மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக்ஜம் புயல் பெரும் சீரழிவை ஏற்படுத்தி விட்டது. இயற்கையின் சீற்றம் எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு முறையும் நமக்குப் பாடம் புகட்டி விட்டுத்தான் போகிறது, ஆனால், நாம் மாற மாட்டோம். 
அறிவியலும், தொழில் நுட்பமும் இயற்கையை வெல்ல முடியாது என்பது புரிகிறது.   சென்னை மக்களை மீட்டெடுக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கும்போதே வங்கக் கடலில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தென்மாவட்டங்களில் அதி கன மழை பெய்தது.  திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.  
ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும், நீர் போகும் பாதையை அடைக்கக் கூடாது;  நீர் நிலைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்;  மழைக் காலத்துக்கு முன்பே தூர் வார வேண்டும்; இப்படிப் பல யோசனைகள் கூறப்பட்டன. 
தொடர்ந்து, நிவாரணத் தொகை கிடைத்துவிட்டது; இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது;  "மிஸ்டர் பொது ஜனம்' சொந்த பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள். அரசியல் கட்சியினர் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற நலத்திட்டங்களை அறிவிப்பார்கள்;  பயிர் கருகிப் போய்விட்டது, இழப்பீடு வேண்டும் என்று விவசாயிகள் வாடிய நாற்றுகளைக் காட்டி அழுவார்கள்; நாமும் அண்டை மாநிலத்தோடு தண்ணீர் கேட்டு மன்றாடுவோம்;  இதெல்லாம் இங்கே இயல்பு என்று நாம் போய்க் கொண்டே இருப்போம்.   அடுத்த கனமழையின்போது,  யார் ஆட்சி செய்கிறார்களோ,  அது அவர்கள் பிரச்னை.
வீடுகளுக்குள் வெள்ளம் உள்ளே வரும்போது, சாக்கடை நீரும், கழிவு நீரும் சேர்ந்தல்லவா வருகிறது?  குப்பைக் கூளங்கள், பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களும் வருகின்றன.  அந்தக் கழிவு நீரில் இடுப்பளவு மூழ்கி நடந்து போகிறார்கள்.  நாற்றம் குடலைப் பிடுங்கும்.   தண்ணீர் வற்றிய பின்,  அங்கே தங்கிப் போன சேற்றைக் கழுவி விடுவது கடும் பாடு.  எத்தனை முறை கழுவி விட்டாலும்,  துர்நாற்றம் அடிப்பது போன்று இருக்கும்.  
நம் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, உறையுள் என்ற மூன்று மட்டுமே.   இந்த மூன்றும் இந்த நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமல்லவா?  அதற்கு ஆவன செய்யாமல்,  பிறவற்றுக்காக செலவிடப்படும் முதலீடுகள் ஆடம்பரமே.  சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்னமும் வாழத் தகுதியற்ற குடிசைகளிலும், தகர வீடுகளிலும் வசிக்கிறார்கள்.  இந்த அடித்தட்டு மக்களை எப்படி கைதூக்கி விடுவது என்ற நோக்கத்தில் நமது திட்டங்கள் அனைத்தும் இருக்க வேண்டும்.
மழைநீர் தேங்கியுள்ள சில பகுதிகளைப் பார்க்கும்போது, எப்படி இங்கே வாழ்கிறார்களோ என்று கேட்கத் தோன்றுகிறது. குடிசையாகக்கூட இருக்கட்டும்,  அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ளலாம்.  எளிமையும் ஓர் அழகே.  வீட்டையும்,  சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஏனோ அவர்களுக்குத் தோன்றுவதே இல்லை.  வீட்டைச் சுற்றி குப்பைகள்,  கழிவுகள்,  சாக்கடைகள் என இருந்தாலும் அவர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை.  
