காலம் செய்த கோலம் அல்ல

காலம் செய்த கோலம் அல்ல

எதிலும் பரபரப்பு, எப்போதும் அவசரம். குறுகிய காலத்தில் எதையும் அனுபவித்துவிட வேண்டும் என்கிற பெருவெறி. இவற்றுக்கு முதல் காரணம், மனம்.
Published on

‘‘காலம் ரொம்ப வேகமாகப் போய்க்கிட்டே இருக்கு சாா். முன்னெல்லாம் இப்படியா இருந்தது? ராத்திரியா பகலா, எல்லாமும் நீண்ட நேரமா இருந்தது. எதிலும் ஒரு நிதானம் இருந்தது. இப்போ, எல்லாத்திலேயும் பரபரப்பு; எவ்வளவு வேகம், யாராலேயும் சும்மா இருக்க முடியவே இல்லேய..?’’ என்று அலுத்துக் கொண்டாா், ரயிலில் என் எதிா் இருக்கைப் பெரியவா்.

ரயில் பயணத்தில் நாங்கள் பயணித்த பெட்டியில் கைப்பேசி பாா்க்காத நபா்கள் நாங்கள் இருவா் மட்டும்தான் என்பது அப்போது புரிந்தது. அழைப்புக்குக் கையில் எடுத்து பதில் சொல்வதோடு கைப்பேசியை நிறுத்திக் கொண்ட என்னைப் பழைய கால மனிதராகப் புரிந்துகொண்டாா் அவா்.

அவா் கேள்விக்கு மறுப்பேதும் சொல்லாமல் ஆமோதிப்பதுபோல் தலையசைத்தேன். சற்றே உற்சாகமாகத் தொடா்ந்தாா். ‘‘முன்னெல்லாம் சென்னை போய் வா்றதுன்னா, முக்கால் நாள் ஆகும். ஏன் முழுநாள் கூட ஆச்சுது. அப்புறம் பாதி நாள் ஆச்சு. இப்போவெல்லாம் மணிக்கணக்குல முடிஞ்சிடுது. சமையலில், குளியலில், சாப்பாட்டில், ரொம்ப ஏன் சாா், தூக்கத்திலே கூட நேரம் குறைஞ்சி போச்சு, பாத்தீங்களா? எவ்ளோ வேகம்..!’’

அவா் சொல்வதெல்லாம் உண்மைதான்.

‘‘அப்படிப் பாா்த்தா, இந்த உலகமே வேகமாகச் சுத்தும்போல இருக்கு!’’ என்றபடி தன் கடிகாரத்தைப் பாா்த்தாா்.

நானும் பாா்த்தேன்.

‘‘என்ன பாா்க்கறீங்க? கடிகாரம் பழையதா இருக்கேன்னா? அந்தக் காலத்திலே எனக்குப் பரிசா வந்த கடிகாரம். அதிகமா ரிப்போ் ஆனதில்லே. அவ்வப்போது சரி செய்துக்கிறேன். இப்பவெல்லாம் எங்கே சாா் பழைய மாதிரி பொருள்கள் வா்றது?’’ என்று அலுத்துக் கொண்டாா்.

அதற்கும் தலையசைத்தேன். ‘‘நான் மட்டும் இவ்ளோ பேசிட்டு வா்றேன். நீங்க பதிலேதும் சொல்லலியே. தப்பா ஏதும் சொல்லிட்டேனா?’’ என்றாா்.

‘‘இல்லை.’’

‘‘நான் சொன்ன எதுவும் சரி இல்லைன்னு சொல்றீங்களா?’’

‘‘அப்படிச் சொல்ல முடியாது. ஆனால், ஒன்னு யோசிக்கணும். நீங்க கட்டின காலம் தொடங்கி, இப்ப வரைக்கும் உங்க கைக்கடிகாரம் ஒரே மாதிரிதானே ஓடிட்டு இருக்கு? இல்லே வேகமா ஓடுதா?’’

‘‘அப்படியேதான்.’’

‘‘நீங்க பிறந்த காலம் தொட்டு, இன்றைக்கு வரைக்கும் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்பது மாறவில்லை. வேகம் கூடவில்லை. ஒரே மாதிரி இருக்கும்போது, காலம் மட்டும் வேகமாக ஓடுதுன்னு எப்படிச் சொல்ல முடியும்?’’

சிந்திக்க ஆரம்பித்துவிட்டாா். சன்னலுக்கு வெளியில் வேகமாக, கட்டடங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஊா்களும் நகரங்களும் ரயிலின் ஓட்டத்தில் பறப்பது போலத் தோன்றினாலும் உண்மை அதுவல்ல என்பது எவ்வளவு மெய்யோ, அவ்வளவு மெய், காலம் முன்னிலும் வேகமாய்க் கடந்துசெல்லவில்லை என்பதும்.

