மாலத்தீவின் தவறான அணுகுமுறை! 

மாலத்தீவு அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய பதிவுகளால் மாலத்தீவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவில் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது.
மாலத்தீவின் தவறான அணுகுமுறை! 

மாலத்தீவு அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய பதிவுகளால் மாலத்தீவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவில் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. இந்தியப் பெருங்கடலின் நடுவில் அமைந்துளள சுமார் 1200 பவளப்பாறை தீவுகள் மற்றும் வளைய வடிவத் தீவுகளைக் கொண்டது மாலத்தீவு. இந்த தீபகற்பத்தின் மக்கள்தொகை சுமார் 5 லட்சத்து 20 ஆயிரம். 

இது இந்தியாவின் மக்கள்தொகையோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. அது சிறிய தீவு நாடாக இருப்பதால் உணவு, உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்நுட்ப முன்னேற்றம் அனைத்திற்கும் அண்டை நாடான இந்தியாவையே பெரும்பாலும் நம்பி உள்ளது. 

மாலத்தீவின் தலைநகரான மாலேவில் வசிப்பவர்கள்  இரு நாடுகளுக்கிடையிலான மோதல் என்பது இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளைப் பாதிக்கக் கூடும் என்று கவலைப்படுகின்றனர். இந்தியாவில் இருந்து எழும் மாலத்தீவு புறக்கணிப்பு கோரிக்கைகள் தங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றும், தங்கள் மாலத்தீவு அரசு இதுகுறித்து சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகிறார்கள். 

பாலிவுட் திரைப்படங்கள் பார்த்து வளர்ந்த மாலத்தீவு மக்களுக்கு இந்தியாவுடன் வலுவான கலாசாரப் பிணைப்பு இருக்கிறது என்பதை நாம் மறுப்பதற்கில்லை. 

லட்சத்தீவுக்கு சுற்றுலாப் பயணங்களை ஊக்குவிக்கும் வகையிலான படங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து மூன்று மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். 

இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பைத் தொடர்ந்து இந்தியர்கள் பலரும், மாலத்தீவு செல்வதற்கான விடுமுறைத் திட்டங்களை ரத்து செய்து விட்டனர். மாலத்தீவு அதிபர் முகம்மது மூயிஸ் பெய்ஜிங்கில் அரசுப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் சமயத்தில்தன் இந்த சர்ச்சை வெடித்தது. சீன ஆதரவுக் கொள்கையை விரும்பும் மூயிஸ் சீனாவில் இருந்து மாலத்தீவுக்கு மேலும்

சுற்றுலாப்பயணிகளை அனுப்பும்படி சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 
கொவைட் 19 நோய்த்தொற்றுக்கு முன் மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் சீன நாட்டவரே அதிகம் இருந்தனர். ஆனால், பெருந்தொற்றுக்குப் பிறகு, சீனாவில் விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் பெரும்பாலோர் மாலத்தீவுக்குப் பயணம் செய்வதை விரும்பவில்லை. 

"கொள்ளை நோய்த்தொற்றுக்கு முன்பு சீனா எங்கள் முதன்மைச் சந்தையாக இருந்தது. அந்த நிலையை நாங்கள் மீண்டும் பெற, சீனா முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை என்கிறார் மூயிஸ். 
ஆனால், சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த மூன்று அமைச்சர்களின் மீது எந்தவிதமான வலுவான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக அமைப்புகளில் ஒன்றான அனைத்து இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு, மாலத்தீவு அதிகாரிகள் மன்னிப்பு கேட்கும் வரை தங்கள் உறுப்பினர்கள் மாலத்தீவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று அறிவிப்பு விடுத்துள்ளது. 

வணிகர்களின் புறக்கணிப்பு அறிவிப்பு மாலத்தீவில் வசிக்கும் இந்தியர்களை நிச்சயம் பாதிக்கும். ஏனென்றால், அங்கு கட்டுமானம், சுற்றுலா மற்றும் சில்லறைத் துறைகளில் சுமார் 33 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த பிறகு மூயிஸ், 77 இந்தியத் துருப்புக்களை நாட்டை விட்டு வெளியேறக் கோரியதில் இருந்து இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே பதற்றம் உருவானது. 

இந்தியப் பெருங்கடல் தீபகற்பம் நீண்டகாலமாக இந்தியா செல்வாக்கு செலுத்தும் கடல் பரப்பாக உள்ளது. மூயிஸ் அதை மாற்ற விரும்புவதாகத் தெரிகிறது. அவரது தேர்தல் பிரசாரம் "இந்தியாவே வெளியேறு' கோஷத்தை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. இந்தியத் துருப்புகளை வெளியேற்றும் வாக்குறுதியுடன் இருந்தது. 

மூயிஸின் பேச்சுக்கள் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பு உணர்வை அதிகப்படுத்தி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் இளம் அமைச்சர்கள் இந்தியாவுக்கு எதிராக இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள். மாலத்தீவு இந்தியாவை விலக்கி வைத்து விட முடியாது. ஒரு நாடு மற்றொரு நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பினால் பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தலாம். அல்லது ஒரு பிரச்னையின் தீவிரத்தை எடுத்துரைக்கலாம். 

2016-இல் அப்போது ஆட்சியில் இருந்த மாலத்தீவு முற்போக்கு கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் அகமது இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் அப்போதைய மாலத்தீவுக்கான தூதர் அகிலேஷ் மிஸ்ராவுக்கு மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. 2018-லும் அகிலேஷ் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 

மாலத்தீவு அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததால், மாலத்தீவின் மீது இந்தியா படையெடுக்க வேண்டும் என்கிற சர்ச்சைக்குரிய கருத்துகள் கூட எழுந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான், மேலும் மேலும் இருநாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.

