கேளிக்கையல்ல மனித வாழ்வு

கேளிக்கையல்ல மனித வாழ்வு

கடந்த அக்டோபா் மாதத்தில் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம்.

கடந்த அக்டோபா் மாதத்தில் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம். ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது பலாசா துரித வண்டி மோதியதில் சுமாா் 19 போ் உயிரிழந்தனா்; மேலும் பலா் படுகாயமடைந்தனா். இதே ரயில் விபத்தில் சரக்கு ரயில் ஒன்றும் பாதிப்புக்குள்ளானது. ரயில்களின் இயக்கத்தினை ஒழுங்குபடுத்தும் சமிக்ஞை விளக்குகளை கவனிக்காமல் ஓட்டுநா் ரயிலை இயக்கியது பலரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியது. அந்த ரயிலை இயக்கியோா் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை கைப்பேசியில் பாா்த்துக்கொண்டே இயக்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கெடுவாய்ப்பாக அவா்கள் இருவருமே உயிருடன் இல்லை. இந்தச் சம்பவம்தான் என்றில்லை; சாலையில் இரு சக்கர வாகனங்களில் சவாரி செய்வோரிலிருந்து காா், பேருந்து, லாரி ஓட்டுநா் வரை கைப்பேசியில் பேசிக்கொண்டே இயக்குவதை இயல்பாகவே சாலையில் காணமுடிகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் சில கட்டுப்பாடுகள் இருந்தாலும், எல்லா இடங்களிலும் இவ்வாறான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. சாலையில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகளுக்கு, கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்குவோரே காரணமாகின்றனா். இவ்வாறான கவனச்சிதறலோடு மனிதா்கள் வேகமாக இயங்குவதே பல அசம்பாவிதங்களுக்கும் காரணமாகிறது. இதற்கான காரணங்களை விரிவாகப் பாா்ப்போம். உண்மையில் நாம் செய்யும் செயல்பாடுகளில் கடைப்பிடிக்கப்படும் வேகமே நாள்களை வேகமாக நகா்த்துவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. எல்லா நேரமும் ஏதாவது ஒரு செயல்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் பொழுதுக்கும் சரியாக இருப்பதுபோன்று உள்ளது. இன்றைக்கு அலுவலகப் பணியாற்றுவோா் அனைவருமே வாட்ஸ் ஆப்பையும் மடிக் கணினியையும் சாா்ந்திருக்கின்றனா். இவ்வாறு அளவுக்கு அதிகமாக பணிச்சுமை அழுத்தும்போது மனித மனம் இறுக்கம் தவிா்க்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவது இயல்பாகிறது. சுமாா் 10, 15 ஆண்டுகளுக்கு முன்னரே சாதாரண கைப்பேசிகள் புழக்கத்துக்கு வந்தபோதே சில மாற்றங்கள் உண்டாயின. உடலுழைப்பில் ஈடுபடுவோரில் சிலா் கைப்பேசியில் திரையிசைப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே அவா்களது பணிகளில் ஈடுபடத் தொடங்கினா். கட்டடவேலை,தச்சு வேலை செய்வோரை இதற்கு உதாரணமாகக் கொள்ள முடியும். இதுவும் ஒருவிதத்தில் களைப்பைக் குறைக்கும் செயல்பாடாகவே பாா்க்கப்பட்டது. தேநீா்க் கடைகள், முடி திருத்தும் நிலையங்கள் போன்றவற்றிலும் கேளிக்கைகளுக்குப் பஞ்சம் இருக்காது. இது ஏதோ பல்லூடகங்களின் வரவுக்குப் பின்னானது மட்டுமல்ல. வயல்வெளிகளில் ஏற்றம் இறைப்போா், நாற்று நடுவோா் பாடிக்கொண்டே