இர‌ப்​ப‌ன் இர‌ப்​பாரை எ‌ல்​லா‌ம்!

"அச்சமே மரணம்" என்று சுவாமி விவேகானந்தர் சொல்லிய வாசகங்கள் என் மனதில் எழுந்தன.
இர‌ப்​ப‌ன் இர‌ப்​பாரை எ‌ல்​லா‌ம்!

"இந்த கால பிள்ளைகளுக்கு அச்சம் என்பதே இல்லாமல் போய்விட்டது' என்று தன் அருகில் இருந்தவரிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பெரியவர் ஒருவர். "அச்சம் இல்லாமல் இருப்பது நல்லதுதானே' என்றார் அவர். "அதற்காக அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருந்தால் எப்படி' என்று பதில் கேள்வி எழுப்பினார். அவரின் பார்வை, நாங்கள் பயணம் செய்த ரயிலின் வாசற்பகுதியில் பதிந்திருந்தது.

ஓடத்தொடங்கிய ரயிலின் படிக்கட்டில் அவசரமாக ஓடி வந்த ஓர் இளைஞர் தொற்றிக் கொண்டார். அவரின் முதுகில் பெரிதாய்ப் பருத்த பொருட்பை தொற்றிக் கொண்டிருந்தது. கால் இடறினாலோ, கை நழுவினாலோ, பை எதிலும் சிக்கினாலோ என்னாவது என்ற பதற்றம் முன்னவரை விட்டபாடில்லை. பக்கத்தில் இருந்தவர், "அந்த காலத்தில ஓடற பாம்பை மிதிக்கிற வயசு என்று சொல்வார்கள். இன்றைக்கு ஓடுற ரயிலைப் பிடிக்கிற வயசு' என்றார் சமாதானமாக.

சாகசம் புரிந்த புன்னகையுடன் அந்த இளைஞர் எங்களைக் கடந்து உள்ளே போனார். இருவரும் அமைதியானார்கள். என்னால் முடியவில்லை. முன்னவர் சொல்லியதன் நியாயம் மனதைக் குடைந்தது.

"அச்சம் தவிர்' என்று மகாகவி பாரதியாரும், "அச்சமே கீழ்களது ஆசாரம்' என்று திருவள்ளுவரும் "அச்சமே மரணம்" என்று சுவாமி விவேகானந்தரும் சொல்லிய வாசகங்கள் என் மனதில் எழுந்தன. கூடவே, ஒருமுறைக்கு மும்முறை "அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே' என்று ஆணித்தரமாக முழக்கமிட்ட மகாகவியின் பாடல் ஓங்கிநின்றது. எத்தனை மேடைகளில் நாமும் முழங்கியிருப்போம்.

ஆனால், பெரியவர் சுட்டிக் காட்டிய அச்சம் இது இல்லை என்பது தெளிவாகப் புரிந்தது. அசட்டுத்தனமான துணிச்சல் அச்சமின்மை ஆகாது. பொதுவிதிகளை மதிக்காமல், புறக்கணித்து அலட்சியமாக நடந்துகொள்ளும் போக்கு, அஞ்சாமை ஆகிவிடாது.

சர்க்கஸ் கூடாரங்களில் நடத்தப்படும் சாகசங்களுக்கும், பொழுதுபோக்கு நிகழ்வுகளில் செய்யப்படும் வியத்தகு செயல்களுக்கும் கடுமையான பயிற்சிகள் இருக்கின்றன; கட்டுப்பாடான நெறிமுறைகள் இருக்கின்றன. எதையும் அறியாது மனம்போன போக்கில், பின்விளைவு அறியாது முன்னெடுக்கும் எந்தச் செயலையும் அச்சமின்மை என்று சுட்டிவிடலாகாது.

இளைய தலைமுறையினர், அஞ்சவேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பதும், அஞ்சக் கூடாததற்கு அஞ்சிநிற்பதும் ஆபத்தானது. அதற்கு அவர்கள் மட்டும்தான் காரணமா? அவர்களின் முன்னோடிகளான நாமும் தானே காரணம்? அச்சுறுத்த வேண்டிய கடமையை, தேவையை நிறைவேற்றக்கூட நம்மில் பலருக்கு அச்சம் இருக்கிறதே.

தப்பாக எடுத்துக்கொள்வார்களோ என்கிற தயக்கம்; தன்னம்பிக்கையைக் குறைத்துவிடும்படி ஆகிவிடுமோ என்கிற அச்சம்; ஊர் உலகத்தில் நடக்காததா என்ற சுயசமாதானம்; அனுபவத்தில் சரியாகிடுவார்கள் என்கிற அசட்டு நம்பிக்கை } இவற்றையெல்லாம் உரமாகக் கொண்டு எழுகிற அறமீறல்கள்} இளைஞர்களை மட்டுமல்ல, இன்றைய பெரியவர்களையும் பற்றியிருக்கின்றன என்பதோடு அவை எவை என்று பேசவும் கூட அச்சமாக இருக்கின்ற சூழல்.

