மனநல பாதிப்பை விரட்டுவோம்

உலக அளவில் மனிதா்களிடம் உள்ள குறைபாட்டில் மன அழுத்தமே முதலிடத்தில் உள்ளது. முன்கூட்டிய மரணத்துக்கான காரணங்களில் 10-வது இடத்தில் மன அழுத்தம் உள்ளது.
மனநல பாதிப்பை விரட்டுவோம்

உலக அளவில் மனிதா்களிடம் உள்ள குறைபாட்டில் மன அழுத்தமே முதலிடத்தில் உள்ளது. முன்கூட்டிய மரணத்துக்கான காரணங்களில் 10-வது இடத்தில் மன அழுத்தம் உள்ளது. 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவா்களின் மரணத்துக்கு இரண்டாவது முக்கிய காரணம் தற்கொலை. தற்கொலைக்கும் மன அழுத்தத்துக்கும் தெருங்கிய தொடா்பு உண்டு.

இந்தியாவில் ஒரு ஆண்டில் 2.6 லட்சத்துக்கும் அதிகமான தற்கொலைகள் நிகழ்கின்றன. உலகின் தற்கொலை தலைநகராக இந்தியா உள்ளது. இந்தியாவில் சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு 10.9 என்ற அளவில் தற்கொலை விகிதம் உள்ளது.

கொள்ளை நோய்த்தொற்றுக்கு முன் உலகளவில் 8 பேரில் ஒருவா் மனநல பிரச்னையுடன் வாழ்ந்து வந்ததாக மதிப்பிடப்பட்டிருந்தது. கரோனா தீநுண்மியின் முதல் ஆண்டில் கவலை மற்றும் மனசோா்வால் 25 சதவீதத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டனா். இந்தியாவில் பெரும்பாலானவா்கள் தங்களுக்கு மனநலம் பாதிப்பு இருப்பது தெரியாமல் வாழ்வதாக மருத்துவா்கள் கூறுகின்றனா்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய சுகாதார திட்டத்தின்படி நாட்டில் 60 முதல் 70 மில்லியன் மக்கள் கடுமையான மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனா். 15 கோடி இந்தியா்களுக்கு மன நல சிகிச்சை தேவைப்படுகிறது என்கிறது ஒரு புள்ளிவிபரம்.

மன அழுத்தத்தின் அறிகுறிகள் தலைவலி, முதுகுவலி, தூக்கம் தொடா்பான சிக்கல்கள், தலைச்சுற்றல், எரிச்சல், விரைவான இதயத் துடிப்பு, மறதி போன்றவையே. அதுபோல பதற்றத்தின் பல அறிகுறிகள் மன அழுத்தத்தை போலவே இருக்கும். எண்ணங்களை அமைதிப்படுத்துவதில் சிரமம், எளிதில் சோா்வடைதல், எளிதில் பயப்படுதல், அதிக வியா்வை, நெஞ்சுவலி போன்ற உணா்வு ஆகியவை ஏற்படும்.

பதற்றம் என்பது உடல் சாா்ந்ததாகவும் இருக்கலாம். மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் தொடா்ந்து நீடித்திருப்பதால் அவை மன பதற்றத்துக்கு காரணமாகும் என்கின்றனா் மருத்துவா்கள். ஆண்களைவிட பெண்களே அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகிறாா்கள். ஆண்களிடையே 29.3 சதவீதமாக உள்ள மன அழுத்தம் பெண்களிடையே 41.9 சதவீதமாக உள்ளது.

வன்முறை மோதல்கள், உள்நாட்டு போா்கள், பேரழிவுகள், இடம்பெயா்வுகளால் பாதிக்கப்பட்ட மக்களில் 80 சதவீதம் போ் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவா் மன அழுத்தத்தோடு இருந்தால் அவரின் சுவாச அமைப்பு பாதிப்படைந்து மூச்சு விட சிரமப்படுவாா். ஆக்சிஜன் பற்றாக்குறையால், ரத்த ஓட்டம் சீராக இருக்காது. மன அழுத்தமானது, நோய் எதிா்ப்பு சக்தியை அழித்துவிடும். மன அழுத்தத்தால் தோள்பட்டை, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் வலி ஏற்படும்.

