மக்களாட்சியில் அரசியல் அறியாமை! 

ஓர் உயர்நிலைக் கல்விக்கூட வகுப்பறையில் ஆசிரியரைப் பார்த்து "மக்களாட்சி நடைபெறும் நாட்டில் எது பேராபத்து' என்று மாணவர் ஒருவர் கேட்டார்.
மக்களாட்சியில் அரசியல் அறியாமை! 

ஓர் உயர்நிலைக் கல்விக்கூட வகுப்பறையில் ஆசிரியரைப் பார்த்து "மக்களாட்சி நடைபெறும் நாட்டில் எது பேராபத்து' என்று மாணவர் ஒருவர் கேட்டார். "அறியாமையில் வாழும் மனிதர்கள் மத்தியில் மக்களாட்சி தரும் வாய்ப்பைப் பயன்படுத்தி, ஆட்சிக் கட்டிலுக்கு அரசியல் அறியாமையுடன் அரசியல்வாதிகள் வருவதுதான் மக்களாட்சியில் மக்களுக்கு பேராபத்து' என்றார்  ஆசிரியர். மாணவர் புரியவில்லை என்றார். ஆசிரியர் உடனே மக்களாட்சிக் கோட்பாட்டை விளக்கியவர்களில் ஒருவரான ஜான் ஸ்டுவர்ட் மில் கூறியதை மிகவும் எளிமைப்படுத்தி ஒரு விளக்கத்தைத் தந்தார். 
"அரசாங்கம் என்பது ஒரு பெரிய இயந்திரம். அதற்கு இயங்கு விதிகள் உண்டு. அதை இயக்க ஆற்றல் வேண்டும். அதை இயக்குவதுதான் ஆளுகை. அதுவே ஓர் அறிவியல். ஆகவேதான் அதனை அரசியல் அறிவியல் என்கின்றனர். எனவே அந்த அறிவியல் தெரியாமல் அரசாங்கம் என்ற இயந்திரத்தை இயக்கினால், அரசு என்ன விளைவினை ஏற்படுத்த வேண்டுமோ அதை உருவாக்காது' என்று விளக்கினார் ஆசிரியர். 

இந்தக் கருத்து ஆசிரியர் கருத்தல்ல, கோட்பாட்டாளர்கள் கருத்து. இந்தக் கருத்தியலுக்கு எதிர்வினையாற்றியவர்கள் ஓர் கருத்தை முன்வைத்தனர். இந்தக் கருத்து முன் வைக்கப்படுவதன் நோக்கம், ஏழை எளியவர்கள் படிக்காதவர்கள் மக்களாட்சி தரும் வாய்ப்பைப் பயன்படுத்தி நாட்டை ஆளும் அதிகார மன்றங்களுக்கு, அதாவது நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு வந்துவிடக்கூடாது என்ற கருத்தியலால்தான் என்று வாதாடினர். 

யார் வேண்டுமானாலும் மக்களாட்சியில் எந்தப் பதவிக்கும் வரலாம் என்ற நிலை வந்தது. மக்களாட்சி தத்துவத்தில் தனித்துவச் சிந்தனை கொண்ட பெர்னாட் கிரிக் "இந்த இரண்டிலும் உண்மை இருக்கிறது' என்று கூறினார். இந்த நவீன மக்களாட்சியின் 250 ஆண்டுகால வரலாற்றைப் புரட்டும்போது மக்களாட்சி மலர்வதும், தளர்வதும் மங்குவதும் தொடர்ந்து எல்லா நாடுகளிலும் நடப்பதை நாம் பார்க்க முடியும். இதற்கு எந்த நாடும் விதிவிலக்கல்ல. 

மக்களாட்சியின் பாதுகாவலன் என்று மார்தட்டும் அமெரிக்காவாகட்டும் அல்லது நாடாளுமன்றத்தின் தாய்  என்று கூறிக்கொள்ளும் இங்கிலாந்தாகட்டும், உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு என மக்கள் தொகையை வைத்துக் கூறிக்கொள்ளும் இந்தியாவாக இருக்கட்டும் எல்லா நாடுகளிலும் மக்களாட்சி வளர்வதும், தாழ்வதுமாகத்தான் இருக்கின்றது. 
 மக்களாட்சி மேம்படுவதற்கு மக்களாட்சியில் தொடர்ந்து சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியவர் பெர்னாட் கிரிக். மக்களாட்சி தளர்கின்றபோது  அதைத் தடுத்திட அறிவார்ந்த கருத்தியல்வாதமும் தொடர்ந்த நடுத்தட்டு மக்களின் அரசியல் போராட்டமும் தேவை என்றார் இந்தியாவின் தலைசிறந்த அரசியல் அறிஞர் ரஜினி கோத்தாரி. இதை எனக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டுவது சென்ற ஆண்டு தில்லியில் நடந்த ஒரு பன்னாட்டுக் கருத்தரங்க விவாதம். 

