பாருக்குள்ளே நல்ல நாடு!

பாருக்குள்ளே நல்ல நாடு!

இந்தியா 75-ஆவது குடியரசு தினத்தை இன்று கொண்டாடுகிறது. பாளையங்கள், ஜமீன்கள், சமஸ்தானங்கள் என்று பிரிந்து கிடந்த தேசத்தை அந்நியப் படையெடுப்புகளும், அவர்களது ஆட்சிகளும்தான் ஒருங்கிணைத்தன என்கிற தவறான கருத்து நிலவுகிறது. ஆட்சி ரீதியாகப் பிரிந்து கிடந்தாலும், உணர்வு ரீதியாக இந்தியா என்றைக்குமே ஒன்றாகத்தான் இருந்து வந்திருக்கிறது என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். ராமாயண, மகாபாரதத் தாக்கம் இல்லாத, அது குறித்துத் தெரிந்திராத ஒருவர் இந்தியாவின் எந்த கிராமத்திலும் அன்றும் இருந்ததில்லை, இன்றும் இல்லை.
1947 ஜூன் மாதம் 25-ஆம் தேதி சர்தார் வல்லபபாய் படேலின் தலைமையில் அமைந்த மாநிலங்கள் துறை, 560 சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி பண்டித ஜவாஹர்லால் நேரு தலைமையில் சுதந்திர இந்தியா மலர்ந்தது. இடைக்கால அமைச்சரவை பதவி ஏற்றது. 1946 டிசம்பர் 9-ஆம் தேதி பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைந்த அரசியல் சாசன சபையில் சட்ட அமைச்சர் பாபா சாகேப் அம்பேத்கர் தாக்கல் செய்த அரசியல் சட்டம் 1949 நவம்பர் 26-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26-ஆம் தேதி அமலுக்கு வந்தது.
தொடர்ந்து ஒரே ஆட்சி முறையுடன், 17 தேர்தல்களை வெற்றிகரமாக கடந்து 18-ஆவது மக்களவைக்கான தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது நமது நவீன இந்தியா - வல்லரசுக் கனவுடன்!
"பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரதநாடு' என்கிற பாரதியாரின் வாக்கு இன்று மெய்ப்பட்டு வருகிறது. வரும் 2080-ஆம் ஆண்டுக்குப் பின் உலகின் முதன்மையான பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா மாறும். அதற்கு முன் 2032-க்குள் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என பிரிட்டனின் தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சி.இ.பி.ஆர் நிறுவனம் கணித்துள்ளது.
இந்த நிறுவனம் உலகின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வணிக ஆராய்ச்சி அம்சங்களில் ஆய்வு செய்து உலக பொருளாதார லீக் அட்டவணையை வெளியிட்டு உள்ளது. இதில்தான் இந்தியாவின் ஜி.டி.பி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் சீனாவை விட 90 சதவீதம் அதிகமாகவும், அமெரிக்காவைவிட 30 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கிறது. 2024 முதல் 2028 வரை சராசரியாக 6.5 சதவீத அளவில் நிலையான, வலுவான வளர்ச்சி இருக்கும் என்கிறது அதன் அறிக்கை.
மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியாவின் பொருளாதாரம், சமூகம் மற்றும் வெளிநாட்டு கொள்கைகளில் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியா மிகுந்த தன்னம்பிக்கையுடனும், திட்டமிடலுடனும் உலக அரங்கில் வலம்வரத் தொடங்கியுள்ளது. சீனா-இந்திய வணிக உறவில் முன்னதாக சீனாவின் இறக்குமதியைக் குறைப்பதில் கவனம் செலுத்தியது.  தற்போது தனது ஏற்றுமதியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது.
அரசியல் மற்றும் கலாசார தளத்தில் மேற்கத்திய நாடுகளின் தாக்கத்திலிருந்து விலகி இந்தியா அதன் சொந்த அடையாளத்தை நோக்கி  நகர்ந்துள்ளது. சர்வதேச உறவில் குறுகிய காலகட்டத்தில் இத்தகைய மாற்றம் மிக அரிதானது என்று சீன அரசின் நாளிதழான "குளோபல் டைம்ஸ்' புகழ்ந்துள்ளது. இதற்கான கட்டுரையை பியூட்டான் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மைய இயக்குநர் சாங் ஜியோடாங் எழுதியுள்ளார்.
