உணர்ச்சிகள் நிரம்பி வழிந்த உலகக் கோப்பை!

டி20  உலகக் கோப்பையுடன் விராட் கோலி - ரோஹித் சர்மா
டி20 உலகக் கோப்பையுடன் விராட் கோலி - ரோஹித் சர்மாபடம் | பிசிசிஐ

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிக்கனியைப் பறிப்பது, சுவைப்பது என்று கேட்டிருக்கிறோம். ஆடுகள மண்ணைச் சுவைப்பதைக் கேட்டதுண்டா? நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, போட்டி நடைபெற்ற பார்படாஸ் மைதானத்தின் ஆடுகளத்திலிருந்து சிறிதளவு மண்ணை எடுத்துத் தன் வாயிலிட்டுச் சுவைத்தார்!

உண்மையைச் சொல்வதென்றால், ரோஹித் சர்மா மட்டும் உணர்ச்சிவசப்படவில்லை; அன்று அந்த கிரிக்கெட் மைதானத்தில் இருந்த அனைவருமே உணர்ச்சிவயப்பட்டிருந்தனர்.

வென்ற அணியினரும் தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாமல் கண்ணீர் வடித்தனர். கோப்பையை நழுவவிட்ட தென்னாப்பிரிக்க வீரர்கள் சிலரும் தேற்ற முடியாமல் தேம்பியழுதனர்.

உலகக் கிரிக்கெட் கவுன்சில் வெளியிடும் தர வரிசைப் பட்டியலில் பல்வேறு இந்திய வீரர்கள் இடம் பெற்றிருந்த நிலையிலும், நமது அணியால் 13 ஆண்டு காலமாக கிரிக்கெட் உலகக் கோப்பை எதையும் வெல்ல முடியவில்லை. பல காரணங்களினால் சர்வதேசப் போட்டிகளில் பலமுறை நமது இந்திய அணி இறுதி வெற்றிக்கனியைப் பறிக்காமல் தோல்வியடைய நேர்ந்தது.

தற்பொழுது நடந்து முடிந்திருக்கும் டி20 ஐசிசி கிரிக்கெட் போட்டிகளின் முதல் சுற்று, சூப்பர்8, அரை இறுதி ஆகிய அனைத்திலும் தொடர்ந்து வெற்றி பெற்ற இந்திய அணி இறுதி ஆட்டத்தில் நுழைந்ததும் அனைவரின் மனங்களிலும் உற்சாகம் இருந்தபோதும், சிறிது எச்சரிக்கையும் இருந்தது.

இந்த முறையாவது வெற்றி கிட்டுமா அல்லது பழைய கதையே தொடருமா? என்ற ஐயத்துடன் கூடிய கேள்வி பலரின் மனதில் தொக்கி நின்றது. அந்த ஐயத்தைக் களைந்து நமது அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றியது நமது நாடு முழுவதிலும் பெருமிதத்துடன் கூடிய சந்தோஷ உணர்வைத் தட்டி எழுப்பியது. நமது அணி வெற்றியைச் சுவைத்த அந்த நள்ளிரவு வேளையிலும் நமது நாட்டின் பல்வேறு நகரங்களின் தெருக்களிலும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கூடிப் பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டங்களுடன் வெற்றியைக் கொண்டாடித் தீர்த்தனர்.

ரசிகர்களின் மனநிலையே இப்படி என்றால், மைதானத்தில் இருந்த வீரர்களின் நிலை எப்படிப்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பில் மிதந்திருப்பார்கள்!

போட்டியின் இறுதி ஓவரை மிகவும் திறமையாக வீசி இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த ஹர்திக் பாண்டியாவின் கன்னத்தில் அணித்தலைவர் ரோஹித் சர்மா முத்தமிட்டுப் பாராட்ட, நீண்ட கால ஏமாற்றங்களுக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைப்பதற்கு தாமும் ஒரு கருவியாக இருந்ததை எண்ணி பாண்டியா ஆனந்தக் கண்ணீரைப் பொழிய... அந்த இடமே உணர்ச்சிக்கடலில் மிதந்தது.