அந்த நிகழ்வின் தலைப்பு "கற்றலும் மாற்றமும்' என்பது. கற்றால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும், அந்தக் கற்றல் என்பது கல்விக்கூடத்தில் நடைபெறுவது மட்டுமல்ல, ஒட்டு மொத்த சமூகத்தில் நடைபெறுவது. அந்த நிலைக்கு சமூகத்தை கற்கும் ஆர்வம் கொண்டதாக தயாரித்திட வேண்டும். எனவே சமூகத் தயாரிப்பு என்பது மானுட மேம்பாட்டிற்கு அடிப்படை என்பதை அந்த பன்னாட்டுக் கருத்தரங்கம் வலியுறுத்தியது. 
அடுத்து சமூகம் உருவாக்கிய அறிவை விரிவாக்கம் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் அறிவுத்திறனில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு ஒட்டுமொத்த சமூகமும் எல்லையற்ற ஏற்றத்தாழ்வைச் சந்திக்க வேண்டிவரும் என்பதனையும் அந்த கருத்தரங்கம் கவனப்படுத்தியது. இதில் ஒரு பிரிவு கருத்தாளர்கள் அரசியல், ஆளுகை என்பதை மையப்படுத்தி இன்றைய மக்களாட்சியின் தாழ்நிலை பற்றி விவாதித்தனர். 

குறிப்பாக இன்றைய வளர்ந்துவரும் பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம் அனைத்தும் சமூகத்தில் உருவாக்கப்போகும் விளைவுகளை மேலாண்மை செய்யும் ஆற்றல் ஆட்சியாளர்களுக்கு வேண்டும். இல்லை எனில் அதனால் விளையும் பேராபத்தை சமூகம் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதனையும் சுட்டிக் காட்டினர். 

இதனைப் புரிந்து கொண்டு அரசியல் கட்சிகள் குறைந்த பட்சம் மக்களாட்சி அரசியல் பற்றிய தெளிவை மக்களிடம் உருவாக்க வேண்டும். அது சமூகத்தில் அரசியல் நிகழ்வுகளை அரசியல் கட்சிகள் மட்டுமே நிகழ்த்தாமல், பொதுமக்களையும் பங்கேற்க வைத்து செயல்படும் ஓர் நிகழ்வாகும். இந்தப் புரிதல் ஆட்சியாளர்களுக்கு வேண்டும் என்பதை மையப்படுத்தியது அந்த பன்னாட்டுக் கருத்தரங்கம். 

இந்தப் புரிதல் இல்லாத அரசியல்தான் இன்று உலகம் முழுவதும் நடைபெறுகின்றது என்பதை படம் பிடித்துக் காட்டினர் கருத்தாளர்கள். சமூகம் மாறுகிறது என்பதில் யாருக்கம் ஐயமில்லை. அந்த மாற்றம் மிக வேகமாக நடைபெறுகிறது என்பதைப் புரிந்து கொண்டு வினையாற்ற வேண்டும் மக்களை வழிநடத்தும் தலைவர்கள். அப்படி வழிநடத்தும் அரசியல் தலைவர்களுக்குத் தேவையான புரிதல், ஆற்றல், சக்தி, பார்வை இருக்கிறதா என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. 

இந்தக் கேள்வி ஏன் எழுகின்றது என்றால், நாம் சந்திக்கும் மாற்றங்கள் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையில் மேம்பாட்டை கொண்டுவரவில்லை என்ற காரணத்தால்தான். சந்தைப் பொருளாதாரம் உலகமயமானபோது மிகப்பெரிய எதிர்ப்பு உலகம் முழுவதும் எழுந்தது. இருந்தும் அந்தச் செயல்பாடு அமைதியாக முன்னெடுக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டது. அந்த நேரத்தில் உலக வங்கியில் பணியாற்றிய பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிஸ் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்தார். 

அவர் நோபல் பரிசையும் பெற்றார். அவரது புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகின. உலகமயப் பொருளாதாரத்தால் வருகின்ற விளைவுகளை ஏழைகளின் வாழ்வில் ஏற்றம்பெறச் செய்ய முடியும். அதற்குத் தேவை ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு புதிய பார்வையும் திறனும்தான் என்று விளக்கினார். உலகம் முழுவதும் சென்று விளக்க உரையாற்றினார்.

தற்போது உலகமயப் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தி முப்பது ஆண்டுகளைக் கடந்த நிலையில் உலகில் நடைபெற்ற பல ஆய்வுகள் கூறும் செய்தி ஒன்றுதான். இந்த உலகமயப் பொருளாதாரம் உலகம் முழுவதும் எல்லையற்ற பொருளாதார ஏற்றத்தாழ்வை சமூகத்தில் ஏற்படுத்திவிட்டது. இதன் விளைவாக மக்களாட்சியின் அடிநாதமாக விளங்கும் சமத்துவத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது. இதை எப்படிப் புரிந்து கொள்வது என்பதுதான் கேள்வி. 

