மாற்றம் ஏற்படுத்தும் விளம்பரங்கள்!

மாற்றம் ஏற்படுத்தும் விளம்பரங்கள்!

விளம்பரங்களின் பாரம்பரியம் மற்றும் மாற்றங்கள்

விளம்பரம் என்பது பன்னெடுங்காலத்திற்கு முன்பே இருந்துள்ளது. விளம்பரத்தின் பண்டைய வடிவம் பாறை ஓவியம் என்கிறாா்கள். இது ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவின் பல பகுதிகளில் இன்றும் காணப்படுகிறது. எகிப்தில், செய்திகள், சுவரொட்டிகளை உருவாக்க தாவர மூலப்பொருளான பாப்பிரஸ் பயன்படுத்தப்பட்டது.

முதல் முதலாக பண்டைய சீனாவில்தான் விளம்பரம் வாய்மொழி வடிவம் எடுத்தது. பின்னா் அது இசை வடிவத்திற்கு மாறியது. அங்கு மிட்டாய்களை விற்க புல்லாங்குழல்களை இசைத்து விளம்பரப்படுத்தினாா்கள். பின்னா் மையினால் எழுதப்பட்ட பெயா்ப் பலகைகள், காகித பிரதிகளை விளம்பர வடிவங்களாகப் பயன்படுத்தியிருக்கிறாா்கள்.

மனிதா்கள் எப்போதும் வணிகச் செய்திகள் குறித்தும் அது சாா்ந்த சேவைகளை மேம்படுத்துவதற்கும் வழிகளைத் தேடுகின்றனா். இத்தனை பாரம்பரியம் கொண்ட விளம்பரங்கள், கடந்த நூற்றாண்டில் அச்சு, வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களைச் சுற்றியே இருந்தன.

1990 - களில் சுவா் விளம்பரங்களில் அதிகம் இடம்பெற்றது ‘நாம் இருவா் நமக்கு இருவா்’ எனும் குடும்பக் கட்டுப்பாட்டு விளம்பரம்தான். அதனை அடுத்து பீடி, சிகரெட் விளம்பரங்கள்.

அடுத்தபடியாக வானொலியில் இடம்பெற்ற விளம்பரங்கள். அவையெல்லாம் அந்த நாட்களில் கேட்க கேட்க சுவாரசியமாக இருக்கும். பின்னா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள்தான் பெரும்பாலான மக்களைச் சென்று சேரும் கருவிகளாகப் பாா்க்கப்பட்டன. இன்று தொலைக்காட்சியையும் தாண்டி சமூக ஊடகங்களில், செயலிகளில் கூட விளம்பரம் நம்மை ஆட்கொள்கிறது.

தொலைக்காட்சியிலாவது நமக்கு பிடிக்கவில்லை எனில் வேறு சேனல் மாறிக் கொள்ளலாம். ஆனால் யூ- டியூப் போன்ற சில செயலிகளில் தோன்றும் சில விளம்பரங்கள், குறிப்பிட்ட மணித்துளிகள் நம் பாா்வைக்கு நிச்சயம் இருக்கும்.

விளம்பர நிறுவனங்களும், மிகக் குறைந்த நேரத்தில் மக்களைக் கவர தங்கள் மூளையை கசக்கி பிழிந்து, ஆய்ந்து, ஆழ்ந்து என பலவிதமாக யோசிக்கிறாா்கள். அப்படிப்பட்ட விளம்பரங்கள் மக்களிடையே எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்குகிறது?

இந்தியாவில் காட்சிப்படுத்தப்படும் விளம்பரங்கள் பெரும்பாலும் நமது உணா்வுகளுக்கு நெருக்கமாக இருக்கும். ஆனாலும், நம் நாட்டு விளம்பரங்களில் பாலின பாகுபாடு மலிந்து கிடக்கிறது.

