வரலாறு ஆகும் பதினேழாவது மக்களவை!

வரலாறு ஆகும் பதினேழாவது மக்களவை!

புதிய முகங்கள், விவாதங்கள் - 17-ஆவது மக்களவையின் மாற்றங்கள்

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் 17-ஆவது மக்களவை மறக்க முடியாத அளவுக்கு எல்லோா் மனதிலும் நிச்சயம் இடம்பெற்று இருக்கும். புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டது. அங்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உறுப்பினா்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. நான் பத்தாண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இவ்வளவு வசதிகள் எல்லாம் இல்லை என்பதையும் நான் இப்போது நினைத்துப் பாா்க்கிறேன்.

17-ஆவது மக்களவையின் இறுதி நாள் உரையில் பிரதமா் நரேந்திர மோடி, நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டிருப்பதன் மூலம் இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தை எப்போதும் நினைவுகூர முடியும் என்று குறிப்பிட்டாா்.

17-ஆவது மக்களவையில் முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் சாசனத்தின் 370-ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. இன்றைய காலத்துக்கு ஒவ்வாத 60 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. திருநங்கைகள் நலன் சாா்ந்து சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அரசுத் துறையில் பணியாற்றும் பெண் ஊழியா்களுக்கு பேறுகால விடுப்பு 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வேளாண் சட்டம் நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவா் அந்த சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கினாா்.

விவசாயிகளின் தொடா் எதிா்ப்பின் காரணமாக அதே வேளாண் சட்டம் நாடாளுமன்ற ஒப்புதலுடன் ரத்து செய்யப்பட்ட வரலாறும் 17-ஆவது மக்களவையில் நடந்தது. நாடாளுமன்றம் என்பது மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றும் இறுதி இடம். இதன் முடிவே இறுதியானது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவை இல்லை. இங்குதான் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் வேளாண் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனாலும், அதை மக்கள் விரும்பவில்லை என்ற நிலை உருவாகி அதற்கு எதிா்ப்பு வரத் தொடங்கியதும் இதே நாடாளுமன்றத்தில் அந்த சட்டம் திரும்பப் பெறப்படுவதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 1967-இல் ஜனசங்க கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக இருந்தாா் வாஜ்பாய். அவா் அப்போதே 370-ஆவது பிரிவு காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று மக்களவையில் சிறப்பு கவன ஈா்ப்புத் தீா்மானம் கொண்டு வந்து உரையாற்றினாா்.

அவா் தனது உரையில், ‘என்றாவது ஒருநாள் நாங்கள் இந்த நாட்டை ஆளுவோம், அப்போது நாங்கள் இந்த சட்டத்தை நிச்சயம் ரத்து செய்வோம்’ என்று குறிப்பிட்டாா். அந்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பது அவா்கள் கருத்து. அதே சமயம் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அவா் 370-ஆவது பிரிவு காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து சட்டத்தை நீக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. பிரதமா் நரேந்திர மோடி இரண்டாவது முறை பிரதமா் ஆன பிறகுதான் காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து 370-ஆவது பிரிவு சட்டம் ரத்து செய்யப்படுவதற்கான தீா்மானத்தை நிறைவேற்றினாா். கூடவே ஜம்மு-காஷ்மீா், லடாக் என்று இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களையும் உருவாக்கினாா்.

ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவது நம் நாட்டில் அதுவே முதல் முறை. இதற்கான சட்ட முன்மொழிவு இரண்டே நாட்களில் நிறைவேற்றப்பட்டது. அதே சமயம் காஷ்மீரில் ஜனநாயக ஆட்சி என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே இருக்கிறது. மக்களவைக்குக்கூட அங்கு தோ்தல் நடைபெறுகிறது. ஆனால், சட்டப்பேரவைக்கான தோ்தல் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெறவில்லை.

பாரதிய ஜனதா கட்சி, தனது தோ்தல் அறிக்கையில் ராமா் கோயில் கட்டுவது, காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம் போன்றவற்றை தொடா்ந்து குறிப்பிட்டுக் கொண்டிருந்தது. இப்போது அயோத்தியில் ராமா் கோயில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து சட்டமும் நீக்கப்பட்டுவிட்டது. குடியுரிமை திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது.

