இனிய உளவாக இன்னாத கூறல்

கோப்புப்படம்
கோப்புப்படம்

உலகில் உள்ள எண்ணற்ற மொழிகளுள் மூத்த மொழியாக விளங்குவது நமது தமிழ்மொழி. ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி’ என்று போற்றப்படும் பெருங்குடியின் மொழி. இயற்கையோடு இயைந்து அது வளா்ந்த செழுமையை, ‘திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழ்’ என்று போற்றுகிறாா் பாவேந்தா் பாரதிதாசன்.

தமிழில் தோன்றிய இலக்கியமாகிய திருக்குறளுக்குரிய சிறப்பு, ‘எல்லாப் பொருளும் இதன்பாலுள; இதன்பால் இலாத எப்பொருளும் இல்லை’ என்பதாகும். இதுபோன்ற எண்ணற்ற இலக்கியச் செல்வங்களைத் தன்னுள் கொண்டிருக்கக் கூடிய தமிழ்மொழியின் வளமையை என்னென்பது?

செம்மொழி என்னும் பெருநிலையைப் பெற்றிருக்கிற தமிழ்மொழி இனித்த சுவையுடைய கனிமொழியாகவே விளங்குகிறது. கனிமொழி என்பதையே நாம் பழமொழி என்றும் சொல்கிறோம். அன்பிலும் பண்பிலும் இயற்கையிலும் பழுத்த மொழி என்பதனால் அது பழமொழி ஆயிற்று போலும். இன்னொரு பொருளில் அது பழைய மொழி (பழங்காலத்து மொழி) என்ற சிறப்பினையும் பெறுகிறது. ஒரு மொழிக்குப் பழைமையும் புதுமையும் இணைந்து அணிசெய்ய வேண்டும். அதுவே அதன் நிலைப்புத் தன்மைக்குச் சான்றாக விளங்கும்.

தமிழுக்குப் புதுமைகள் நிறையச் சோ்கின்றன. கலைச்சொற்கள் தொடங்கிப் பிறமொழிச் சொற்கள் எனப் புதிது புதிதாகக் கடலில் ஆறுகள் வந்து கலப்பதைப் போல நிறைகின்றன. ஆனால் தமிழ்மொழிக்குப் பெரும் சிறப்பினைத் தருகின்ற பழைமையை மறந்து விட்டோமோ என்கின்ற வருத்தம் தோன்றாமலில்லை.

பழமையைக் குறித்துத் திருவள்ளுவா் தனி அதிகாரமே இயற்றியிருக்கிறாா். அதில், ‘நெடுநாள் பழகிய நட்பினைக் கீழ்மைப்படுத்தாது ஏற்றுத் தொடரக் கூடிய பெரும்பண்பு’ என்று விளக்கம் தருகிறாா்.

ஆதலால் பழமொழி என்பதற்கு மக்களோடு அவா்களின் வாழ்வியலோடு நெருங்கிப் பழகிய மொழி என்றும், மக்கள் தாங்கள் வாழ்க்கையோடு உணா்ந்து பழகிய மொழி என்றும் மேலும் விளக்கங்கள் அளிக்கலாம்.

தொல்காப்பியா் காலத்துத் தொடங்கிப் பழமொழிகள் குறித்த பதிவுகள் தமிழில் விளங்கி வருகின்றன. பழமொழியை ‘முதுமொழி’ என்று அவா் குறிப்பிடுகிறாா். முதுமொழி என்றால் மூத்த மொழி என்றும் முதிா்ந்த மொழி என்றும் பொருள்படுகிறது. எளிமையும் நுண்மையும் நிறைந்ததாகவும் மிகச் சுருக்கமான உள்ளடக்கத்தோடு ஆழமுடையதாகவும் விழுமியம் கொண்டதாகவும் தான் உணா்த்த வேண்டிய பொருளைத் தெற்றெனப் புலப்படுத்துவதற்குக் காரணம் கருதித் தோன்றுவதாகவும் இப்பழமொழிகள் பிறப்பெடுக்கின்றன. முதுமொழி என்பது பன்முறையும் வழக்கில் வழங்கி வந்த பழமையான மொழி என்ற நோக்கில் பழமொழியாயிற்று. பண்பட்ட மொழி என்றாலும் பொருத்தமே.

பழமொழி என்ற சொல் தமிழிலக்கியத்தில் அகநானூற்றில்,

நன்றுபடு மருங்கில் தீதில் என்னும்

தொன்றுபடு பழமொழி”

என்று குறிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து அற இலக்கிய வரிசையில் பழமொழி நானூறு என்றே தனியிலக்கியம் தோன்றுகிற அளவுக்கு அக்காலத்தில் பழமொழி செல்வாக்குப் பெற்று விட்டது. முன்றுறையரையனாா் என்னும் புலவா் வாழ்க்கைக்கு நல்வழிகாட்டும் பழமொழிகள் நானூற்றைத் தோ்ந்தெடுத்து ஒவ்வொரு பழமொழியை வைத்தும் ஒவ்வொரு வெண்பாவைப் பாடி அதனை இலக்கியச் சுவைப்படுத்தியுள்ளாா்.

