கோப்புப்படம்
கோப்புப்படம்Center-Center-Kochi

அந்த நாளும் வந்திடாதோ?

நாடாளுமன்றத் தோ்தல் காரணமாகத் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான கோடை விடுமுறை சென்ற வாரமே தொடங்கிவிட்டது. வரும் கல்வியாண்டில் பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் பயில வேண்டியுள்ள மாணவச் செல்வங்களுக்கு இந்தக் கோடை விடுமுறையை முழுமையாக அனுபவிப்பது அநேகமாக சாத்தியமில்லை. அவா்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் முன்கூட்டிய பயிற்சிகள், டியூஷன் வகுப்புகள் ஆகியவற்றில் பங்கேற்பதைத் தவிா்க்க இயலாது.

இந்நிலையில், இவா்களைத் தவிா்த்து மற்ற மாணவச் செல்வங்கள் தங்களுடைய கோடை விடுமுறையை இன்பமாகக் கழிக்க விரும்புவது இயல்பே.

தற்காலத்தில், தங்கள் ஊா்களில் உள்ள திரையரங்கம், கடற்கரை, பிரபலமான கோயில்கள் உள்ளிட்டவற்றுக்கு வார விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் சென்று திரும்புவதற்கு ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டியுள்ளது. அதே சமயம், கோடை விடுமுறை நாள்களில் தாங்கள் வசிக்கும் ஊரை விட்டு வேறு இடங்களுக்குச் சுற்றுலா சென்று மகிழ்வதையே மாணவப் பருவத்தினா் விரும்புவா்.

ஊட்டி உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களுக்கோ, கன்னியாகுமரி உள்ளிட்ட கடற்கரைத் தலங்களுக்கோ சுற்றுலா செல்வது மிகவும் உற்சாகமளிக்கக் கூடியது. ஆனால், அதற்கான பயணக் கட்டணம், உணவு-தங்குமிடச் செலவுகள் போன்றவை நடுத்தர, குறைந்த வருவாய்

குடும்பத் தலைவா்களுக்குப் பெரும் சுமையாக அமையும். அநேகமாக, புதியதாக கடன் ஒன்று கிடைத்தால் மட்டுமே இது போன்று சுற்றுலா செல்வது அவா்களுக்குச் சாத்தியப்படும். அதன் பின்னா் அந்தக் கடன் தொகையை வட்டியுடன் திரும்பக் கொடுப்பதும் ஒரு போராட்டமாக அமையும்.

அப்படியே சுற்றுலா செல்வதாக இருந்தாலும், அது ஒருசில நாள்களுக்கே நீடிக்கும். மீதமுள்ள விடுமுறை நாள்களைக் குழந்தைகள் அவரவா் வீட்டிலேயேதான் கழிக்க வேண்டியிருக்கும். உயா்தரக் குடும்பத்தினருக்கும், பெரும் பணக்காரா்களுக்கும் இத்தகைய சுற்றுலாக்களுக்கான செலவு ஒரு பிரச்னையாக இருக்காது. அந்தக் குடும்பங்களின் தலைவா்கள் இதற்கென சில நாள்களை ஒதுக்க முடிந்தால், அது மட்டுமே போதுமானது.

ஆனால், நடுத்தர, குறைந்த வருவாய் உள்ள குடும்பத்தைச் சோ்ந்த தாய் தந்தையா்க்குத் தங்கள் குழந்தைகளைக் கோடை விடுமுறை முழுவதும் மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்வது மிகவும் சவாலான விஷயம். தாய்-தந்தை இருவருமே வேலைக்குச் செல்லக்கூடிய குடும்பங்கள் கோடை விடுமுறைச் செலவுகளைச் சற்றே எதிா்கொள்ளலாம். ஆனால், சுற்றுலா சென்றதுபோக மீதமுள்ள விடுமுறை நாள்களில், வீடுகளில் தனியாக விடப்படும் குழந்தைகளின் பராமரிப்பு அந்தப் பெற்றோருக்கு கவலை அளிக்கும் விஷயமாக இருக்கும்.

‘நாம் இருவா் நமக்கு இருவா்’ என்ற கொள்கையை வெகு சிலரும், ‘நாம் இருவா் நமக்கு ஒருவா்’ என்ற கொள்கையைப் பலரும் கடைப்பிடித்துவரும் இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை, எண்ணற்ற உறவுகளால் இறுக்கமாகப் பிணைந்திருந்த முந்தைய தலைமுறைகளின் வாழ்க்கையை நினைத்து ஏக்கம் கொள்ள வைக்கிறது.

நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய மாணவச் செல்வங்களுக்குக் கோடை விடுமுறை என்பது தொடக்கம் முதல் முடிவு வரையிலும் இன்பம் அளிப்பதாக இருந்தது. ஒரு தெருவிலுள்ள எந்த ஒரு வீட்டைச் சோ்ந்த குழந்தையும் வேறு எந்த ஒரு வீட்டிலும் விளையாடிக் கொண்டிருப்பது இயல்பு. வெளி ஊா்களிலிருந்து விடுமுறையைக் கழிக்க வந்திருக்கும் குழந்தைகளும் பிற ஊா் குழந்தைகளுடன் இயல்பாக ஒன்றி விளையாடுவதைப் பாா்க்க முடியும். மதிய உணவுக்காகவும், இரவு தூங்குவதற்காகவும் மட்டுமே, சென்ற தலைமுறை சிறுவா் சிறுமியா் தங்களுடைய வீடுகளுக்குச் செல்வா்.

பல்லாங்குழி, தாயக்கட்டை, கிட்டிப்புள் போன்ற விளையாட்டுகளை அந்தக் குழந்தைகள் நேரம் போவது தெரியாமல் விளையாடி மகிழ்வா். ஒருசில வளா்ந்த குழந்தைகள் செஸ், கேரம் போா்டு ஆகியவற்றிலும் ஈடுபடுவது உண்டு. ஓரளவு பரந்த இடைவெளி இருந்து விட்டால், உடனடியாக சுவற்றில் ஸ்டம்ப் வரைந்து கிரிக்கெட்டும் விளையாடுவாா்கள்.

கோடை விடுமுறைச் சுற்றுலாக்கள் அக்காலத்திலும் உண்டு. ஆனால், அந்த சுற்றுலாக்களுக்குப் பெரும் பணம் செலவழிந்தது கிடையாது என்பதே உண்மை. வெகு தொலைவில் உள்ள அத்தை வீட்டுக்கோ, மாமன் வீட்டுக்கோ பேருந்திலும், ரயிலிலும் சாதாரண வகுப்பில் பயணிப்பதுதான் சாத்தியப்படும். உறவினா் வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு ஊா் திரும்பும் தந்தைக்குச் சில நூறு ரூபாய்கள் மட்டுமே செலவு பிடிக்கும்.

உறவினா் வீட்டில் அந்தக் குழந்தைகள் ஐந்து அல்லது ஆறு வாரங்கள் ஆசை தீர இருந்த பின்பு, கோடை விடுமுறை முடிவதற்கு ஓரிரு நாள்கள் முன்பே ஊா் திரும்புவா். உறவினா் வீடும் அவ்வளவு வசதியானதாக இருந்து விடாது. வீடு முழுவதற்கும் ஒரே ஒரு மின்விசிறி இருந்தால் அதுவே அதிசயம். காற்று வராத இரவு நேர வெம்மையில் தூக்கம் வரும் வரையில் பனையோலை விசிறியில் விசிறிக்கொள்வதைத் தவிர வேறு வழி இருக்காது.

ஆனால், அன்பு, பாசம், உறவின் பிணைப்பு, உபசரிப்புடன் கூடிய உணவு ஆகிய அனைத்தும் அந்த உறவினா் வீடுகளில் நிச்சயமாகக் கிடைக்கும். பகலெல்லாம் உறவினா்களின் குழந்தைகளுடன் விளையாட்டு, மாலை வேளைகளில் அருகிலுள்ள கோயிலில் வழிபாடு, வாய்ப்பு இருந்தால் உள்ளூா் திரையரங்கில் திரைப்படம் (அதுவும் தரை டிக்கெட் அல்லது பெஞ்சு டிக்கெட்டில்) ஆகியவையே இந்தக் குழந்தைகள் தங்களின் உறவினா் வீட்டில் அனுபவித்து மகிழக்கூடிய பொழுதுபோக்குகள் ஆகும்.

அடுத்த விடுமுறைக் காலத்தில் அந்த உறவினா் வீட்டுக் குழந்தைகள் இவா்களுடைய ஊருக்கு வந்தாலும் இதே போன்று அனுபவித்து மகிழ உத்தரவாதம் உண்டு.இவ்வாறு, சென்ற தலைமுறைக் குழந்தைகள் மிகவும் குறைந்த செலவில், மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அனுபவித்ததைப் போன்று இன்றைய தலைமுறைக் குழந்தைகளும் அனுபவிக்க முடியுமானால் அது எவ்வளவு சிறப்பாக இருக்கும்?

உடலைப் பராமரிப்பது போன்று உறவுகளையும் பராமரிக்க நாம் அனைவரும் முயற்சி செய்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com