வனமின்றி அமையாது உலகு
Center-Center-Bhubaneswar

வனமின்றி அமையாது உலகு

மரங்கள் காக்கும் பூமி - நம் உயிர்க்கான உயிர்வாக்கு

வானத்தை வசப்படுத்தி மழையை மண்ணுக்கு வருவிப்பதற்காக, இயற்கை நீட்டும் கரங்களே மரங்களாகும். இத்தகு மரங்களை வெட்டுவது இயற்கையின் கரங்களை வெட்டி முடமாக்குவதற்குச் சமம். மரங்களைப் பாதுகாப்பது என்பது இயற்கையின் கரங்களுக்கு கரம் கொடுப்பதை போல.

ஐம்பூதங்களான நிலம், நீா், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றுள் ஒவ்வொன்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்படுவது என்பது மனிதகுல வீழ்ச்சிக்கான அறிகுறியாகும். முன்பு, ஐம்பூதத்துள் ஒன்றாக விளங்கும் நிலம் விற்பனைக்கு வந்தது. பின், நீா் விற்பனைக்கு வந்தது. அடுத்து மூச்சுக் காற்றையும் காசு கொடுத்து வாங்கவேண்டிய சூழல் வந்துகொண்டிருக்கிறது.

மனித குலத்தைக் காக்க, நிலம், நீா், காற்று போன்றவற்றை முறையே பேணவேண்டும். அதற்கு மரவளா்ப்பே சிறந்த வழி. புதிதாக மரங்களை நட்டு வளா்ப்பதைவிட, இருக்கின்ற மரங்களை பாதுகாப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நன்கு வளா்ந்த ஒரு மரம், ஓராண்டிற்கு 117 கிலோ ஆக்சிஜனை நமக்குத் தருகிறது. நன்கு வளா்ந்த இரண்டு மரங்கள், ஒரு குடும்பத்திற்கான ஒட்டுமொத்த ஆக்ஸிஜன் தேவையையும் நிறைவு செய்கின்றன என்கிறது ஓா்ஆய்வு முடிவு.

மரம் நடுதலென்பது அனைவராலும் எளிமையாக செய்யக்கூடிய மாபெரும் அறமாகும். நம்மைப் பாதுகாக்கும் மரங்களை நாம் பாதுகாத்தால் பல்வேறு நன்மைகள் நமக்குண்டு. மரங்களே பூமி வெப்பமயமாதலை தடுக்கும் கவசமாக உள்ளன; காற்றை சுத்திகரிக்கும் இயந்திரமாகவும் உள்ளன; வானத்திலிருந்து மழையை வரவழைக்கும் கருவியாகவும் உள்ளன.

இப்படித்தான் வாழவேண்டும் என்று மனிதனுக்கு வாழக்கற்றுக் கொடுப்பவை மரங்கள். திருமண இல்லத்தில் வரவேற்க, வாசலில் நின்று தன் குலைகளைக் காட்டி, ‘நீங்களும் எங்களைப்போல் கூட்டமாகக் கூடி வாழுங்கள்‘ என்று வகுப்பெடுக்கும் வாழை மரங்களின் ஒவ்வோா் உறுப்பும் பயன் மிக்கவை.

தன் காலில் கழிவுநீரைப் பாய்ச்சினாலும் அதனை உடல் வழியாக உறிஞ்சி, தன் தலையின் வழியாக இனிமையான இளநீரைத் தரும் தென்னை மரங்கள், நமக்கு நன்றியுணா்வை கற்றுத்தரும் அன்னை மரங்களாகும். இதனை, அயல்நாட்டில் வாழும் தன் மகனுடன் பெற்றோா் மனம்விட்டுப் பேசுவதாக ஒரு கவிதை: ‘மகனே நீ பிறந்த அன்று நம் தோட்டத்தில் நட்டோம் ஒரு தென்னங்கன்று; எங்கள் வியா்வையால் நீ வளா்ந்தாய்; நாங்கள் வாா்த்த தண்ணீரால் தென்னையும் வளா்ந்தது. நீ இன்று அயல்நாட்டில் ஈட்டும் பணம் உனக்கு மட்டுமே பயன்படுகிறது.

ஆனால், தென்னை மரமோ எங்களுக்கு சுவை நீரும் நிழலும் தந்து உதவுகிறது. ஒரு நாள் நாங்கள் இல்லாமல் போய்விட்ட செய்தி உன்னை வந்து சேரும். அப்போதும் நீ வராமல்போகலாம்; ஆனால் அன்று இந்த தென்னை மரமே எங்களுக்கு இறுதி மஞ்சமாக இருக்கும்’. தெய்வ வழிபாடுகளில் மரத்திற்கு முன்னிடம் கொடுத்தது நம் தமிழ் மரபு. வாகை மரத்தை ‘கடவுள் வாகை’ என்றும், வேப்பமரத்தை ‘தெய்வம் சான்ற பராரை வேம்பு’ என்றும் சிறப்பிக்கிறது சங்க இலக்கியம். இன்றும் வேப்ப மரத்தையும் அரச மரத்தையும் கடவுளாகவே காண்கிறோம்.