சுகாதாரச் சீர்கேடு பற்றி பெரும்பாலானோர் கவலைப்படுவதில்லை. ஏற்கெனவே கழிவு நீரும்,  சாக்கடை நீரும் தேங்கியிருக்கும் பகுதியில் மழைத் தண்ணீரும் கலந்து வீடுகளில் புகுந்து விடுகிறது.  குடிசைகளை அழகாக,  வரிசையாக கட்டிக் கொள்ளலாம். இரு பக்கக் குடிசைகளுக்கு நடுவில் உள்ள பாதையை தூய்மையாக வைத்துக் கொள்ளலாம்.   பொதுக் கழிப்பிடத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளலாம்.  எளிமையும் அழகும் கைகோத்தால் அது அழகாக இருக்கும்.  குடிசைப் பகுதிகளில் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.
நீர்நிலைகள் வெகுவாக சுருங்கிப் போனதால் மழை நீர் வெளியேற இடம் இல்லாமல் தேங்குகிறது.  சென்னை பள்ளிக்கரணை,  வேளச்சேரி,  சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சதுப்பு நிலங்கள் முன்பு 5,000 ஹெக்டேராக இருந்தது.  இப்போது வெறும் 600 ஹெக்டேர் மட்டுமே உள்ளது. சதுப்பு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யாமல் இருந்திருந்தால், இந்த வெள்ள பாதிப்பு அப்பகுதியில் இருந்திருக்காது. கடல் மட்டம் உயரும்போது கடல் நீரை சதுப்பு நிலங்கள் உறிஞ்சி வைத்துக் கொள்ளும்;  கடல் மட்டம் கீழே இறங்கும்போது உறிஞ்சிய தண்ணீரை சதுப்பு நிலங்கள் வெளியே விட்டுவிடும்.  இப்படிப்பட்ட சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்தது மன்னிக்க முடியாத பெரும் தவறு. 
அதே போன்று வடசென்னை எண்ணூர் கடற்கரை கழிமுகப் பகுதி ஆகும்.  இதுவும் மழை நீரை உறிஞ்சும் தன்மை வாய்ந்தது.  கொசஸ்தலை,  அடையாறு, கூவம் ஆகியவற்றின் வழியாகத்தான் சென்னையின்  வெள்ள நீர் வெளியேற வேண்டும்.  இந்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கைத் தடுக்க பக்கிங்காம் கால்வாய் உருவாக்கப்பட்டது. இது தவிர சிறு சிறு கால்வாய்களையும் தோண்டியிருந்தனர்.  அந்தக் கால்வாய்களில் எல்லாம் கழிவு நீர்,  நெகிழி உறைகள்,  குப்பைகள்,  கட்டடக் கழிவுகள் போன்றவற்றைக் கொட்டியதால் பெரிய அளவில் அடைப்புகள் ஏற்பட்டு மழை நீர் வெளியேற உதவாமல் போய் விட்டது.  
முறையான மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு,  அவை சீராக பராமரிக்கப்பட வேண்டும்.  ஏரிகளில் வீடு கட்டிக் கொண்டால் தண்ணீர் எங்கே போகும்?  இனி இது போன்ற பேரிடர் ஏற்படாமல் இருக்க ஆவன செய்ய வேண்டும்.  இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.
உலக வங்கியின் உதவியுடன் தமிழகம் முழுவதும் 2,300 ஏரிகள் பழைய நிலைக்கு மீட்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.   234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள ஏரி,  காப்பகங்கள் அனைத்தையும் ஆழப்படுத்தி,  தூர்வாரி,  உரிய தடுப்பணைகள் கட்ட வேண்டும். 
ஒவ்வொரு முறையும் வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்படுகிறது.  நிவாரணம்,  மீட்புப் பணி, சேதாரத்தை சீர்படுத்துதல் என இதற்குப் பல கோடிகள் செலவாகின்றன.   இந்நிலைமை தொடர்கதையாக ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும்.