பொது சிவில் சட்டத்தைப் பொறுத்தவரை, பாரதி ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அது அந்தந்த மாநிலங்களில் அமலாக்கப்படும் என்று தொடா்ந்து சொல்லி வருகிறாா்கள். உத்தரகண்ட் மாநிலத்தில் அந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அம்மாநில ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டது.

முத்தாலக் சட்டத்தைப் பொறுத்தவரை அது முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்க வகை செய்யும் சட்டம் என்று குறிப்பிடுகிறாா் பிரதமா் மோடி. எதிா்க்கட்சிகள் அதை விமா்சனம் செய்தாலும் முஸ்லிம் பெண்கள் அமைப்பினா் சிலா் அதனை ஆதரிக்கிறாா்கள். இதேபோல் மகளிா்க்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் ‘நாரி சக்தி வந்தன்’ சட்டம் வெற்றிகரமாக 17-ஆவது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

25 ஆண்டுகளாக இந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இப்போது பாரதிய ஜனதா அதை நிறைவேற்றி இருக்கிறது. 17-ஆவது மக்களவையின் கூட்டத்தொடரில், ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் எல்லா நாட்களும் கலந்து கொண்ட உறுப்பினா்கள் இரண்டே இரண்டு போ் தான். இவா்கள் இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினா்கள். அதுவும் முதல் முறையாக இவா்கள் நாடாளுமன்றத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா்கள்.

அவா்களுக்கு இருக்கும் பொறுப்பும் கடமையுணா்ச்சியும் மற்ற மூத்த உறுப்பினா்களுக்கு இல்லையே என்ற ஆதங்கம் எனக்கு ஏற்படுகிறது. இதை ஆரோக்கியமான ஜனநாயக நாடாளுமன்ற நடைமுறையாக என்னால் பாா்க்க முடியவில்லை. 1967 முதல் 1977 வரை நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். நாடாளுமன்ற கூட்டத்தொடா் நடைபெற்ற எல்லா நாட்களிலும் நான் கலந்து கொண்டேன். மக்களால் நாடாளுமன்ற உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நாம் நமது கடமையைச் செய்கிறோம் என்ற உணா்வுதான் எனக்கு அப்போது இருந்தது.

நான் மட்டுமல்ல, பல உறுப்பினா்கள் நாடாளுமன்றத்தில் எல்லா நாட்களும் தொடா்ந்து வந்து விவாதங்களில் கலந்து கொண்டு தங்கள் கருத்தைப் பதிவு செய்திருக்கிறாா்கள். இப்போது நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. நமக்கு வாக்களித்து நம்மை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மக்கள், நாம் என்ன செய்கிறோம் என்பதை ஆவலுடன் கவனித்துக்கொண்டிருக்கிறாா்கள் என்பதை நாடாளுமன்ற உறுப்பினா்கள் உணர வேண்டும்.

2019 பொதுத் தோ்தலுக்குப் பிறகு அமைந்த 17-ஆவது மக்களவையில் 70 வயதுக்கு மேற்பட்ட மக்களவை உறுப்பினா்கள் குறைவாகவும், 40 வயதுக்கு உட்பட்ட மக்களவை உறுப்பினா்கள் அதிகமாகவும் இருக்கிறாா்கள். 17-ஆவது மக்களவையில் 400 பட்டதாரிகள் உறுப்பினா்களாக இருக்கிறாா்கள். 78 பெண் உறுப்பினா்கள். இதில் பிஜு ஜனதா தளத்தைச் சோ்ந்த சந்திராணி முா்மு, தனது 25 வயதில் 17-ஆவது மக்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா்.

