தொடரட்டும் மனிதநேயம்

மனித நேயமும், கருணையும் மனித இனத்தின் முன்னேற்றத்திற்குத் தேவையான பண்புகள். மனிதநேயம்  நம் வாழ்க்கையை பொருளுடையதாக மாற்றுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read


வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் வாழ்ந்த பூமி இது.  மனிதநேயம் மகிழ்ச்சிக்கான பாதை. மனிதநேயத்துடன் செயல்களைச் செய்பவர்களால் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். 

எல்லா மனிதர்களிடமும் நிபந்தனையற்ற அன்பு கொள்வது மனிதகுலத்தின் அடித்தளம். இது ஜாதி, மதம் கடந்து அனைவரையும் ஒரே குடையின் கீழ் இணைக்கிறது.

மனித நேயமும், கருணையும் மனித இனத்தின் முன்னேற்றத்திற்குத் தேவையான பண்புகள். மனிதநேயம்  நம் வாழ்க்கையை பொருளுடையதாக மாற்றுகிறது. இது மனித வாழ்வின் இயற்கை விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது. 

நம் பகுத்தறிவின் மூலம் சிந்தித்து செயல்பட்டு பிறர் வாழ்விற்கும் நம்மை பயனுள்ள வகையில் அமைத்துக் கொள்ள உதவுகிறது. இது மற்ற உயிரினங்களிலிருந்து மனிதர்களை வேறுபடுத்தும் ஒரு அடிப்படை குணமாகும்.  

நமது உண்மையான மகிழ்ச்சி நமது மனநிறைவிலேயே உள்ளது. மனிதநேயம் அந்த மகிழ்ச்சியை நமக்கு விலையில்லாமல் கொடுக்கிறது. மனித நேயத்தின் குணங்களைக் காட்டுவதற்கு ஒருவர் செல்வந்தராக இருக்க வேண்டியதில்லை. எந்தவொரு நபரும் பிறர் மீதான தமது அக்கறையை எளிய உதவிகள் செய்து,  தமது அன்பின் மூலம் வெளிப்படுத்த முடியும். 

நாளுக்கு நாள் மனிதர்களின் வாழ்க்கைமுறை மாறி வருவதால், மனிதநேயத்தின் அளவு நம்மிடம் குறைந்து வருகிறது.  உலகளாவிய வணிகமயம்,தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் போன்றவை மனிதனை பணத்தின் பின்னால் ஓடச் செய்து விட்டன. மனிதகுலம் பணம், புகழ், அதிகாரத்துக்கு அடிமையாவது அதன் பேரழிவின் தொடக்கமாகும்.  
புவி வெப்பமடைதல், காற்று மாசுபாடு, வறுமை, பசி, நாடுகளுக்கிடையேயான போர், உலகளாவிய நோய்தொற்றுப் பரவல் போன்றவை மனிதாபிமான நெருக்கடிகளுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. இதனால் மனிதநேயம் குறைவது இயல்பானதே.

இக்காலத்தில் முதியோர் இல்லங்களும், ஆதரவற்றோர் இல்லங்களும் பெருகி வருகின்றன. இவை இன்றைய இளைய தலைமுறையினர் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையைக் குறைத்து விட்டது என்றே கூறலாம். 

ஆனால், சமீப கால மழைக்கு பின் நடைபெறும் நிவாரணப்பணிகளில்  அவர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. எதிர்பாராமல்  காட்டாற்று மழை வடிவில்  நமக்கு வந்த இயற்கை சோதனைக்கு பின் நடந்த நிவாரணப் பணிகள் மனிதம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை வெளிப்படுத்துகின்றன.

கனமழையினால் வெள்ள பாதிப்புக்குள்ளான தூத்துக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டினம், ஏரல் பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தாலும், சாலைகள் துண்டிப்பு, மின் இணைப்பு, தொலை தொடர்பு வசதிகள் இல்லாததால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. எனவே, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், காவல்துறையினர், தீயணைப்பு மீட்பு துறையினர், வருவாய் துறையினர் என பல துறையினரும் மீட்பு பணிகளில் இறங்கினார்கள்.

பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு, உணவுப் பொருட்கள் தன்னார்வலர்களால் வழங்கப்பட்டன.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கட்டணமின்றி அரசுப் பேருந்துகளில் அனுப்பலாம் என்று தமிழக அரசும் அறிவித்தது. இப்படி அனுப்பப்படும் நிவாரணப் பொருட்கள்  சார்ந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வந்து சேரும் வகையில் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. 

தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியது அவர்களுடைய மனிதநேயப் பண்பின் வெளிப்பாடே ஆகும்.  உணவு, தண்ணீர், பால், ரொட்டி, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை அவர்கள் வழங்கினார்கள். அவர்களின்  பணி அனைவரும் மெச்சத்தக்க வகையில் இருந்தது. யாருடைய ஆணைக்கும் காத்திருக்காமல் தாமே செயலில் இறங்கி, இன்னலில் உள்ள மக்களுக்கு உதவிய  இவர்களை இறைவனின் தூதர்களாகவே நாம் கருதலாம்.

வழிபாட்டு தலங்கள் பொதுமக்கள் தஞ்சம் அடையும் முகாம்களாக மாற்றப்பட்டன. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மின்னல் வேகத்தில் ஒருங்கிணைப்பது  சாதாரண செயலல்ல. மனிதம் ஒன்றே இதை சாத்தியப்படுத்தியுள்ளது.  

பாதிக்கப்பட்டவர்களுக்கு சமையல் செய்ய, காய்கறிகளை வாங்க சாலையில் செல்ல முடியாததால், பல கிலோ மீட்டருக்கு வாகனங்களில் சுற்றி நெல்லை வந்து காய்கறிகளை வாங்கி சென்றார்கள். ஓர் இடத்தில் வைத்து சமைத்து, அதற்கு பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பொட்டலங்களாகப் பிரித்து அனுப்பினார்கள். 

தண்ணீரில் நீந்திச் சென்று, வீடு வீடாக கதவைத் தட்டி, சாப்பாடு கொடுத்தார்கள் தன்னார்வலர்கள். கைக்குழந்தை இருக்கும் வீடுகளை விசாரித்து பால், பிஸ்கட் பாக்கெட்டுகளையும் தந்தார்கள். இதற்காகவே, வாட்ஸ்ஆப் குழு ஒன்றையும் தொடங்கினார்கள்.  வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் உறுப்பினர்களாக இந்த குழுவில் இணைந்தார்கள்.

தன்னார்வலர்கள் ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், உறவுகள் கூட செய்ய இயலாத  செயலை செய்த இவர்கள் நம் அனைவரின் பாராட்டுக்கும், மரியாதைக்கும் உரியவர்கள். 

கரோனா தீநுண்மிப் பரவலின்போது மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. ஏறத்தாழ அதேபோன்ற நிலை தென்மாவட்ட பகுதி மக்களுக்கு ஏற்பட்டதாகக் கூறலாம். தன்னார்வலர்களின் பேருதவியால்தான் அவர்கள் வாழ்க்கை விரைவில் இயல்பு நிலையை அடைந்தது என்று கூறுவது மிகையல்ல. 

பெருமழையின் மூலம் வெளிப்பட்டுள்ள இம்மனிதநேயம் ஒரு தொடக்கப்புள்ளியே. இது எப்போதும் தொடர வேண்டும் என்பதே நம் அனைவரது நம்பிக்கையும், எதிர்பார்ப்புமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com