ரஷியா - உக்ரைன் போரை ஒரு வாரத்திற்கு நிறுத்தச் செய்து பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்களை பாதுகாப்பாக மீட்டது உலக சாதனை.  கரோனா காலத்தில் நமது நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் மூலம் நம் நாட்டு மக்களை காப்பாற்றிய அதே வேளையில் 120 நாடுகளுக்கும் தடுப்பூசியை வழங்கினோம். வல்லரசுகள் சின்னஞ்சிறு நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்க முன்வராத நிலையில் மனிதநேய அடிப்படையில் பாரதம் வழங்கியதால் தான் ஆப்பிரிக்க நாட்டு அதிபர் ஒருவர் பாரதப் பிரதமரை குனிந்து பாதம் தொட்டு விமான நிலையத்தில் வரவேற்று மகிழ்ந்தார்.
கரோனா காலத்தில் தொடங்கிய இலவச உணவுப் பொருள் வழங்கப்படும் திட்டம் இன்றும் பாரதத்தில் 82 கோடி மக்களுக்கு வழங்கப்படுவது ஒரு உலக சாதனை. விண்வெளி ஆய்வுத் தடத்தில் நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்தது,  முதல் முயற்சியிலேயே செவ்வாயைத் தொட்டது, சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் லேண்டரை இறக்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமை இந்தியா எட்டியுள்ளது. அண்மையில் புதிய மைல்கல்லாக அனல் கக்கும் ஆதவனை, அதன் இயக்கங்களை கவனிக்க பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை மிகத் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளது. இந்த ஆண்டிலேயே மனிதனை நிலவுக்கு அனுப்புகிற நாடாக மாறவுள்ளது.
தாய் நாட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஐ.என்.எஸ். இம்பால் என்று பெயரிட்ட போர்க் கப்பலை இராணுவத்தில் இணைத்திருக்கிறது. 1891-இல் நடைபெற்ற ஆங்கிலோ மணிப்பூர் போர், மற்றும் 1944-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள் மணிப்பூரின் மொய்ராங் நகரில் முதல் முறையாக இந்திய தேசிய ராணுவக் கொடியை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஏற்றியதையும் இந்திய சுதந்திர போராட்டத்தில் மணிப்பூர் மக்கள் செய்த தியாகம், பங்களிப்பு இவற்றை நினைவுகூரும் விதமாகவும் ஐ.என்.எஸ். இம்பால் என்ற பெயர் போர்க்கப்பலுக்கு இடப்பட்டுள்ளதை வெகுவாகப் பாராட்டலாம்.
இந்தக் கப்பல் 164 மீ. நீளம் கொண்டது. 1,400 டன் எடையுள்ள பாரத்தோடு கடலில் செல்ல வல்லது. தரையில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணைகள் உள்ளன. நீர்முழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் கருவிகள் உள்ளன.
தற்போது உள்நாட்டின் இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. மேலும் 16,000 கோடிக்கு இராணுவத் தளவாடங்களான டார்னியர் 228, 155 ரக எம் எம் நவீன துப்பாக்கிகள், பிரம்மோஸ் ஏவுகணைகள், ஆகாஷ் ஏவுகணைகள், ராடார்கள், கவச வாகனங்கள், பினாகா ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் சிமுலேட்டர்கள் போன்றவற்றை 85 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பாரதம் சாதனை நிகழ்த்தியுள்ளது.
உலக முழுவதும் வர்த்தகத்துக்கு அமெரிக்க டாலர் பரிவர்த்தனை மிக அவசியம். ஆனால், இந்தியா தனது ரூபாய் வழி முதன்முதலாக கடந்த ஆகஸ்ட் மாதம் அபுதாபி நேஷனல் எண்ணெய் நிறுவனத்திடமிருந்து 10 லட்சம் கச்சா எண்ணெய் பீப்பாய்களுக்கு இந்தியன் ஆயில் நிறுனம் இந்திய ரூபாயாக தந்து வணிகத்தை நடத்தியுள்ளது.
