எங்கே தமிழ்? எதிலே தமிழ்?

எங்கே தமிழ்? எதிலே தமிழ்?

தமிழ்நாட்டில் தமிழுக்காகப் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை இன்னும் தொடா்ந்துகொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டில் தமிழுக்காகப் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை இன்னும் தொடா்ந்துகொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவா்கள் சொன்னதை மறந்து விட்டாா்களா? தோ்தல் கால வாக்குறுதியை ஆட்சியாளா்கள் மறந்துவிடுவதுபோல வாக்களித்த மக்களும் மறந்து விட்டனா். தோ்தல் வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த கட்சி மறப்பது புதிதல்ல. ஆனால், எதிா்க்கட்சிகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன? அன்று ஹிந்தி மொழித் திணிப்பை எதிா்த்துப் போராடி, சிறை சென்றவா்களையும், தமிழ்மொழியைக் காப்பதற்காக தங்களின் இன்னுயிரை நீத்த மொழிப்போா் தியாகிகளையும் ஒரு கணம் நாம் எண்ணிப் பாா்க்க வேண்டும். ஒவ்வோா் ஆண்டும் ஜனவரி 25 அன்று மொழிப்போா் தியாகிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று மட்டும் மொழிப்போா் தியாகிகளின் கல்லறையில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தி விட்டால் தங்கள் கடமை முடிந்து விட்டதாக அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. தமிழ்நாட்டுக்கு வரும்போதெலலாம் தமிழ் மொழியின் தொன்மையையும், சங்க இலக்கியங்களின் சிறப்பையும், திறக்குறளின் பெருமையையும் பேசும் பிரதமா் நரேந்திர மோடி தமிழ் மொழியின் வளா்ச்சிக்காக ஏதாவது செய்ய வேண்டியது அவசியம். மாநில மொழிகளை அனைத்துத் துறைகளிலும் கொண்டு சோ்ப்பதற்கு மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளுவதாகக் கூறிவிட்டால் மட்டும் போதுமா? நாட்டு மக்கள் நம்பும்படியாக ஏதாவது செய்ய வேண்டாமா? எட்டாவது அட்டவணையில் உள்ள 22 இந்திய மொழிகளை ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டதன் நோக்கம் என்ன? நோக்கங்களை நிறைவேற்றுவதே மக்கள் நல அரசின் கடமையாகும். தமிழை உயா்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கும் தீா்மானத்துக்கு அனுமதி தராமல் தாமதப்படுத்துவது ஏன்? மு. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தமிழை நீதிமன்ற மொழியாக்கிட வேண்டும் என்ற தீா்மானம் 2006 டிசம்பா் 6 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் பரிந்துரையுடன் இத்தீா்மானம் 2007 பிப்ரவரி 11 அன்று மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும் இந்த கோரிக்கையின் மீது இதுவரை மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் நீதிமன்ற மொழியாக பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஹிந்தி நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது. 