உறக்கம் முக்கியம் 

மனிதர்களின் வாழ்விலிருந்து பிரிக்க இயலாதது உறக்கம். வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை நாம் அனைவரும் உறங்கியே செலவிடுகிறோம்.
உறக்கம் முக்கியம் 

மனிதர்களின் வாழ்விலிருந்து பிரிக்க இயலாதது உறக்கம். வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை நாம் அனைவரும் உறங்கியே செலவிடுகிறோம். உறக்கமில்லாத இரவின் அடுத்த நாள் பகல் வேளை பலருக்கும் அவ்வளவு சிறப்பானதாக அமைவதில்லை. 

ஒவ்வொரு நாள் உறங்கும்போதும் நமது உடல் அந்நாளில் பெற்ற களைப்பை நீக்கிக் கொள்வதோடு அடுத்த நாள் உழைப்பதற்கான புத்துணர்ச்சியையும் உண்டாக்கிக் கொள்கிறது. அந்த வகையில் உறக்கம் என்பது நேரத்தை  வீணாக்கும் செயல்பாடல்ல மாறாக ஒருவகையான முதலீடு என்கின்றனர் அறிஞர்கள். 

ஒரு நாளின் அட்டவணையில் மற்ற செயல்பாடுகளுக்கு நேரம் ஒதுக்குவதைப் போன்று தூக்கத்திற்கும் கணிசமான நேரம் ஒதுக்கவேண்டும். மூன்று முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகள் 10 மணி நேரம் முதல் 13  மணி நேரம் வரையிலும், ஆறு முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் ஒன்பது மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரையிலும்,13 முதல் 18 வயது வரையிலான இளையோர் எட்டு முதல் 10 மணி நேரம் வரையிலும், மூத்தோர் சுமார் ஏழு  மணி நேரம் வரையிலும் என ஒவ்வொருவரும் தூங்க வேண்டிய நேரம் பரிந்துரைக்கப்படுகின்றது.  

இவ்வாறு ஒதுக்க இயலாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக உறங்குவோரின் பணித்திறன் சொல்லிக்கொள்ளும் வகையில் இருக்காது. உறக்கமும் மூளையின் செயல்பாடும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையதாய் இருப்பதே இதற்கு காரணம் ஆகும். 

பகல் நேரத்தில் செயல்படத் தொடங்கிய மூளையின் பல்வகை செல்களும் ஒய்வெடுக்க அனுமதிக்கவேண்டும். உறங்கும் முன்னர் வீட்டின் விளக்குகளை அணைப்பது போன்ற செயல்பாடு இது. விளக்குகள் அணைந்த பின்னரும் காற்றோட்டத்திற்காக  மின்விசிறி எப்படி ஓடிக்கொண்டிருக்கிறதோ அவ்வாறே ஓய்வெடுக்கும் நிலையிலும் மூளை உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்காக விழிப்புடனேயே இருக்கும். தூக்கமின்மையால் மூளை தொடர்ந்து கடும் பணியாற்றி சோர்வுறும்  நிலையில் மறதி நோய் ஏற்படும் ஆபத்து உண்டு. 
சிலருக்கு மதிய உணவிற்குப் பின் உறக்கம் வரலாம். அதிக அளவிலான உணவு நமது இரைப்பையை அடையும்போது அங்கிருக்கும் உறுப்புகள் அதிகம் பணியாற்ற வேண்டியிருக்கிறது. இதனால் ஏற்படும் ரத்த ஓட்ட சமநிலை பாதிப்பால் இது ஏற்படுகிறது. அளவோடு உண்டால் இதனைத் தவிர்க்கலாம். இவ்வாறு பிற்பகலில் வரும் உறக்கம் சிறிது நேர உறக்கமாக இருந்தால் நல்லது. இதனால் கிடைக்கும் புத்துணர்வு அந்நாளின் பின்பகுதியில் பணித்திறனைக் கூட்ட உதவும். 

உறக்கம் அனைவருக்கும் பொதுவானதுதான் என்றாலும் ஒவ்வொருவரின் பணிச்சூழல், பொருளாதார சூழலுக்கேற்ப உறங்கும் நேரமும் அமைந்துவிடுகிறது,

பொதுவாக, பகல் நேரம் பணிக்குச் சென்று வருவோர்க்கு இரவில் தூங்க வாய்ப்பு கிடைக்கும். ஆனால் பத்திரிகை, காட்சி ஊடகம், தொழிற்சாலை, மருத்துவமனை, போக்குவரத்து போன்ற பணிகளில் ஈடுபடுவோர்க்கு இரவில் ஒரே சீராக உறங்க வாய்ப்பு கிடைப்பதில்லை. 