இதைப் போன்றே ரஷிய நாட்டில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் வர்த்தகமும் ரூபாயில்தான் நடைபெறுகிறது. இதுவரை 18 வெளிநாடுகளுடன் இந்திய ரூபாயில் வர்த்தகம் நடைபெறுகிறது.  இந்த ஆண்டுக்குள் அது 32-ஆக அதிகரிக்கும். இவ்வாறு உலக வரலாற்றில் டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பும், நம்பிக்கையும் வர்த்தகத்தில் உயர்வது முதல்முறை.
பாரதத்தின் பாதுகாப்பை நமது முப்படைகளும் வலிமையாக உறுதி செய்துள்ளன. கல்வான் பள்ளத்தாக்கில் சீன - இந்திய ராணுவ கைகலப்பில் உறுதியாக நின்ற நமது இராணுவ சகோதர வீரர்களின் துணிச்சலை, தியாகத்தை உலக இராணுவ விமர்சர்கள் வியந்து பாராட்டினார்கள். 
அண்மையில் இந்திய சரக்கு கப்பலொன்றை கடற் கொள்ளையர்கள் அரபிக் கடலில் சிறை பிடித்து அதில் உள்ள இந்திய மாலுமி உள்பட பலரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இந்திய போர்க் கப்பலும் வான் படையும் விரைந்து சென்று கப்பலையும், ஊழியர்களையும் மீட்டு வந்தது உலகினர் கவனத்தை ஈர்த்தது. ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியவர்களை, அவர்கள் ஆழ்கடலில் இருந்தாலும் தேடிப் பிடிக்கும் நடவடிக்கையும் பாராட்டுதல்களைப் பெற்று வருகிறது.
உலகின் மிகப் பெரிய மக்களாட்சி முறையில் ஆட்சி நடைபெறும் நாடு இந்தியா. மக்கள்தொகையும் 140 கோடியைத் தாண்டி வளர்ந்து வரும் நாட்டில் அமைதியான தேர்தல் முறையும் ஊழலற்ற மத்திய அரசின் ஆட்சிமுறையும் உலகினரை ஈர்ப்பதில் வியப்பில்லை. அந்நிய படையெடுப்பாளரின் தாக்குதலால் சிதையுண்ட ஸ்ரீராம பிராமனின் கோயில் கடந்த 500 ஆண்டுகளாக போராட்டக் களமாக மாறி பல்லாயிரவர் உயிர் துறக்கவுமாக இருந்த நிலை மாறி கத்தியின்றி, இரத்தமின்றி அமைதியான நீதிமன்றத் தீர்ப்பின் வண்ணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க அயோத்தியில் ஆலயம் அமைந்து வருவது உலக சாதனை எனில் சற்றும் மிகையல்ல.
பாரதப் பிரதமரின் தனிப்பட்ட அணுகு முறையால் உருவ வழிபாட்டுக்கு எதிரான மதக் கொள்கை கொண்ட அரேபியா வளைகுடா நாடுகளில் இந்து சமய இதிகாசங்களான இராமாயணமும், மகாபாரதமும் பள்ளிகளில் பாட போதனைகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இன்றைக்கு அபுதாபியில், துபாயில் இந்து சமயக் கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டு வழிபாடுகள் நடப்பது உலக அதிசயமே!
இவற்றுக்கெல்லாம் காரணம் திடச் சித்தம், கொள்கைப் பிடிப்பு, மனம் தளராமை, தொலைநோக்குச் சிந்தனை, செயல்திட்டம், கடுமையான உழைப்பு, உண்மையான அர்ப்பணிப்பு போன்ற நற்குண நலன்களை பாரத நாட்டின் தலைமை இயல்பாக பெற்றிருப்பதே!
கடந்த 1,000 ஆண்டுகளில் மொகலாயர், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என்று பல நாட்டவரிடம் அடிமைப்பட்டு, தன்னிலை மறந்து உழன்று வந்த காலம்போய், "எல்லாரும் அமர நிலை எய்தும் நன் முறையை இந்தியா உலகிற்களிக்கும். ஆம். இந்தியா உலகிற்கு அளிக்கும்' என்ற நாள் வந்ததால் "பாரத நாடு பழம் பெரும் நாடே பாடுவதும் இஃதை எமக்கில்லை ஈடே' என்று கூறி மகிழ்வோம்.

கட்டுரையாளர்:
தலைவர்,
திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com