பாண்டியாவின் கண்ணீருக்கு அதுமட்டுமே காரணமாக இருந்திருக்க முடியாது. கடந்த ஐபிஎல் போட்டித்தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்டியா ஏற்றதை ஜீரணித்துக் கொள்ள முடியாத மும்பை ரசிகர்கள் பலரும் அவர் விளையாடும் மைதானங்களில் கூச்சலிட்டதுடன், அவரைப் பல விதமாக கேலி செய்யும் பரிகாச காணொலிகளையும் வெளியிட்டு வேல் பாய்ச்சிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா டி20 உலகக் கோப்பையின் இறுதிக் கணங்களில் ஆக்ரோஷமாக விளையாடி, அணித் தலைவர் ரோஹித் சர்மாவுக்கு முழு உறுதுணையாக இருந்து, கூட்டுப் பங்களிப்பின் முக்கியத்துவத்தை ரசிகர்களுக்கு அடிக்கோடிட்டு காட்டினார். வெற்றி உற்சாகத்துக்கு இடையேயும் முன்னர் எதிர்கொண்ட கேலிகளின் நினைவுகள் எழும்பி பாண்டியாவின் கண்கள் நிரம்பியிருக்கலாம்.

கடந்த 2007-ஆம் ஆண்டு வங்க தேசத்துக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்தது. இதில் கோபமடைந்த ராஞ்சி நகர கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட்டின் கனவுநாயகனாகிய தோனியின் வீட்டையே தாக்கினார்கள் என்கிறபோது, ரோஹித் சர்மாவை விரும்பும் ரசிகர்கள் பாண்டியாவுக்கு எதிராகக் கிளர்ந்தது ஒரு விஷயமே இல்லை. எனினும் இந்த விஷயத்தில் இறுதி வெற்றி பாண்டியாவிற்கே என்றுதான் கூற வேண்டும்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு முதல் முறையாகத் தகுதி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் வெற்றியை தங்கள் கைக்குள் வசப்படுத்திவிட்டதாகவே தோற்றமளித்தது. தென்னாப்பிரிக்க அணி வீரர்களும் ரசிகர்களும் மிகவும் உற்சாகமாக இருந்தனர்.

பும்ரா, பாண்டியா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சும், பவுண்டரி லைனில் தாவியபடி, சூரியகுமார் யாதவ் பிடித்த அற்புதமான கேட்சும் தென்னாப்பிரிக்காவின் வசம் செல்லவிருந்த வெற்றிக்கனியை திசைமாற்றி ரோஹித் சர்மாவின் மடியில் விழ வைத்துவிட்டன.

தோல்வியைத் தாள முடியாத மில்லர், ரபாடா, டிகாக் உள்ளிட்ட தென்னாப்பிரிக்க வீரர்களின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.

இந்த போட்டியுடன் இளைய தலைமுறையினருக்கு வழிவிட்டு விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய மூத்த வீரர்கள் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஒய்வுபெறுவதாக அறிவித்தனர். அனுபவஸ்தராகிய பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் பதவிக் காலமும் முடிவடைவது இந்திய ரசிகர்களுக்கு மனவலியை அளிக்கும் விஷயமாகும். இவர்களின் பங்களிப்பில்லாத இந்திய டி20 அணியை சுலபமாக கற்பனை செய்ய முடியவில்லை.

வாழ்வில் மறக்க முடியாத மிகச் சிறந்த இறுதி ஆட்டத்தை வென்று, டி20 உலகக் கோப்பையை ஏந்தி நிற்கும் நமது அணியைக் காணும்போது, சிறிது வேதனை கலந்த ஆனந்த உணர்வு ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகரின் உள்ளத்திலும் கடந்து வரும் என்று தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com