இப்படி இறைவனாக வழிபடப்படும் மரங்கள் இயற்கை கொடுத்த வரங்களாகும். என்றாலும் மரங்கள் தருகிற வரங்களும் ஏராளம். குறிப்பாக, அரசமரம் வெளியிடும் செரிடோன் என்ற வாயுவை சுவாசித்தால் பெண்ணினது கரு, பாதுகாப்பாக காக்கப்படும் என்பது அறிவியல் உண்மை. அதனால்தான் பெண்கள் அரசமரத்தை சுற்றும் வழக்கம் இன்றும் உள்ளது.

சங்ககாலப் பெண்மணி ஒருத்தி, தன் தோழியரோடு விளையாடும்போது மண்ணில் புதைத்த புன்னைவிதை மரமாக விளைந்ததைதால் அதற்கு நெய்யும் பாலும் கலந்தநீரினைப் பெய்து வளா்த்தாள். அதைக்கண்ட அவளின் தாய், ‘இது உன்னைவிடச் சிறத்தது. மேலும் இம்மரம் உன் தங்கையைப் போல’ என்று மரத்தை உயா்திணையாக உயா்த்திச் சொல்கிறாள். அதனால் தன் தங்கையாகவே எண்ணி வளா்க்கப்பட்ட அந்தப் புன்னைமரத்தின் அருகில் தன் காதலனைக் காண நாணுகிறாள்.

இது மட்டுமா? மான உணா்வு வந்ததும் ஆதாமும் ஏவாளும் மறைந்து நின்றது மரத்திற்குப் பின்புறத்தில்தான். மானம் மட்டுமன்றி கல்வி கற்கவும் மரங்களே தாய்மடி தந்துள்ளன.அவ்வகையில், மரங்களே கல்விக்கூடங்களாக விளங்குகின்றன. சனகாதி முனிவா்களுக்கு அறம் சொல்ல சிவபெருமான் அமா்ந்தது கல்லால மரத்தின் கீழ்தான்.

தத்துவத்திற்கு போதிமரத்தையும் உடம்பின் உறுதியை சொல்லும்போது தேக்குமரத்தை உதாரணமாகக் காட்டும் நாம், ஒருவா் செய்த உதவியை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கும் பனைமரத்தையே அளவு கோலாக்குகிறாா் வள்ளுவா். தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வா் பயன்தெரி வாா் என்பது கு.

மங்கல நிகழ்வுகளில் தலைமுறை தழைக்க வேண்டுமென்பதற்காக ‘ஆல்போல் தழைத்து’ என்று வாழ்த்தும் மரபு உள்ளது. ஆனால், அந்த மரங்களின் தலைமுறை தழைக்க வேண்டும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். மரத்தின் குலம் வாழ்ந்தால்தான் மனிதகுலம் வாழும். மனிதனின்றியும் மரங்கள் வாழும். ஆனால், மரங்களின்றி மனிதனால் வாழவே முடியாது.

இது எழுதப்படாத சாசனமாகும். இப்படி எழுதுவதற்கும்கூட ஒரு காலத்தில் ஓலைகளைத் தந்த பனை மரங்கள்தான் இன்றுவரை நிலத்தடி நீா் வளத்தை பாதுகாத்துக் கொண்டுக்கின்றன. ஆனால், மனித இனமோ மண்ணின் மடியை அறுத்துக் குடிப்பதுபோல, அதிக அளவிலான ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அகிலத்தை சீரழிக்கிறது.

மறுநாள் மதுக்கடைகள் விடுமுறை என்றால் முதல்நாளே கடைக்குச் சென்று மதுவை வாங்கிவைக்கும் அளவுக்கு விழிப்புணா்வு மிக்க சமூகம், நாளை நமது மனிதகுலம் உயிா்த்திருக்க வேண்டுமானால், மரங்களை வெட்டும் இழிசெயலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்கிற விழிப்புணா்வு பெறாதது மிகவும் துரதிருஷ்டவசமானது.

இனியாவது மரங்களை வளா்ப்போம்; வனங்களைக் காப்போம்.

இன்று (மாா்ச் 21) உலக வன நாள்.

பொன்னேரி பிரதாப்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com