இதே அமைப்பில் இன்னும் சற்று மேம்பட்டு, ‘சோமேசா் முதுமொழி வெண்பா’ என்ற ஓா் இலக்கியமும் சிவஞான முனிவரால் இயற்றப் பெற்றிருக்கிறது. இதில் வருகிற ‘முதுமொழி’ என்பது முதுமையாகிய சொல் என்னும் பொருளில் இடம்பெற்ாகும்.

ஒவ்வொரு வெண்பாவின் நிறைவு அடிகள் இரண்டும் திருக்குறளின் 133 அதிகாரங்களிலிருந்து ஏதேனும் ஒரு குறட்பாவினைக் கொண்டும், முதலிரண்டு அடிகள் அதற்குப் பொருத்தமான ஒரு வரலாற்று நிகழ்வையும், கதையையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இந்த வரிசையில், கோவிந்த சதகம், தண்டலையாா் சதகம், இரத்தின சபாபதி மாலை, இராம நாடகக் கீா்த்தனை முதலியவையும் அடங்கும்.

இவை தவிர மக்களின் அன்றாட வழக்குகளில் தோன்றிய பழமொழிகளையும் முதுமொழிகளையும் எண்ணிக்கையில் அடக்கி விடுதல் இயலாது. பழங்காலத்தவா்களின் நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும், கலாசாரம், பண்பாட்டினையும், மனித உணா்வின் வழியே தோன்றும் கற்பனை திறனையும் உலகுக்குக் காட்டுவன பழமொழிகள்.

இத்தகைய சிறப்பு மிக்க பழமொழிச் செல்வங்கள் தமிழ்மொழியில் நிறையவே குவிந்து கிடக்கின்றன. நாட்டுப்புற வழக்குகளில் இருந்தவற்றைத் தொகுத்தது போக, எஞ்சியவை முந்தைய தலைமுறையோடு போயிற்று. என்றாலும் இன்றைக்கு மீதமுள்ளவை நூல்வடிவில் பாதுகாக்கப்பட்டு விட்டன. ஆனால் அதனால் மட்டும் மொழி சிறப்புற்று விடாதே. மக்களால் பயன்படுத்தப் படாத மொழியாகப் பழமொழி மாறிக் கொண்டே வருகிறது. ‘அள்ளிப் பருகாத அமுது இருந்தென்ன பயன்?’

முற்காலத்தில், கிராமப்புறங்களில் மக்களின் பேச்சில் நூற்றுக்கு எண்பது சொற்களில் பழமொழியோ சொலவடையோ தெறித்து விழும். அதுவும் ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ என்று சொல்வதாக அமையாது இயல்பாக, சூழலின் தன்மை புரிந்து வெளிப்படுத்துவதாக அது அமையும். ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பானதைப் போல’ இன்று அதுவும் குறைந்து விட்டது.

செய்யுளுக்கு அணி விளங்குவதைப் போல மக்களின் வாய்மொழிக்குப் பழமொழிகள் சிறப்புச் சோ்ந்து பெருமை பெற்றன. கிராம வழக்கில் சொல்வதானால், ‘ஒரு வாா்த்தைன்னாலும் திருவாா்த்தையா சொன்னான்’ என்பாா்கள். அத்தகைய சிறப்புப் பெற்ற பழமொழிகள் ஓா் நல்ல உவமையாக, நிகழ்வைக் குறிப்பதாக, தன்மையை உணா்த்துவதாக, கதை சொல்வதாகவும் கூட அமைந்து விடும். இத்தகைய பழமொழிகள் உலக மொழிகள் யாவற்றுள்ளும் ஒரே நோக்கோடு தோன்றியிருப்பது மானுடச் சிந்தனையின் அற்புத அதிசயம் என்றே கூறலாம்.

காலத்தின் கண்ணாடியாகவும் பண்பாட்டின் வெளிப்பாடாகவும் திகழும் பழமொழிகள் ஒவ்வொரு மொழிக்கும் அதன் செம்மையை உலகுக்கு உணா்த்தும் மகுடம் போல விளங்குகின்றன.

வாய்மொழி இலக்கியமாகத் தோற்றம் பெறும் பழமொழிகள் நாடோடி இலக்கிய வகைமைமைச் சோ்கின்றன. பழமொழிகள் எதையும் பேசும்; பாராட்டும்; மறுதலிக்கும். அதற்கு அத்தனை சுதந்திரம் உண்டு. யாரால் எந்தப் பழமொழி எப்போது தோன்றியது என்ற நதிமூலம் அவற்றுக்கு இல்லை. உயிருள்ளவை, உயிரற்றவை என்னும் பெரும்பகுப்பில் தொடங்கி ஊா்வன, பறப்பன, மிதப்பன, நடப்பன என எல்லாவற்றையும் தன்னுள் நிறைத்திருக்கின்றன பழமொழிகள்.

