பதவியை உதறுவது எளிதில்லை!

பதவியை உதறுவது எளிதில்லை!

கடந்த ஆயிரம் ஆண்டு கால இந்தியாவில் ஒரு பொற்காலம் என்று சொல்லத்தக்கது, காந்தியின் தலைமையில் நாடு நடந்த காலம்தான்!

அந்தக் காலகட்டத்தில் நாடு கண்டறியாதது கண்டது; கேட்டறியாதது கேட்டது! அதற்கு முன்பு இந்தியா சிதறிக் கிடந்தது. எண்ணற்ற மன்னர்கள் ஆண்டார்கள்! ஒருவரோடொருவர் அடித்துக் கொள்வதும் பிடித்துக் கொள்வதுமாக இருந்தனர். இவர்கள் யார் ஆள்வது குறித்தும் எந்தக் குடிமகனுக்கும் எந்தக் கவலையும் இல்லை. அரசு அதிகாரிகள் வரி வசூலுக்கு வரும்போதுதான் அரசையே அவர்கள் உணர்ந்தனர்.

அரசன் உலா வருவான்; அவனைக் கண்ட இளம்பெண்கள் மையல் கொண்டார்கள்; தூக்கத்தை இழந்தார்கள் என்று பாடினால், புலவர்களுக்கு நான்கைந்து மாதப் பிழைப்பு ஓடும்! புகழ் என்பது அந்த அளவுக்குச் சிறுத்து விட்டது!

இந்தியாவுக்கு வணிகம் செய்ய வந்த ஒரு வெள்ளைக் கூட்டம் இந்திய அரசர்களின் அறியாமையையும் இயலாமையையும் கண்டு வணிகம் செய்வதைவிட நாடாள்வது எளிது என்று கண்டறிகிறது! கத்தியையும், கட்டாரியையும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் வென்றன!

ஆப்கானித்தானம் தொடங்கி, குமரிக் கடல் வரையிலும் பெருநிலப்பரப்பில், ஒரு பேரரசு தோன்றியது!

இவ்வளவு பெரிய அரசை ஆள்வதற்கு, அரசு இயந்திரத்திற்கு ஆட்கள் தேவைப்பட்டார்கள்! மெக்காலே ஒரு கல்வித் திட்டத்தை வகுத்து, கீழ்நிலைப் பணியாளர்களை உருவாக்க வழங்கிய கல்வி, மராட்டியத்தில் திலகரை, தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரம் பிள்ளையை, போர்பந்தரில் காந்தியை உருவாக்கப் போகிறது என்று வெள்ளையன் அறிய மாட்டான்!

அடிமைப்படுத்துவதும்; அடிமை விலங்கை உடைத்து விடுதலை பெறுவதும் உலகறிந்த நடைமுறைகள்தாம்! புரட்சி என்பது நாட்டை, நாட்டு மக்களை, அரசமைப்பைத் தலைகீழாய்ப் புரட்டும் தன்மை உடையது. பிரெஞ்சு புரட்சி பிரான்சை உலுக்கி எடுத்து விட்டது! நாடாண்ட பதினாறாம் லூயி வெட்டுண்டு மாண்டான்!

ஒவ்வொருவனையாக வெட்டினால் எப்போது வெட்டி முடிப்பது என்று பிரபுக்களையும், அரண்மனைவாசிகளையும் திரளாக வெட்டுவதற்கு கில்லட்டின் என்னும் வெட்டும் இயந்திரமே கண்டுபிடிக்கப்பட்டது. கடைசியில் அந்தப் புரட்சியின் தலைவன் ராபர்ட்சுபியர் அதே கில்லட்டினுக்கு இரையானான்! ருசியப் புரட்சியும் அதே தன்மையதுதான்! சார் மன்னனும் வெட்டுண்டு மாண்டவன்தான்!