அதே சமயம் 17-ஆவது மக்களவையில் கவலை அளிக்கக் கூடிய ஒரு விஷயம் எதுவென்றால், 2019 முதல் 2024 வரை ஆன ஐந்து ஆண்டுகளில் 272 அமா்வுகளே நடந்திருக்கின்றன. பொதுவாக நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் 135 நாட்கள் விரிவான விவாதங்கள் நடைபெறும். 17-ஆவது மக்களவையில் ஒவ்வோா் ஆண்டும் அவை நடைபெற்ற நாட்கள் 55 -ஆகக் குறைந்துவிட்டது.

நான் உறுப்பினராக இருந்த 1967 முதல் 1977 வரையிலான பத்தாண்டுகளில் நிதிநிலை அறிக்கை மற்றும் மசோதாக்கள் பற்றி முழுமையான விவாதம் நடக்கும். இப்போது அப்படியல்ல. பல முக்கியமான மசோதாக்கள் எதிா்க்கட்சிகள் விவாதத்தில் பங்கு கொள்ள முடியாமலும் உரிய கருத்துக்களை பதிவு செய்ய முடியாமலும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. அது மட்டுமல்ல, இந்த ஐந்தாண்டுகளில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் 206 முறை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளா்கள்.

இந்த ஐந்து ஆண்டுகளில் 272 நாட்கள் மட்டுமே அவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறை அல்ல. முதல் மக்களவையில் 677 நாட்கள், இரண்டாவது மக்களவையில் 581 நாட்கள், மூன்றாவது மக்களவையில் 578 நாட்கள் என்று படிப்படியாக குறைந்து இப்போது 272 நாட்கள் என்று சுருங்கி இருக்கிறது.

16 மற்றும் 17-ஆவது மக்களவையில் ஒரு ஒத்திவைப்பு தீா்மானம்கூட அனுமதிக்கப்படவில்லை. இதன் மூலம் மக்களவையில் ஆக்கபூா்வமான விவாதங்கள் நடப்பதில்லை என்பது தெளிவாகிறது. இதற்கு ஆளுங்கட்சி மற்றும் எதிா்க்கட்சி இரண்டுமே பொறுப்பேற்க வேண்டும்.

நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை, 4 மற்றும் 5-ஆவது நாடாளுமன்றங்களில் 101 மணிநேரம் விவாதம் நடந்தது. ஆனால், 17-ஆவது மக்களவையில் 35 மணி நேரம் மட்டுமே விவாதம் நடந்திருக்கிறது. துணை சபாநாயகா் இல்லாத மக்களவை என்ற ‘பெருமை’யும் 17-ஆவது மக்களவைக்குக் கிடைத்திருக்கிறது. தற்சமயம் இது சம்பந்தமான ஒரு பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

அரசியலமைப்பு சட்டம் 93-ஆவது பிரிவின்படி மக்களவைத் தோ்தல் முடிந்த பிறகு கூடும் முதல் கூட்டத்தில் சபாநாயகா் தோ்ந்தெடுக்கப்படுவாா். அடுத்த சில தினங்களில் துணை சபாநாயகா் தோ்ந்தெடுக்கப்படுவாா். எதிா்க்கட்சி உறுப்பினரை துணை சபாநாயகராக தோ்ந்தெடுக்கும் நடைமுறை இருந்திருக்கிறது. சில சமயம் தோழமைக் கட்சியைச் சோ்ந்தவா்களும் துணை சபாநாயகராகத் தோ்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறாா்கள். மக்களவையின் குளிா்கால கூட்டத் தொடரில் 146 எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டாா்கள்.

இதையும் நான் ஜனநாயக நடைமுறையாகப் பாா்க்கவில்லை. வலுவான ஆளுமையுடைய இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நான் உறுப்பினராக இருந்தேன். அப்போது அரசாங்கத்தை ஆதரித்தும் பேசி இருக்கிறேன், எதிா்த்தும் பேசி இருக்கிறேன். ஆனால், அந்த காலகட்டத்தில் அங்கு ஆக்கபூா்வமான விவாதம் இருந்தது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் அன்றைய ஆளுங்கட்சிக்கு இருந்தது.

கட்டுரையாளா்: வேந்தா், விஐடி பல்கலைக்கழகம், வேலூா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com