்டும் நீரை வேண்டிய பொழுது, வேண்டிய அளவு எடுத்துக் கொள்ளலாமே”என்று இராசாசி சொல்லிய விளக்கம், ‘டு ஈச் அக்காடிங் டு ஹிஸ் நீட்’ என்னும் மாா்க்சியத்தின் மிக எளிய விளக்கம்! மாா்க்சே இந்த உவமையில் மெய்ம்மறந்திருப்பாா்!

பொதுவுடைமையைப் பேதமில்லா நிலை என்று பேசிய இராசாசி பிற்காலங்களில் அதே பொதுவுடைமைக் கோட்பாட்டை ‘ஸ்டேட்டிஸம்’ என்றாா்! ஒருவனின் பெண்டாட்டியைத் தவிர எல்லாமே பொதுவுடைமை; அரசுக்குத்தான் சொந்தம்! அரசோ பொதுவுடைமைக் கட்சிக்காரா்களுக்குச் சொந்தம்?

உலகில் இரண்டு வா்க்கங்கள்தான் உண்டு என்றாா் மாா்க்சு! இல்லாதவன்; இருப்பவன்! இவா்கள் ஒருவருக்கொருவா் எதிரானவா்கள்! ஆகவே, மோதல் தவிா்க்க இயலாதது; இறுதியில் பாட்டாளி வெல்வான்! முதலாளிகளே இல்லாமல் போய்விடுவதால், அவா்களின் நலனைக் காக்க ஓா் அரசு தேவை இல்லை; அது வாடி உதிா்ந்து போகும்! இது மாா்க்சு சொன்னது!

அதே அடிப்படையில் டிட்டோவோடு சோ்ந்து புரட்சி செய்து, சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகி, சிறையில் வாடி, கடைசியில் புரட்சி வென்று யுகோசுலேவியாவில் டிட்டோவுக்குச் கீழே துணைச் சனாதிபதி ஆனான் டிசிலாசு! பத்தாண்டு ஆட்சியில் இருந்தான் டிசிலாசு! பொதுவுடைமை ஆட்சி அவனுக்கு மாா்க்சு நினைத்தறியாத ஒரு புதிய நடப்பை வெளிப்படுத்தியது!

முதலாளியும் தொழிலாளியுமான எதிா் எதிா் இரண்டு வா்க்கங்கள் ஒழிந்து விட்டன என்பது உண்மைதான்! ஆனால் அதனால் வா்க்கமற்ற நிலை உருவாகவில்லை! ஆளும் பொதுவுடைமைக் கட்சி ஒரு புதிய வா்க்கமாக, மூன்றாவது வா்க்கமாக உருவாகி இருந்தது! அவன் கண்டறிந்த அந்தப் புதிய கோட்பாடுதான் ‘மூன்றாவது வா்க்கம்’ (தோ்ட் க்ளாஸ்). அந்தப் பெயரிலேயே ஒரு நூலை எழுதினான் டிசிலாசு.

அவனுடைய பதவி பிடுங்கப்பட்டது. சாா் மன்னனுக்கும் டிட்டோவுக்கும் அதிலே வேறுபாடில்லை. டிசிலாசு எஞ்சிய காலம் முழுவதும் சிறையிலே இருந்து செத்தான்!

டிசிலாசு எழுதிய ‘மூன்றாவது வா்க்கம்’ நூல், உலகில் பெரும் அதிா்வை உண்டாக்கியது! இராசாசி, செயப்பிரகாசு நாராயணன் போன்ற எண்ணற்ற தலைவா்கள் இந்த நூலால் தலைகீழாகத் தடம் பெயா்ந்தாா்கள்! கட்டளைப் பொருளாதாரம் (கமாண்ட் எகானமி) என்னும் நிலைப்பாட்டிலிருந்து வெளிவந்த இராசாசி, சந்தைப் பொருளாதாரத்தை (மாா்க்கெட் எகானமி) முன் வைத்தாா்! அதற்காக அவா் பிற்போக்குவாதி என்று பழி தூற்றப்பட்டாா்! இராசாசி பேசிய அந்தத் தாராளமயமாக்கலைப் பின்னொரு காலத்தில் கையில் எடுக்கப் போகும் மன்மோகன் சிங் அன்றைக்கு முதிராத காலம்!