இதனினும் அஞ்சத்தக்க நிலையில், வாழ்வில் ஒருமுறையே வரப்போகிற மரணத்திற்காக வாழ்நாள் முழுவதும் அஞ்சி அஞ்சிச் சாவது அவலம் என்பதை அமுதம் நிகர்த்த சொற்களில் நம் முன்னோர் உரைத்த அறமொழிகளின் நிறைபொருளை நாம் இன்னும் ஆழ உணர்ந்துகொள்ளவில்லையோ என்று தோன்றியது.

கண்டற்கெல்லாம் பயந்து நடுங்குகிற அச்சத்தை அறவே போக்கச் சொல்லியவர்கள் அவர்கள். சிப்பாயைக் கண்டும், ஊர்ச் சேவகனைக் கண்டும், துப்பாக்கி கொண்டு ஒருவன் தூரத்தே போவதைக் கண்டும் அஞ்சியவர்களைப் பார்த்து நெஞ்சுபொறுக்காமல் பாடிய பாரதியார் இளம்பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லிய அறமொழி, அவர் பாடிய புதிய ஆத்திசூடியின் முதல் மொழி, "அச்சம் தவிர்'.

அச்சம் உயிரின் இயல்பு. ஆனால், அதனைத் தவிர்ப்பது அறிவின் செயற்பாடு. தவிர்க்க வேண்டிய இடத்தில் மட்டும்தான் அது தவிர்க்கப்பட வேண்டும், எல்லா இடங்களிலும் அல்ல என்பது அதன் உட்பொருள். மூர்க்கத்தனமான தன்முனைப்புடன் எல்லாவற்றையும் எதிர்த்து நிற்கிற தன்மையை இது சுட்டவில்லை. அப்படியான நிலைக்கு அவர்கள் போய்விடக் கூடாது என்பதால்தான் அடுத்த கட்டளையில், "ஆண்மை தவறேல்' என்றார்.

ஆளுமை அனைவர்க்கும் பொது. அஞ்சாமை, ஆளுமையின் அடையாளம்தான் என்றாலும், அறமீறல்களை அஞ்சாது செய்வது கீழ்மை. அது செய்பவர்களை மட்டுமல்ல, அவர்கள் சார்ந்த சமூகத்தையும் கீழ்நோக்கிச் செலுத்தும். மேன்மையுடையவர்கள் அதனைச் செய்ய மாட்டார்கள். வாழ்க்கைப் போக்கில் நம்மைக் கீழே தள்ளிவிடும் அபத்தங்கள் நிறைந்த ஆபத்துக்களை எதிர்கொள்ளும்போதுதான் "அச்சமில்லை' என்று விண்ணதிர முழக்கம் இட்டார் பாரதி. அந்தப் பாடல் தரும் பட்டியலை மீள எடுத்துப் படித்தால், அவை எவ்வளவு நுட்பமான இடங்கள் என்று புரிபடும். அதன்படி துணிகிற அஞ்சாமைதான், அச்சத்தைத் தவிர்க்கச் செய்கிற அறச்செயல்; மற்றவை அனைத்தும் அத்துமீறல்கள்.

அதனால்தான், மந்திரம் நிகர்த்த சொற்களில் அறம் உரைத்த திருவள்ளுவர், "அஞ்சுவது அஞ்சாமை பேதைமை' என்றார். அஞ்சுவது அறியாமை அல்ல. அஞ்சத்தக்கவற்றிற்கு அஞ்சாமல் இருப்பதுதான் பேதைமை. எடுத்துரைக்கும் செய்தியை, யார் எதிர்த்தாலும், அஞ்சாமல் அவை முன்பு உரைக்க வேண்டும் என்பதற்காகவே, "அவை அஞ்சாமை' என்ற அதிகாரம் படைத்த அவர், அஞ்ச வேண்டியவை எவை என்பதை விளக்குதற்கும் இரண்டு அதிகாரங்கள் படைத்திருக்கின்றார். ஒன்று தீவினை அச்சம்; மற்றொன்று இரவச்சம்.

தீய செயல்களுக்கு அஞ்சவேண்டும் என்று உரைப்பது தீவினை அச்சம். தீவினைக்கு மாற்றானது நல்வினை என்று எண்ணிவிடக்கூடாது. தீவினை நிகழ்ந்துவிடாது காப்பதே நல்வினையிலும் நல்ல வினை. நல்வினை ஆற்றாது விட்டால்கூடத் தீமையில்லை. தீவினை செய்தல் மட்டும் கூடாது. ஏனெனில், தீயை விடத் தீமையானது தீமை. தீ, தீண்டியவர்களுக்குத் தீமை பயப்பது; அதன் திறம் அறிந்து செயல்படுவார்க்கு ஆக்கமும் நல்குவது;ஆயினும் எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டியது. ஆனால், தீண்டாதபோதும் தீய பயப்பவை தீயவை. அவை தீயினும் அஞ்சத்தக்கவை என்று திருவள்ளுவர் எச்சரிக்கிறார்.

