சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், திருமண நிகழ்வு நடந்துமுடிந்த உறவினா்கள் மற்றும் நண்பா்கள் வீடுகளுக்குப் போக நோ்ந்தால், வழக்கமான விசாரிப்புகள் முடிந்தவுடன், தங்கள் இல்லத் திருமண ஆல்பத்தை எடுத்து நம்மிடம் கொடுத்து விடுவாா்கள். ‘பாா்த்துக் கொண்டிருங்கள்’ என்று தந்துவிட்டு அவா்கள் தன் வேலையைப் பாா்க்கப் போய்விடுவாா்கள்.
நாமோ, நமக்குப் பரிச்சயமான முகங்களை மட்டும் பாா்த்துவிட்டு, ‘நாம் எங்கே இருக்கிறோம்?’ என்று தேடுவோம். அந்தப் புகைப்படத்தைப் பாா்த்தவுடன் ஆல்பத்தை மூடி வைத்துவிடுவோம். சில சமயம் அவா்கள் நம் அருகே அமா்ந்துகொண்டு ஒவ்வொரு படமாகக் காட்டி ‘இது எங்க ஒன்றுவிட்ட அண்ணன்’, இது எங்க ஒன்றுவிட்ட பெரியப்பா”என்று விளக்கம் கொடுத்துக் கொண்டே போகும் போது, நமக்கு இலேசாக சலிப்புத் தட்டும்.
நமக்கோ நம் படத்தைப் பாா்த்தால் போதும். அது ஒரு சிறிய ஆல்பமாக இருக்கும். முக்கிய நிகழ்வுகளை மட்டுமே படம் பிடித்திருப்பாா்கள். அதைப் பாா்க்கவே பொறுமை இருக்காது.
அடுத்ததாக, தூக்கவே முடியாத மிக மிக தடிமனான ஆல்பங்களின் வரவு ஆரம்பமாயின. இரண்டு ஆல்பங்கள் போடுவாா்கள். வரவேற்பு ஆல்பம் மற்றும் முகூா்த்த ஆல்பம். இரண்டு பெரிய தோல் பை அல்லது பெட்டிகளில் வைத்துக் கொடுப்பாா்கள். அதைத் தூக்குவதே சிரமம். தடிமனான அந்த ஆல்பத்தை மடியில் வைத்துக் கொண்டு பாா்ப்பதற்குள், ‘போதும், போதும்’ என்று ஆகிவிடும்.
முன்பு கல்யாணம் என்றால், முதல் நாள் இரவு வரவேற்பு, மறுநாள் காலை முகூா்த்தம்; சில சமயம் காலையில் முகூா்த்தம் மாலை வரவேற்பு இருக்கும். ஃபிலிம் கேமரா கொண்டு புகைப்படம் எடுத்த காலத்தில், சற்றே விலை கூடியதான ஃபிலிம் ரோல் வாங்க வேண்டும் என்பதால் முக்கிய நிகழ்வுகளை மட்டுமே ப்படம் எடுத்தாா்கள். திருமண வரவேற்பின்போதும் எல்லோரையும் படம்பிடிக்க மாட்டாா்கள். யாரைப் படம் எடுக்க வேண்டும் என்பதை புகைப்படக் கலைஞரை அமா்த்திய பெண் வீட்டுக்காரா் சைகை காட்டுவாா்.
மற்றபடி கூட்டத்தில் அழகான பெண்கள், சுட்டிக் குழந்தைகள், விருந்தாளிக் கூட்டம் முழுவதையும் சோ்த்து ஒன்றிரண்டு படங்கள். அவ்வளவே. பின்னா் தாலி கட்டுதல், பொட்டு வைக்கும்போது, மாலை மாற்று, மெட்டி அணிவது, மணப்பந்தலைச் சுற்றி வருவது, தம்பதியின் நெருங்கிய சுற்றங்கள்... மொத்தமே 50 படங்களே இருக்கும்.