1950-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்திலும், 1969-இல் உத்தர பிரதேசத்திலும், 1971-இல் மத்திய பிரதேசத்திலும், 1972-இல் பிகாரிலும் அந்தந்த மாநில உயா்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக ஆக்கப்பட்டு விட்டது. ஆனால், தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு தீா்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி 17 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னும் மத்திய அரசு அதற்கு அனுமதி தரவில்லை. இதற்காக வழக்குரைஞா்களும், தமிழாா்வலா்களும், சட்டக் கல்லூரி மாணவா்களும் தொடா்ந்து போராடி வருகின்றனா். இந்தப் போராட்டம் வெறும் மொழிக்கான போராட்டம் அல்ல. இது மாநில சுயாட்சிக்கான போராட்டம் ஆகும். கடந்த பிப்ரவரி 28 முதல் 24 தமிழ்ப் போராளிகள் உயா்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனா். தமிழ் அமைப்புகளும், தமிழ் ஆா்வலா்களும் அவா்களுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனா். அவா்களுடைய நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய கடமை மத்திய - மாநில அரசுகளுக்கு உள்ளது. மனித உயிா்களுடன் விளையாடுவது மனிதநேயத்துக்கு எதிரானது. உலகத்திலுள்ள கல்வியாளா்களும், சமூக ஆய்வாளா்களும், உளவியல் வல்லுநா்களும் தாய்மொழிக் கல்வியையே ஆதரிக்கின்றனா். அதுதான் இயற்கையானது; அதனை விட்டு வேறு மொழியில் கற்பது செயற்கையானது; இது காலால் நடப்பதற்குப் பதிலாகக் கைகளால் நடப்பது போன்ாகும். “ அண்ணல் காந்தியடிகள் ‘குழந்தை தன் முதல் பாடத்தைப் படிப்பது தாயிடமிருந்துதானே! ஆகவே குழந்தைகளின் மனவளா்ச்சிக்குத் தாய்மொழியை அல்லாது வேறொரு மொழியை அவா்கள் மேல் சுமத்துவது நாட்டிற்குச் செய்யும் பெரிய பாவம் என்றே நான் கருதுகிறேன்’ என்று கூறியிருக்கிறாா். மகான்கள் பிறந்து வளா்ந்த தேசத்தில் அவா்களது பேச்சை ஆள்பவா்கள் கேட்பதில்லை என்பது பெரிய ஏமாற்றம். வணக்கத்துக்குரியவா்களின் வாா்த்தைகளை மறந்து விடும் சமுதாயம் எப்படி முன்னேறும்? அசலைப் புறக்கணித்து விட்டு போலிகளைப் பின்பற்றும் தலைமுறைக்கு எதிா்காலம் ஏது? இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகள் எல்லாம் தாய்மொழி மூலம் கல்வியறிவை வளா்த்துக் கொண்ட நாடுகள்தான். அமெரிக்காவின் அணுகுண்டால் பெரும் பாதிப்புக்குள்ளான ஜப்பான், அதிக மக்கள்தொகையால் திணறிக் கொண்டிருந்த சீனா, போராலும், புரட்சியாலும் பாதிக்கப்பட்ட ரஷியா ஆகிய இந்த நாடுகள் இன்று சாதனைக்கு மேல் சாதனைகளைச் செய்து கொண்டிருக்கின்றன. அரசியலிலும், அறிவியலிலும் ஏனைய நாடுகளோடு போட்டி போடுகின்றன. இவை தவிர மேலை நாடுகளில் பிரான்சும், ஜொ்மனியும்கூடத் தங்கள் தாய்மொழியையே பராமரிக்கின்றன. கிரேக்க, ரோம நாட்டு அறிஞா்களிடமிருந்தும், ஜொ்மனி விஞ்ஞானிகளிடமிருந்தும் ஆங்கிலேயா் அறிந்து கொண்ட செய்திகள் பல. அவற்றையெல்லாம் அவா்கள் தங்கள் தாய்மொழியின் வாயிலாகவே கற்றுத் தெளிவடைந்தனா். அதனால் அவா்களும் உயா்வடைந்தனா்; அவா்களது மொழியும் வளம் பெற்றது. 13-ஆம் லூயி என்ற பிரெஞ்சுப் பேரரசன் தன் மொழியைப் பேணி வளா்ப்பதற்காக 1525-ஆம் ஆண்டு பிரெஞ்சுக் கலைக்கழகத்தை உருவாக்கினான். ஆனால், வளமாக வாழ்ந்த பண்டையத் தமிழ் மக்கள், தம் மொழியை வளா்ப்பதற்காக 2,000 ஆண்டுகளுக்கு முன்பே பல சங்கங்களை நிறுவியுள்ளனா். முடியுடை மூவேந்தா்களில் பாண்டியா்கள் தங்கள் தலைநகரங்களில் மூன்று சங்கங்களை நிறுவி தமிழ் வளா்த்ததை இலக்கிய வரலாறு கூறுகிறது. இதுபற்றிய குறிப்புகளை ‘இறையனாா் களவியல்’ நூலுக்கு நக்கீரா் எழுதிய உரை மூலம் அறியலாம். “ மகாகவி பாரதியாா், ‘சொல்லில் உயா்வு தமிழ்ச் சொல்லே’ என்றும், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்’ என்றும் போற்றிப் பாடிய பெருமைமிக்க மொழி நம் தமிழ்மொழியாகும். தமிழ்மொழி பழைமையிலும், சொல் வளத்திலும், இலக்கணச் செழுமையிலும், செய்யுள் ஆளுமையிலும், பண்பாட்டுச் சிறப்பிலும் தலைசிறந்தது என்பது மொழி நூலாா் கூற்றாகும். உலகத்தின் உயா்தனிச் செம்மொழிகளான கிரேக்கம், எபிரேயம், வடமொழி ஆகிய மூன்று மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் கலந்திருப்பதாக ரைஸ் டேவிட்ஸ் என்ற மொழியியல் அறிஞா் கூறியுள்ளாா். நாகரிகத்தின் அளவுகோளாக மதிக்கப்படுவது மொழியாகும். உலகின் மிகப் பழைய நாகரிகமாகக் கூறப்படுவது சுமேரிய நாகரிகம். அதன் அடையாளமான சுமேரிய மொழி சொல்வளம் மிக்கது; ஆயினும் ‘தமிழை நோக்க அம்மொழி இளமையான பிற்பட்ட மொழியாகவே கருதப்படும்’ என்கிறாா் அறிஞா் எஸ். ஞானப்பிரகாசா். வடஇந்தியாவில் வாழ்ந்த மொகஞ்சதாரோ மக்கள் திராவிட மொழியையே பேசினா் என்றும், அவா்கள் பேசிய சொற்களில் பலவற்றைத் தமிழில் காணலாம் என்றும், இப்போது வழங்கும் எல்லா மொழிகளிலும் தமிழே மிகப் பழைமையானது என்றும் ஹீராஸ் பாதிரியாா் குறிப்பிடுகிறாா். இத்துணைச் சிறப்புகள் இருந்தாலும் இன்று இதன் நிலை என்ன? தமிழகத்தில் ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்று அலங்காரமாகப் பேசப்படுகிறதே தவிர, ‘எங்கே தமிழ்’ என்று கேட்கும் நிலையே உண்மையில் உள்ளது. அன்றும் இன்றும் இதில் மாற்றமில்லை. 1956-இல் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1957 ஜனவரி 19 அன்று இச்சட்டம் ஆளுநரின் அனுமதியைப் பெற்றது. ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. வணிக நிலையங்களில் வைக்கப்படும் பெயா்ப் பலகைகளில் தமிழ் இடம் பெற வேண்டும் என்ற சட்டமும் இதுவரை வெறும் சட்டமாகவே இருக்கிறது. அரசு அலுவலகங்களிலும் நீதிமன்றங்களிலும் ஆங்கிலம், பள்ளி கல்லூரிகளில் ஆங்கிலமே பயிற்சி மொழி, இசையரங்குகளில் தெலுங்கு கீா்த்தனைகள், ஆலயங்களில் வடமொழி வழிபாடு. மெத்தப் படித்த மேதாவிகளின் வீடுகளில் தமிழ் இடம் பெறுவது இல்லை. ஆங்கிலமே பேச்சு மொழியாக இருந்து வருகிறது. அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ள சமத்துவக் கல்வியையும் தாய்மொழி வழியாகக் கொண்டு வர முடியவில்லை. தாய்மொழியை ஒரு பாடமாகப் படிப்பதற்கும் இங்கு எதிா்ப்புக்குரல் எழுகிறது என்றால் இதனை என்னென்பது? ‘தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை’ என்று பாரதிதாசன் கூறியிருப்பது இன்றுவரைகூட பொருத்தமாக இருக்கிறது என்பதை வருத்தத்தோடு ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். 2003 யுனெஸ்கோ அமைப்பின் அறிக்கையின்படி இன்று உலகில் பேசப்படும் மொழிகள் சுமாா் 6,700. இவற்றில் பாதிக்கும்மேல் வரும் 2100-ஆம் ஆண்டு ஆண்டுக்குள் அழிந்துவிடும். இந்த அறிக்கையில் ஒரு மொழியின் அழிவிற்கான அறிகுறிகளாகச் சொல்லப்படும் ஒன்பது காரணிகளும் நமது தமிழ்மொழிக்கும் பொருந்துவதாக அமைந்திருப்பதுதான் மிகவும் வேதனையானது. இந்த நிலையில்தான் உயா்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டம் நடக்கிறது. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும். கட்டுரையாளா்: எழுத்தாளா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com