ஆனால், இந்தியா மட்டும் விடுதலைக்கு வேறு வழியைக் கையாண்டது! அந்த வழி உலகு தோன்றியதிலிருந்து நேற்றுவரை மனிதகுலமும், எந்த நாடும் அறியாத வழி! கத்தி வைத்திருந்த எல்லா மன்னர்களும், துப்பாக்கி வைத்திருந்த வெள்ளையனுக்கு அடிமையானார்கள். துப்பாக்கி வைத்திருந்த வெள்ளையன் வெறுங்கையோடு எதிர்த்து நின்ற ஒரு தனி மனிதனிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் ஒரு நாள் தன்னுடைய கொடியை இறக்கிச் சுருட்டிக் கொண்டு கப்பலேறிப் போய்விட்டான்!

அந்த எளிய மனிதன் ஒரு வரலாற்றுப் புதுமை. தானும் தன்னைச் சார்ந்தவர்களும், இவ்வளவு பெரிய நாடும் எந்தச் சிராய்ப்புக்கும் உள்ளாகவில்லை. எதிரியான வெள்ளையனையும் எந்தச் சிராய்ப்புக்கும் உள்ளாக்கவில்லை! இப்படி ஓர் உலகறியா விந்தையை அந்தக் கோவணாண்டி காந்தியால் எவ்வாறு நிகழ்த்த முடிந்தது? அவன் ஒரு பற்றற்ற மனிதனாக, புதுமைத் தலைவனாக, போரை வழி நடத்தும் தளபதியாக உருவாக ஒரு நூல் காரணமாக இருந்தது. அந்த நூல் அவனுக்கு வலிமை அளித்தது. அவனை வழி நடத்தியது!

வாழ்வாங்கு வாழ்ந்த பல அறிவார்ந்த தலைவர்கள் அந்த நூலுக்கு உரை எழுதிக் குவித்தார்கள். திலகர் எழுதினார்; காந்தி எழுதினார்; வினோபா எழுதினார்; இராசாசி எழுதினார்; பாரதி, கண்ணதாசன் உட்பட அதற்கு உரை எழுதாதவர்களே இல்லை! அந்த நூல் கீதை!

அதே போல் குறளுக்கு உரை எழுதாதவர்களும் இல்லை. ஒரு முழு மனிதன் உருவாவதற்குக் கடவுள் நம்பிக்கை தேவை என்று வள்ளுவன் கருதினான். அவனுக்கு முந்தைய நிகரற்ற சிந்தனையாளர்களான புத்தனிடமிருந்தும் மகாவீரரிடமிருந்தும் அவன் மாறுபட்டான்.

சாவு ஒருவன் வாழ்வின் வரையறை; முதுமையும், அவனுடைய பீடுகளை எல்லாம் அழித்து விடும் கொடு நோய்களும், தாங்கவொண்ணா இழப்புகளும் தோல்விகளும் வரிசை கட்டி நிற்கும் உலக வாழ்வில், மனக் கவலைகள் அவனை அரித்துத் தின்று விடுகின்றன! அதற்கு ஒரு தீர்வாகக் கடவுளை முன் வைக்கிறான் வள்ளுவன்! இறைவனின் தாளைத் தவிர மனக்கவலைக்கு மாற்று இல்லை என்கிறான்!

அப்படியானால் கடவுளை வணங்கியே வேண்டியன பெற்று விடலாம் என்று நேர்த்திக்கடனில் மூழ்குபவர்களுக்கு, நீ செய்யும் நல்வினை, தீவினைகளே உன் வாழ்வுக்கு அடித்தளம் அமைப்பவை என்று தெளிவுபடுத்துகிறான்! அறம்தான் எல்லாம் என்று அதை முன்னிலைப்படுத்துகிறான்! அது சாகும்போதும் அழிவில்லாத் துணை என்று அதற்கு எல்லையின்மை சுட்டுகிறான்!

