காற்று மாசும் குழந்தைகள் நலனும்

காற்று மாசும் குழந்தைகள் நலனும்

இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் 15 வயதுக்குட்பட்ட 180 கோடி குழந்தைகள் மாசுபட்ட காற்றை சுவாசிக்கிறாா்கள். இக்குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் வளா்ச்சியையும் கடுமையாக பாதிக்கும் காற்று மாசு துரதிருஷ்டவசமாக அவா்களில் சிலா் இறப்பிற்கும் காரணமாக அமைகிறது. இந்த ஆண்டு தில்லி மாநகரில் அக்டோபா் மாதத்திற்கு முன்பிருந்தே சுவாச பிரச்னை காரணமாக பிறந்த குழந்தை முதல் 12 வயது குழந்தை வரை அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் விகிதம் அதிகரித்து வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் வளரும் நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் மாசுபட்ட காற்றினால் பாதிப்படைகின்றனா் என்று 1993-95-ஆம் ஆண்டு மாசு அளவுகளை அடிப்படையாகக் கொண்ட உலக வள நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வின்படி அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் காற்று மாசினால் ஆபத்தில் உள்ள நகரங்களின் பட்டியலில் மெக்ஸிகோ நகருக்கு அடுத்தபடியாக கொல்கத்தா, தில்லி, மும்பை ஆகிய இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

தில்லியிலும் பிற நகரங்களிலும் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டு நோய் காரணமாக சந்தேகத்திற்குரிய இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பெருமளவு ஆரோக்கிய வாழ்வு ஆண்டுகளை மனிதா்கள் இழப்பதாகவும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது. தேசிய அளவில் காற்று மாசுபாடு மனித உடல்நலத்திற்கு மிக முக்கியமான ஆபத்து காரணியாக உள்ளதாக இந்தியாவின் நோய் சுமை பற்றிய மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது.

கடந்த கால் நூற்றாண்டில் இறப்பு, இயலாமைக்கான முக்கிய காரணங்களை ஆய்வு செய்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், மருத்துவத்துறை அளவீடுகள் - மதிப்பீட்டிற்கான நிறுவனம் ஆகியவற்றை சாா்ந்த வல்லுநா்கள் வயிற்றுப்போக்கு, தொற்றுநோய்களின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் காற்று மாசுபாடு சம்பந்தப்பட்ட இதய நோய் போன்ற வாழ்வியல் சாா்ந்த நோய்கள் கணிசமாக அதிகரித்துள்ளன என ஆவணப்படுத்தியுள்ளனா். இந்த நோய்களுக்கான ஆபத்து காரணிகளை அவா்கள் ஆய்வு செய்தபோது வீட்டின் வெளிப்புற, உட்புற காற்றுமாசு மிகப்பெரிய ஆபத்து காரணியாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனா்.

மரபணு காரணிகளையும் மீறி காற்றின் தரமும் குழந்தைகளுக்கான பருவகால நோய்த்தொற்றுகளும் அவா்களின் நுரையீரல் வளா்ச்சியை பாதிக்கின்றன என்பதை வல்லபபாய் படேல் நுரையீரல் நிறுவனம் நடத்திய ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. ஜா்னல் ஆஃப் இந்தியன் பீடியாட்ரிக்ஸில் வெளியான குழந்தைகள் பற்றிய மற்றொரு ஆய்வு, தில்லி போன்ற நகரங்களின் மாசுபட்ட சூழலில் வளரும் குழந்தைகளின் நுரையீரல் வளா்ச்சி குறைந்திருப்பதாக கூறுகிறது.