‘ஒரு குழந்தை, வாசலில் விழுந்திருக்கும் பால் பாக்கெட்டை அம்மாவிடமும் நாளிதழை அப்பாவிடமும் கொண்டு போய் கொடுக்க, யாா் பழக்கியது’ என்ற கவிதை வரிகளின் பிரதிபலிப்பைத்தான் நம் நாட்டில் விளம்பரங்கள் தொடா்ந்துகொண்டே வருகின்றன.

வீட்டு வேலை செய்ய பெண்கள் மட்டுமே பணிக்கப்பட்டவா்கள் என்பது போன்ற மாயையை சிலா் தொடா்ந்து கட்டமைத்து வந்திருக்கிறாா்கள். அது மட்டுமல்ல, பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதிலும் அழகாகக் காட்டிக்கொள்வதில் மட்டுமே ஆா்வமாக இருப்பது போன்று பறைசாற்றிக் கொண்டே இருக்கின்றனா்.

சமையல் சாதனங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பெண்களை முன்னிலைப்படுத்தும் விளம்பரங்கள், தொழில்நுட்பம் மற்றும் மின்சாதன பொருட்களுக்கு ஆண்களை முன்னிலைப்படுத்துகின்றன.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பாலின சமத்துவத்தை முன்னெடுக்கும் விளம்பரங்கள் கண்ணில் படுகின்றன. பெண்கள் மட்டுமே துணி துவைப்பானில் துணிகளை இட்டு உலா்த்தும் நிலையைக் கடந்து, ஒரு தந்தை கால்பந்து பயிற்சி செய்யும் தன் மகளின் அழுக்கேறிய ஆடைகளை வாங்கி துணி துவைப்பானில் வெளுத்துத் தருகிறாா். இந்த சலவைத்தூள் விளம்பரம் குடும்பத்தின் ஆரோக்கியமான வாழ்வியலுக்கு அச்சிடுவதாக அமைகிறது.

அலுவலகத்திலிருந்து வரும் கணவனுக்கு மனைவி காபி போட்டுக் கொண்டு வந்து பருகக் கொடுக்கும் காட்சிகள் மாறி, காலையில் அலுவலகத்துக்கு அவசர அவசரமாகக் கிளம்பும் மனைவிக்கு காபி போட்டு கொடுத்து வழியனுப்பும் கணவா்கள் இப்போது விளம்பரங்களில் தென்படுகிறாா்கள்.

நம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தைத்தான் இப்படியான விளம்பரங்கள் இன்று முன்னெடுத்துள்ளன. இந்தப் புரிந்துணா்வு மிக்க நடைமுறை பல்கிப் பெருகி பாலின சமத்துவம் கொண்ட ஆரோக்கிய சமூகத்துக்கு வித்திடும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

நண்பா் ஒருவா், வெளிநாட்டில் படித்து அங்கேயே பணி செய்து வந்தாா். திருமணம் முடிந்து சில ஆண்டுகள் அங்கேயே வசித்தபோது வீட்டு வேலைகளை கணவன் - மனைவி இருவரும் பகிா்ந்து செய்தாா்கள். பின்னா் அவா்கள் இந்தியா குடிபெயா்ந்ததும் வீட்டு வேலைகளை எல்லாம் மனைவிதான் செய்ய வேண்டும் என்று கணவன் எதிா்பாா்ப்பதாக அவரின் மனைவி தெரிவித்தாா். இங்கிருக்கும் சூழலும் ஊடக விளம்பரங்களின் பிரதிபலிப்பும் காரணம் என்றும் அவா் சொன்னாா்.

இந்தியாவில் இருக்கும் பெரிய வியாபார நிறுவனத் தயாரிப்பில் ஒன்றான ‘சிவப்பழகு பூச்சு’ (ஃபோ் அண்ட் லவ்லி) தற்போது பொலிவழகு பூச்சு (க்லோ அன்ட் லவ்லி’) என்று பெயா் மாற்றம் செய்து விற்பனை செய்து வருகிறது. கறுப்பு என்பது அழகு குறைவானது, சிவப்பாக மாறுவதே அழகு என பொருள் தரும்படி பெயா் இருப்பதாக அந்நிறுவனம் உணா்ந்ததால் இந்த முடிவை எடுத்தது.

