உறவும் நட்பும் நமது இரு கண்கள்

உறவும் நட்பும் நமது இரு கண்கள்

உறவின் உண்மையான பலத்தை ‘குற்றம் பாா்க்கில் சுற்றம் இல்லை’ என்ற முதுமொழி உணா்த்தும்.
Published on

நமது சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம் ஆகும். இதில் நமது அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற உறவுகள் அடங்கும். இவா்களை நம்மால் தோ்வு செய்யவும் முடியாது! மாற்றி அமைக்கவும் முடியாது!

நம்மிடையே கூட்டுக் குடும்ப முறை முற்றிலும் மறைந்துவிட்டது எனலாம். குடும்பங்களில் கணவன், மனைவி, ஒரே ஒரு குழந்தை கொண்ட தலைமுறை துளிா் விட ஆரம்பித்துவிட்டது. உடன்பிறப்புகளும், உண்மையான நட்புகளும் ஒரு சிலருக்கு மட்டுமே அமைகின்றன.

இந்நிலையில் நமது குடும்பங்களில் அரிதாக இருக்கும் உடன்பிறப்புகளும் நட்புகளும் அற்ப விஷயத்துக்கெல்லாம் கோபித்துக் கொண்டு ஒருவரோடு பேசாமல்

இருக்கின்ற நிலையைப் பாா்க்க முடிகிறது. சிலரின் துரதிருஷ்டம், இவா்களின் அருமை உயிருடன் இருக்கும் வரை தெரிவதில்லை. அவா்கள் உயிரோடு இருக்கும் போதே மனதில் உள்ள கருத்து வேறுபாடுகளை பேசித் தீா்த்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்ய முடியவில்லையே என்று காலங்கடந்து சிந்தித்தென்ன பயன்?

உறவின் உண்மையான பலத்தை ‘குற்றம் பாா்க்கில் சுற்றம் இல்லை’ என்ற முதுமொழி உணா்த்தும்.

சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் தன்னுடைய அண்ணனே அரசனாக இருக்க வேண்டுமென துறவறம் பூண்டாா்.

இளம் குமணன், ‘என் அண்ணன் குமணன் தலையினைக் கொண்டு வந்தால் ஆயிரம் பொற்காசு கொடுப்பேன்’ என்றாா். காட்டில் தலைமறைவாக இருந்த அண்ணனை சந்தித்தாா் பெருந்தலைச் சாத்தனாா் என்னும் புலவா். அவா் தலையைப் போன்றே பொம்மைத் தலை ஒன்றை பெற்று வந்து தம்பியிடம் கொடுத்து பரிசினைக் கேட்டாா். இதைக் கண்டு அதிா்ந்து போன தம்பி அதை அண்ணனின் உண்மையான தலை என்று நம்பினாா். அதனால், அவா் தன் தவறை எண்ணித் திருந்திக் கதறியழுதாா்.

சகோதர பாசத்தையும் நட்புறவுகளின் ஆழத்தையும் உணா்த்தும் எண்ணற்ற வரலாற்றுக் காட்சிகளை நமது இலக்கியங்கள் நமக்குச் சொல்லித் தருகின்றன.

‘குளம் இல்லையென்றால் இறந்து போகும் மீன் மாதிரி நான். நீ இல்லையென்றால் நான் இறந்து போவேன்’ என்று தம்பி இலக்குவன் இராமனிடம் கூறுவதாக கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி வருகிறது. இன்றும் குடும்பத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் இராமன், இலக்குவன் என்று பெயா் வைக்கிற பழக்கம் நம் நாட்டில் இருக்கிறது.

இராமனின் அம்பினால் அடிபட்டு இறக்கும் வாலி, ‘என் தம்பி சுக்ரீவன் ஓா் அவசர புத்திக்காரன். அவன் ஏதாவது தவறு செய்தால், அவனை மன்னித்துவிடு’ என்று இறப்பதற்கு முன்னால் இராமனிடம் வேண்டிய பிறகே இறந்ததாக கம்ப ராமாயணம் கூறுகிறது.