பாலும்,  ரொட்டியும்,  போர்வையும் தருவது தீர்வல்ல.   நீர்வழித் தடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் எல்லாவற்றையும் அகற்ற வேண்டும்.  ஏரிகளை மீட்டெடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் எவ்வளவு பெரிய புள்ளியாக இருந்தாலும் பரவாயில்லை,  அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியே ஆக வேண்டும்.   ஒரு சிலரின் பேராசைக்காக,  சுயநலத்திற்காக ஒரு தவறும் செய்யாத அப்பாவிகள் தங்கள் உடைமைகளை இழந்து உணவுக்காகவும்,  தண்ணீருக்காகவும் கையேந்த  வேண்டுமா?  வீட்டை விட்டு விட்டு,  முகாமில் போய் தங்க வேண்டுமா?   "இளையதாக முள் மரம் கொல்க' என்பார்கள்.   ஆரம்பத்திலேயே தடுக்காமல் விட்டது  பெரும் குற்றம்.   ஒரு சிலரின் பணப்பெட்டி நிறைய ஒரு நகரமே வெள்ளத்தில் தத்தளிக்க வேண்டுமா?.
வெள்ளப்பெருக்குக்கு ஆக்கிரமிப்புகள் ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணமும் உள்ளது.   ஒரு தெருவின் இரண்டு பக்கமும் மழை நீர் வடிகால் கால்வாய் அமைத்துக் கொடுத்துள்ளார்கள்.   மழைநீர் அழகாக அவற்றின் வழியாக ஓடிவிடும்.  ஆனால் ஒரு சிலர் வீடு கட்டும்போது அக் கால்வாயை அடைத்து,  சரிவுப்பாதை கொண்ட வாசல் அமைத்து விடுவதால் தண்ணீர் தேங்கி வீடுகளில் புகுகிறது.   மேலும் சாலை உயரமாகிக் கொண்டே போக,  வீடு பள்ளத்தில் இருப்பதால் தண்ணீர் வீட்டுக்குள் புகுவது  இயல்புதானே! இத்தகைய அடிப்படை தவறுகளைச் சரி செய்தால் ஓரளவு பிரச்னையின் வீரியம் குறைய வாய்ப்பு உண்டு.
அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தால் பலரின் விரோதத்தை எதிர்கொள்ள நேரிடும்.   நாடு முக்கியமா?  தனிநபர் நலன் முக்கியமா? யோசிக்க வேண்டும்.  வெள்ளம் வந்துவிட்டது என்று அழுபவர்கள்,  ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும்போது போராட்டம் நடத்துகிறார்கள்;  "தீக்குளிப்பேன்' என்று மிரட்டுகிறார்கள்.
ஒருவரின் உடலில் ஒரு பெரிய கட்டி வந்துவிட்டது என்றால்,  அதை நீக்க அறுவை சிகிச்சை மட்டுமே வழி என்றால் அதை செய்து தான் தீர வேண்டும்.  நோயாளிக்கு வலிக்குமே என்று விட்டுவிட்டால் அது பெரிதாகி,  சீழ் பிடித்து அவர் உயிருக்கே உலை வைக்கும்.   ஆகவே, தயவு தாட்சண்யம் பார்க்காமல்,  கட்சி பேதம் பார்க்காமல், அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படாமல் செயலில் இறங்க வேண்டும்.   
களை எடுக்க இதுவே தக்க தருணம்.  மற்ற எல்லாவற்றையும் ஓரங்கட்டி விட்டு நம் நகரத்தை மீட்டெடுப்பது மிகவும் முக்கியம்.   சென்னையை ஓர் அழகிய நகரமாக மாற்றுவோம். வெறும் குப்பைக்காடாக இருக்கும்,  மாடுகளும்,  நாய்களும் திரியும்,  சாக்கடை அடைத்து நிற்கும்,  முகம் சுளிக்க வைக்கும், தற்போதைய சென்னை நகரம் சிறந்த கட்டமைப்புகளுடன்,  தூய்மையும்,  அழகும் மிளிரும் நகரமாக மாற வேண்டும்.  
வரும் காலங்களில் எவ்வளவு மழை பெய்தாலும், எவரையும் குறை சொல்லாமல் அவ்வளவையும் சேமிக்க முயற்சிப்போம்; அல்லது எந்தச் சேதமும் இன்றி தண்ணீரை வெளியேற்றுவோம்.

கட்டுரையாளர்:
பேராசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com