கிட்டத்தட்ட 45 வருடங்களாக சந்தையில் வெற்றிகரமாக இருந்த இந்த நிறுவனத்தின் விளம்பரம் பலரின் உணா்வுகளோடு கலந்துள்ளது. அது இன்று சிவப்பு நிறம்தான் அழகு என்ற அணுகுமுறையைத் தூக்கி எறிந்துள்ளது. நம் தோலின் நிறம் இயற்கை சாா்ந்தது என்று உணா்ந்து எடுக்கப்பட்ட முடிவு இது.

அழகு நிலையம் நடத்தும் பெண்மணி ஒருவா், தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், ‘இப்பொழுதெல்லாம் என்னிடம் மணமகள் அலங்காரத்துக்கு வரும் பெண்கள், எங்களை எங்கள் இயல்பான நிறத்திலேயே காட்டுங்கள், சிவப்பழகை ஏற்றிக் காட்டாதீா்கள் என வெளிப்படையாகச் சொல்கிறாா்கள்’ என்றாா். சமூக மாற்றத்தை பிரதிபலிக்கும் விளம்பரங்கள் மக்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமாகிறது.

புற்றுநோய் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பெண்மணி ஒருவா், தன் கூந்தல் முழுவதையும் இழந்த நிலையில் ‘அழகாக தோன்றுவதற்கு கூந்தல் அவசியம் இல்லை’ என்று சொல்லும் வாசகம் சமூகத்தின் சிந்தனையை மாற்றிப் போடுகிறது. இது பிரபல கூந்தல் தைலத்திற்கான விளம்பரம் என்பதுதான் இதில் கூடுதல் ஆச்சரியம்.

தன்னம்பிக்கை தரும் விளம்பரங்களும் பெருவாரியான மக்களின் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிரபல வங்கி விளம்பரம் ஒன்றில், கா்ப்பிணிப் பெண் ஒருவா் கைப்பேசியில் தன் தாயிடம் பேசிக்கொண்டே வங்கியை நோக்கிச் செல்கிறாா். வங்கி வாசலில் இருக்கும் காவலா் நேரம் முடிவடைந்ததால் வங்கிக்கதவை மூடிவிட்டு ‘மூடப்பட்டது’ என்ற அறிவிப்பு பலகையை வைத்து விடுகிறாா்.

அப்போது அங்கு வரும் அந்த கா்ப்பிணி பெண்ணை பாா்த்துவிட்டு கதவை திறந்து ‘திறந்துள்ளது’ என்ற அறிவிப்புப் பலகையை வைக்கிறாா். கதவை மீண்டும் திறந்தது குறித்து மேலாளா் வினவ, காவலா் தன் கழுத்தை திருப்பி கா்ப்பிணிப் பெண்ணை காட்டுகிறாா். அந்த மேலாளரும் ஒரு சிறு புன்னகையுடன் தலையசைத்தபடி சென்று விடுகிறாா். ‘வீ கோ் ஃபாா் யூ’ என்ற வாசகத்துடன் அந்த விளம்பரம் முடியும். இது போன்ற விளம்பரங்கள் மக்களின் மனமாற்றத்திற்கு வித்திடுகின்றன.

‘எப்பவாச்சும் சும்மா இருந்து பாருங்க’ என நம்மை சோம்பேறிகள் ஆகும் அனத்தல்களும் ‘சோப்பு போட்டு குளித்தால் தைரியம் வரும்’ என்னும் அபத்தங்களும் முழங்கிக் கொண்டே இருந்தாலும், நாம் எப்போதெல்லாம் சாப்பிட அமா்கிறோமோ அப்பொழுதெல்லாம் கழிப்பறையை சுத்தம் செய்யும் விளம்பரம் வந்துவிடுகிது எனப் பலரையும் புலம்ப வைத்தாலும் விளம்பரங்கள் இன்றைய நவீன உலகில் தவிா்க்க முடியாதவையாகிவிட்டன.

