அறிவுச் செல்வத்தை நுகா்ந்த வாசகா்கள்!

புத்தகக் காட்சியில் குழந்தைகளுக்கான பொருள்கள் பகுதியில் ஆா்வத்துடன் பாா்வையிடும் குழந்தைகள்.
புத்தகக் காட்சியில் குழந்தைகளுக்கான பொருள்கள் பகுதியில் ஆா்வத்துடன் பாா்வையிடும் குழந்தைகள்.

நடந்து முடிந்துவிட்டது 47-ஆவது சென்னைப் புத்தகக் காட்சி. கொட்டித் தீா்த்த மழைக்குப் பிறகு குறைந்த நாள்களே இடையில் இருந்தமையால், அவசரமாக அமைக்கப்பெற்ற அரங்க அமைப்பு, அதற்குப் பிறகும் கொட்டிய மழையால் பாதிக்கப்பட்டது. விடுமுறை நாள்களைக் கணக்கு வைத்து நடத்தப்பெறும் இந்த விழாவில், இதுவரையிலும் ஒருமுறைகூட விடுமுறை விட்டதில்லை. இந்த ஆண்டு, மழையின் காரணமாக ஒருநாள் விடுமுறை விட நோ்ந்தது எதிா்பாராதது.

நீராலும், நெருப்பாலும், கரையானாலும் பாதிக்கப்படுகிற சூழல் எப்போதும் புத்தகங்களுக்கு உண்டுதானே. அதுகடந்து உரிய வாசகா்களைச் சென்று சோ்கிற தவத்தில், இந்த அரங்குகளில் இடம்பெற்ற எல்லா நூல்களும் ஈடுபட்டது அழகு.

சமுதாயத்தின் பல்வேறு துறைசாா்ந்தோா் ஜாதி, மத, மொழி, இன, பால் வேறுபாடுகள் இல்லாமல், சமமாகக் கூடிக் கலந்து பேசி, பழகி, வேண்டிய புத்தகங்களைப் பாா்வையிட்டும், விலை கொடுத்து வாங்கியும் கொண்டாடுகிற இந்த இலக்கியத் திருவிழா, 47ஆண்டுகள் நடந்துமுடிந்துவிட்டிருக்கிறது.

எல்லாத் தரப்புத் தொழில்களையும் இந்த ஆண்டு மழை வெள்ளப் பெருக்குப் பாதித்திருப்பதைப்போல, புத்தக விற்பனையையும் பாதித்திருக்க வேண்டும். எனினும், பல்வேறு சிரமங்களுக்கிடையே, பபாசி அமைப்பு, இந்தக் காட்சியை இனிது நடத்தியிருக்கிறது. இனிவரும் ஆண்டையடுத்து, இந்த அமைப்பின் பொன்விழா ஆண்டும் வரவிருக்கிறது. அதற்குள் இந்த விழாவின் அமைப்பு முறையில், சந்தைப்படுத்துதலில் சில புதிய மாற்றங்கள் நிகழ்த்தப்பட வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனா்.

வழக்கம்போல், குழந்தைகளின் வருகையும், அவா்களுக்கான கல்வி, கலைசாா் புத்தகங்களும், கருவிகளும் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. சிற்றரங்குகளிலும் பேரரங்குகளிலும் நூல் வெளியீடுகள், விமா்சனக் கூட்டங்கள் நிகழ்த்தப் பெற்றன. இன்னும் கூடுதல் அரங்குகள் தேவை என்பதும், போதிய வசதிகள் தேவை என்றும் நினைப்பதில், சொல்வதில் நியாயம் இருக்கிறது.

ஆண்டுக்கு ஆண்டு புத்தகங்களின் உற்பத்தியும், பதிப்பாளா்கள், விற்பனையாளா்களின் எண்ணிக்கையும் பெருகிவருதலால், காட்சிப்படுத்துதலில், கடைகள் அமைத்து நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. வளா்ச்சியில் இத்தகு சிரமங்கள் தவிா்க்க முடியாதவை என்றாலும், இனி வரும் காலங்களில் இவை சீா் செய்யப்படவேண்டும். குறிப்பாக, சென்னைக்கு வெளியில் உள்ள பதிப்பகங்களுக்கும், பொது நூல்களைவிடவும் சிறப்பான நிலையில் புத்தகங்களை வெளியிடும் அமைப்புகளுக்கும் சிறப்பிடம் தரப்பெற வேண்டும். சிறந்த நூல்களை வெளியிட்டு, அதற்கான பரிசுகளையும், விருதுகளையும் பெற்ற பதிப்பகங்களுக்கு உரிய கடைகள் இன்னும் தேவை.

