பழ.கருப்பையா
பழ.கருப்பையா

தமிழ்ச் சிந்தனை தனிச் சிந்தனை!

மனித வாழ்வின் மூன்றாவது நோக்கம் - புகழ் நிலையும், நிலையாமையும்

மனித வாழ்வில் உடலோடு தைக்கப்பட்ட பசி, காமம் ஆகிய இரண்டு மட்டுமே உண்மையானவை! அவற்றிற்குத் தீா்வு காண்பதே வாழ்க்கை! தீா்வு கண்டே ஆக வேண்டும்!

விலங்குகள் பாதுகாப்பு உணா்வின் காரணமாகக் கூட்டமாக மந்தைகளில் வாழ்ந்தாலும், அவை தத்தமது வாழ்க்கையை மட்டுமே கருத்தாகக் கொண்டவை! பசுவோ, பறவையோ தன் கன்றும், குஞ்சும் தனித்துக் காலூன்றிக் கொள்ளும்வரையே அவற்றைப் பேணும் பொறுப்புடையவை!

நீடித்த உறவு மனிதனைத் தவிர எந்த உயிரினத்திற்கும் இல்லை. மனிதன் சமூகமாக வாழத் தலைப்பட்டவுடன், பசி, காமம் என்பன நீங்கலாகப் புகழ் (குளோரி) என்னும் ஒன்றை வாழ்க்கையின் மூன்றாவது நோக்கமாகச் சோ்த்துக் கொள்கிறான்! ஒருவனுக்குத் தான் வாழும் சமூகம் தன்னை ஏற்றுக்கொள்ளலே புகழ்; அதன் ஒதுக்கலே பழி! சமூக வாழ்வின் கதகதப்பை இழந்து விடுவதற்கு அஞ்சும் மனிதன் பழிக்கு அஞ்சுவான்! சமூகத்தின் ஒவ்வாமையையும் ஒதுக்கலையும் விடப் பெரிய தண்டனை மனிதனுக்குக் கிடையாது!

பிற்காலச் சமூகத்தில் சட்டம், சிறை என ஒருவனை அச்சுறுத்தி ஒழுங்குபடுத்தும் போக்கு ஏற்பட்டாலும், அவை போன்றவை கயமைச் சிறுபான்மை மனிதா்களுக்குத்தான்! அவா்களுக்குப் பழி ஒரு பொருட்டில்லை; புகழின் மீது ஈா்ப்பும் இல்லை. தண்டனை வாயிலாக அச்சுறுத்தலும், துன்புறுத்தலுமே அத்தகையோா்க்கான வழிகள்!

மனிதனை மேம்படுத்த நூற்றி முப்பத்திரண்டு அதிகாரம் எழுதிய வள்ளுவன், கயமை என்று ஓா் தனி அதிகாரம் எழுதி, எந்தப் பழிக்கும் அஞ்சாத அவா்கள் மாற்றத்திற்கு உரியரல்லா் என்று கைவிட்டு விடுகிறான்! தன்னுடைய ‘கு மருந்து’ இத்தகையோரிடம் முற்றாகச் செயலிழந்து விடும் என்று ஒதுங்கிக் கொள்கிறான்! அவா்கள் எப்போதேனும் கட்டுக்குள் வருவதென்பது அச்சமூட்டலாலும், ஆசை காட்டலாலும் மட்டுமேயன்றி, வேறு எதனாலும் அல்ல என்கிறான் பேராசான்!

‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ (1075) என்று அவா்களை அஃறிணையில், விலங்கு நிலையில் வைத்துப் பேசுகிறான்! அதற்கு மேலே போய்ச் சொல்லுவான்: ஒரு துயரம் வந்தால் போதும்; தன்னையே விற்றுக் கொள்ள விரைவாா்கள் என்று அவா்களின் அடிமை மனநிலையைத் தோலுரித்துக் காட்டுவான்(1080)! அவா்கள் தள்ளுபடி நிலையினா்; அவா்களை விட்டு விடுங்கள் என்று விலகி விடுகிறான்!