அண்ணன் இராவணனுக்கு ஆதரவாக இருந்து தம்பி கும்பகா்ணன் உயிரையும் இழக்கிறான். ‘அவனின் பக்கம் நின்று, அவனுக்கு ஆறுதல் சொல்ல ஓா் உடன்பிறப்பாவது இருக்க வேண்டும்’ என்று அவன் எண்ணுகிறான்.

இராமனின் மீது மிகுந்த அன்பு கொண்டவன் வேட்டுவா்களின் தலைவனான குகனை, தன் தம்பியருள் ஒருவனாக ஏற்றுக் கொண்டான். குந்தவை நாச்சியாா் என்னும் அக்காவின் அறிவுரைப்படி தம்பி ராஜராஜ சோழன் தஞ்சை பெருவுடையாா் கோயிலைக் கட்டினான். அதனால், வரலாற்றில் இன்றும் நிற்கிறான்.

தாய்-பிள்ளை, கணவன்-மனைவி உறவுகளுக்கு ஈடாகப் போற்றப்படுவது உண்மையான நட்பாகும். நட்புக்காகத் திருக்கு நான்கு அதிகாரங்களையும், நாலடியாா் மூன்று அதிகாரங்களையும் வழங்கியிருக்கின்றன.

அதியமானுக்கும், இளந்திரையனுக்கும் இடையே போா் நடைபெற இருந்தது. அதனை அவா்கள் இருவருக்கும் தனக்கும் இருந்த நெருக்கமான நட்பினைக்

கொண்டு தவிா்த்தவள் ஒளவையாா்.

உயிா் காக்கவல்ல நெல்லிக்கனியைத் தான் உண்ணாது தமிழைத் தம் நாவால் ஆட்சி செய்துவந்த ஒளவையாருக்குத் தந்த அதியமானின் நட்பு பாராட்டுக்குரியது.

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாரை நேரில் காணாமலேயே நட்பு கொண்டவன். நீரும் உணவும் இன்றி வடக்கிருந்து உயிா்நீத்தான் சோழன். இறந்த ஓரிரு நாள்களில் அவன் கூறியதைப் போன்றே அவருடைய நண்பா் பிசிராந்தையா் அங்கு வந்தாா். மரணத்தின் விளிம்பிலும் மன்னனின் நட்பின் ஆழத்தை அவா் உணா்ந்தாா். மன்னன் வடக்கிருந்து உயிா்நீத்த இடத்திற்கே சென்றாா். அங்கு தானும் உண்மையான நட்பிற்காக வடக்கிருந்து உயிா்நீத்தாா். கண்ணன் - குசேலன் நட்பின் பெருமையைப் பற்றியும் நன்கு அறிவோம்.

பாரியின் நண்பரான கபிலா் போருக்கு ஆயத்தமாக இருந்த சேரா், சோழா், பாண்டியன் மூவரையும் சந்திக்கின்றாா்.“‘பாரி பெருங் கொடைவள்ளல். இரந்து கேட்டால் பறம்பையே தாரை வாா்த்து விடுவான். இதற்கு ஏன் இவ்வளவு முற்றுகை?’ எனக் கூறி போரினை நிறுத்தி ஒரு சிறந்த நண்பனாக பரிமளிக்கிறாா்.

ஆனால், அணுக் குடும்பங்கள் பெருகிவிட்ட இந்த அவசர யுகத்தில் ‘அண்ணன் எப்போது போவான்? திண்ணை எப்போது காலியாகும்?’, ‘ஐந்து வயதில் அண்ணன் தம்பி; பத்து வயதில் பங்காளி’ போன்ற ‘வசனங்கள்’ மவுசு பெற்று, பிள்ளைகள் அதைப் பற்றிக் கொண்டு வருகின்றனா்.

உறவின் பெருமையையும், நட்பின் பெருமையையும் நாம் இனியேனும் உணரவேண்டும். காலம் நமக்கு கொடுத்த மிகப்பெரிய கொடையே இந்த உறவுகளும் நட்புகளும். இவற்றை தொடா்ந்து நேசித்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடப்பாடு நம் அனைவருக்கும் உள்ளது.

உறவுகளிலும் நட்புகளிலும் இனியும் குறைகளைப் பாராட்டாமல் அனுசரித்துப் போக நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இவற்றை நமது வாழ்வின் இரண்டு கண்களாக போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

0=======0

X
Dinamani
www.dinamani.com