பிறர்க்கென வாழ்வோர் 

ஒரு பொருளையோ, சொத்தையோ சேமித்து வைத்து, நாம் நாளைக்கு நலமுற வாழ்வோம் என்ற எண்ணத்திற்கு, இடங்கொடாமல் எல்லாருக்கும் வாரி வழங்கும் தன்மையினரை இன்று  காண்பதென்பது அரிது.  
பிறர்க்கென வாழ்வோர் 


ஒரு பொருளையோ, சொத்தையோ சேமித்து வைத்து, நாம் நாளைக்கு நலமுற வாழ்வோம் என்ற எண்ணத்திற்கு, இடங்கொடாமல் எல்லாருக்கும் வாரி வழங்கும் தன்மையினரை இன்று  காண்பதென்பது அரிது.  இக்காலத்தில் சிலர் கொடை வழங்குதல் என்பது விளம்பர நோக்கிற்காகவும் மற்றும் வேறு பல நோக்கிற்காகவும் அமையக் காணலாம்.   மேலும், சிலர் இந்தப் பிறவியில் அறம் செய்தால் மறு பிறவியில் பயனடையலாம் என்ற எண்ணத்திலும் அறம் செய்வதுண்டு. 

அன்பு உலகை ஆளும் நீர்மையுடையது. மன மாசு நீங்கிய தூய உள்ளமும், தூய சொற்களும், தூய செயல்களுமே  மனித வாழ்வை மாண்புறச் செய்யும் என்பதை மனதில் கொண்டு வாழ்பவரே அருள் உடையவராகிறார். 

தூய அன்பும், நல்லறிவும்,  பரிவு கலந்த  இரக்கமுமே  அருள் என வழங்கப்படுகிறது.  அருள் உணர்வு காரணமாகத்தான் காட்டிலே குளிரால் நடுங்கிய கோலமயிலுக்குத் தன் போர்வையை நல்கினான் பேகன். நீண்ட நாள் வாழ வைக்கும் பெறற்கரிய நெல்லிக்கனியைப் பெற்று தான் உண்ணாமல் ஒளவையாருக்கு அருளால் ஈந்தான் அதியமான். 

பொருள் வாழ்க்கைக்குத் தேவையெனினும், பொருளினும் அன்பும், அறமும், அருளுமே அக்காலத்தில் போற்றப்பட்டு வந்துள்ளது.  எவ்வுயிர்க்கும் இரங்கியருள் சுரக்கும் மனமே எம்பெருமான் நடம் புரியும் இடம் என்கிறார் அருட்பிரகாச வள்ளலார்.

அன்பு என்பது பல பண்புகளாக விரியும்.  கருணை, பாசம், இரக்கம், அறம் போன்ற அனைத்து நல்லியல்புகளுக்கும் அன்பே அடிப்படை.  அன்பு, சொற்களில், வாழ்க்கையில் பிறர் நன்மைக்காக செய்யும் செயல்களில் தான் வடிவம் பெறுகிறது.  நாம் எண்ணும் எண்ணங்கள்  யாவும் பிறருக்கு நன்மையும் ஆறுதலும் தருவதாக இருக்க வேண்டும்.  

ஒரு செயலுக்குக் கிடைக்கும் வெகுமதி, மற்ற செயல்களுக்கு சக்தியாகிறது.  
வாழ்க்கையில் அறம் என்பது  தன்னிடமிருந்து பிறருக்குக் கொடுப்பது, பிறரிடமிருந்து எடுத்துக் கொள்வது அல்ல. 

மதுரை மாவட்டம், கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயிபூரணம் அம்மாள்.  இவரது மகளுக்கு  ஒன்றரை வயது இருக்கும் போது கணவனை இழந்த ஆயிபூரணம் அம்மாள் "உலகமே தன் மகள்' என்று தனி ஆளாக நின்று பேணி காத்து வளர்த்து, பட்டப் படிப்பு வரை படிக்க வைத்துள்ளார்.  
ஆனால், அவரது செல்ல மகள் கடந்த 2021}ஆம் ஆண்டு துரதிருஷ்டவசமாக தனது 32}ஆவது வயதில் காலமாகியுள்ளார். கணவர் மறைந்த பிறகு, தனக்கு உறுதுணையாக இருந்த மகளும் மறைந்து விட்டதால் இடிந்து போனார் ஆயிபூரணம் அம்மாள்.  

