மதிப்பு கூட்டப்பட வேண்டிய மக்களாட்சி!

மதிப்பு கூட்டப்பட வேண்டிய மக்களாட்சி!

இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது என்று ஆதங்கப்படுபவர்கள், இந்திய மக்களாட்சி மதிப்பிழந்து வருவதைப் பற்றி கவலை கொள்வதில்லை. மக்களாட்சியை ஆய்வு செய்யும் நிறுவனங்கள் இந்திய மக்களாட்சியையோ, மக்களாட்சி சிந்தனையாளர்களையோ பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதற்குக் காரணம், "இந்திய மக்களாட்சியை தேர்தல் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் வைத்து, அதை நடத்துவதிலும் முறைகேடுகள் செய்து ஆட்சியைப் பிடிப்பதுதான் மக்களாட்சி என்று ஆக்கி வைத்திருப்பதுதான்' என்று மேற்கத்திய அறிஞர்கள் விளக்குகின்றனர்.

இந்திய மக்களாட்சி, உலக ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்காததற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. மக்களாட்சியை மலரச் செய்யும் குடிமைச் சமூகத்தை வளர்க்காமல் மக்களை கட்சி அரசியலுக்குள் நுழைத்து வியாபார நிறுவனங்கள்போல் கட்சியையும் தொண்டர்களையும் லாபம் பார்க்க இயங்க வைத்திருப்பது மக்களாட்சியில் உருவாகியுள்ள பெருங்கேடு.

எனவேதான் இந்திய மக்களாட்சியை "பற்றாக்குறை மக்களாட்சி' என்று விமர்சிக்கின்றனர். ஆனால் நம் அரசியல்வாதிகளுக்கு அந்த விமர்சனங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது ஒரு சோகம்.

உலக மக்களாட்சி முறையில் இந்திய மக்களாட்சிக்கு ஒரு தனி இடம் இருந்திருக்க வேண்டும். அதை மீட்டுருவாக்கம் செய்திருந்தால் நாம் உலகுக்கு வழிகாட்டும் மக்களாட்சியைக் கைக்கொண்டவர்களாக இருந்திருப்போம். அந்த மக்களாட்சி எண்ணிக்கை அடிப்படையில் செயல்படுவது அல்ல, வாழ்வின் உயர்நெறிகளைக் கொண்ட மக்களாட்சி. அதைத்தான் நாம் பின்பற்றியிருக்க வேண்டும். அதற்குப் பெயர் தர்மத்தின் ஆட்சி.

அந்த ஆட்சி நம்மிடம் இருந்துள்ளது என்பதற்கு, புத்தர் கால ஆட்சியைக் கோடிட்டுக் காட்டுகிறார் அம்பேத்கர். காந்தி அதை "ராமராஜ்யம்' என்றார். மேற்கத்திய மக்களாட்சி முறை இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் தேய்ந்து வருகிறது. இந்திய மக்களாட்சி ஒரு ஆபத்தான சூழலை நோக்கி நகர்கிறது என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர். அதை சீர்திருத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் அரசாங்கங்கள் வாளாவிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

அரசியல் கட்சிகள் தங்கள் கடமைகளைத் துறந்து, தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தைப் பிடிப்பதுதான் தங்களின் பணி என்று மக்களை நம்ப வைத்திருப்பதும் ஒரு பெருங்கேடு. அடிமை வாழ்வு வாழ்ந்த மக்களை, சுதந்திரம் அடைந்தவுடன் விடுதலை வாழ்வுக்குத் தேவையான துணிவையும் பொறுப்புணர்வையும் தந்து அம்மக்களைக் குடிமக்களாக்க நாம் தவறிவிட்டோம்.

ஒரு காலத்தில் நடுத்தர வர்க்கம் சமூக மேம்பாட்டிற்கும் சமூக மாற்றத்திற்கும் செயல்படும் கிரியா ஊக்கியாக இயங்கிவந்தது. ஆனால், இன்று உலகமயப் பொருளாதாரத்தால் கிடைத்த வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கச் சென்றுவிட்டது. எந்த இடத்திலும் சமூகப் பணிக்கு ஆட்களற்று பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பயனாளிக் கூட்டங்களாகவே இயங்கி, அரசாங்கத்தைக் கண்டு அஞ்சி வாழும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு காலத்தில் அரசியல் கட்சிகள், மக்கள் பிரச்னைகளைக் கையிலெடுத்து, மக்களைத் திரட்டி அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி போராடி மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கப் பாடுபட்டன. அதுதான் குறைந்தபட்ச மக்கள் அரசியல். அதனால்தான் அரசியல் கட்சிகளின் மேல் மக்களுக்கு நம்பிக்கை உருவானது. இன்று கட்சிகள் தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே மக்களிடம் வந்து நிற்கின்றன. தேர்தல் முடிந்தவுடன் கட்சிகள் விழாக்கள் நடத்தி தாங்கள் இயங்குகிறோம் என்பதைக் காட்டிக் கொள்கின்றன.