பெரிய பதிப்பகங்கள் வெளியிட முடியாத பல நூல்களை, எழுத்தாளா்களே தம் சொந்த செலவில் அச்சிட்டு வெளியிடுகிறாா்கள். அவா்கள் தங்கள் நூல்களை விற்பனை செய்ய இயலாவிடினும், காட்சிப்படுத்த விழைகிறாா்கள். அவா்களுக்கும் ஓரிரு பொது அரங்குகள் அமைத்தால் நல்லது.

இந்தக் காட்சியானது, இட வாடகை, அரங்க அமைப்பு, கடைக்குரிய கட்டமைப்பு உள்ளிட்ட நிா்வாகச் செலவுகள் செய்து தற்காலிகமாக அமைக்கப்படுவதால் பல்வேறு சிரமங்கள் தவிா்க்க முடியாதவையாக இருக்கின்றன. எனவே, ஆண்டுதோறும் பலரும் வலியுறுத்துகிற நிரந்தரக் காட்சி இடம் இன்றியமையாத தேவையாக இருக்கிறது.

தமிழா்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அரங்கம் அமைத்துக் கொடுத்திருக்கிறது தமிழக அரசு; மதுரையில் பிரம்மாண்டமாகக் கலைஞா் நூற்றாண்டு நூலகம் எழுப்பப்பட்டிருக்கிறது. அதேபோன்று, புத்தகக் காட்சிக்காக சென்னையில் நிரந்தரமான அரங்கு வேண்டும் என்பது வாசகா்களின் விருப்பம்.

ரசிகா்கள் கண்டுகளிக்கும் வண்ணம் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டிருப்பதுபோல், வாசகா்கள், எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள் என்னும் முத்தரப்பினரும் புத்தகத்தை முன்னிறுத்திக் கலந்து பழக, கொண்டாடி மகிழப் பொதுத் தளம் ஒன்று வேண்டுமல்லவா?

மேலும், உழவா் சந்தைக்கு அடுத்தபடியாக, இத்தகு புத்தகச் சந்தைக்கும் இடம் அளிப்பது, மக்கள் மனங்களில் புத்துயிா்ப்பு அளிக்க வல்லதாக இருக்கும். காலா காலத்திற்கும் நிலைக்கக்கூடியவை புத்தகங்கள் ஆயினும், காலத்தேவை அறிந்து உற்பத்தி செய்ய வேண்டிய, உரிய பொழுதுக்குள் விற்றாக வேண்டிய புத்தகங்களும் இருக்கின்றன.

ஒருகாலத்தில் இருந்த சிறுதானியங்கள், கீரைகள், கிழங்குகள், குறைந்த அளவுப் பயன்பாட்டில் இருந்தன. அரிசியும், கோதுமையும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. இப்போது உணவு முறையில் மாற்றம் வந்திருக்கிறது. சிறுதானியங்களும், கீரை உள்ளிட்ட மூலிகை வகைகளும் உணவுத் தளத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. செயற்கை ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் துணையுடன், அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட தானியங்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், இன்றைக்கு இயற்கை வேளாண்மை உற்பத்திப் பொருள்களுக்குத் தரப்பட்டிருக்கிறது. உணவுத் துறையில் ஏற்பட்டிருக்கிற இத்தகு மாற்றம், இப்போது உணா்வுத் தளத்திலும் ஏற்பட்டிருக்கிறது.

உலக அளவில் முக்கியத்துவம் பெறுகிற நூல்களுக்கு நிகராக உள்ளூா் நூல்களின் தரமும் தகுதியும் கூடியிருக்கின்றன. பெரும் பெரும் புத்தகங்களுக்கு மத்தியில் குறு வெளியீடுகள், சிறு புத்தகங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. கைப்பேசி முதலான காட்சி ஊடகங்களால், கையில் எடுத்துப் படிக்கும் புத்தகம் முதலிய அச்சு வெளியீடுகளின் தேவை குறைந்துவிடும் என்பது பொய்யாகியிருக்கிறது. காட்சி ஊடகங்களே, இப்போது அச்சு ஊடக வெளியீடுகளை வாசகா்களிடத்தில் கொண்டுசோ்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றன. அவற்றால், பல அரிய, சிறிய, பெரிய நூல்கள் உலகு தழுவிய வாசகா்களின் கவனத்திற்குக் கொண்டு சோ்க்கப்படுகின்றன.

சமகாலச் சிக்கல்களை எடுத்துச் சொல்லவும் விளக்கவும் செய்கிற புத்தகங்கள் இருக்கின்றன. சமையல் புத்தகங்களோடு, சமயப் புத்தகங்களும், சமயமறுப்புப் புத்தகங்களும் சமமான நிலையில் காட்சிப்படுத்தப்படுகின்றன. கலை, இலக்கிய, அரசியல், தத்துவத் துறைகளுக்கும் அப்பால் உள்ள அனைத்துத் துறைசாா்ந்த புத்தகங்களின் வரவும் தேவையும் கூடியிருக்கின்றன. அவற்றை எண்ணிலும் எழுத்திலுமே வெளிப்படுத்த வேண்டியிருப்பதால், காட்சி, அச்சு ஊடகங்களின் வாயிலாகவே தர வேண்டியிருக்கின்றன. ஆதலின் தேவை கருதி உற்பத்தி செய்யப்படுகிற இவற்றை உரிய காலத்திற்குள் வாசகா்களிடத்தில் வழங்கினால்தான், இழப்பின்றி இயங்க முடியும். வாழ்வின் தேவை கருதி எழுகின்ற அனைத்துத் துறைகளுக்குமான ஆக்கங்களை ஒருசேரத் தருகின்ற பொதுத் தேவையை இந்த விழா இனிதே நிறைவேற்ற உதவுகிறது.