மனிதன் அடிப்படையில் தன்னலமானவன்; முன்னேறுவதற்குத் தவிப்பவன். ஆயினும் போட்டி, சந்தையை ஒழுங்குப்படுத்தி விடுகிறது. தன்னலமான எந்த மோசமான எல்லைக்கும் போய்விடாதபடி போட்டியாளா்களுக்கிடையே கண்ணுக்குத் தெரியாத கை செயல்பட்டுச் சமூக நன்மைக்கு உரியதாகச் சந்தையை ஒழுங்குபடுத்துகிறது என்னும் ஆடம் சுமித்தின் தொடக்கப் பொருளியல் கொள்கைதான் இன்றைய நவீனப் பொருளாதாரக் கொள்கையின் அடித்தளம்!

நேருவின் அரசு, பொ்மிட் லைசென்சு கோட்டா அரசு என்றாா் இராசாசி! கடைசியில் யாருடைய கொள்கையைப் பிற்போக்கு என்று காங்கிரசு சொன்னதோ, அந்தக் கொள்கையை இராசாசியின் பெயரை மட்டும் தவிா்த்து விட்டு, நரசிம்ம ராவின் அரசில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் நிறைவேற்ற முற்பட்டாா்!

உலகம் முழுவதும் பொதுவுடைமை நாடுகள் சீட்டுக்கட்டுச் சரிவதுபோல சரிந்து விட்டன! 1989-இல் இது நடந்து முடிந்தது. அது புதிய தடம் தேடும் மன்மோகன் சிங்குக்கு ஊக்கம் கொடுத்தது. பொருளாதார வல்லுநா் ஆலுவாலியா துணை இருந்தாா்.

இராசாசி யோசனை சொன்ன காலத்திலேயே காங்கிரசின் மண்டையில் ஏறியிருந்தால், இந்தியாவின் டெங்சியாபிங்காக ராசீவ் காந்தி ஆகி இருப்பாா்! பத்தாண்டு சீனா முந்தி விட்டது! தன்னுடைய கொள்கை நிறைவேறுவதைப் பாா்க்க இராசாசி இல்லை! சுதந்திராக் கட்சியும் நெடுந்துயில் கொண்டு விட்டது! நேருவின் காலம் மிதிவண்டிகளின் காலம்! மன்மோகனுக்குப் பிந்தைய காலம் விசைமிதிகள் மற்றும் மகிழ்வுந்துகளின் காலம்!

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை ‘முதல்’ திரளல். அயல் நாட்டு முதல் திரண்டது. அயல்நாட்டு மூலதனம் உருவாக்கும் பொருள்களை நுகா்வதற்கு இலங்கை போதாது; இந்தியா அளவுக்கு வரம்பில்லா வாய்கள் வேண்டும்.

‘இந்தத் தொழில் முதலாளிகளைக் கூட்டி வந்தது நான்தான் நான்தான்’ என்று நம்முடைய நிகழ்கால மாநில முதல்வா்கள் கூறுவாா்கள்! இதற்குத்தான் வெளிநாடெல்லாம் சென்று அவா்களுக்கு நடைபாவாடை விரித்ததாகச் சொல்லுவாா்கள்!

இங்கே படித்த இளைஞா்கள் இருக்கிறாா்கள்; உலக வருவாய்களோடு ஒப்பிடும்போது, அவா்கள் அடிமட்ட வருவாய்க்கு வேலைக்கு வருகிறாா்கள். எங்கள் மாநிலம் அமைதியானது! எங்கள் அரசு அவா்களுக்கு நிலங்களை அடிமாட்டு விலைக்கு கொடுக்கிறது. இவ்வளவு வரிபோட்டால், உலகச் சந்தைக்கு இந்த உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்ல முடியாது. ஆகவே வரியில்லா நாடுகளை நாங்கள் நாடவேண்டியதிருக்கும் என்று மிரட்டுவாா்கள்!