ஒன்று உலகில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் உலகமயப் பொருளாதாரத்தின் வீச்சு என்ன என்பது பற்றி புரிந்துகொண்டு செயல்படவில்லை. இரண்டு, புரிதல் இருந்தும், உலகமயப் பொருளாதாரத்தை ஏழைகளுக்குச் செயல்பட வைக்கத் தேவையான ஆற்றல் ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இல்லை. மூன்று மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி வாக்குகள் வாங்கி அதிகாரத்திற்கு வரத் தெரிந்ததே தவிர ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் உலகமயப் பொருளாதாரத்தை மேலாண்மை செய்ய தவறி சந்தையின் போக்கில் ஆட்சியை விட்டுவிட்டார்கள். 

இந்த மூன்று கருத்தாக்கங்களிலும் உண்மை இருக்கிறது. இதில் மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் இந்தச் சூழலுக்கான ஒரு புதிய புரிதலை ஏற்படுத்திக் கொண்டு, இந்த சூழலை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நன்மை பயக்கச் செய்யும் நிலைக்கு மேலாண்மை செய்ய தேவையான ஆற்றலை வளர்த்துக் கொண்டு, மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி செயல்பட்டிருக்க வேண்டும். 

இந்தப் பணி ஒரு கடினமான பணி. இந்தப் பணியை மேற்கொள்ள இயலாமல் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் சந்தையிடம் சன்மானம் பெற்று, அதை வைத்து தேர்தலைச் சந்தித்து பழகிக் கொண்டுவிட்டனர். இதன் விளைவுதான் உலகமயமான ஊழல். இன்று உலக நாடுகளில் பெரும்பான்மையான தலைவர்கள் ஊழலில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த நிலைதான் உலகில் ஒரு பெரிய கதையாடலைக் கொண்டு வந்திருக்கிறது. அதுதான் ஊழல் மக்களாட்சியைப் பாழ்படுத்தும் கொடிய நோய், அதற்கு நாம் தீர்வு காண வேண்டும் என்ற கருத்தாக்கம். 

அதை திறமையாக திறன்படைத்த தலைவர்கள் முன்னெடுத்துச் சென்று மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றியும் பெற்று வருகின்றனர். அப்படி வெற்றி பெறுகின்ற தலைவர்களால் கட்சிகளால் தேர்தலில் ஊழலையும், ஊழலில் ஊறித்திளைத்த கட்சிகளையும் எதிர்கொள்வதில் பெரும் வெற்றியைப் பெறமுடியவில்லை. அதே நேரத்தில் இந்த கதையாடலை வைத்து தேர்தல் வெற்றியைப் பெற முடிகின்றதேயன்றி, புதிய கருத்தாக்கத்தை அரசியலில் உருவாக்கி, அதை மக்களிடம் முன்னெடுத்துச் சென்று மக்களைத் தயார் செய்து உலகமயப் பொருளாதாரத்தால் விளைந்த விளைவுகளை மக்கள் தனதாக்கிக் கொள்ளும் சூழலை உருவாக்க இயலவில்லை. 

அதற்குக் காரணம் சமூகம் அரசியல் அறிவுப் பஞ்சத்தில் சிக்கியுள்ளது. எனவே சமூகத்தை அறிவுப் பஞ்சத்திலிருந்து வெளியேற்ற நம் அரசியல் இன்றைய தேக்க நிலையிலிருந்து ஒரு புதிய தடத்தை நோக்கிச் செல்ல வேண்டும். இதற்குத் தேவை ஒரு புதிய சிந்தனைச் சூழல். இந்த சிந்தனைச் சூழல் என்பது ஓர் மக்கள் இயக்கமாக உருவாகிட வேண்டும். அதற்கு புதிய அரசியல் இயக்கங்கள் மக்கள் இயக்கங்கள்போல் கட்டமைக்கப்பட்டு மக்களுடன் நேரடித் தொடர்பினை உணர்வுபூர்வமாக ஏற்படுத்தி செயல்பட வேண்டும். 

ஊழலும் தாழ்நிலை அரசியலும் மக்களாட்சியை தாழ்த்துகின்றன. இதனை மாற்ற புதிய அரசியல் கட்டமைக்கப்படல் வேண்டும். அது தேர்தல் அரசியலுடன் நிற்பதல்ல, அது மேம்பாட்டு மக்கள் அரசியல். அதை நோக்கிச் செல்லும். புதிய பாதைதான் இன்று நமக்குத் தேவை.

கட்டுரையாளர்:
பேராசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com