செய்வது முழுவதும் அட்டூழியம்; ஆனால் சிவபூசை தவறுவதில்லை என்னும் நிலையினன் இராவணன்! பத்து முகம்; இருபது கை; இமயத்தை அசைக்கும் தோள்கள்; வலியனிலும் வலியன்; அரக்கன்! எளிய மாந்தனாகிய இராமனிடம் தோற்கிறான்! நான் உன்னைத் தோற்கடிக்கவில்லை; அறம் உன்னைத் தோற்கடித்தது என்கிறான் இராமன்! அறத்தின் வீறு அத்தகையது!

ஒரு சிறந்த மனிதனை உருவாக்குவதே குறளின் நோக்கம்! அப்படி ஒரு மனிதனை உருவாக்கவே கடவுள், வினைச் சட்டம், அறம், உயிர், ஊழ் போன்ற கொள்கைகளை வள்ளுவன் முன்வைக்கிறான்! தீவினை செய்தால் அது உன்னை அழிக்கும்; நீ தப்ப முடியாது; ஆகவே உன்னை நீ காதலிப்பவனாக இருந்தால், தீவினை புரியாதே என்று அச்சுறுத்தி, வினைகளுக்குத் தெய்வ வீறு கற்பித்து, மனிதனை ஒழுங்குபடுத்த முயல்கிறான் வள்ளுவன்! இத்தகைய கொள்கைகளை அழுந்தப் பற்றி நின்றால் ஒழிய, உயர் மனிதன் உருவாக முடியாது என்பது வள்ளுவனின் அழுந்திய எண்ணம்!

ஆகவே, இந்தக் கொள்கைகளை எதிர்த்து முரசொலித்து, அவற்றை அழித்துப் பகுத்தறிவை நிலை நாட்ட முடியாமல், வள்ளுவன் பிழைபட்டான் என்று சொல்வதற்கும் நெஞ்சில் துணிவில்லாமல், வள்ளுவனுக்குக் கறுப்புச் சட்டை மாட்டி, அவனைத் திராவிடர் கழகத்தில் சேர்த்து விடுகின்றன கருணாநிதியும், நெடுஞ்செழியனும், புலவர் குழந்தையும் எழுதிய உரைகள்!

உலகின் தலையாய மனிதர்களான ஏசு, நபிகள் நாயகம், காந்தி, வள்ளுவன் ஆகிய அனைவரும் இறையச்சம் உடையவர்களே! இறை மறுப்பாளர்கள் இங்கர்சால், பெட்ரண்ட் ரசல் போன்றவர்கள் தொட முடியாதது அவர்களின் உயரம்!

அது போல் காந்தியைக் கீதை உருவாக்கியது! காந்தி இந்தியாவை உருவாக்கினார்! கீதை இந்திய விடுதலைப் போராட்டத்தை வழி நடத்திய நூல். வருணாசிரம தருமம் போன்றவை விமர்சனத்திற்கு உரியவை என்றாலும் கீதையின் மூலக்கூறு "வினை புரி; செயல்படு' என்பதுதான்!

"செத்தாரைப் போலத் திரி;' "சும்மா இருப்பதே சுகம்' என்னும் கோட்பாடுகளுக்கு மாறானது கீதை! எந்தத் தேவையும் இல்லாத நானே செயல்படுகிறேன் என்று கிருட்டிணன் தன்னையே முன்னிறுத்தி அருச்சுனனிடம் பேசுகிறான்!

துறவு "உடைமை நீக்கம்' என்பது சரி; ஆனால் இன்னொரு வகையில் செயல் நீக்கம் என்னும் நிலைக்கு முற்றிலும் மாறாக, "நானே செயல்படும் போது' என்று கிருட்டிணன் சொல்வதால், செயல்படாமல் யாரும் இருக்க முடியாது என்னும் புதுக் கருத்து இந்திய மெய்யியலில் முன் வைக்கப்படுகிறது.