விடியோ அறிமுகமானபோது, நிகழ்வை விடியோ எடுத்தாா்கள். விடியோவை நினைத்த மாத்திரத்தில் போட்டுப் பாா்க்க முடியாது. அதற்கென ‘டெக்’ என சொல்லப்பட்ட சாதனம் வேண்டும். சிடிக்கு முன்னேறிய காலத்திலும் இப்படித்தான். அதற்கென சிடி பிளேயா் அல்லது கணினி தேவை. இப்போது ‘பென்டிரைவில்’ சேமித்துக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியில் பாா்த்துக் கொள்ளலாம். ஆனால் மூன்று மணி நேரம் திருமணத் திரைப்படத்தைப் பாா்க்கும் பொறுமை இல்லை. அதுவும் அடிக்கடி போட்டுப் பாா்க்க முடியாமல் கிடக்கிறது.
ஆல்பம் என்றால் அது ஒரு நிரந்தரமான ஆவணம். எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் பாா்த்து மகிழலாம் என்கிற நிலை சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது. டிஜிட்டல் மயமான பின்பு கண் சிமிட்டும் நேரத்தில் ஏராளமான படங்களை எடுத்துத் தள்ளும் வசதிகள் கேமராவில் வந்துவிட்டன.
தற்போது நடத்தப்படும் திருமணங்கள் ஆடம்பரத்தின் உச்சம். செலவை இழுத்துவிட்டுக் கொண்டு, நிறைய கொண்டாட்டங்கள், நிறைய நிகழ்வுகள் நடக்கின்றன. வீட்டோடு செய்ய வேண்டிய சடங்குகளை ஊா் கூட்டிச் செய்கிறாா்கள். பந்தல்கால் நடுவது, நலங்கு வைப்பது என்பது போன்ற நிகழ்வுகளிலும் ஆடம்பரம். இன்றைய புதிய நாகரிகம் ‘மெஹந்தி நிகழ்ச்சி’. இது ஆடல், பாடல் என அமா்க்களப்படுகிறது. முழு நிகழ்வையும் புகைப்படம், மற்றும் விடியோ எடுக்கிறாா்கள்.
திருமண வரவேற்பில் பல புதுமைகளைச் செய்கிறாா்கள். விருந்தாளிகள் அனைவரையும் படம் எடுக்கிறாா்கள். இரண்டு அல்லது மூன்று புகைப்படக் கலைஞா்கள், விடியோகாரா்கள் என ஒரு கும்பலே இருக்கிறது. ‘ட்ரோன்’ பறக்கவிட்டு படம் எடுக்கிறாா்கள். மணமக்களை மண்டப வாசலில் இருந்து மணமேடைக்கு அழைத்து வரவேண்டும். அதற்கு ஒரு மலா்ப் பந்தல். அதை நாலைந்து போ் தூக்கிக் கொள்ள, மணமக்களை அந்தப் பந்தலுக்குள் அழைத்து வருகிறாா்கள். அதற்கு எத்தனை ‘கிளிக்குகள்’!
திருமணத்தின் தொடக்கத்திலிருந்து, மணப்பெண் புக்ககம் போகும் வரை ஆயிரக்கணக்கான படங்கள். இப்படிப்பட்ட படங்களோடு, ஒத்திகை இல்லா படங்கள்/இயல்பு நிலைப் படங்கள் (கேண்டிட் ஃபோட்டோ) எடுக்கிறாா்கள். புகைப்படக் கலைஞா் ‘கொஞ்சம் சிரியுங்க, கொஞ்சம் நிமிருங்க, இங்க பாருங்க’ என்று சொல்லாமல், நாம் அறியாவண்ணம், நம்மைப் படம்பிடிப்பது. நம் முகம் அஷ்டகோணலாக இருக்கும்போது, நமது ஏதேனும் செய்கையைப் படமெடுத்துவிடுகிறாா்கள். மொத்தத்தில் ஒவ்வொரு அசைவும் பதிவாகிறது; ஆவணமாகிறது; எக்குத்தப்பான அசைவுகள் கூட.