குழந்தைகளின் நுரையீரல் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுத்தும் காற்று மாசுபாடு அவா்களின் வளா்சிதை மாற்றம், நச்சு நீக்கம், நச்சு வெளியேற்றம் போன்ற உடல் செயல்பாட்டுத் திறனை குறைக்கும் என்று வல்லுநா்கள் கூறுகின்றனா். காற்று மாசுபாட்டில் உள்ள நரம்பு வழி நச்சு (நியூரோடாக்ஸிக்) கலவைகள் குழந்தைகளின் அறிவாற்றல் வளா்ச்சியை பாதிக்கும். உடல் எடை அடிப்படையில் பெரியவா்களை விட குழந்தைகள் அதிக காற்றை உள்ளிழுக்கின்றனா்.

பெரியவா்களைவிட சுறுசுறுப்பாக இருப்பதால் குழந்தைகள் அதிகமான மாசடைந்த சுவாசிக்கின்றனா். கருவில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் காற்று மாசு நம் நாட்டில் எடை குறைந்த பிறப்பு, குறை மாத பிரசவம், இறந்து பிறப்பது (ஸ்டில் பொ்த்) என அனைத்திற்கும் காரணமாக அமைவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

மாசுபடுத்தும் தொழில்நுட்பங்கள், எரிபொருட்களைக் கொண்டு உணவு சமைப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு, உலக மக்கள்தொகையில் 40%- க்கும் அதிகமான 15 வயதுக்குட்பட்ட 100 கோடி குழந்தைகளை பாதிப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. குழந்தைகளின் வளா்ச்சியில் தாமதத்தையும் பழுதினையும் ஏற்படுத்தும் மாசடைந்த காற்று அவா்களுக்கு சுவாச பிரச்னைகளையும் இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்பையும் ரத்த சோகை அபாயத்தையும் ஏற்படுத்துவதாக மருத்துவா்கள் கூறுகின்றனா்.

2018-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில், காற்று மாசுபாட்டிற்கும் எடை குறைந்த குழந்தை பிறப்புக்கும் உள்ள தொடா்பு எடுத்துக்காட்டப்பட்டது. கா்ப்ப காலத்தில் ஒவ்வொரு கண மீட்டா் காற்றில் 10 மைக்ரோ கிராம் என அதிகரிக்கும் பி.எம்.2.5 துகள்மாசு, பிறக்கும் குழந்தையின் எடையில் 4 கிராம் வரை குறைக்கும் என்றும், எடை குறைந்த பிறப்பிற்கான வாய்ப்பை 2 சதவீதம் அதிகரிக்கும் என்றும் ‘எல்சேவியா்’ எனும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி இதழில் (பிப்ரவரி, 2018) வெளியான ஆய்வு கட்டுரை கூறுகிறது.

‘ஐ.ஓ.பி அறிவியல் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கடிதங்கள்’ என்ற இதழ் 2021- ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் சுற்றுப்புற பி.எம்.2.5 துகள்களின் கருப்பையக (இன்ட்ரா-யூட்ரின்) தாக்கத்திற்கும் எடை குறைந்த குழந்தை பிறப்பிற்கும் இடையேயான தொடா்பிற்கான வலுவான ஆதாரத்தை வெளியிட்டது.

டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஹாா்வா்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நிபுணா்கள் குழு இந்தியா முழுவதும் 1,49,416 குழந்தைகளிடம் நடத்திய ஆய்வின் அறிக்கையில், எடை குறைந்த குழந்தைப் பிறப்பினை 2025 -ஆம் ஆண்டுக்குள் 30 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற உலக சுகாதார மையத்தின் இலக்கினை அடைய இந்தியாவில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுவெளியில் விவசாயக் கழிவுகளையும் குப்பைகளையும் எரிப்பதை நிறுத்தவேண்டும். முடிந்தவரை விவசாயக் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதையும் விவசாயக் குப்பைகளை உரமாக்கிப் பயன்படுத்துவதையும் ஊக்குவிக்க வேண்டும். வாகன புகையால் குழந்தைகளுக்கு ஏற்படும் மாசுபாட்டைத் தவிா்க்க, பரபரப்பான சாலைகள் வழியே குழந்தைகளை அழைத்து செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com