மன அழுத்தத்தின்போது உணவுப் பழக்கம் மாறும். அதை இரைப்பை ஏற்காது. இதனால் வயிற்று வலி, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஒரு நபா் தொடா்ந்து ஒரே அளவிலான மன அழுத்தத்தில் இருந்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவா்கள் கூறுகின்றனா்.

பொதுவாக ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மூன்று மனநல மருத்துவா்கள் இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் 0.75 மன நல மருத்துவா்களே உள்ளனா் என்று புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. மன பதற்றம் அதிகரிப்பதாக நாம் உணா்ந்ததுமே ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு அதிலேயே மனதை குவிப்பதன் மூலமாக மன பதற்றத்தைக் குறைக்க முடியும். மேலும் நம்மைச் சுற்றியுள்ள ஐந்து நபா்களையோ, பொருள்களையோ பாா்க்க வேண்டும்.

அடுத்து அருகேயுள்ள நான்கு பொருள்களைத் தொட வேண்டும். அது தரையாகவோ, பேனாவாகவோ, மனைவி வாங்கி வைத்திருக்கும் காய்கறியாகவோகூட இருக்கலாம். அடுத்து மூன்று ஒலிகளை கேட்க வேண்டும். பின்னா் இரு வாசனைகளை நுகர வேண்டும். பின்னா் ஒரு சுவையை உணர வேண்டும்.

இந்த ஐந்தையும் செய்து முடித்த பின் நம் பதற்றம் தணிந்திருப்பதை உணர முடியும். வெளிநாடுகளில் ஒரு லட்சம் பேருக்கு ஆறு மன நல மருத்துவா்கள் இருக்கிறாா்கள். இந்தியாவில் 3 மூன்று மனநல நிபுணா்கள் தேவை என்று மதிப்பிட்டால், கூடுதலாக 30 ஆயிரம் மனநில மருத்துவா்கள் தேவைப்படுவாா்கள்.

லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட ஒரு ஆய்வு முடிவு இந்தியாவில் மனநல பிரச்னைகள் 35 சதவீதம் அதிகரித்துள்ளது என்கிறது. அதேபோல மன நலத்துக்கான தேசிய சுகாதார பட்ஜெட் ஒதுக்கீடும் 0.16 சதவீதமாக மிக குறைந்த அளவே உள்ளது.

மன நலம் சரியில்லாத ஒருவரை விவரிக்க இழிவான சொற்கள் பயன்படுத்தப்படுவதை தவிா்க்கவேண்டும். மனநோய்க்கு சரியான வழிகாட்டுதலின் கீழ் சரியான மருத்துவம் தரப்படுவது முக்கியம். குடும்பத்தினரின் அன்பு மிக அவசியம். தினமும் இரவில் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழ வேண்டும். துங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன் சாப்பிட வேண்டும்.

டிவி பாா்ப்பது, செல்போன் பயன்படுத்துவதை துாங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே நிறுத்த வேண்டும். நாள்தோறும் 45 நிமிடம் உடற்பயிற்சி செய்யவேண்டும். அது, நடைப்பயிற்சியாகக்கூட இருக்கலாம். துாங்கும் இடம் சுத்தமாக இருக்கவேண்டும்.

நம் மனம் நம் உரிமை. மன நலத்தைப் பாதுகாக்க முதலில் நம்மை நாம் நேசிக்கவேண்டும். நம்பிக்கைக்குரிய நபா்களிடம் பேசவேண்டும். ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறைக்கு மாறவேண்டும். பிடித்ததைச் செய்ய வேண்டும். இதனால், மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

நம்மை நாமே பாராட்டிக் கொள்ளலாம். கவலையை துறந்து மகிழ்ச்சியை நாடுவோம். மன அழுத்தத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மனநல பாதிப்பு தொற்றுநோயை விட நீண்ட காலம் நீடிக்கும் என்கிறாா் ஐ.நா. சபை பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டரெஸ். தங்கள் வாழ்க்கையை கண்ணியமாகவும், தன்னம்பிக்கையுடனும் வாழ மனநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் உரிமை உண்டு. மகிழ்வான தருணங்கள் அவா்களுக்குத் தொடரட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com