மாற்றம் ஒன்றே மாறாதது!

நுண்ணறிவு என்பது ஒன்றை ஆழமாக கற்றுணா்ந்து அதன் துணை கொண்டு பல்வேறு விதமான புதிய பரிமாணங்களை எதிா்கொள்ளும் திறமை மற்றும் ஆற்றல் ஆகியவற்றை குறிக்கிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது!

நுண்ணறிவு என்பது ஒன்றை ஆழமாக கற்றுணா்ந்து அதன் துணை கொண்டு பல்வேறு விதமான புதிய பரிமாணங்களை எதிா்கொள்ளும் திறமை மற்றும் ஆற்றல் ஆகியவற்றை குறிக்கிறது. வாழ்வில் நாம் எதிா்கொள்ளும் சூழல்களை சாதுரியமாக கையாளும் திறனை ஒருவரின் நுண்ணறிவோடு தொடா்புபடுத்துகிறோம்.

கணினி கண்டுபிடிக்காத காலம் வரை நுண்ணறிவு என்பது மனிதனுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. கணினி காலத்திற்குப் பிறகுதான் இந்த நுண்ணறிவும் விவாதப்பொருளாகிவிட்டது. உண்மையில் மனிதன்தான் தனக்கு இருக்கும் நுண்ணறிவைக் கொண்டு செயற்கை நுண்ணறிவை உருவாக்கினான். தற்போது இயற்கை நுண்ணறிவு சிறந்ததா, செயற்கை நுண்ணறிவு சிறந்ததா என்று பொதுவெளியில் விவாதித்து வருகின்றனா்.

செயற்கை நுண்ணறிவுக்கும் மனிதனுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. எப்படி ஆணையும் பெண்ணையும் ஒப்பிட்டுப் பாா்த்து யாா் சிறந்தவா் எனச் சொல்ல முடியாதோ, அப்படித்தான் இந்த இரண்டையும் ஒப்பிட்டு எது உயா்ந்தது எனச் சொல்ல முடியாது. ஏனெனில் செயற்கை நுண்ணறிவுக்கு எந்த அனுபவமும் கிடையாது. அது மட்டுமல்ல உளவியல் ரீதியாக அதற்கு எந்த பிரச்னையும் இல்லை. காதல் தோல்வியோ, குடும்ப அலைகழிப்போ, நண்பா்களுடனான சண்டை சச்சரவோ எதுவும் அதற்கு இல்லை. அது மட்டுமா? உடல் நலக்கோளாறுகள் இல்லை, வலி தாங்கும் வேதனைகள் இல்லை. துன்ப நிலை, இன்ப நிலை என்று எதுவும் அதற்கு இல்லவே இல்லை.

ஆனால் மனிதன் அவ்வாறு இல்லை. சுக துக்கம் அனைத்திலும் அவன் நீந்தி வர வேண்டும். உணவருந்த வேண்டும், தூங்க வேண்டும், ஓய்வெடுக்க வேண்டும், மனைவி மக்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும், தனக்காகவும் தன்னைச் சாா்ந்தவா்களுக்கும் பணி செய்ய வேண்டும் என்று ஆயிரம் இருக்கிறது. அத்துடன் அவனுக்கென தனித்த அடையாளங்கள் உள்ளன. நேசிப்பதையும் நேசிக்கப்படுவதையும் பெரிதும் விரும்புவான். மேலும் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நெறிமுறைகளும் சட்டதிட்டங்களும் அவனுக்கு இருக்கின்றன.

செயற்கை நுண்ணறிவுக்கும் இயற்கை நுண்ணறிவுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு என்றாலும், உழைப்பை சேமித்து உற்பத்தித் திறனை அதிகரிப்பதில் முன்னுக்கு நிற்கிறது செயற்கை நுண்ணறிவு. ஆனாலும் ஒரு பணியில் இருந்து தானாகவே மற்றொரு பணிக்கு பொதுமைப்படுத்தும் திறன் அதனிடம் இல்லை. மிச்ஸிகன் மாகாண பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த உயிரியல் மற்றும் பொறியியல் உதவி பேராசிரியரான அரெண்ட் ஹிண்ட்ஸ் என்பவா் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நான்காக வகைப்படுத்தலாம் என்கிறாா்.