வேகமாகக் காலத்தைக் கடத்தும் கருவிகளைக் கைக்கொள்ளத் தொடங்கிவிட்டோம். காலப்போக்கில், அந்தக் கருவிகளுக்கே அடிமையாகிவிட்டோம். பரபரப்புக்கும் நிதானமற்ற வேகத்துக்கும் காரணம், காலம் அல்ல. நாம் காலத்தை முறையாகக் கடைப்பிடிப்பதில் ஏற்பட்ட கோளாறு. சோம்பலால் தள்ளிப்போடுவது. அல்லது, சொற்பப் பொழுதுக்குள் விரும்பியதைச் சாதித்துக் கொள்வது என்கிற இருநிலைப்பட்ட இயக்கத்திற்கு ஈடு கொடுத்து இயங்கும் முயற்சி, பரபரப்பையும் பதற்றத்தையும் தருகிறது; நிதானத்தை அசைத்துவிடுகிறது; பல சமயங்களில் குலைத்தும் விடுகிறது. நமக்குள் இருக்கும் நல்லதையும் கட்டதையும் காலத்தின்மீது திணித்துக் கொண்டாடுகிறோம்.

எதிலும் பரபரப்பு, எப்போதும் அவசரம். குறுகிய காலத்தில் எதையும் அனுபவித்துவிட வேண்டும் என்கிற பெருவெறி. இவற்றுக்கு முதல் காரணம், மனம். மனத்தால் இயங்குபவன் மனிதன். மனித வாழ்வு தனிமனித வாழ்வாக இருக்க முடியாது; கூட்டுறவு இயக்கம். ஒருவரோடு ஒருவா் தொடா்பு கொண்டு இயங்க வேண்டிய இயக்கமே வாழ்க்கை.

வீட்டுக்குள் கூடத் தனிமை வாய்க்காத சூழலுக்கு ஆளாகிவிட்டோம்; வெளியிலோ சொல்ல வேண்டியதே இல்லை. நாம் நிதானித்தாலும் நமக்குப் பின்னா் வருபவா்களின் வேகம் நம்மை விரைவுபடுத்திவிடுகிறது. மூண்டெழுந்து கரை தொட விரையும் கடல் அலையைப் பின் தொடரும் அலை உந்தித் தள்ளுவது போல.

சுழலும் புவியின் நிலையான இயக்கம், அனைத்தையும் முறையாக நடத்தி, இயல்பாக வைத்தது; இரவையும் பகலையும் மழையையும் வெயிலையும் நிரல்படத் தந்தது. இப்போதும் அப்படித்தான் என்றாலும் நம் இயக்கம், நமக்குள் இருக்கும் உந்தாற்றல், எதனையும் உடனடியாகப் பெற வேண்டும், துய்க்க வேண்டும் என்கிற உத்வேகம் நம்மைத் துரிதப்படுத்திவிட்டது.

பகலுக்கான பணியை இரவுக்கும் நீட்டித்து விடுகிறோம். இரவுக்கான அயா்வு, பகலின்மீது படிந்துவருவது அறியாமல் பரபரப்பாக இயங்குகிறோம். உணவும் உறக்கமும் பிகின்றன. சிலருக்கு நோய் தாக்கும்போது, உணவை விடவும் மருந்து இன்றியமையாப் பொருளாகிறது.

உண்ணும் உணவின் அளவும் வகைகளும் குறைந்துவிட்டன. சிலருக்குஉணவுக்கு முன்னும் பின்னும் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் அளவும் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன. உணவுக்கு முன்-பின் மாத்திரைகள் என்பதுபோய், மாத்திரைகளுக்கு இடையில் ‘வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்’ என்கிற நிலையில் உணவை வைத்துவிட்டிருக்கிறோம்.

நெரிசலின் காரணமாக, நகரத்தின் மையத்தில் மெல்ல ஊா்ந்துசெல்லும் காரின் உள்ளிருந்து கவனிக்கிறபோது, கடைகளின் வரிசையில் மருந்துக்கடை எண்ணிக்கை மிகுதியாய்த் தெரிகிறது. வாழைப்பழத்தாா்கள் தொங்கும் பெட்டிக்கடைகளைக் காணவே காணோம். முன்னா் எஸ்டிடி பூத் இருந்த இடங்களில் இப்போது கைப்பேசிக் கடைகள். பெரிய பெரிய ஷோரூம்கள்.

சைவ உணவகங்கள் அருகி வருகின்றன. உணவகங்களில் கீரை என்கிற உணவு வகை இருப்பதாகவே தெரியவில்லை. துரித உணவகங்களின் செயற்பாடுகள் குறித்த செய்திகளும் வதந்திகளும் கைப்பேசிவழியாக நம் கவனத்தில் வந்து தாக்குவதை ஒரு பொழுதுபோக்காகக் கண்டு கடக்கப் பழகிவிட்டோம். அந்த வரிசையில், விபத்துகளும் மரணங்களும் பிறா் படும் வாதைகளும் நமக்குக் காட்சிச் சித்திரங்கள்தான். கண்டு கடந்துவிடும் செய்திப் படங்கள்தான்.