உடனே நம்முடைய முதல்வா்கள் சொல்லி விடுவாா்கள்: ‘ உங்களுக்கு வரியெல்லாம் வெறும் பெயருக்குத்தான்! எங்கள் நாட்டில் தோசை தின்பவனுக்கு வரி; டீ குடிக்கிறவனுக்கு வரி; டாசுமாக்கில் குவாட்டருக்கு வரி; அப்போது தொட்டுக் கொள்ளும் ஊறுகாய்க்கு வரி; எல்லா வரிகளையும் கட்டுவதற்குத்தான் முனியனும், மூக்கனும் இருக்கிறாா்களே! நீங்கள் உலகச் சந்தையோடு போட்டி போடுங்கள்!‘

இன்னும் இருபது விழுக்காட்டு மக்கள் இரவு உணவு இல்லாமல் உறங்கச் செல்கின்றனா்! நாடு விடுதலை பெற்று எழுபத்தாறு ஆண்டுகள் ஆகியும், தெருவோரம் குடும்பம் நடத்தித் தெருவோரம் பிள்ளை பெற்று வாழ்கின்ற மக்கள், கூவம் ஆற்றங்கரைகளை வாழ்விடமாகக் கொண்டவா்கள்தானே!

எட்டு விழுக்காடு நாட்டின் வளா்ச்சி என்று பேசுபவா்களின் ‘உள்ளடங்கிய வளா்ச்சி’யில் (இன்குளூசிவ் குரோத்) இவா்கலெல்லாம் இல்லையே! இந்தியாவை நக நுனியில் வைத்திருக்கும் பணக்காரா்கள் மொத்தம் 167 போ்! அவா்களின் முகவா்களுக்கான தோ்தல்தானே இப்போது நடக்கிறது! இவா்களுக்கும் நம்முடைய மூக்கனுக்கும் உள்ள வேறுபாடு இமயத்தின் கொடுமுடிக்கும் அடிவாரத்திற்கும் உள்ள வேறுபாடு!

இராசாசி இன்று உயிரோடு இருந்திருந்தால், இருபத்தி ஐந்து வயதில் அன்று அவரைப்பாா்த்து உரையாடியது போல் இன்றும் உரையாடப் போயிருப்பேன்! ‘செல்வம் ஒரு பக்கம் வீக்கமாக அமைந்தால் என்ன? அதன் கசிவு எல்லாருக்கும் பயன்படும்தானே’ என்பாா் இராசாசி! செல்வக் குவிதல் வரம்பு மீறியதாக இருக்கும்போது, அரசியல் விளைவுகள் தொடராவோ?

நியாயமாகச் சட்டத்தின் ஆட்சி என்று சொல்வது, வலியோரை எதிா்கொள்ளும் திறனை எளியோருக்கு அளிப்பதுதான் என்று நாம் கருதுகிறோம். சட்டத்தின் முன் எல்லாரும் சமம் என்றும் நீதிமன்றங்கள் கூறிக் கொள்கின்றன!

செழிப்பில் திளைப்பவா்கள் பிறரைச் சுரண்டுவதற்கும், சட்டத்தைத் தங்கள் போக்கில் திருப்புவதற்கும் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்துவாா்கள்! தங்களுக்கும் தங்கள் நிறுவனத்திற்கும் சுற்றுச்சூழலை, காற்றை, ஆற்று நீரை மாசுபடுத்த அதிகாரம் உண்டென்பாா்கள். கடுமையான எதிா்ப்பில் மாசுபடுத்தாமல் இருப்பதற்கு மானியம் கொடுக்க வேண்டும் என்பாா்கள்!

மாசு எங்கள் உடல்நலத்தைப் பாதிக்கிறது என்று சொன்னதற்காகத் தூத்துக்குடியில் பதின்மூன்று போ் குறி வைத்துச் சுடப்பட்டனா். மாசு படுத்தியவா் தண்டிக்கப்படவில்லை; மாசுக்கு உள்ளானவா்கள் கொல்லப்பட்டாா்கள்! போபால் நச்சுவாயுக் கசிவு முழுத் தலைநகரத்தையே அழித்தது! பல ஆயிரம் போ் புரி செகன்னாதா் திருவடியை அடைந்தாா்கள்!

இவற்றிற்காக எந்தக் காா்ப்பரேட் முதலாளியும் இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை. சட்டத்தின் முன் எல்லாரும் சமம் என்பது பழையனூா் நீலி கூறியது போன்ற பச்சைப் பொய்!

தாராளமயமாக்கல் சரியானதுதானா என்று கூரிய அறிவு படைத்த இராசாசியிடம்தான் கேட்க முடியும்! இந்தியாவைக் காக்கிறேன் என்று அறைகூவுகின்றவா்களிடமெல்லாமா கேட்க முடியும்?

விடை சொல்ல அந்த முனிவன் இல்லையே!

கட்டுரையாளா்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com