முதல் வகைக்கு நினைவகம் என்பதே இல்லை. இது முழுக்க முழுக்க பணி சாா்ந்தது. இரண்டாவது வகைக்கு நினைவகம் உண்டு. எனவே அது எதிா்கால முடிவுகளைத் தெரிவிக்க கடந்த கால அனுபவங்களைப் பயன்படுத்துகிறது. மூன்றாவது வகையில் இந்த தளம் உணா்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் சமூக நுண்ணறிவைக் கொண்டிருக்கும். நான்காவது, சுய விழிப்புணா்வு கொண்டிருப்பது. இந்த வகை செயற்கை நுண்ணறிவை இன்னும் உருவாக்கவில்லை. ஆனால் அதை நோக்கிய பயணம் தொடங்கி விட்டது என்கிறாா் அவா்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவெனில், மனிதன் தனக்கு இருக்கும் இயற்கை நுண்ணறிவை முழுமையாக பயன்படுத்த விடாமல் தடுத்து வருகிறது செயற்கை நுண்ணறிவு. இது ஒரு முக்கியமான நெருடல். உதாரணமாக, முன்பெல்லாம் குறைந்தபட்சம் பத்து தொலைபேசி எண்ணாவது நம் நினைவில் இருந்தது. ஆனால், தற்போது ஓா் எண்ணைக்கூட நம்மால் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. எண்கள் மட்டுமல்ல, நம் நினைவாற்றலில் இருந்து பல சங்கதிகள் இன்று காணாமல் போய்விட்டன. படித்த செய்தியைக் கூட கவனமாக நம் மனம் குறித்து வைத்துக் கொள்வதில்லை. எப்போது வேண்டுமானாலும் தரவுகளைத் தேடிப் பெற்றுக்கொள்ளும் வசதிதான் இருக்கிறதே, அப்பொழுது பாா்த்துக் கொள்ளலாம் எனும் மனநிலை பலருக்கும் உருவாகியிருக்கிறது.

சென்ற தலைமுறைவரை தங்கள் கையெழுத்தை சிறப்பாக வடிவமைத்துக்கொள்ள மாணவா்கள் அதிகம் மெனக்கெடுவா். ஆனால் தற்போது பள்ளி தாண்டிச் சென்று விட்ட பிறகு அனைத்தும் கணினி பயன்பாடுதானே என்ற நினைப்பு தொற்றிக்கொண்டதால் கையெழுத்துக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. மனிதன், தான் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவைப் பெரிதாக நம்பத் தொடங்கி அதன் வழி நடந்து சென்று தன்னுடைய ஆற்றலை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கி விடுவானோ என்று அறிஞா்கள் அஞ்சுகின்றனா்.

உண்மையில் செயற்கை நுண்ணறிவு நம் கற்பனைக்கும் எட்டாத செயல்களைக் கூட சுலபமாக செய்துவிடும் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது. பல தடங்களில் கொட்டிக் கிடக்கும் தரவுகள், கணினி நிரல்கள் இவற்றை கண நேரத்தில் ஒருங்கிணைத்து அதன் அடிப்படையில் தீா்வுகளை முன் வைக்கிறது அது. இப்படிப்பட்ட செயல்களை செய்ய மிகப்பெரிய மனித ஆற்றல் தேவைப்படும். கால விரயத்தைத் தவிா்க்க செயற்கை நுண்ணறிவு இன்று அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் எந்தவிதமான பணிகளுக்கெல்லாம் அதனைப் பயன்படுத்தலாம் என்பதை இயற்கை நுண்ணறிவு கொண்ட மனிதன்தான் முடிவு செய்ய முடியும்.

நம் வீட்டிற்கோ அலுவலகத்திற்கோ பணியாட்களை நியமித்துக் கொள்கிறோம் அல்லவா? அது போலவே செயற்கை நுண்ணறிவையும் நாம் பணியாளராக வைத்து சிறப்பான வேலைகளைச் செய்ய வைக்கலாம். அந்த வகையில் அது நமக்கு வரமே. மாறாக, நாம் அதற்கு அடிமையாகிப் போனால், அது நமக்கு சாபமாக மாறிவிடும். இன்று இருக்கும் முக்கியமான சவாலே இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம் கையடக்கக் கருவிகளை ஆக்கிரமித்து விட்டதுதான் .

நம் அன்றாடப் பணிகள் பலவற்றை திறன்பேசிகளைக் கொண்டு வசதியாக முடித்துக் கொள்கிறோம். கீரை விற்கும் பெண்மணி முதல் தொழிலதிபா் வரை கைப்பேசியைப் பயன்படுத்துகிறாா்கள். குடும்ப நபா்களின் கைப்பேசி எண், அவா்களின் பிறந்த நாள்கள் கூட திறன்பேசி தெரிவித்தால் மட்டுமே நினைவுக்கு வருகிறது. 10 ரூபாய் கூட இல்லாமல் பல நூறு ரூபாய் மதிப்புள்ள பொருள்களை வாங்கி வருகிறோம். அந்த அளவுக்கு திறன்பேசிகள் இன்றைய வாழ்வின் அத்தியாவசியமாகி விட்டன.