பொதுவான நிலையில் யாருக்கும் தீமை செய்கிற மனம் வந்துவிடாது. செயலின் விளைவால் ஏற்படுகிற நன்மை தீமையைப் பொறுத்து, பாதிக்கப்பட்டவர்கள் பழிவாங்கவேண்டும் என்றோ, பதிலுக்குச் செய்ய வேண்டும் என்றோ, உணர்ச்சிவசப்பட்டு செய்யத் துணிகிற செயலும், அவ்வாறு செய்ய வேண்டும் என்கிற எண்ணமும்தான் தீமை பயப்பதாகிவிடுகிறது. அச்சிந்தனையும் செயலும் மாந்தரைத் தீயவர்களாக்கிவிடுகின்றன.

அதன் உச்சநிலை அடுத்தவர்களுக்குத் தீங்கிழைத்து அவர்கள் துன்புறுவதைப் பார்த்துக் களிக்கிற குரூரம். அந்த நிலைக்குச் செல்லவிடாமல் காப்பது அறிவின் செயல். வறுமையின் காரணமாக, பகைமையின் காரணமாக, ஏன் குறும்புத்தனமான வேடிக்கைக்குக் கூட, தீவினை செய்வதோ நினைப்பதோ கூடவே கூடாது என்பதைப் பத்துக் குறட்பாக்களில் எடுத்துக்காட்டி, அச்சுறுத்தும் நிலையில்

அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர்.

அவற்றின் உச்சம்,

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு

(குறள்}204)

என்ற திருக்குறள்.

இது தனிமனித நிலையில் தொடங்கி, பொதுவாழ்வு வரைக்கும் நீண்டுவிடக்கூடாத தீமை. இதனை முன்வைக்கும் அதிகாரம் அறத்துப்பாலில் இடம்பெறுகிறது.

அடுத்த அச்சமோ, பொருட்பாலில் இடம்பெறுவது; பொருளை முன்னிறுத்தி எழுவது; இரந்து பெறுகிற பொருள் எத்துணை உயர்வானதாக இருந்தாலும் அது மிகவும் இழிந்தது என்பதை உரத்து எடுத்து உரைக்கும் அதிகாரம். எத்துணை வறுமை வந்தாலும், எவரிடத்தும் கையேந்தி யாசகம் பெறாத நிலை செம்மையினும் சிறந்தது. வறுமையிற் செம்மை உடைய அறிவுடையார் இத்தகு இழிதொழிலை எப்போதும் புரியமாட்டார்.

வள்ளல்களைச் சென்று பாடிப் பரிசு பெறத் தன் கவித்திறம் காட்டிய ஆன்றோர், அறம் பிறழ்ந்த மன்னர்களை அவையஞ்சாது எச்சரித்த சான்றோரும் ஆவர்; ஈயென இரத்தல் இழிவு என்று தெளிந்தவர்கள்; "ஈயேன் என்றல் அதனினும் இழிந்தது' என்று துணிந்து சொன்னவர்கள்.

இந்த நிலையில்தான், துன்பம் காரணமாகவோ, வறுமை காரணமாகவோ பிறரிடத்தில் கையேந்தி யாசகம் கேட்பது கொடுமையிலும் கொடுமை என்று கூறுகிற திருவள்ளுவர், "இருப்பதை மறைத்துக் கொண்டு இருப்பவர்களின் முன்னால், இருகையேந்தி யாசகம் கேட்பவர்களிடம் நான் யாசகம் கேட்கிறேன், "இவர்களிடம் யாசகம் கேட்டு இரந்து நிற்காதீர்கள் என்று' என்கிறார்.

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்

கரப்பார் இரவன்மின் என்று

(குறள்} 1067)

இவ்வாறு, இரத்தலை இழிவென்று உணர்த்தத் திருவள்ளுவரே இரந்து நிற்கிறார்}அதுவும் இருப்பவர்களிடம் இல்லை}இல்லாவர்கள் முன்பு என்றால் அது எத்தகு அஞ்சத்தகு செயல்.

இன்றைக்கு எல்லா நிலைகளிலும் தயக்கமோ, அவமானமோ இன்றி இரந்து பெறுகிற இழிநிலைக்குப் பொதுவெளியில் இயங்குவது குறித்த அச்சம் நம்மிடம் இல்லை. தீமை கருதாத உள்ளம் அரிதினும் அரிதாகி வருகிறது. இந்த நிலை இன்னும் நீடிக்காதிருக்க, அஞ்சுவது அஞ்சுகிற அறிவின் செயல்பாடு நம் அனைவருக்கும் வேண்டும் என்கிற எண்ணம் வலுத்தது.

தொழில் அறிவு பெறக் கற்கும் கல்வியினும் மகத்தானது, பெற்ற அறிவினைத் தொழிற்படுத்தும் அறிவு.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com