முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

உலகிலேயே முதல் முறையாக ஜனவரி 22-ஆம் தேதி மத்திய ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டில், மலேரியாவுக்கு ஆர்டிஎஸ், எஸ் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டன. மலேரியாவால் அதிகம் பாதிக்கப்பட்ட கானா, கென்யா, மலாவி ஆகிய நாடுகளில் சோதனை அடிப்படையில் மலேரியா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக, கேமரூனில் அந்தத் தடுப்பூசி அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
மேலும் மலேரியா தடுப்பூசி திட்டத்தை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த 20 நாடுகள் முன்வந்திருப்பதாக தடுப்பூசிகளின் கூட்டமைப்பான ஜி.ஏ.வி.ஐ. என்ற சர்வதேச பொது- தனியார் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளை மலேரியா தடுப்பூசி சென்றடைய இந்த அமைப்பு முன்னுரிமை அளித்து வருகிறது.
சர்வதேச அளவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக மலேரியா விளங்குகிறது. ஆப்பிரிக்காவில் மலேரியாவுக்கு ஆண்டுதோறும் சராசரியாக 6 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக உயிரிழப்பவர்களில் 80% பேர் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகள். 
ஆகையால், மத்திய ஆப்பிரிக்காவின் கேமரூனில் முதல் முறையாக மலேரியாவுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது. அங்கு, டேனியலா என்ற குழந்தைக்கு முதல் முறையாக மலேரியா தடுப்பூசி போடப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் கணக்கின்படி, உலகம் முழுவதும் 30-க்கும் அதிகமான நாடுகளில் மலேரியா அச்சுறுத்தல் மிதமான அளவிலிருந்து தீவிர பாதிப்பு வரை பதிவாகியிருக்கிறது. அனாபீலஸ் என்ற பெண் கொசு மூலம் பரவும் மலேரியா, எளிதில் தடுக்கக் கூடியது; குணப்படுத்தக் கூடியது. ஆகையால், அச்சப்பட தேவையில்லை என சர்வதேச நிபுணர்கள் ஆறுதல் கூறுகின்றனர்.
அனாபீலஸ் எனும் பெண் கொசு பரவலால் கடந்த 2022-இல் சர்வதேச அளவில் ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்ட மக்கள், மலேரியா அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேர்ந்தது. உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மலேரியா அறிக்கை 2023-இன்படி, ஆப்பிரிக்காவில் அதன் பாதிப்பு 94% காணப்பட்டது. சர்வதேச அளவில் மலேரியாவால் பலியானவர்களில் 95% பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தைப் பொறுத்தவரை, இந்தியாவில் மலேரியா பாதிப்பு 66% பதிவானது. மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகளால் 2015-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மலேரியா பாதிப்பு குறைந்தாலும், சர்வதேச அளவில் ஒப்பிடும்போது பாதிப்பின் வீதம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
இந்தியா 2027-ஆம் ஆண்டுக்குள் மலேரியாவிலிருந்து விடுபடவும், 2030-ஆம் ஆண்டுக்குள் மலேரியாவை முற்றிலும் ஒழிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக மலேரியா ஒழிப்பு தேசிய கட்டமைப்பு (என்எஃப்எம்இ) என்ற கொள்கை கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது யுனிசெஃப் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள மலேரியா தடுப்பூசிக்கான ஒப்பந்தம், பிரிட்டனைச் சேர்ந்த மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜிஎஸ்கே வசம் 170 மில்லியன் டாலர் மதிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆர்டிஎஸ், எஸ், ஏஎஸ்01 ஆகிய தடுப்பூசிகள் அடுத்த மூன்று ஆண்டுகளில், 18 மில்லியன் டோஸ் என்ற எண்ணிக்கையில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்டிஎஸ், எஸ் தடுப்பூசிகள் 35 ஆண்டு கால ஆராய்ச்சியின் பலனாக கண்டறியப்பட்டவை என யுனிசெஃப் அமைப்பு கூறுகிறது. இந்த தடுப்பூசிகள் பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் என்ற ஒரு வகை ஒட்டுண்ணிக்கு எதிராக திறம்பட செயல்புரிவதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதேபோல மலேரியாவுக்கு எதிரான 2-ஆவது டோஸôன ஆர்21 தடுப்பூசியைக் கண்டறிந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அதன் தயாரிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. 
இந்த ஆர்21 தடுப்பூசியை இந்தியாவில் சீரம் நிறுவனம் ஆண்டுக்கு 100 மில்லியன் என்ற எண்ணிக்கையில் தயார் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த தடுப்பூசிகளை குழந்தை பிறந்து ஐந்தாவது மாதத்திலிருந்தே கொடுக்க ஆரம்பித்துவிடலாம். மொத்தம் 4 டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டுமென உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. மேலும், அதிகபட்ச மலேரியா பாதிப்பு பதிவாகும் நாடுகள், தடுப்பூசி திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
குறைவான மலேரியா பாதிப்பு கொண்ட நாடுகளில், ஒட்டுமொத்த மலேரியா கட்டுப்பாட்டு வியூகம், பொதுமக்களின் வாங்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு தடுப்பூசி திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. 
புதிதாகக் கண்டறியப்பட்ட தடுப்பூசிகளின் குறைவான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, மலேரியாவால் அதிக இடர்ப்பாட்டை எதிர்கொள்ளும் நாடுகளைச் சேர்நத குழந்தைகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பு நோய் எதிர்ப்பு பிரிவின் இயக்குநர் கேட் ஓபிரயன் தெரிவித்துள்ளார். 
மலேரியா பரவலுக்கு, பருவநிலை மாற்றமும் முக்கிய காரணம் என நோயியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது பருவநிலை மாறுபாடு காரணமாக மலேரியா நோய்க்கிருமி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எளிதில் பரவுகிறது. பருவநிலை மாற்றத்தால் தென்கிழக்கு ஆசியாவில் மலேரியா நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. வெப்பநிலை அதிகரித்தால், மலேரியாவை ஏற்படுத்தும் அனாபீலஸ் பெண் கொசு வேறு இடம் தேடிச் செல்லும்.
ஏற்கெனவே மத்திய இந்தியா, வங்கதேசத்தின் மலைப்பாங்கான பகுதிகள், மியான்மரின் ஒரு சில இடங்கள், இந்தோனேசியாவின் பப்புவா நியூ கினியாஆகிய பகுதிகளில் மலேரியா பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. எனவே நோய்த்தொற்று பரவலை முன்கூட்டியே கண்டறிந்து, பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முறையான சிகிச்சை வசதிகளை அந்தந்த நாடுகள் உறுதிப்படுத்த வேண்டியது இன்றியமையாதது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com