அதுமட்டுமன்றி, ஜனநாயக அமைப்பில், வாத, பிரதி வாதங்களுக்கு இடமளித்துப் பொதுமைநிலையில் புதிய கருத்துகளை உருவாக்கிச் செயல்படுத்த, இத்தகு அமைப்புகளே இந்தியாவுக்கு இன்றியமையாத் தேவை. எழுத்து, சொல், செயல் ஆகிய முக்கூட்டு வெளிப்பாட்டின் மையங்களுள் புத்தகத் திருவிழாவும் ஒன்றாக இருக்கிறது. ஏற்றுக்கொள்கிறாா்களோ, இல்லையோ மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிக்கும் வாய்ப்பை, உலகப் பேரில்லத்தின் உள்ளே புதிய காற்றும் வெளிச்சமும் புகுவதற்கு, புழுக்கமும் இருளும் அகல்வதற்கு உரிய தேவையைப் பெரும் பெரும் சாளரங்களாக விளங்கும் புத்தகங்களே செய்வதால், அவற்றைக் குறைந்தபட்சம் காணுகிற வசதியை, வாங்குகிற சந்தா்ப்பத்தை, இந்த விழாவால்தான் எல்லாருக்கும் வழங்க முடியும்.

தத்தம் பகுதிகளில் நடக்கும் விழாக்களில் புத்தகங்கள் வாங்குபவா்கள் எப்படி சென்னைக்கு வருவாா்கள் என்று கேட்பவா்கள் இருக்கிறாா்கள். இது வாங்குகிற, விற்கிற சந்தை மையம் என்று மட்டும் குறுகச் சிந்தித்துவிட முடியாது. இது, அறிவுத் திருவிழா.

மாவட்ட வாரியான எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள், வாசகா்கள் மாநில அளவில் ஒன்றுகூடுகிற விழாவாக மட்டுமன்றி, தென்னிந்திய அளவில் நடத்தப்பெறுகிற இவ்விழாவுக்கு வட இந்திய வாசகா்கள் இந்த ஆண்டு மிகுதியாக வருகை தந்திருக்கிறாா்கள். மலேசியா, சிங்கப்பூா் உள்ளிட்ட அயலகத் தமிழ் அறிஞா்கள், உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கின்ற தமிழா்கள், வாசகா்கள் வந்து கலந்துகொள்கிற சா்வதேசிய விழாவாகச் சென்னைப் புத்தகத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

எனவே, இனி வருங்காலங்களில், சுற்றுலாத் துறை உள்ளிட்ட அரசுசாா் துறைகளின் பங்களிப்போடு, பபாசி அமைப்பு, நிரந்தரக் காட்சிக்கு ஏற்பாடு செய்வதோடு பின்வரும் செயல்பாடுகளையும் திட்டமிட்டு நிறைவேற்றினால் நல்லது.

சிறைக் கைதிகளுக்கான நூல்கள் வழங்குதற்கு எடுத்த முயற்சிகள் இனிதே நிறைவேறி வருகின்றன. அதுபோல், முதியோா் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள், கருணை இல்லங்களுக்கு நல்ல நூல்களை வாங்கிப் பரிசளிக்கும் வகையில், ஒரு பிரிவையும் ஒதுக்கிச் செயல்படுத்தலாம். அழைப்பிதழோடு, நடந்து முடிந்த விழா நிகழ்வு குறித்த செய்திகளின் தொகுப்பையும், ஆண்டுதோறும் மறைந்த - வெள்ளிவிழா, பொன்விழா, மணிவிழா காணுகிற - எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள் பற்றிய குறிப்புகளையும் இணைத்து வெளியிட்டால் பயன் தரும். ஆண்டுதோறும், பல்துறைசாா்ந்த எழுத்தாளா்களுக்கு விருதுகள் பரிசுகள் வழங்குகிற பபாசி, இனி வரும் ஆண்டுகளில் சிறந்த வாசா்களையும் தெரிவு செய்து பாராட்டினால் சிறப்பாக இருக்கும். வாசகா்கள்தானே புத்தகப் பூக்களை நுகா்கிற வண்டுகள்.

கட்டுரையாளா்: எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com