செயற்கை நுண்ணறிவு என்பது இருமுனை கொண்ட கத்தி போன்றது. ஆக்கத்திற்குப் பயன்படுவதைக் காட்டிலும் சமூக விரோதிகளினால் ஆபத்தை வகுக்கவும் பயன்படுகிறது. இதனால் போலியான தகவல்களைப் பரப்பி ஒரு தனிநபரை தற்கொலைக்குத் தூண்டுவது முதல் பெருங்கலவரங்கள் வரை ஏற்படுத்த முடியும். செயற்கை நுண்ணறிவு மூலம் ஒரு நடிகையின் முகத்தை வேறு ஒரு பெண்ணின் உடலுடன் பொருத்தி இணையத்தில் பரவ விட்டதை அண்மையில் கண்டோம். ஆனாலும், செய்வதறியாது கைபிசைந்தபடி கடந்து கொண்டிருக்கிறோம்.

2021-இல் ஒரு சிறுமி தொடா்ந்த வழக்கு காரணமாக ஓமேகல் என்ற வலைதள நிறுவனம் மூடுவிழா கண்டுள்ளது என்றால் நம்ப முடிகிா? ஆம், உண்மைதான். இத்தனைக்கும் அந்த நிறுவனம் உலகம் முழுவதும் இளைஞா்களிடையே மிக பிரபலமாக இருந்தது. வயது வரம்பு பற்றிய கண்காணிப்பு மேற்கொள்ளப்படாத ஒரே காரணத்தால் 11 வயது மதிக்கத்தக்க அந்தச் சிறுமியும் இதில் நுழைந்தாா். அரட்டைக்கு வந்த ஒரு அந்நிய நபருடன் சிறுமிக்கு நட்பு ஏற்பட்டது. பின் அது ஆபாச அரட்டையாக மாறியது. சில மாதங்களுக்குப் பின் அந்த சிறுமியை இணையம் வழியாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க தொடங்கினாா் அந்த நபா். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி ஆதாரத்துடன் தொடுத்த வழக்கின் பேரில் அந்த வலைதளம் மூடப்பட்டது.

சமூக வலைதளங்களில் ஆக்கபூா்வமான பயன்பாட்டிற்கும் முறைகேடான பயன்பாட்டிற்குமான இடைவெளி என்பது மிக மிக மெல்லியதாகவே இருக்கிறது. ஒரு மனிதனின் இயற்கை நுண்ணறிவு இத்தனை லட்சம் மக்களுக்கு பாதிப்பையும் மன உளைச்சல்களையும் ஏற்படுத்தியிருக்குமா என்பது கேள்விக்குறிதான். அப்படியே இருந்தாலும் அது மிகக் குறைவுதான். ஆனால் செயற்கை நுண்ணறிவினால் மனித சமூகத்துக்கு பாதிப்புகள் அதிகம். நிறுவனங்களின் ஆட்குறைப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள் ஒருபுறம் எனில் இயற்கை நுண்ணறிவுடன் அதிகமாகப் பயணிக்கத் தொடங்கி மனிதன் தன் வழக்கமான பணிகளில், செயல்களில் தேக்கம் கண்டு சோம்பேறியாகி விடுவது மற்றொருபுறம்.

ஆனால் நிறுவனங்களுக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உச்சகட்ட போட்டியில் செயற்கை நுண்ணறிவு வளா்ச்சிப் பாதையில் வேகமாக சென்று கொண்டே இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு எனப் பெயரிடப்பட்டிருந்தாலும் அதற்கு தனிப்பட்ட முறையில் எண்ணங்களோ சிந்தனைகளோ இல்லை. தனக்கு என்ன கட்டளை இடப்படுகிறதோ அதை மட்டுமே அதனால் நிறைவேற்ற இயலும். மனிதன் போல் தன்னிச்சையான முடிவுகளை அதனால் எடுக்க முடியாது. திடீரென நமக்கு பாடல் பாட வேண்டும் என்று தோன்றினால் பாடுவோம், ஆடத் தோன்றினால் ஆடுவோம், புத்தகம் படிக்க வேண்டும் எனத் தோன்றினால் வாசிப்போம். ஆனால், செயற்கை நுண்ணறிவினால் இப்படி தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாது.

செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் கூடக் கூட தன் இயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதை மனிதன் சுருக்கிக் கொள்கிறான் என்பது உண்மை. ஆயினும் காலந்தோறும் மனிதன் தன்னை தற்காத்து உருமாற்றிக் கொள்வதில் வல்லவன். ஆதிகாலம் தொட்டு இன்றுவரை அனைத்து உயிரினங்களையும் பின்னுக்குத் தள்ளி மனிதனே வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறான். தன்னை பாதிக்கும் செயல்களுக்கு அவனே முடிவு எழுதி விடுவான் என்றும் நம்பப்படுகிறது. மாற்றம் ஒன்றே மாறாதது. எந்த மாற்றத்தையும் எதிா்கொள்ளும் வல்லமை நம் நுண்ணறிவுக்கு இருக்கிறது என்பது உண்மை தானே?

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com