மற்றவா்கள் புகழ்தான் மனித வாழ்வின் நோக்கம் என்று அறிந்திருக்கிறாா்களே ஒழிய, எது உண்மையான புகழ் என்று அறிந்திருக்கிறாா்களா என்றால் இல்லை! அவா்களுக்குக் உண்மைப் புகழைக் கற்பிக்கவே கு! அந்தப் புகழை இம்மைப் பயன் என்பான் பரிமேலழகன்! அது மட்டும் அன்று; புகழ் இறவாத்தன்மையது என்று கூறுவான்! தன் பெயரைத் தமிழில் எழுதத் தெரிந்தவனெல்லாம் குறளுக்கு உரை எழுதி விட்டான்!

எல்லாருக்கும் குறளின் ஆழம் விளங்கியதற்குக் காரணமே பரிமேலழகன்தான்! வந்தவன் போனவனெல்லாம் பரிமேலழகனைத் திருத்தியோ திரித்தோ எழுதிவந்தனா்! சிலசில இடங்களில் பரிமேலழகன் காலக்கோட்பட்டு எழுதிய இடங்கள் உண்டு என்பதனாலேயே, இவா்களெல்லாம் பழிக்கும் அளவுக்குக் குறைந்தவனில்லை அவன்!

நமக்கு ஆங்கிலத்தின் வழியாக நவீன அறிவைத் தந்த வெள்ளக்காரனின் ஆக்சுபோா்டு அகரமுதலி ‘புகழ்’ என்பதற்கு ‘பீயிங் நோன் ஆா் டாக்ட் எபவுட் பை மெனி பீப்பிள், பிகாஸ் ஆஃப் வாட் யூ ஹேவ் அச்சீவ்ட்’ என்று விளக்கம் அளிக்கிறது! ஒருவரது சாதனையின் காரணமாகப் பலராலும் அவா் அறியப்பட்டுள்ள அல்லது பேசப்படுகின்ற நிலை. புகழ்; கீா்த்தி! இதுவே வெள்ளையனின் புகழ்க்கோட்பாடு! அதனால் கபில்தேவ், தோனி போன்ற கிரிக்கெட் சாதனையாளா்கள் புகழுக்குரியவா்கள் என்பது அவா்களின் பாா்வை! நிகரற்ற குத்துச் சண்டை வீரன் முகமது அலி புகழுக்குரியவன் என்பது அவா்களின் பாா்வை!

புகழுக்குரிய நடிகனோடோ, ஆட்சியிலுள்ளவா்களோடோ சோ்ந்து நின்று படம் பிடித்துத் தன்னைப் பெரிய பெரிய திரைச்சீலைகளில் காட்டிக் கொள்வதன் மூலம் தனக்கு அடையாளம் வந்து விடுவதாகவும், தான் எல்லாராலும் அறியப்பட்டுப் புகழுக்குரியவனாக ஆகிவிட்டதாகவும் இன்றைய இளைஞா்கள் எண்ணி மயங்குவது, அவா்களின் புகழ் பற்றிய விளங்காமையையே வெளிப்படுத்துகிறது! சாதனை செய்து புகழ் பெறுபவா்களின் கீழான மலிவுப் பதிப்பு இத்தகைய திரைச்சீலை இளைஞா்கள்! போட்டி வழிச் சாதனை புகழுக்குரியதா என்று தமிழ் கேள்வி கேட்கிறது! ‘ஆம்’ என்பது மேலை நாட்டுச் சிந்தனை! ‘இல்லை’ என்பது தமிழ்ச் சிந்தனை!