சுற்றுலா ஒத்துழைப்பு, பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் நீலப்பொருளாதாரம் உள்ளிட்ட 20 முக்கிய ஒப்பந்தங்களில் சீன அதிபர் மாலத்தீவு அரசின் துணையுடன் கையொப்பமிட்டார். இது அவர்களின் இருதரப்பு உறவுகளை மிக ஆழமாக வெளிப்படுத்துகிறது. 

ஆகவேதான், சீனாவை முதன்மையான இடத்திற்கு கொண்டு வருவதற்காக, இருதரப்பும் ராஜதந்திரப் பணிகளை ஆற்றி, அதன் மூலம் இந்தியாவைப் புறக்கணிக்க நினைக்கிறது. 
1988-இல் மாலத்தீவில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடந்தது. அது இந்தியப்

படைகளின் தலையீட்டிற்கு வழிவகுத்த போது, இருதரப்புக்குமான உறவு சவாலை எதிர்கொண்டது. இந்தியாவின் ராணுவத் தலையீடு அப்போது ஒரு சதிப்புரட்சியை முறியடித்து, அது மாலத்தீவின் அரசியல் நிலைத்த தன்மையைப் பாதுகாப்பதற்கான நோக்கத்திற்கானது. ஆனால், இவை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, தற்போது ராஜதந்திர உறவுகளை சீர்குலைத்து வருகிறது.

அதன்பின்னர் முகமது நஷீத் அங்கு அதிபரானதற்குப் பின்னர் இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவு மேம்பட்டது. பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் இருநாட்டு மக்கள் உறவுகளில் கவனம் செலுத்தியது. இந்தியா, மாலத்தீவுக்கான வளர்ச்சிக்கு உதவிகளை வழங்கியது. 

குறிப்பாக, உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாடுகளில் 2018-க்குப் பிறகு, மாலத்தீவின் அதிபராக இப்ராஹிம் முகமது சோலி தேர்ந்தெடுக்கப்பட்டது, இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. ஜனநாயகத்தைக் காக்கும் தங்கள் நோக்கத்தை இருநாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தின. மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தியா நிதியுதவி  அளித்தது. 

இந்தியாவின் மேற்கு கடற்கரைக்கு அருகில் மாலத்தீவு உள்ளது. மினிகாயில் இருந்து 70 கடல் மைல் மற்றும் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் இருந்து 300 கடல் மைல் தொலைவு. 

ஏடன் வளைகுடாவிற்கும், மலாகா ஜலசந்திக்கும் இடையே முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் அமைந்துள்ள மாலத்தீவு இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கும், அதன் எரிசக்தி இறக்குமதியில் 80 சதவீதத்துக்கு மேலும் பயணிக்கும் டோல்கேட்டாக செயல்படுகிறது. 

மாலத்தீவு இந்தியப் பெருங்கடலில் ஒரு விரிவான கூட்டமைப்பு போல் அமைந்துள்ளது. ஆகவே, அதன் நிலைத்த தன்மைக்கும், பாதுகாப்புக்கும் இந்தியா ஆதரவாக உள்ளது. 

இந்தியப் பெருங்கடலில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்த இந்தியாவிற்கு மாலத்தீவு ஒரு வாய்ப்பை வழங்கி வந்த நிலையில், தற்போதைய சூழலில் அவை மாறுபடுவதற்கான வாய்ப்பிருக்கிறது. இந்தியா மாலத்தீவின் மிகப்பெரிய முதலீட்டாளர் மற்றும் சுற்றுலா சந்தைகளில் ஒன்றாகும். இந்தியா மாலத்தீவுக்கு அன்றாட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது. குறிப்பாக, அரிசி, மசாலா, பழங்கள், காய்கறிகள், கோழிகள், மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள். 

ஒவ்வோர் ஆண்டும் மாலத்தீவு மாணவர்கள் இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்க வருகிறார்கள். 2022-23 இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே நடந்த மொத்த வர்த்தகம் ரூ.50 கோடியில், மாலத்தீவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி ரூ.49 கோடியாகும். ஆகவே, மாலத்தீவின் இரண்டாவது வர்த்தகப் பங்காளியாக இந்தியா இருக்கிறது. 2004-இல் தீவுகளை சுனாமி  தாக்கிய போது, முதலில் உதவிக்கு விரைந்தது இந்தியாதான். 

2016-ஆம் ஆண்டு பெரிய உப்புநீக்கும் ஆலை உடைந்ததால் குடிநீருக்கு நெருக்கடி ஏற்பட்ட போது, இந்தியா ஒரே இரவில் தீவுகளுக்கு குடிநீரை விமானம் மூலம் அனுப்பியது. கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் மாலத்தீவுக்குத் தேவையான மருந்துகள், முகமூடிகள், கையுறைகள், தடுப்பூசிகளை இந்தியா அனுப்பியது. 

ஆகவே, மாலத்தீவு இந்தியா குறித்து தவறான கருத்துகளைப் பரப்புவதும், சீனாவை ஆதரிப்பதும் மிக மிக தவறான செயல்பாடுகளாகும். ஆழமான கலாசார பரிமாற்றங்களையும், புரிதலையும், மக்களின் உறவுகளையும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மாலத்தீவு இருக்கிறது. இந்நிலையில் அது இந்தியாவைப் புறக்கணித்தால் பெரும் விளைவுகளையும், சரிவுகளையும் சந்திக்க நேரிடும். இதனை மாலத்தீவு புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கட்டுரையாளர்:
முன்னாள் அமைச்சர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com