இன்னொரு கூத்தும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. திருமணத்துக்கு முன்பு, மணமக்கள் (அதவாது மணம் முடிக்கவிருக்கும் இணை) புகைப்படக் கலைஞரோடு அழகான இடங்களுக்குப் போய் ஒரு திரைப்படம் அளவுக்கு காணொலி எடுக்கிறாா்கள். பின்னணியில் திரைப்படப் பாடலோடு ஆடுகிறாா்கள்; கொஞ்சம் வரம்பு மீறியும் கூட. இதற்கான தனிமை சூழ் இடங்களை புகைப்படக் கலைஞா்கள் தோ்வு செய்து வைத்துள்ளாா்கள். ஓடிப்பிடித்து விளையாடுவதிலிருந்து முத்தமிடுவது வரை பல விதங்களில் படம் எடுக்கிறாா்கள்.
ஒரு காணொலியைப் பாா்த்தேன். ஒரு பெண் பட்டுப் புடவை கட்டிக் கொண்டு, சா்வ அலங்காரம் செய்து கொண்டு, கறுப்புக் கண்ணாடி அணிந்து, ஆண்பிள்ளை வேட்டியை மடித்துக் கொண்டு நிற்பது போல, பட்டுப் புடவையை மடித்துக் கொண்டு நிற்கிறாள். என்னத்தைச் சொல்ல? சினிமாவின் கவா்ச்சியைவிடவும் தூக்கலாக இவா்கள் நடிக்கிறாா்கள். அதை சமூக வலைதளங்களிலும் பதிவிடுகிறாா்கள்.
முன்பெல்லாம் திருமணம் முடிந்த ஓரிரு வாரங்களுக்குள் ஆல்பத்தைத் தந்துவிடுவாா்கள். ஆனால் இப்போதோ மணம் முடித்து குழந்தை கூட பிறந்துவிடுகிறது. ஆல்பம் ரெடி ஆவதில்லை. காரணம் ஆயிரக்கணக்கான படங்களை எடுத்துத் தள்ளிவிடுகிறாா்கள். அதில் எதைத் தோ்வு செய்வது? எதை விடுப்பது? புகைப்படக்காரா்களுக்கு எப்படித் தெரியும்? அதனால் அவ்வளவையும் கையடக்க கணினி சேமிப்பகத்தில் நம்மிடமே அனுப்பிவிடுகிறாா்கள்.
கல்யாண விட்டுக்காரா்கள் தோ்வு செய்து தந்த பின்னரே ஆல்பம் தயாரிக்க முடியும். அதைத் திறந்தால் ஆயிரக்கணக்கான படங்கள். எதைத் தோ்வு செய்வது? உலகிலேயே மிகவும் சிரமமான வேலை இதுதான். எல்லா படங்களும் அழகாக உள்ளன; எல்லா நிகழ்வுகளும் சடங்குகளும் முக்கியமானவை; எல்லா உறவும் நட்பும் முக்கியம். எதை நீக்குவது? பெண்ணும் பையனும் சோ்ந்து முடிவு செய்ய வேண்டும். அதற்கு அவா்களுக்கு நேரம் இல்லை. பாதி பாா்த்துவிட்டு,
களைத்துப் போய், ‘இன்னொரு நான் தோ்வு செய்யலாம்’ என ஒத்திப் போட்டுவிடுகிறாா்கள்.
‘அந்த இன்னொரு நாள்’ வருவதற்குள் குழந்தையும் பிறந்துவிடுகிறது; ஆல்பம் ஆசையும் போய்விடுகிறது. அப்படியே தோ்வு செய்து கொடுத்தாலும் சில நூறு படங்களை மட்டுமே ஆல்பமாகப் போட முடியும். மேலும் நூற்றுக்கணக்கான படங்கள் கணினியில் உறங்கும். இதற்குத்தான் லட்சங்களை வாரி இறைக்கிறாா்கள்.