ஒவ்வொருவனும் செயல்படுவது பயன் கருதியே என்பதால், "பயனை என்னிடம் விட்டு விடு' என்று அவனைப் பயனிலிருந்து நீக்கி விடுகின்றான் கிருட்டிணன்.

பயன் கருதாச் செயல் துறவுச் செயல். துறவு என்பது செயல் நீக்கம் இல்லை; பயன் நீக்கமே! துறவு நிலையிலும் செயலை வலியுறுத்தும் கீதை கோட்பாடு புதுமையான கோட்பாடு!

ஆகவே விடுதலைக்காகப் போர்க்களத்திற்கு வந்த திலகர், அரவிந்தர், காந்தி, இராசாசி, பாரதி என்று அனைவரையும் ஈர்க்கிறது கீதை! இவர்கள் எல்லாருமே ஒரு வகையில் துறவு மனப்பான்மையர்! இன்னொரு வகையில் பயன் கருதாச் செயல் நோக்கினர்!

காந்தி இந்திய முகத்தையே மாற்றுகிறார். பொது வாழ்க்கைக்கு எல்லாரும் வரத் தேவையில்லை என்று வடிகட்டுகிறார். நேர்மை,வாய்மை, நெறிசார்ந்த வாழ்வு உடையவர்கள் மட்டுமே வரவேண்டும் என்று வரையறை செய்கிறார்!

சிறைதான் உங்கள் பொதுவாழ்வுக்கான வெகுமதி என்பதை அறிந்து கொண்டு வாருங்கள் என்று எச்சரிக்கிறார்! அவ்வளவு பெரிய வெள்ளை அரசை எதிர்த்துத் தனிநபர் சத்தியாகிரகம் செய்யச் சொன்னவர் எத்தகையவராக இருப்பார்!

1937-க்கும் 1967-க்கும் இடையே நாடாண்டவர்கள் பதவியை ஒரு பொருட்டாக நினைக்காதவர்கள்; தூய நிலையினர்! காந்தியால் நேரடியாக உருவாக்கப்பட்டவர்கள்! 1937-இல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த இராசாசி காங்கிரசின் நிலைப்பாட்டை ஒட்டி, 1939-இல் தனது அமைச்சரவையோடு இராசினாமா செய்கிறார்!

மீண்டும் 1952-இல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த இராசாசி தன்னுடைய கல்விக் கொள்கை பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்டபோது, துண்டை உதறுவதுபோல பதவியை உதறி விட்டுப் போய், மகாபாரதத்தையும், இராமாயணத்தையும் மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தார்!

ஆண்டவர்களே ஆள்வதா என்று "காமராசர் திட்டம்' கொண்டு வந்து, பழைய முதல்வர்கள், மைய அமைச்சர்கள் விலகுவதற்கு வழி வகுக்கிறார் காமராசர்! அதற்கு முன்னோடியாகத் தான் முதலில் முதலமைச்சர் பதவியை இராசினாமா செய்கிறார்!

"பகுத்தறிவின்' இலக்கு அரியணை; அது தரும் சுகம்; அது தரும் பணம், பவிசு முதலியவை! அது குப்புறத் தள்ளினால் ஒழியத் தானாக இறங்குதல் என்பது இல்லவே இல்லை! ஆனால் ஆன்மீகவாதிக்கு அதிகாரத்தை அடைவது பவிசுக்காக அல்ல; ஆகவே, அதை இழப்பது துயரமானதில்லை!

எல்லாமே முடிந்து போகிற உலகில், எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு, வந்தது போலவே எந்த ஒன்றுமே இல்லாமல் செல்ல நேரிடுகிற உலகில், இராசாசியைப் போன்ற, காமராசரைப் போன்ற, ஓ.பி. இராமசாமி ரெட்டியாரைப் போன்ற ஞானவான்களைத் தாங்கிய ஒரு நாட்டின் அரியணைகள் பேறு பெற்றவை!

கட்டுரையாளர்:

இலக்கிய பேச்சாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com