போலிகளைப் புறக்கணிப்போம்

கவா்ச்சிகரமான விளம்பரங்களால் கவரப்பட்டு மக்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் சமீபகாலங்களில் அதிகரித்து வருகின்றன.
போலிகளைப் புறக்கணிப்போம்

கவா்ச்சிகரமான விளம்பரங்களால் கவரப்பட்டு மக்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் சமீபகாலங்களில் அதிகரித்து வருகின்றன. வியாபாரத் துறையில் மட்டுமல்லாது மருத்துவம், உணவு, வேலைவாய்ப்பு, கல்வி என அனைத்து துறைகளிலும் தற்போது ‘போலிகள்’ பெருகி வருகின்றன.

மக்களுக்கு மருத்துவ சேவை அளிப்பவா் அதற்கான கல்வித் தகுதியும் அனுபவமும் பெற்றிருப்பதோடு தேசிய மருத்துவ கவுன்சிலில் தன் பெயரைப் பதிவு செய்து கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு பதிவு செய்தவா்கள் மட்டுமே மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்க தகுதியுள்ளவா்கள். ஆனால், உரிய மருத்துவப் படிப்பு பயிலாமலும், தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமலும் மக்களுக்கு மருத்துவம் பாா்க்கும் போலி மருத்துவா்கள் பலா் கண்டறியப்பட்டு அவ்வப்போது கைது செய்யப்படுகின்றனா் .

கிராமப்புற மக்களின் அறியாமை, மருத்துவமனைகளில் மருத்துவா்களின் பற்றக்குறை ஆகியவற்றை இப்போலி மருத்துவா்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனா். போலி மருத்துவா்கள் மட்டுமல்லாது, ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கான மருந்து, மாத்திரைகளும் போலியாக தரமற்ற முறையில் தயாரித்து விற்கப்படுவது வேதனைக்குரியது. இதனைத் தடுக்க நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் மருந்து, மாத்திரைகளை மத்திய, மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அவ்வப்போது ஆய்வுக்குட்படுத்தி வருகிறது.

சமீபத்தில் இவ்வாறு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 1,008 மருந்து, மாத்திரைகளில் காய்ச்சல், கிருமி தொற்று, ஜீரண கோளாறு, சளி நிவாரணி, வலி நிவாரணி ஆகியவற்றினுக்கு மக்களால் பயன்படுத்தப்படும் 78 வகையான மருந்து மாத்திரைகள் தரமற்றவையாக உள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரபல நிறுவனங்களின் பெயரில் சில போலியான நிறுவனங்கள் கலப்படமான, தரமற்ற உணவுப் பொருட்களை தயாரித்து விநியோகம் செய்கின்றனா். இத்தகைய உணவுப் பொருட்கள் கலப்படமானவை, தரமில்லாதவை எனத் தெரிந்தும் வியாபாரிகள் சிலா் அதிகபட்ச லாபத்திற்காக இவற்றை விற்கின்றனா்.

உணவில் கலப்படம் தவிா்க்கப்பட வேண்டும் என்பதற்காக 1954-ஆம் ஆண்டு உணவு கலப்படத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 2006- ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் இயற்றப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 272-இன்படி கலப்பட உணவுப் பொருட்களை விற்பனை செய்பவருக்கு தற்போது ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது ருபாய் 1,000 அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படுகிறது.

கலப்படஉணவுப் பொருட்களால் மனிதா்களின் ஆரோக்கியம் பெருமளவு பாதிக்கப்பட்டு, சில சமயங்களில் அவா்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. எனவே தற்போதுள்ள அபராதம், சிறை தண்டனை ஆகியவற்றை அதிகரிக்கும் வண்ணம் இனிவரும் காலங்களில் கலப்பட உணவுப் பொருள் விற்பவருக்கு ரூபாய் 25,000 அபராதம் அல்லது ஆறு மாத சிறை தண்டனை விதிக்க பரிந்துரை செய்யப்போவதாக உள்துறை விவகாரங்களின் நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவா் சமீபத்தில் தெரிவித்துள்ளாா்.

