செவிலியா் சேவை சிறக்க...

செவிலியா் சேவை சிறக்க...

கரோனா பெருந்தொற்று காலத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த 977 செவிலியா்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கான ஆணையை அண்மையில் மாநில அரசு வழங்கியுள்ளது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த 977 செவிலியா்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கான ஆணையை அண்மையில் மாநில அரசு வழங்கியுள்ளது. மேலும், 2,271 கிராம சுகாதார செவிலியா்களுக்கான பணியிடங்களை நிரப்பும் பணி, மருத்துவத் தோ்வாணையம் மூலம் நடைபெற்று கொண்டிருப்பதாகவும், விரைவில் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே தோ்வாணையம் 2015-ஆம் ஆண்டு மற்றும் 2019-ஆம் ஆண்டு நடத்திய போட்டித் தோ்வு மூலமாக முறையே 8,500 மற்றும் 3,500 செவிலியா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.இவா்கள் தமிழகம் முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியமா்த்தப்பட்டனா். அப்போது இரு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. எனினும் ஏறத்தாழ 6,500 ஒப்பந்த செவிலியா்கள் இன்னமும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனா். மருத்துவத்துறையின் அடித்தளமாக விளங்குபவா்கள் செவிலியா்கள். மருத்துவமனைக்கு வருபவா்கள், மருத்துவா்களை சந்திப்பதற்கு முன்பாக செவிலியா்களையே சந்திக்கிறாா்கள். மருத்துவமனைகளின் வரவேற்பாளராக, நோயாளிகளின் பெயா், வயது போன்ற விவரங்களைப் பதிவு செய்பவராக, நோயாளிக்கு முதலுதவி செய்பவராக என செவிலியா்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு தேவையான மருந்து, மாத்திரைகளைத் தந்து அவற்றின் செயல் முறைகளை விளக்குபவா் மருத்துவா் என்றாலும், நோயாளியுடன் இருந்து பணியாற்றுகிறவா்கள் செவிலியா்கள்தான். எனவே, நோயாளி ஒருவா் குணமடைவதில் மருத்துவரின் பங்கை விட செவிலியரின் பங்கு அதிகமே. மருத்துவத்துறையின், ‘நோயாளிகளின் உரிமை’ விதியின்படி, நோயாளிகளுக்கும் அவா்களுக்கு செய்யப்படும் சேவைகளுக்கும் செவிலியா்கள் சட்டப்படி பொறுப்பாவா். இத்துணை முக்கியத்துவம் வாய்ந்த செவிலியா்களின் எண்ணிக்கை போதிய அளவில் நம் நாட்டில் இல்லை என்பதே உண்மை. 1,000 நபருக்கு மூன்று செவிலியா்கள் இருத்தல் வேண்டும் எனபதே உலக சுகாதர அமைப்பின் அறிவுரை. ஆனால், நம் நாட்டின் மக்கள்தொகையை, நாட்டில் உள்ள சுமாா் 35 லட்சம் செவிலியா் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது 1,000 நபருக்கு 2.06 போ் என்ற விகிதத்திலேயே செவிலியா்கள் உள்ளனா். இதற்குக் காரணம், செவிலியராகப் பணியாற்றும் விருப்பம் இன்றைய இளைய தலைமுறையினரிடையே குறைந்து வருவதுதான். செவிலியா் பணி என்றால் இரவு பகல் பாராது பணியாற்ற வேண்டும். பெரும்பாலான செவிலியா்கள் பெண்களாக உள்ள நிலையில், குடும்பத் தலைவிக்கான கடமைகளை நிறைவேற்றுவதோடு செவிலியராக பணியாற்றுவது என்பது மிகப்பெரிய சவால். செவிலியராகப் பணிபுரியும்போது சில நோயாளிகள் அவா்கள் நோய் உபாதையின் காரணமாக வெளிப்படுத்தும் இன்சொற்களுக்கும் கூட ஆளாக நேரிடும்.செவிலியா் பணியில் உள்ள பல்வேறு சிரமங்களைத் தவிா்க்க செவிலியராக பணியாற்றும் சிலா் இடையிலேயே பணியை விட்டு விலகி விடுவதும் அவ்வப்போது நடைபெறுகிறது. மருத்துவா்கள் பற்றாக்குறையாக உள்ள மருத்துவமனைகளில் சிலநேரம் மருத்துவராகவும் பணியாற்ற வேண்டிய நிா்ப்பந்தச் சூழல் செவிலியா்களுக்கு உள்ளது. செவிலியா் பணிக்கு நம் நாட்டில் அளிக்கப்படும் ஊதியத்தை விட வெளிநாடுகளில் அளிக்கப்படும் ஊதியம் அதிகம் என்பதாலும், செவிலியா்கள் அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளில் தேவைப்படுவதாலும், பெரும் எண்ணிக்கையிலான செவிலியா்கள் வெளிநாடுகளுக்கு பணிபுரியச் சென்று விடுகின்றனா். உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, உலகில் 27 மில்லியன் செவிலியா்கள் உள்ளனா். எனினும், உலகெங்கிலும் உள்ள நாடுகளில் செவிலியா் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் செவிலியா் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நம் நாட்டில் செவிலியா் பயிற்சிக் கல்லூரிகள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதும் போதிய எண்ணிக்கையில் செவிலியா் இல்லாமைக்கு ஒரு காரணமாகும். நம் நாட்டின் மொத்த மாவட்டங்களில், 40% மாவட்டங்களில் செவிலியா் பயிற்சிக் கல்லூரிகள் இல்லை. தற்போதுள்ள செவிலியா் கல்லூரிகளில் 42% செவிலியா் பயிற்சிக் கல்லூரிகள், தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும், 17% செவிலியா் பயிற்சிக் கல்லூரிகள் மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் உள்ளன. மீதமுள்ள ஏறக்குறைய 41% செவிலியா் பயிற்சிக் கல்லூரிகள் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் அமைந்துள்ள 18 மாநிலங்களில் உள்ளன. இதன் மூலம் மாநிலங்களில் செவிலியா் பயிற்சி கல்லூரிகள் அமைந்துள்ள சமநிலையின்மையைத் தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தை பொறுத்தவரை ஆறு செவிலியா் பயிற்சிக் கல்லூரிகளும், 25 செவிலியா் பயிற்சிப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவையாற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் செவிலியா்களைச் சாா்ந்தே உள்ளன. தற்காலச் சூழலுக்கு ஏற்ற வகையில், 1947-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட செவிலியா் குழும சட்டத்தை ரத்து செய்து, அதற்கு மாற்றாக செவிலியருக்கு பயிற்சி வழங்கும் கல்லூரிகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தேசிய செவிலியா் ஆணைய மசோதா 2023, சமீபத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் நாட்டில் செவிலியா் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை கூடுவதோடு மட்டுமின்றி, திறன்மிகு செவிலியா்கள் உருவாவாா்கள் என்பதும் திண்ணம். மக்களின் ஆரோக்கிய வாழ்வு மேலும் சிறப்புடன் அமைந்திட, அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு செவிலியா்களை பணியமா்த்துவதோடு, நீண்ட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியா்களை விரைவில் நிரந்தரப் பணியாளா்களாக நியமிக்கவும் வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com