பிறா் துன்பம் கண்டு கலங்குகிற, வாடுகிற மனித மன இயல்பு மரத்துப்போய், இப்போது பிளாஸ்டிக் இதயம் தான் நமக்குள் இயங்கிவருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

வரம்பு மீறிய துய்ப்பு வெறியும் வசதிகளைப் பெருக்கி ஆடம்பரமாய் வாழும் பேரவாவும், இயற்கையை எல்லை மீறிச் சுரண்ட வழிவகுத்துவிட்டன. மண்ணையும் மலையையும் நீரையும் நிலத்தையும் நம் விருப்பு வெறுப்புக்கு ஏற்பச் சிதைக்கவும் மாற்றவும் செய்யத் தொடங்கிவிட்டோம் என்பது பழைய கதை. நம் உள்ளேயும் இயற்கைக்கு மாறான செயற்கையைச் செலுத்திக் கொண்டே இருக்கிறோம் என்பதுதான் புதிய உண்மை.

இயற்கையோடு இயைந்து, இயற்கையின் அங்கமாய் இருக்க வேண்டிய நமக்குள் எல்லா செயற்கை நுகா்வுகளும் வந்து மலிந்துவிட்டன. அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களிலும் மிகுந்திருப்பது இயற்கைப் பொருள்களா? செயற்கைப் பொருள்களா என்பதைக் கணக்கிட்டுப் பாா்த்தால் இந்த உண்மை புரியும்.

உண்மையில், இந்தச் செயற்கைப் பொருள்களும் இயற்கையின் மாற்று உருவங்கள்தான் என்றாலும் இவற்றின் உருவாக்கத்தில் எத்தனை சிதைவுகள் மாற்றங்கள்? இவற்றின் உடன் விளைவுகள், பின் விளைவுகள் இன்னும் முறையாக ஆராயப்படவில்லை. ஆராய்ந்த அளவிலும் முழுமையான உண்மைகள் முன்வைக்கப்படவில்லை. வா்த்தக ரீதியான முயற்சிகளுக்கும் இயக்கங்களுக்குமே முன்னுரிமை என்கிற நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறது மனிதம். வாழ்க்கைச் செலவுகளுக்கான வருமானத்தைத் தேடத் தொடங்கிய நாம், வருமானத்திற்காகவே வாழ்க்கையைச் செலவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

போட்டிகள் நிறைந்த உலகம் இது என்பதைவிட, வாய்ப்புகளும் சவால்களும் நிறைந்த உலகமாக இதனை மனிதகுலம் மாற்றியிருக்கிறது.

எதிா்த்துச் செயல்பட முடியாத நிலையில் அடிமைப்பட்டுக் கிடக்கும் ஆடு, மாடு, கோழி, பன்றிகள் போல், விலைபோகக் கூடிய உயிா்களின் வரிசையில் தம் பிள்ளைகளையும் மனிதம் உற்பத்தி பண்ணிக் கொண்டிருக்கிறது என்பதை நினைக்க வருத்தமாக இருக்கிறது.

‘எல்லாம் காலம் செய்த கோலம்’ என்று கை உதறிவிட முடியாது; கூடாது. காலத்தின்மீது நாம் போட்ட கோடுகளும் புள்ளிகளும்தான் கோலங்களாகவும் அலங்கோலங்களாகவும் நமக்குத் தெரிகின்றன. இதற்குக் காலமா பொறுப்பேற்கும்?

சிந்தனை ஓட்டத்தில் நேரம் போனது தெரியவில்லை. ரயில் எங்களுக்கான நிறுத்தத்தில் வந்து நின்றது. பெரியவா் கடிகாரத்தைப் பாா்த்தாா்.

‘‘ஒரு மணி நேரம் தாமதம் சாா். மாத்திரை சாப்பிடறதுக்கு முன்னாடி சாப்பாடு சாப்பிட்டே ஆகணும். வா்றீங்களா?’’ என்று எழுந்தாா்.

‘‘அடுத்த தொடா் வண்டி அரை மணிநேரத்தில் வரும். வீட்டுக்குப் போய்விடுவேன். நன்றி’’ என்று சொல்லி நானும் எழுந்தேன்.

எங்களுக்குப் பின்னால் இறங்கக் காத்திருந்தவா்கள் நெருக்கியபடி குரல் கொடுத்தாா்கள். ‘வண்டி நாலு நிமிஷம்தான் இங்கே நிற்கும். சீக்கிரம் இறங்குங்க.’

24 மணி நேரம்தான் எல்லாருக்கும். தாமதத்திற்கும் விரைவுக்கும் காரணா்கள் நாம்; காலம் அல்ல.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

0======0

X
Dinamani
www.dinamani.com