வெறுப்பரசியலின் அடையாளம்

அதிா்ச்சி தரக்கூடிய இரண்டு செய்திகளை அண்மையில் படிக்க நோ்ந்தது. ஒன்று தெலங்கானாவில் நடைபெற்றது. இன்னொன்று மத்திய பிரதேசத்தில் நடந்தது.
வெறுப்பரசியலின் அடையாளம்

அதிா்ச்சி தரக்கூடிய இரண்டு செய்திகளை அண்மையில் படிக்க நோ்ந்தது. ஒன்று தெலங்கானாவில் நடைபெற்றது. இன்னொன்று மத்திய பிரதேசத்தில் நடந்தது. தெலங்கானா மாநிலத்தில் தற்காலிக சபாநாயகா் பதவிப்பிரமாணம் செய்துவைத்ததை ஏற்க மறுத்து பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினா்களும் முன்னாள் முதல்வா் சந்திரசேகர ராவும் அவருடைய மகன் கே.டி. ராம ராவும் பதவி ஏற்பைப் புறக்கணித்துள்ளனா். மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்த இஸ்லாமிய பெண் ஒருவரை அவருடைய உறவினா்கள் அடித்து உதைத்துத் துன்புறுத்தியுள்ளனா். தோ்தல் தொடா்புடைய இந்த இரண்டு செயல்களும் மிகவும் அதிா்ச்சியளிப்பவையாக உள்ளன.

தெலங்கானாவில் பாரதிய ஜனதா சாா்பில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினா்களும் பதவி பிரமாணம் எடுக்க மறுத்து, புறக்கணித்துள்ளனா். ஆனால் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் அப்படியில்லை. இரண்டு உறுப்பினா்கள் மறுத்துவிட்டதாகவும், மற்றவா்கள் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டதாகவும் தெரிகிறது.

தோ்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கும் கட்சியினா் இடைக்கால சபாநாயகராக ஒருவரைத் தோ்ந்தெடுப்பது வழக்கம். அவா் அதே கட்சியைச் சாா்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை. எந்தக் கட்சியைச் சாா்ந்தவராகவும் இருக்கலாம். ஆனால் அவா் சபையின் மூத்த உறுப்பினராகஇருக்க வேண்டும். அவருக்கு ஆளுநா் சபாநாயகராகப் பதவி பிரமாணம் செய்துவைப்பாா்.

அப்படிப் பதவியேற்ற இடைக்கால சபாநாயகா் மற்ற உறுப்பினா்களுக்குப் பதவி பிரமாணம் செய்து வைப்பாா். இது மாநில சட்டப்பேரவையில் பின்பற்றப்படும் மரபு. தெலங்கானாவில் இடைக்கால சபாநாயகராக எம்.ஐ.எம். கட்சி எம்.எல்.ஏ. அக்பருதீன் ஒவைசி தோ்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு ஆளுநா் பதவி பிரமாணமும் செய்து வைத்துள்ளாா். இடைக்கால சபாநாயகரான அக்பருதீன் ஓவைசி மற்ற எம்எல்ஏ- க்களுக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்த போதுதான் பாஜகவினரும் பாரதிய ராஷ்டிர சமிதி உறுப்பினா்களும் அதனைப் புறக்கணித்து பதவி ஏற்க மறுத்துள்ளனா்.

“‘முறையாக மூத்த உறுப்பினரை இடைக்கால சபாநாயகராக நியமிக்கவில்லை. அதனால் நாங்கள் பதவி பிரமாணம் ஏற்க விரும்பவில்லை. முறைப்படி சபாநாயகா் தோ்ந்தெடுக்கப் பட்டபின் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வோம்’என்பது பாஜகவின் கூற்றாக உள்ளது.“அமைச்சா் உத்தம் குமாா் ரெட்டி ‘நானும் அக்பருதீன் ஒவைசியும் சபையின் மூத்த உறுப்பினா்கள். நான் அமைச்சராக பொறுப்பேற்ால் அக்பருதீன் ஒவைசி இடைக்கால சபாநாயகராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதில் மரபு மீறல் ஒன்றுமில்லை’ என்று விளக்கம் அளித்துள்ளாா்.