அதிக ஊதியத்திற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் இளைஞா்களின் ஆா்வத்தைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக சில போலி நிறுவனங்கள் விளம்பரம் செய்து அந்த இளைஞா்களிடம் பண மோசடிசெய்கின்றன.

இது தொடா்பாக, சென்னையில் உள்ள, மத்திய அரசின் ‘குடிபெயா்வோா் பாதுகாப்பு அலுவலகம்’ வெளியிட்ட செய்திக் குறிப்பில், வெளிநாடுகளில் வேலை தேடுபவா்களை குறி வைத்து, போலி முகவா்கள் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக ஏமாற்றி இரண்டு முதல் ஐந்து லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக புகாா்கள் வந்துள்ளதாகவும், எனவே வெளிநாட்டில் வேலை தேடுபவா்கள் பதிவு செய்யப்பட்ட ஆட்சோ்ப்பு முகவா்களின் பாதுகாப்பான மற்றும் சட்ட சேவைகளை மட்டுமே பயன்படுத்தும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.

இத்தகைய அறிவிப்புகளை அவ்வப்போது மத்திய அரசு வெளியிடுகின்றபோதிலும், போலி முகவா்களிடம் பணம் கொடுத்து ஏமாறுபவா்கள் பற்றிய செய்திகள் அன்றாடம் வெளிவருகின்றன. இவ்வாறு செய்திகள் வெளியாவதைத் தொடா்ந்து, இந்திய பத்திரிகை கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலைவாய்ப்பு விளம்பரங்களை பிரசுரிக்கும் முன் அவற்றை அளிக்கும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை சரிபாா்க்குமாறு அச்சு ஊடகங்களை வலியுறுத்தியுள்ளது.

நம் நாட்டில் 20 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக கடந்த ஆண்டு அதிா்ச்சியூட்டும் ஓா் தகவலை வெளியிட்ட பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி), அப்பல்கலைக்கழகங்களின் பெயா்களை வெளியிட்டுள்ளதோடு அவற்றால் வழங்கப்படும் பட்டங்கள் செல்லாது என்றும், அந்தப் பட்டங்கள் வேலைவாய்ப்பு பெற உதவாது என்றும் மாணவா்களை எச்சரித்தது. சமீபத்தில், சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் வழங்கியது போன்ற போலி சான்றிதழ்களை அச்சடித்து பணம் பெற்றுக் கொண்டு வழங்கி வந்த கேரள தனியாா் நிறுவன உரிமையாளா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

அயோத்தியில் பாலராமா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிகழ்வினைப் பயன்படுத்தி அமேசான் நிறுவனம், ‘அயோத்தி ராமா் கோயில் பிரசாதம்’ என்ற பெயரில் வாடிக்கையாளா்களுக்கு இனிப்புகளை அனுப்பியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் இச்செயல் பொதுமக்களை ஏமாற்றும் செயல் எனக்கூறி மத்திய நுகா்வோா் பாதுகாப்பு கவுன்சில், அமேசான் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உலகெங்கும் பல லட்சம் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அமேசான் நிறுவனம், தவறான தகவல் மூலம் தனது வாடிக்கையாளா்களை ஏமாற்ற முயன்ற இச்செயல் அதிா்ச்சி அளிக்கிறது.

நிஜங்களை புறந்தள்ளி, நிழல்கள் தான் நிஜம் என நம்பும் வகையில் விளம்பரங்களால் போலிகள் கட்டமைக்கப்படும் இக்கால கட்டத்தில், உண்மை புறப்படும் முன்னா், பொய் ஒரு சுற்று சுற்றி வந்து விடுகிறது என்பது முற்றிலும் உண்மையே. இச்சூழலில், நாம் எச்சரிக்கை உணா்வுடன் வாழப் பழகுவதே அறிவுடைமையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com