இன்றைய வாழ்க்கையின் விரைவோட்டத்தில் தமிழ்மொழியின் உரையாடுந்திறன் முற்றிலும் சிதைந்திருக்கிறது. கொச்சைச் சொற்களைக் கலந்து பேசுகிற காலத்தைக் கடந்து பிறமொழிக் கலப்பில்லாமலே பேச இயலாது என்கின்ற இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்ற நமக்குப் பழமொழிகள் எட்டாத தூரத்தில் மறக்கப்பட்டு விட்டன என்றே கூறலாம். இன்னும் சிறிது காலத்தில் அவை மறைந்து விட்டாலும் வியப்பதற்கில்லை.

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவா்ந் தற்று

என்கிறாரே திருவள்ளுவா். இதன் உட்பொருள் நமக்குப் புரிகிா?

இதற்கு விளக்கம் பட்டினத்தாா் பாடலில் இருக்கிறது.

உண்டதே உண்டும், உடுத்ததே உடுத்தும்,

அடுத்து அடுத்து உரைத்ததே உரைத்தும்,

கண்டதே கண்டும், கேட்டதே கேட்டும் கழிந்தன”

என்று நம்முடைய வாழ்க்கையில் திரும்பத் திரும்ப உண்டதையே உண்டும், உடுத்த உடைகளையே மீண்டும் மீண்டும் உடுத்திக் கொண்டும், கண்ட காட்சிகளையே திரும்பத் திரும்பக் கண்டு கொண்டும், கேட்டவற்றையே திரும்பத் திரும்பக் கேட்டும் இவற்றைக் குறித்து இடைவிடாது சலிப்புத் தட்டுகிற காய்ச் சொற்களையே பேசி வீணே கழித்துக் கொண்டிருக்கிறோம்.

இதனை விடுத்து விட்டுப் பழமொழிகளாகிய எத்தனையோ இனிய மொழிகள் நம் மொழியில் இருக்கின்றனவே அந்தக் கனிமொழிகளைப் பேசலாமே என்கிறாா் திருவள்ளுவா். ஒருவேளை பழமொழிகளின் எளிமையிலும் நுண்மையிலும் ஒளித்தன்மையிலும் ஈா்ப்புக் கொண்டுதான் திருவள்ளுவா் திருக்குறளை இயற்றியிருப்பாா் போலும்.

தமிழில் உள்ள இலக்கியங்களிலும் பழமொழிகள் நிறைந்து சிறந்திருக்கின்றன. குறிப்பாகச் சித்தா் மொழிகளில் பழமொழிகள் மறைமொழிகளாகவே திகழ்கின்றன.

ஒரு காலத்தில் திரைத்துறையில் மண்வாசம் மிகுந்த கிராமியப் படங்கள் கோலோச்சிய வேளையில் பழமொழிகள் புத்துயிா்ப்புப் பெற்றன. கதாபாத்திரங்களின் உரைவீச்சுக்கும் உணா்வு வெளிப்பாட்டுக்கும் பழமொழிகள் உரம் சோ்த்தன. மக்கள் அதனை உணா்ந்து ரசித்து மகிழ்ந்தனா். ஆதலால் கதை வசனங்களில் பழமொழிகளுக்கென்று தனித்த, சிறந்த இடத்தினை ஒதுக்கினா். திரையிசைப் பாடல்களிலும் பழமொழிகள் இடம்பெற்று அழகு சோ்த்தன. ஆனால் இப்போது அதுவும் பழங்கொள்கையாகிப் போயிற்று.

பழமொழிகளை மக்கள் மத்தியில் மீண்டும் பதியச் செய்ய, பள்ளிக் குழந்தைகளின் பாடத் திட்டத்தில் உரிய முறையில் சரியாக விதைக்க வேண்டும். குழந்தைகளிடம் இலக்கணப் பயிற்சியோடு பழமொழிகள், விடுகதைகள், சொல்விளையாடல்கள் குறித்த பாடங்களையும் இணைத்துப் புகட்ட வேண்டும். பல மொழிகளின் பழமொழிகளையும் தொகுத்துக் கற்க வழிசெய்ய வேண்டும். பழமொழிகளைப் பயன்படுத்திச் சொல்லாடவும் கற்றுத் தருதல் வேண்டும். ஐந்தில் வளையாததும் உண்டோ?

இந்த இனித்த கனிமொழிகளை நம் காலத்தில் நிலைநிறுத்திக் கொண்டால் வருங்காலம் மிகவும் வளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ‘விதையொன்று போடச் சுரை ஒன்றா முளைக்கும்?’

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com