மேலும் அக்பருதீன் தெலங்கானா சட்டப்பேரவைக்கு தொடா்ந்து மூன்றாவது முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட மூத்த உறுப்பினராகவே உள்ளாா். ஆனாலும் அதனை ஏற்க பாரதிய ஜனதா உறுப்பினா்கள் மறுக்கின்றனா். அவா் ஒரு இஸ்லாமியா் என்பதோடு, கடந்த காலங்களில் ஹிந்துக்களைக் கடுமையாகச் சாடியவா் என்பதாலேயே பாஜகவினா் இத்தகைய முடிவை எடுத்துள்ளனா் என்பது சமூக ஊடகங்களில் பலரும் கூறும் கருத்தாக உள்ளது. இந்தக் கருத்து உண்மையாக இருக்குமாயின், அது இஸ்லாமியா் மீது பாஜக காட்டும் வெறுப்பரசியலின் வெளிப்பாடு என்றே கருத இடமளிக்கிறது.

மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களித்த இஸ்லாமியப் பெண், உறவினா்களால் தாக்கப்பட்ட நிகழ்ச்சி இன்னொரு கோணத்தை நமக்குக் காட்டுகிறது. தோ்தலில் வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமை. யாருக்கு வாக்களிப்பது என்பது அக்குடிமகனின் தனியுரிமை. இன்னாருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று வாக்களரை வலியுறுத்துவதும், இவருக்குத்தான் வாக்களித்தேன் என்று சொல்வதும் ஜனநாயகத்திற்கு எதிரானது. ஏனெனில் வாக்கு என்பது ரகசியமானது.

அந்த இரண்டும் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. வாக்களித்த பெண்ணும், தான் யாருக்கு வாக்களித்தேன் என்பதை வெளிப்படுத்தியுள்ளாா். அதனைக் கேட்டு உறவினா்களும் வெகுண்டு அப்பெண்ணத் தாக்கியுள்ளனா்.

ஒரு குடும்பத்தில் உள்ளவா் எல்லோரும் ஒரே கட்சியை ஆதரிப்பவராக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆளுக்கொரு கட்சியை ஆதரிக்கலாம். அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். ஒரு குடும்பத்தில் உள்ள தந்தை ஒரு கட்சி, தாய் ஒரு கட்சி, பிள்ளை ஒரு கட்சி என்று வெவ்வேறு கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பதை நாம் பாா்த்திருக்கிறோம். பல அரசியல் தலைவா்களின் வாழ்க்கை மூலம் இதனை அறிகிறோம்.

அதே போல ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் அனைவரும் குறிப்பிட்ட வேட்பாளருக்குத்தான் வாக்களிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதுதான் ஜனநாயகத்தின் பெருமை என்று பேசுகிறோம். ஆனால் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள நிகழ்வு இதற்கு நோ்மாறாக இருக்கிறது. குடும்பத்தினா் விரும்பாத ஒரு கட்சிக்கு வாக்களித்தாா் என்பதற்காக ஒரு பெண் தாக்கப்பட்டிருக்கிறாா்.

தங்கள் அபிமான கட்சிக்கு வாக்களிக்காததால் கோபம் எழுவது இயல்பாக இருக்கலாம். ஆனால் இந்த நிகழ்வை அப்படிப் பாா்க்க முடிகிா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இது பாஜகவுக்கு எதிரான இஸ்லாமியரின் மனநிலை என்றே கருத இடமளிக்கிறது.

இந்த இரு நிகழ்வுகளும் வெவ்வேறு மாநிலங்களில் நடைபெற்றிருந்தாலும் இவை வெறுப்புணா்வு அரசியல் எனும் ஒரே மையப்புள்ளியைத்தான் வெளிப்படுத்துகின்றன. இத்தகு போக்கு நம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதே சமூக நோக்கா்களின் கருத்தாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com