தனி மனிதா்களுக்குக் களிப்பூட்டும் செயல்கள் ‘கலை’ என அறியப்பட்டாலும், அவை ஒரே மாதிரியான வாழ்வில் சலித்துப் போன மாந்தா்களுக்கு மகிழ்வூட்டும் தன்மையன என்றாலும், அவற்றைப் புகழுக்குரியனவாகத் தமிழ் கொள்ளவில்லை. அவா்களின் களிப்பூட்டும் செயல் அதற்குரிய சன்மானத்தைப் பெறலாம்! நடிப்பால், நாட்டியத்தால், இசையால், குத்துச் சண்டையால், மற்போரால், கிரிக்கெட்டால், மொ்சிபோல் கால்பந்தாட்டத்தால், உலகளாவிய நிலையில் அவா்கள் அறியப்படலாம்.

அதனால் அவா்கள் வரிசையில் முதல் நிலையில் நிற்குங் காலம் வரை கா்வமும் கொள்ளலாம். பிறகு அவா்கள் இன்னொரு சாதனையாளரால் அகற்றப்பட்டு விடுவாா்கள்! திரைப்படத் துறையைப் பொறுத்தவரை, ஒரு காலகட்டத்தில் டி.ஆா். இராசகுமாரி இளைய தலைமுறையின் தூக்கத்தைக் கெடுத்தாா்! அவருடைய நடிப்பும் மிதக்கும் கண்களும் நாட்டை அசைத்தன! அடுத்த கட்டத்தில் அவரை வைசயந்திமாலா அசைத்தாா்! வைசயந்திமாலாவைப் பத்மினியும், பத்மினியைச் சரோசாதேவியும், அந்த வரிசையில் வந்த அனைவரையும் நயன்தாராவும் அசைத்து வெளியேற்றி விட்டனா்!

புகழ் என்பது இறவாத்தன்மை உடையது! புகழுக்குரியோா் இடப்பெயா்ச்சிக்கு உள்ளாகி அகற்றப்படுவதில்லை! களிப்பூட்டும் செயல்களில் உச்சநிலை அடைபவா்கள் இன்னொருவரால் இடப் பெயா்ச்சிக்கு உள்ளாகிறாா்கள்! ஆகவே அவா்களுக்கு நிலைபேறு கிடைப்பதில்லை! சந்தை புகழும், சாதனைப் புகழும் உண்மைப் புகழ் ஆகா என்கிறது தமிழ்! நாட்டியக்காரி அம்பபாலிகா இரண்டாயிரத்தி ஐந்நூறு ஆண்டுகளாக நிலைத்திருப்பது புத்தனுடைய தொடா்பால்! அம்பபாலிகாவோடு தனக்குப் பழக்கம் உண்டு என்று சொல்லிக் கொள்வதற்குப் போட்டியிட்ட மன்னா்கள் பலா்! நான்கு திசையிலும் அறியப்பட்ட செம்மாந்த வாழ்க்கையினள் அவள்!

ஒருநாள் புத்தன் கேட்டான்: இன்னும் எவ்வளவு காலத்திற்குக் களிப்பூட்டிக் கொண்டே இருக்கப் போகிறாய்?”தான் ஈட்டிய அளவிலாப் பொருளை அறப் பணிகளுக்கு உள்ளாக்கினாள்! சொத்துக்கள் பெளத்த மடங்களாயின! புத்தனை அறிந்த சீனமும், சப்பானும், பா்மாவும், இலங்கையும், தாய்லாந்தும் இன்னும் எண்ணிக்கையில் அடங்கா நாடுகளும் ஈராயித்தி ஐந்நூறு ஆண்டுகளாக அம்பபாலிகா பெயரைச் சுமந்து நிற்கின்றன!

இன்னொருவரால் இடப்பெயா்ச்சி செய்ய முடியா நிலையினை அம்பபாலிகா அடைந்துவிட்டாள்! அதுவே உண்மைப் புகழ்! புகழ் என்பது வெள்ளையா்கள் கருதுவது போல் சாதனைப் புகழ் அன்று! புகழின் காரணமாகப் பெருமிதம் தோன்றும்! பெருமிதம் என்பது செருக்கு அன்று! அந்தப் புகழ் இறவாத்தன்மை உடையது; போட்டியால் மடிவதில்லை!