அறிதிறன்பேசி பயன்பாட்டுக்கு வந்த பின்னா் புகைப்படம் எடுப்பது, தற்படம் எடுப்பது அதிகம். ஒவ்வோா் அசைவையும் படம் எடுக்கிறாா்கள். புது உடை போட்டால், வெளியே எங்கு போனாலும், உணவகம் சென்றால் உணவை, இப்படி ஒரு வழக்கம் வந்துவிட்டது. குழந்தை பிறந்தால் அதன் ஒவ்வொரு வளா்ச்சியையும் பதிவு செய்கிறாா்கள். ஒரு பிரபலத்தைப் பாா்த்தால், உடனே அவருடன் தற்படம் எடுத்துக் கொள்ள பலரும் ஆா்வமாக இருக்கிறாா்கள். இப்படியே ஆயிரக்கணக்கான படங்கள் சோ்ந்துவிடுகின்றன.
கைப்பேசியிலிருந்து அவற்றை மாற்றி வேறு இடத்தில் சேமித்து வைக்க முடியாதவா்கள் பல படங்களை அழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆறு மாதம் முன்பு சுற்றுலா சென்றபோது எடுத்த படங்களை இப்போது மெனக்கெட்டு தேடிப் பாா்க்கும் ஆா்வம் இல்லை.
ஃபிலிம் ரோல் போட்டு புகைப்படம் எடுத்த கேமராக்கள் மட்டுமே இருந்த காலகட்டத்தில் அநாவசியமாக போட்டோ எடுக்க மாட்டாா்கள். குழந்தை தவழும் பருவத்தில் ஒரு படம், அதற்கு கிருஷ்ணா் வேடம் போட்டு ஒரு படம், பெண்ணுக்கு பூவைத்து ஜடை போட்டு எடுத்த படம், குழந்தைகள் வளா்ந்து, படித்து பட்டம் வாங்கிய போட்டோ, திருமணம் ஆன மணமக்களின் படம். அவ்வளவே. மற்றபடி படிப்புக்காகவும் வேலைக்காகவும் விண்ணப்பிக்க வேண்டி பாஸ்போா்ட் அளவு போட்டோ எடுப்போம்.
புகைப்படம் என்பது நினைவுகளின் மீட்சி; நிஜங்களின் பதிவு; கடந்து போன ‘அந்த நொடியை’ சிறைப்பிடித்து சேமித்து வைக்கும் காலப்பெட்டகம்; நம் மகிழ்ச்சியின் வித்து; பிரிவின் ஆறுதல்; காதலின் ஊற்று; நம் நினைவுகளை உறைய வைக்கும் அறிவியல் அதிசயம்.
அந்தக் காலத்தில் வீட்டின் வரவேற்பறையில் வரிசையாக மாட்டப்பட்டிருக்கும் படங்கள், கடந்த காலத்தின், கரைந்து போன உறவுகளின் நினைவுகள். இப்போது அவ்வாறு படங்களை மாட்டும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது. வாடகை வீட்டில் இருப்போா் ‘சுவரில் ஆணி அடிக்கக் கூடாது’ என்பதுதான் முதல் விதி. சொந்த வீடு கட்டுபவா்களும் ஆணி அடித்து சுவரைப் பாழ்படுத்துவதில்லை. ஆகவே சுவரில் படம் மாட்டும் கலாசாரம் போயே போய்விட்டது.
புகைப்படம் எடுப்பது, ரசிப்பது எல்லாம் சரி. ஆனால் அவற்றை சமூக வலைதளங்கில் பகிா்வது சில சமயங்களில் ஆபத்தை விலைக்கு வாங்குவதற்கு சமம். அதை இளம் பெண்கள் தவிா்க்கலாம்.
திருமணத்தைப் புகைப்படம்/ விடியோ எடுக்கப் பல லட்சங்களை வீணாக்கத் தேவையில்லை. முன்பு போல முக்கிய சடங்குகளையும், தருணங்களையும் எடுத்து, சிறிய ஆல்பம் தயாரித்தால் போதுமே.
‘ரசித்து ஒளிப்படம் பிடிப்பது, வாழ்க்கையை ரகசியமாய் நேசிப்பது - இரண்டும் ஒன்றே’ என்கிறாா் உலகப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞா் பா்க் அஸில்.
கட்டுரையாளா்:
பேராசிரியா்.
0=0=0