ஏழை, எளிய மக்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் பிரதிபலன் பாராது  உதவ வேண்டும் என்றும், வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியக் கூடாது என  தன் மகள் எப்போதும் தன்னிடம் கூறுவார் என்றும் ஆயிபூரணம் அம்மாள் தெரிவித்துள்ளார்.  தன் மகளின் மறைவிற்குப் பிறகு, தன் மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பல்வேறு உதவிகளை தேவைப்படும் பலருக்கும் செய்து வந்துள்ளார். 

இவ்வாறு பிறருக்கு உதவுவதால், தனக்கு பெருத்த நிம்மதி கிடைத்துள்ளது என்றும், தனக்கு செல்வம், சொத்து, பேர், புகழ் பெரிதல்ல, பிறர் தன் மீது காட்டும் அன்பே எனக்குக் கிடைத்த பெருஞ்செல்வம் எனவும் ஆயிபூரணம் அம்மாள் தெரிவித்துள்ளார். 

அவர் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளார். அழியும் செல்வத்தைக் கொடுத்து, அழியாத கல்விச் செல்வத்தை மாணவர்கள் பெற வேண்டும் என்று பெரும் விருப்பம் கொண்டு தனது நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாகக் கொடுத்துள்ளார். 

மேலும், கொடிகுளம் கிராமத்தில் தான் படித்த தொடக்கப் பள்ளி, இன்றும் நடுநிலைப் பள்ளியாகவே  இயங்கி வருவதையும், அப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென்றால் நிலம் வேண்டும் என்றும் அறிந்துள்ளார்.  இதையடுத்து, தன் செல்ல மகளின் நினைவாக, மதுரை, கொடிக்குளம் கிராமத்திலுள்ள தனது 1.52 ஏக்கர் நிலத்தை, தான் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அரசுப் பள்ளிக்குத் தானமாகக் கொடுத்துள்ளார்.  
சந்தை மதிப்பில் ஏழரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை கல்வித் துறைக்கு தானப் பத்திரப் பதிவு செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அந்நிலத்தை ஒப்படைத்துள்ளார். நல்ல காரியங்களுக்கு மட்டுமே நிலத்தை பயன்படுத்த வேண்டும் என்பது எனது மகளின் பேரவா. 
மாணவர்கள் அனைவரும் கல்வி பயின்று வீட்டிற்கும், நாட்டிற்கும் தொண்டாற்ற வேண்டும் என்பதற்காக அவரின் ஆசைப்படியே  மதிப்பு மிக்க தன் நிலத்தை, தான் படித்த பள்ளிக்குக் கொடுத்துள்ளேன்.  நாம் இல்லாமல் போய் விடலாம். ஆனால் என் மகளின் பெயர் அந்த இடத்தில் நிலைக்க வேண்டும் என்றும் ஆயிபூரணம் அம்மாள் தெரிவித்துள்ளார்.  

இவர் நிலத்தை தானமாகக் கொடுத்ததோடு, அந்தப் பள்ளி மாணவர்களுக்கு தேவைப்படும் உதவிகளையும் அவ்வப்போது செய்து வருகிறார். மேலும், இவர் தனது முப்பத்திரண்டாவது வயதில் தன் உறவினர் ஒருவருக்கு தன் சிறுநீரகத்தையும் தானமாகக் கொடுத்துள்ளாராம். தன் மகள் ஜனனியின் நினைவாக அவர் பெயரை பள்ளி வளாகத்துக்கு வைக்கக் கோரியுள்ளார் ஆயி பூரணம் அம்மாள்.  

பலரும் ஆயிபூர்ணம்  அம்மாளை அவர் பணி புரியும் வங்கிக்கே நேரிடையாகச் சென்று அவரது கொடை உள்ளத்தை பாராட்டியுள்ளனர். 

அறிவின் தாயகமாகவும், அன்பின் இருப்பிடமாகவும் மட்டும் பெண்கள் விளங்கவில்லை, அருள் நிறைந்த உள்ளமாகவும் பெண்கள் விளங்குகிறார்கள் என்பதை ஆயிபூரணம் அம்மாளின் தூய தயை உள்ளம் நமக்கு உணர்த்துகிறது.  நம் உயர்வும், தாழ்வும் நம் கைகளில் தான் உள்ளது.  பிறர் நலன் பேணி வாழ்தலே சீரிய வாழ்வு என்பதை உணர்ந்து தெளிவோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com