புதிய பொருளாதார கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் மட்டும் வளரவில்லை; அரசியல் கட்சிகளின் பொருளாதாரமும், கட்சித் தலைவர்களின் குடும்பப் பொருளாதாரமும் எல்லையற்ற அளவுக்கு வளர்ந்து விட்டன.

அன்று மக்களிடம் நிதி திரட்டி கட்சி நடத்த வேண்டிய நிலையில் இருந்த கட்சிகள், இன்று மக்களின் நிதி தேவைப்படாத சூழலில் உள்ளன. காரணம், கட்சிகளுக்கு நிதியை வாரி வழங்குகின்றது சந்தை. ஆட்சிக்கு வரும் கட்சிக்கு மட்டும் சந்தை நிதி தருவதில்லை, எல்லாக் கட்சிகளுக்கும் நிதியை வாரி வழங்குகிறது. இதன் விளைவுதான், அரசு இயந்திரம் மக்களைப் புறக்கணித்து சந்தையின் நன்மைக்காக செயல்படுவது.

பொதுமக்கள் அரசின் சேவைகளைப் பெற கையூட்டு கொடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு விட்டனர். நடுத்தரவர்க்கம் எந்த சலனமுமின்றி கையூட்டு கொடுத்து அரசின் சேவைகளைப் பெற்றுக் கொள்கின்றன. காரணம், நடுத்தர வர்க்கத்தினருக்கும் நிறைய வருவாய் வருவதுதான். கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும் ஒரு கலாச்சாரமாக பரவிவிட்டது. குடியாட்சி நடைபெறுகிற நம் நாட்டில் இந்த நிலை எப்படி வந்தது என்பது புரியாத புதிர்.

சுவாமி விவேகானந்தர், இந்தியாவை உலகிற்கு வழிகாட்டும் நாடாக உருவாக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள் எனக் கேட்டார். அரவிந்தர் பூரண யோகத்தின் மூலம் உலகத்தில் புதிய உளவியலைக் கட்டமைக்க சாதகர்களைத் தயார் செய்ய வேண்டும் என்று ஆசிரமம் அமைத்தார். மகாத்மா காந்தி கிராம மக்களின் வாழ்வை மாற்றியமைக்க நிர்மாண ஊழியர்களை உருவாக்க வேண்டும் என்றார்.

இதைச் செய்திடத்தான், அம்பேத்கரும் புத்த மதத்தைத் தழுவி, "புத்தம், மாற்றத்திற்கான உளவியலையும், புதிய மக்களாட்சியையும் உருவாக்கும்' என்று பிரகடனப்படுத்தினார். விநோபா பாவே, "சுயராஜ்ய அறிவியல்' என்ற புத்தகத்தை எழுதி சுதந்திரம் அடைந்த நாட்டில் பொதுமக்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதனை விளக்கி, அது ஒரு அறிவியல் என்பதை கோடிட்டுக் காட்டினார்.

இராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்த, சுவாமி ரங்கனானந்தா நாடு முழுவதும் சென்று "குடிமக்கள் சிந்தனையை உருவாக்கி ஒரு நற்சமுதாயம் உருவாக வேண்டும், அதில் நல்லாட்சி மலர வேண்டும், அதில் நல்ல நிர்வாகம் உருவாக வேண்டும்' என்று பரப்புரை செய்தார்.

இதைத்தான் கோவையில் அவினாசிலிங்கம் மகளிர் கல்விக் கழகத்தை உருவாக்கிய அவினாசிலிங்கம் செட்டியார், மகத்தான பணிகளை இந்திய இளைஞர்கள் மேற்கொண்டு புதிய இந்தியாவைப் படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி "வாழ்வின் அடிப்படைகள்' என்ற நூலை எழுதினார்.

