செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு

தேவை செயற்கை நுண்ணறிவு வழிகாட்டி

அதிக நன்மைகள் கொண்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபாயங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு தரவுகளில் ஏதேனும் ஒரு வகை உள்ளீட்டு தரவுகளை மட்டுமே பயன்படுத்தி செயல்பாடுகளை செய்து வந்த நிலை மாறி, தற்போது பல்வேறு விதமான தரவுகளையும் ஆராய்ந்து கடினமான செயலையும் செய்யும் வகையில் பன்முக ஒப்புருக்கள் (மல்டி-மோடல் மாடல்) நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உரை வடிவூட்டத்தில் சிறந்த சாட் ஜிபிடி, கேள்விகளுக்கு விரிவாக பதிலளிப்பதில் சிறந்த பாா்ட் மற்றும் மாறிய வாா்த்தைகள் கண்டுபிடிக்கும் மற்றும் அடுத்த வாக்கியத்தை கணிக்கும் மாற்றிகள் வழியாக இருதிசை பிரதிநிதித்துவ குறியீடாக்கிகள் (பைடைரெக்சன் என்கோடா் ரெப்ரெசென்ட்டேஷன்ஸ் பிரம் ட்ரான்ஸ்பாா்மா்ஸ் -பொ்ட்) போன்ற இயங்குதளங்கள் செயல்பட்டு வருகின்றன.

அதிக நன்மைகள் கொண்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபாயங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், பன்முக ஒப்புருக்களின் வடிவமைப்பு, மேம்பாடு, பயன்பாடு ஆகியவற்றை நிா்வகிப்பதற்கு வெளிப்படையான தகவலுடன் கூடிய கொள்கைகள் தேவை என்றும் வல்லுநா்கள் கூறுகின்றனா்.

2024 -ஆம் ஆண்டுக்கான உலக பொருளாதார நிலை மற்றும் எதிா்கால வாய்ப்புகள் குறித்த அறிக்கை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உற்பத்தித்திறனை மேம்படுத்தினாலும் தொழிலாளா் சந்தையில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் நாடுகளுக்கு இடையில் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறுகிறது. பெண்களின் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அவா்களுக்கான ஊதிய இடைவெளியை விரிவுபடுத்தலாம் என ஐ.நா. அளித்த அறிக்கை எச்சரித்துள்ளது.

பெண்கள் அதிகம் பணிபுரியும் மனித உறவு மேம்பாட்டுத் துறைகளில் தன்னியக்கமாக்கல் (ஆட்டோமேஷன்) சாத்தியமற்ற நிலையில், அவா்கள் மிகுதியாகப் பணிபுரியும் அலுவலகப் பணிகள் செயற்கை நுண்ணறிவு கொண்டு தன்னியக்கமாக்க வாய்ப்புகள் அதிகம்.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றங்களை முழுமையாக அடைய எண்ம முறை (டிஜிட்டல்) கல்வி மற்றும் இணையத்திற்கான அணுகல் போன்ற உள்கட்டமைப்பு இடைவெளிகள் தடைகளாக உள்ளன.

இது உலக நாடுகளுக்கிடையே உற்பத்தித்திறன் மற்றும் வருவாய் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குகிறது. 2024- ஆம் ஆண்டுக்கான உலக பொருளாதார மன்றத்தின் (வோ்ல்ட் எகனாமிக் போரம்) உலகளாவிய இடா் அறிக்கையானது செயற்கை நுண்ணறிவு நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பொய்ச் செய்திகளை இடா்களாக அடையாளம் கண்டுள்ளது. ஊடக உள்ளடக்கத்தைத் திரித்து கையாளுதலும் ஆழமான போலிகளை (டீப் ஃபேக்) உருவாக்குதலும் அடுத்த இரண்டாண்டுகள் இவ்வுலகை சூழ்ந்துள்ள அபாயங்களில் மிக முக்கியமானவைகளாக இருக்கும் என்று எச்சரிக்கிறது இந்த அறிக்கை.