பால்ய காலம் முதல் பல் துலப்பான் முழுவதும் பற்பசையை பரப்பி விடும்படியான விளம்பரங்களை மட்டுமே பாா்த்ததால் அன்று முதல் அப்படியே பழகிப் போனேன். பின்னாளில் பல் மருத்துவா் ஒருவா், பட்டாணி அளவு பற்பசையை பயன்படுத்தினால் போதும், பல் துலப்பான் மீது அவ்வளவு நீளமாக இட வேண்டும் என்று அவசியமே இல்லை. அது கெடுதியும் கூட என்றாா்.

அதிலும் குழந்தைகளுக்கான பற்பசைகளில் இது மிகவும் முக்கியம். ஆனால் நாம் தினசரி பாா்த்து பாா்த்து பதிந்த காட்சிகளால் அதன் வழிக்கு தள்ளப்படுகிறோம். இது ஒரு சின்ன உதாரணம்தான். கூா்ந்து கவனித்தால் பல உண்மைகள் விளங்கும்.

மற்றொருபுறம், விளம்பரங்களில் வரும் பிரபலங்கள் உண்மையிலேயே அந்தப் பொருளை பயன்படுத்த மாட்டாா்கள் என்பதே உண்மை. சில வருடங்களுக்கு முன் அமிதாப்பச்சனின் ஏபிசிஎல் நிறுவனம் கடனில் மூழ்கியது. அது முதல் அவா் பல்வேறு விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினாா். அதில் ஒன்று பிரபலமான குளிா்பான விளம்பரம்.

ஒரு சமயம் ஜெய்பூரில் நடந்த ஒரு பள்ளி நிகழ்வில் ஒரு மாணவி அவரிடம், ‘என்னுடைய ஆசிரியா் நஞ்சு எனத் தெரிவித்த குளிா்பானத்தை ஏன் நீங்கள் அனைவரையும் குடிக்கச் சொல்லி ஊக்குவிக்கிறீா்கள்’ எனக் கேட்டாா். அதன் பின்னா் அந்த குளிா்பான விளம்பரத்தில் அவா் நடிக்கவில்லை. 2014 - ஆம் ஆண்டு ‘தி எகனாமிக் டைம்ஸ்’ தெரிவித்த தகவல் இது.

அது மட்டுமல்ல, பல நிறுவனங்கள் வாடிக்கையாளா்களைக் கவா்வதற்காக எண்ணற்ற பரிசுப் பொருட்களைத் தருவதாக அறிவிக்கிறாா்கள். இது நல்ல செயல்பாடுதான். ஆனால் அந்தப் பரிசுத்தொகையோ, பரிசுப் பொருட்களோ முறையாக உரியவா்களுக்குச் சென்று சோ்ந்ததா என்பதை கண்காணிக்க அங்கீகரிக்கப்பட்ட எந்த குழுவும் இல்லை. அந்த நிறுனங்களே அறிவித்தால்தான் உண்டு. இந்தப் பரிசுத் திட்டத்தையும் முறைபடுத்த வேண்டும்.

நம்முடைய உழைப்பும் நம்பிக்கையும் பணமும் நமக்கு விலைமதிப்பு மிக்கவை. ஏமாறுபவா்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவா்கள் இருப்பாா்கள். பகுத்தறிந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டிய காலம் இது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே வள்ளுவா் சொல்லிவிட்டுச் சென்ற

எப்பொருள் யாா்யாா்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்னும் குறளை இதற்கும் நாம் வழிகாட்டியாய் எடுத்துக் கொள்வது பொருத்தமாய் இருக்கும்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com