இந்த மகான்கள் கூறியது அத்தனையும் மக்களின் சிந்தனைப் போக்கையும், நடத்தையையும் செயல்பாடுகளையும் மாற்றி சுதந்திர நாட்டில் பொறுப்புமிக்க சமுதாயத்தை உருவாக்கி ஒரு புது வாழ்வியலை கட்டமைப்பதற்காகத்தான். இதனை நாம் புரிந்து செயல்படாமல் அனைத்தும் அரசாங்கம் செய்யும் என்று வாளா இருந்துவிட்டோம். அதன் விளைவு, நம் அரசியல்வாதிகள் மக்களாட்சி இன்று முட்டுச்சந்தில் கொண்டுவந்து நிறுத்தி விட்டனர்.

இந்தியாவும் சீனாவும் காலங்காலமாக சமூகமாக வாழ்க்கையைக் கட்டமைத்த நாககத்திற்கு வழிகோலிய நாடுகள். அமெரிக்க நாட்டின் சுதந்திரம் என்பது தனிமனிதர்களுக்கானது. இந்திய சுதந்திரம் சமூகத்திற்கானது. இந்தப் புரிதலை இன்றுவரை நம் மக்களிடம் உருவாக்க இயலவில்லை.

இந்தியா சுதந்திரம் பெற்று இருபதாண்டுக்குள்ளேயே நாடு சீரழிவை நோக்கிச் செல்வதைக் கணித்து ஜெயப்பிரகாஷ் நாராயண் இந்திய அரசியலை சீரமைக்க வேண்டும் என்று கூறினார். உலக அறிஞர்களின் கவனத்தை அது ஈர்த்தது. வெளிநாடுகளில் அதற்கான கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன.

தொழில்மயமும், மேற்கத்திய மயமும், நவீனமயமும், உலகமயமும் பல்வேறு மாற்றங்களை இந்திய சமூகத்தில் கொண்டு வந்தாலும், அவற்றில் எதுவும் இந்தியாவின் உண்மை வாழ்வியலை மீட்டெடுக்கவில்லை. 1929-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தீர்மானத்தில் கூறியதை நாம் மறந்து விட்டோம். இந்தியா பூரண சுயராஜ்யம் அடைய வேண்டும் என்று அப்போது தீர்மானித்தனர். அது இந்தியா தன்னை மீட்டெடுத்துக்கொள்ள, இந்தியர்கள் சிந்தனை விடுதலை பெற வேண்டும்.

இந்திய கலாசாரம், கல்வி, ஆன்மிகம் அனைத்தும் விடுதலை அடைய வேண்டும். அதற்கு பொதுமக்கள் குடிமக்களாக மாற வேண்டும். அந்த மாற்றம் ஏற்பட

குடிமக்கள் மத்தியில் இந்தியாவின் பெருமை, அதன் தொன்மை, இந்திய வாழ்வியலின் சிறப்பு போன்றவற்றை எடுத்துரைக்க வேண்டும். அதைச் செய்தவற்கு நமக்கு அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள் "குடிமக்கள் பொறுப்புக்கள்' என்ற பகுதியில் 11 கருத்துக்கள் அடங்கிய பட்டியலை உருவாக்கியுள்ளனர்.

அந்தப் பகுதியை செயல்திட்டங்களாக்கி மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். அந்த விழிப்புணர்வு நம் மக்களை பொறுப்புமிக்க குடிமக்களாக மாற்றிவிடும். பொறுப்புமிக்க குடிமக்கள் சிந்தனைக்கு நம் மக்கள் வரும்போது அவர்களிடம் நாட்டுப்பற்றும் பொதுச்சிந்தனையும் வளர்ந்துவிடும்.

அந்த உளவியலில் பொதுமக்கள் தங்கள் பொறுப்புணர்ந்த பெற்றோராக, ஆசிரியராக, மாணவராக, வாக்காளராக, குடிமக்களாக மாறிவிடுவார்கள். இந்தப் பணி, சுதந்திரத்திற்குப் போராடிய போராட்டத்தைவிட அதிக தியாக உணர்வுடன் கடினமாக உழைத்துச் செய்ய வேண்டிய முக்கியப் பணி. அந்தப்பணி தான் இன்று நமக்குத் தேவையான பணி. இதைச் செய்தால்தான் இந்திய மக்களாட்சியின் மதிப்பைக் கூட்ட முடியும்.

கட்டுரையாளர்:

பேராசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com