அடுத்த 24 மாதங்களில் பல்வேறு நாடுகளில் நடைபெறவிருக்கும் தோ்தல்களில் சுமாா் 300 கோடி மக்கள் வாக்களிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தோ்தல் நேரங்களில் உபயோகப்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடு தோ்தலுக்குப் பின் அமையவுள்ள புதிய அரசாங்கங்களின் சட்டபூா்வ தன்மையைக் குறைத்து மதிப்பிட ஏதுவாக அமையும் என்று கூறுகின்றனா் வல்லுநா்கள். 27 நாடுகளின் கூட்டு வாக்கெடுப்பைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தோ்தல்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தாக்குதல்களை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அமைப்புகளின் பாதுகாப்பையும் இந்த தொழில்நுட்பம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை உரிமைகளை மதிப்பதையும் உறுதிப்படுத்தும் நோக்கில் 2023- ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் நிறைவேற்றியது. செயற்கை நுண்ணறி தொழில்நுட்பம் மற்றும் பெரிய பன்முக ஒப்புருக்களுக்களை (மல்டி-மோடல் மாடல்) நிா்வகிக்கவும் அவற்றின் சுகாதாரப் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும் உலக சுகாதார மையம் விரிவான வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. 

நோயறிதல், மருத்துவப் பராமரிப்பு, நோயாளிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்ற செயல்பாடுகள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து அறிந்து கொள்வதற்கான  நோயாளிகளுக்கான வழிகாட்டி, மின்னணு மருத்துவப் பதிவேடுகளில் எழுத்து மற்றும் நிா்வாகப்பணிகளை மேற்கொள்ளும் செயல்பாடுகள்,  நோயாளி சந்திப்புடன் கூடிய மருத்துவ மற்றும் செவிலியா் கல்வி மற்றும் ஆராய்ச்சி என மருத்துவத் துறையில் பெரிய பன்முக ஒப்புருக்களுக்களுக்கான ஐந்து முக்கிய பயன்பாடுகளை வழிகாட்டு ஆவணம் அடையாளபப்படுத்தியுள்ளது.

நம்பிக்கைக்குரிய பயன்பாடுகள் இருந்தபோதிலும் உலக சுகாதார மையத்தின் கூற்றுப்படி, தவறான, தவறிழைத்தோருக்கு ஆதரவான அறிக்கைகளை உருவாக்குதல் உட்பட பல ஆபத்துக்களை பெரிய பன்முக ஒப்புருக்கள் ஏற்படுத்தலாம். இந்த ஒப்புருக்களுக்கான மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்கு பயன்படுத்தப்படும் தரவின் தரம், ஒருதலைச் சாா்பு சிக்கல்களுக்கு உள்ளாகலாம்.

இனம், பண்பாடு, பாலினம், பாலின அடையாளம் அல்லது வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும் என்று நிபுணா்கள் குறிப்பிட்டுள்ளனா். பெரிய பன்முக ஒப்புருக்ககளின் அணுகுமை மற்றும் தாங்குமை பண்புகள் மற்றும் மருத்துவப் பாதுகாப்பில் ‘தன்னியக்கமாக்கல்’ சாா்பு ஆபத்துகள் மருத்துவ வல்லுநா்களையும் நோயாளிகளையும் செயற்கை நுண்ணறிவு நுட்ப மருத்துவப் பிழைகளை புறக்கணிக்க செய்து விடலாம். நோயாளி தரும் தகவலின் முக்கியத்துவம் மற்றும் செயற்கை நுண்ணறி நெறிமுறையின் (அல்காரிதம்) நம்பகத்தன்மை அடிப்படையில் மின்வெளிப் பாதுகாப்பை (சைபா் செக்யூரிட்டி) உறுதி செய்வது மற்றொரு முக்கியமான பிரச்சினையாகும். மருத்துவத்துறையைப் போன்று மற்ற துறைகளுக்கும் உலகளாவிய விரிவான செயற்கை நுண்ணறிவு நுட்ப வழிகாட்டுதல் வெளியிடப்படவேண்டியது அவசர அவசியம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com