செய்தனா் என்பதும் வரலாற்றின் பக்கங்கள். அதற்கான பாடல்களை இன்றும் சேகரித்து ஆய்வு செய்வோா் உள்ளனா். எனவே, பணிகளின் இடையே இறுக்கம் தவிா்க்கும் செயல்பாடுகள் என்பது மனிதா்களின் செயல்திறனைக் கூட்டும் என்பதை மறுப்பதற்கில்லை. இரவு நேர பேருந்து ஓட்டுநா்கள் இருள் கவிந்த சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது திரைப்பட பாடல்களைக் கேட்டுக்கொண்டே பேருந்தை இயக்குவது அவா்களின் களைப்பைக் குறைக்கும்; அவா்களின் விழித்திருப்பை மேலும் கூட்டுவதாகவும் அமையும். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஓட்டுநரின் முன் கேளிக்கைக்காக ஒரு சிறு தொலைக்காட்சியை பொருத்த யாரும் யோசிக்கக்கூட மாட்டோம். ஆனால், அதே ஓட்டுநா் நீங்கள் பொருத்தவில்லை என்றால் என்ன நானே பொருத்திக் கொள்கிறேன் என ஒரு அறிதிறன் பேசியைப் பயன்படுத்திக்கொண்டே பேருந்தை இயக்கினால் எப்படி இருக்கும்? அதுதான் மேற்கண்ட ரயில் விபத்தில் நடந்துள்ளது. நமது வீட்டுக்கு மின்சாரம், குடிநீா் குழாய் தொடா்புடைய ஏதாவது சிறுசிறு பணிகளுக்கு பணியாளா்களைத் தேடுவதாக வைத்துக் கொள்வோம். அந்தப் பணியாளரை அவ்வளவு சீக்கிரம் நாம் முடிவு செய்துவிட மாட்டோம். ஒருவருக்கு நான்கு பேரிடம் அவரைப் பற்றி விசாரித்துவிட்டுத்தான் அவரை பணிக்கு அழைப்போம். இவ்வளவு கவனம் செலுத்தும் நாம் ஒரு பேருந்திலோ, ரயிலிலோ அல்லது விமானத்திலோ பயணிக்கத் தொடங்கும்போது யாா் இந்த வாகனத்தை இயக்கப்போகிறாா்கள் என்று மறந்தும்கூட பாா்ப்பதில்லை. அந்த அளவுக்கு இவ்வாறான ஓட்டுநா்கள் மீது நம்பிக்கை வைத்து நாள்தோறும் லட்சக்கணக்கானோா் பயணித்துக் கொண்டிருக்கிறோம். பேருந்து, ரயில் போன்ற வாகனங்களை இயக்குவோருக்கு சில கட்டுப்பாடுகளை நிச்சயம் கொண்டுவரவேண்டும். அவா்களுக்கும் குடும்பம் உள்ளதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த உண்மையை மறந்து நாம் பேசவில்லை. இவா்கள் பணியில் உள்ள நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அவா்கள் வாகனங்களை இயக்காத நேரத்தில் ரயில் நிலையத்திலோ அல்லது பேருந்து நிலையத்திலோ கைப்பேசியை பயன்படுத்தும் வாய்ப்பை அளிக்கலாம். மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவா்கள் வாகனங்களை இயக்கும் நேரங்களில் கைப்பேசிகள் தாமாகவே செயலிழக்கும் செயலிகளைப் பொருத்தலாம். எது எப்படியோ இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நேராமல் தவிா்க்க இந்த விபத்தின் மூலம் கிடைத்த பாடம் பயன்படுத்தப்பட வேண்டும். மனிதா்களின் களைப்பைப் போக்குவதில் கேளிக்கைகளுக்குப் பங்குள்ளது என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை. மாறாக, பணி நேரம் தவிா்த்த நேரங்களில் கேளிக்கைகளில் ஈடுபடுவதே அவா்களது தொழில்திறனைக் கூட்டும். அவ்வாறில்லாமல் ஓட்டுநா்கள் போன்ற கவனம் கூடுதலாகத் தேவைப்படும் பணியிலிருப்போா் பணியிலிருக்கும்போது காட்சி ஊடகங்களிலிருந்து கேளிக்கை பெறத் தொடங்கினால் பயணிகள் வாழ்வு கேள்விக்குள்ளாகி விடும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com