அவ்வாறான பணியில் இருப்போர் சீரான உயிரியல் லயத்திற்குத்  தம்மை ஆட்படுத்திக்கொள்ளவேண்டும். இவ்வாறான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர் நலன் காக்கும் விதமாக கூடுதல் விடுமுறை, ஓய்வு போன்றவை அளிக்கப்படவேண்டும். 

இன்றைய சூழலிலும் உறங்கும் நேரத்தில் பாலின வேறுபாடு காணப்படுவது கண்கூடு. வீட்டின் வேலைகள் பகிர்ந்து செய்யப்படும் குடும்பங்களில் அத்தகைய பாலின வேறுபாடு இராது. அதாவது குடும்பத்திலுள்ள அனைவரும் ஒரே நேரத்தில் உறங்கச் செல்ல வேண்டுமானால் இரவில் வீட்டின் பணிகளைப் பகிர்ந்து செய்யத் தயாராக வேண்டும். 

கூடுதல் பணி இருக்கும் நாட்களில் கூடுதல் பணிப் பகிர்விற்கான திட்டமிடுதலும் தேவை. மறுநாள் காலை செய்தே தீரவேண்டிய ஒரு சில பணிகளை முதல் நாள் மாலையே செய்து வைப்பது, அடுத்த நாளைப் பதற்றமின்றித் தொடங்க உதவும். புதினா, கீரை போன்றவற்றை ஆய்ந்து வைத்தல், சாப்பாடு எடுத்துச் செல்லும் பாத்திரங்களை நன்கு துலக்கி வைத்தல் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். இவ்வாறான தயாரிப்பு பதற்றமின்றி தூங்கி மறுநாள் காலை பதற்றமின்றி எழ உதவும்.

மனிதர்களுக்கு உறக்கம் இயல்பாக வருவதுதான் என்றாலும் உறக்கத்திற்கான தயாரிப்பு மிகவும் அவசியம். தொலைக்காட்சி, கைப்பேசி போன்றவற்றிலிருந்து விடுபட்டு இயல்பு நிலையில் நாம் இருந்தால், நமது கண்களால் விரைவில் உறக்கத்தை மேற்கொள்ள இயலும்.  

எனவே குறைந்தபட்சம் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவாவது  தொலைக்காட்சி பார்ப்பதையும், கைப்பேசியில் பேசுவதையும் கட்டாயம் நாம் தவிர்க்க வேண்டும். நிம்மதியான உறக்கத்திற்கு, இருட்டான அறை, கொசுக்கள் இல்லாத தூய்மையான படுக்கை, தூய்மை செய்யப்பட்ட போர்வை, தலையணை போன்றவை கூடுதல் உதவி செய்யக்கூடியவை. 
உடல்நலனுக்கு இன்றியமையாத் தேவையான உறக்கத்தை முறையாகத் கடைப்பிடித்து உடலை   சிறப்பாகப் பராமரிப்போர் வெகு சிலரே. வயது ஆக ஆக சிலர் தூக்கமின்மை நோய்க்கு ஆட்படுகின்றனர். இதனால் நாள்தோறும் இயற்கையாக வரவேண்டிய உறக்கம் இவர்களுக்கு வருவதில்லை. 

இதனால் மாத்திரை, மருந்துகளை  உட்கொண்டு உறக்கத்தை செயற்கையாக வரவழைக்கத் தொடங்குகின்றனர். ஒரு குறிப்பிட்ட காலம் சிறப்பாகப் பணியாற்றும் இந்த மருந்துகள், காலம் ஆக ஆக அதிக அளவிலான தேவையை ஏற்படுத்துகின்றன. 

பின்னர் செயல்பட இயலாத தன்மைக்கும் இட்டுச் செல்கின்றன. தேவைக்காக எவ்வாறு எவ்வித சலிப்புமில்லாமல் பணத்தை ஈட்டுகிறோமோ அதுபோலவே நல்ல உடல்நலனை பராமரிக்கவும் நாம் முயலவேண்டும். குறிப்பிட்ட அளவிலான நேரத்தை, உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றிற்கு ஒதுக்கவேண்டும். 

எல்லாவற்றுக்கும் மேலாக நம் குடும்பத்தாருடனும் நமக்கு அருகில் வசிப்பவர்களுடனும் ஆரோக்கியமான உறவைப் பேண வேண்டும். எந்த நிலையிலும் எளிமையாக வாழவேண்டும். எளிமையைக் கைகொள்வோர்க்கு வாழ்வே எளிதாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com