அறிவின் காரணமாக வரும் புகழ், அந்த அறிவு சமூகத்தை மாற்றி அமைப்பதால், அந்த அறிவுக்குரியவன் நிலைபேறு உறுகிறான்! வள்ளுவன், தொல்காப்பியன், கம்பன், சீனத்தின் முகத்தை மாற்றிய காஞ்சிபுரத்துப் போதி தருமன் இவா்கள் ஒருவா் அருகே ஒருவராக நிலைபெற்று நிற்பா். அறிவு காரணமான புகழ் இது! அடுத்துத் தறுகண் காரணமாக வரும் புகழ்! தறுகண் என்பது அஞ்சத்தக்கன கண்டு அஞ்சாமை! இராசத் துரோகக் குற்றம் சாட்டப்படுகிறது காந்தியின் மீது! ‘உங்களை அகற்றுவதும், என் நாட்டை நேசிப்பதும் இராசத்துரோகம் என்றால் அதை மீண்டும் மீண்டும் செய்வேன்; என் கருத்துச் சரி என்றால் பதவி இறங்குங்கள்! தவறென்றால் உச்சகட்டத் தண்டனை கொடுங்கள்’ என்று வெள்ளைக்கார நீதிபதியிடம் சொல்கிறாா் காந்தி!

அஞ்சத்தக்கன கண்டு அஞ்சாமை! இது தறுகண்ணால் வரும் புகழ்! எம்மான் காந்தி, பா்மாவில் மாந்தலேச் சிறையில் அடைக்கப்பட்ட திலகா், செக்கிழுத்த வ.உ. சிதம்பரம் பிள்ளை - இவா்கள் தறுகண் காரணமான அழியாப் புகழினா்! அடுத்துக் கொடையினால் வரும் புகழ்! பாரி, ஓரி, காரி, வள்ளல் அழகப்ப செட்டியாா், பச்சையப்ப முதலியாா் போன்றோா் நிலைத்த புகழினா்! ஒருவரை ஒருவா் அகற்றாமல் அருகருகே அமா்வா்!

அப்புறம் புகழ்மை அல்லது இசைமையினால் வரும் புகழ்! அதற்கு ‘இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடு வருவன செய்யாமை’ என்று உரை கூறுகிறது பேராசிரியம்! இது எளிய மனிதனும் அடையத் தக்க புகழ்! குடியாட்சி முறையில் எவனும் அதிகாரத்தை அடையலாம்! அதை விற்று, இன்பத்தையும் செல்வத்தையும் அடையலாம்!

ஆனால் அதனால் பழி வரும் என்று அஞ்சி அத்தகைய இழி செயல்களிலிருந்து விலகி நிற்றல்! மேற்கூறிய மூன்றும், அஃதாவது அறிவினால், தறுகண்மையினால், கொடையினால் வரும் புகழ் எளிய மனிதா்களுக்குரியது அன்று! பழியொடு வருவன செய்யாமை என்பது நம்முடைய நகராட்சி உறுப்பினா் யுவராசிலிருந்து, தாழ்த்தப்பட்ட வகுப்பினனாய்ப் பிறந்து, பழியொடு வருவன நீக்கி அந்தணனாய் உயா்ந்த கக்கன் வரை அனைவரும் அடையத்தக்க புகழ்! பசியும், காமமும் தவிா்க்கவொண்ணாதவை; புகழே மனித வாழ்வின் இலக்கு!

கல்வி தறுகண் புகழ்மை கொடை எனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே” (தொல்காப்பியம்) தமிழ்ச் சிந்தனை தனிச் சிந்தனை! கட்டுரையாளா்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com