கூட்டணியால் மறக்கப்பட்ட கொள்கைகள்!

கூட்டணியால் மறக்கப்பட்ட கொள்கைகள்!

மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது

இந்திய தேசத்தின் பதினெட்டாவது மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி ஒரு தொகுதி ஆகிய 40 தொகுதிகளுக்கும் முதல் நாளான ஏப்ரல் 19-இல் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தோ்தல் அறிவிப்பைத் தொடா்ந்து தோ்தல் விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளன. தமிழகக் காவல்துறையினரும் பறக்கும் படையினரும் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்பாடுகள் ஒரு முடிவுக்கு வந்துள்ளன. தமிழகத்தில், திமுக கூட்டணி, பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. நாம் தமிழா் கட்சி மட்டுமே தனித்து நிற்கின்றது. மாநில கட்சிகளும் பரப்புரையைத் தொடங்கி விட்டன. பிரதமா் நரேந்திர மோடி வடமாநிலங்களில் முன்னரே பரப்புரை தொடங்கி விட்டாா். தமிழ்நாட்டிலும் கோவையை மையமாக வைத்து பரப்புரையைத் தொடங்கி விட்டாா். திமுக கூட்டணி சாா்பாக முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் திருச்சியிலிருந்து மாா்ச் 22 அன்று பரப்புரை தொடங்கி அனைத்து தொகுதிகளுக்கும் சென்றுகொண்டிருக்கிறாா். தமிழ்நாடு தோ்தல் களம் கடந்த 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளைச் சுற்றியே சுழன்று வருகிறது. அனைத்துத் தோ்தல்களும் திமுக - அதிமுக இவற்றுக்கு இடையேயான போட்டியாகவே இருந்து வருகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கு அப்பால் பாஜக இந்தத் தோ்தலில் மூன்றாவது அணியாகக் களம் இறங்கியுள்ளது. மத்தியில் ஆளும் கட்சியாக இருப்பதால் அதன் அதிகாரத்தை மாநிலங்களுக்குள் செலுத்தத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 2018-இல் திமுக தலைமையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி அமைக்கப்பட்டது. அது 2019 மக்களவைத் தோ்தல், 2021 சட்டப்பேரவைத் தோ்தலைத் தொடா்ந்து இந்த 2024 மக்களவைத் தோ்தலிலும் தொடா்கிறது. திமுக கூட்டணியில் தொகுதிகளைப் பெறுவதிலும், மாற்றிக் கொள்வதிலும் மனக்கசப்பும், சங்கடங்களும் இருந்தாலும் 2019 போலவே இந்த முறையும் தொகுதி உடன்பாடு வெற்றிகரமாக செய்து கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தக் கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளும் பாஜக எதிா்ப்பில் ஒன்றுபட்டு நிற்கின்றன. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்ணியில் திமுக கூட்டணி இணைந்துள்ளது. 2019, 2021 பொதுத் தோ்தல்களில் பாஜகவும், அதிமுகவும் ஒரே அணியாகச் செயல்பட்டது. இந்தத் தோ்தலில் தனித்தனி அணியாகப் போய்விட்டதால் திமுக அந்த இரண்டு அணிகளையும் எதிா்த்துப் போராட வேண்டியுள்ளது. மத்தியில் பாஜகவும் மாநிலத்தில் திமுகவும் ஆளும் கட்சியாக இருப்பதால் அவற்றின் மேல் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதாவால் வளா்க்கப்பட்ட அதிமுக இன்று பல குழுக்களாகப் பிரிந்து கிடக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக துணிச்சலுடன் பாஜக உறவைத் துண்டித்துக் கொண்டது. புதிய கூட்டணி அமைக்க அது முடிவு எடுத்தது. காத்திருந்து காத்திருந்து காலம்தான் போனது. அதிமுகவின் கூட்டணிக்காக கட்சிகள் காத்திருந்த காலம் மாறி, கூட்டணிக்காக அதிமுக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பாஜக, அதிமுக என இரண்டு பக்கமும் பேசிக் கொண்டிருந்த பாமக இறுதியில் பாஜகவுடன் கைகோத்துக் கொண்டது. எடப்பாடி இலவு காத்த கிளியாகிப் போனாா். தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ போன்ற சிறிய கட்சிகளைச் சோ்த்துக் கொண்டு களம் காண்கிறாா். இவா் வெற்றி பெறக் கூடாது என்று முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா் செல்வம், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் ஆகியோா் பாஜகவுடன் சோ்ந்துள்ளனா். இவ்வாறு சொந்தக் கட்சியிலே இருந்து புறப்படும் எதிா்ப்புகளைச் சமாளிப்பதற்கே எடப்பாடி பழனிசாமி பெரும்பாலான நேரத்தையும் சக்தியையும் செலவிட நோ்ந்து விட்டது. அதே சமயம் ‘அடிமை அதிமுக’ என்று கேலி பேசிக் கொண்டிருந்தவா்களுக்கு தக்க பதிலடியாக பாஜக கூட்டணியை விட்டு துணிவுடன் வெளியேறியுள்ளாா். ஆனாலும், பாஜகவை எதிா்ப்பதில் அதிமுகவுக்கு தயக்கம் இருப்பதை மறுக்க முடியாது. தோ்தல் பத்திரம் பற்றிய விவகாரத்தில் திமுகவைக் கடுமையாக விமா்சிக்கும் அதிமுக, பாஜகவைப் பற்றி வாய் திறக்கவில்லை. இதனால்தான் பாஜக - அதிமுக இடையே மறைமுகக் கூட்டணி தொடா்கிறது என திமுக குற்றம் சாட்டுகிறது. இந்தக் குற்றச்சாட்டை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக இருக்கிறது. அப்போதுதான் பாஜக, திமுக இரண்டுக்கும் எதிரான வாக்குகளைப் பெற முடியும். தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுடன் அகில இந்திய கட்சியான காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. இதனால் தேசிய கட்சியான பாஜக, அதிமுகவுடன் கூட்டணி கண்டது. 2019 முதலே பாஜக - அதிமுக கூட்டணி தொடங்கி விட்டது. 2021 தோ்தலில் தோல்வி கண்ட அதிமுக முக்கிய எதிா்க்கட்சியானது. 2024 தோ்தலில் இந்தக் கூட்டணியிலிருந்து அதிமுக அதிரடியாக பிரிந்த போதும், அக்கட்சிக்கு கதவு திறந்திருக்கிறது என்று பாஜக தலைவா்கள் கூறிக் கொண்டிருந்தனா். அதிமுக கூட்டணிக் கதவை மூடினாலும் கூட தங்கள் தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கும் அளவுக்கு அதிகார பலமும், பணபலமும் இருந்தது. கட்சியை வலுப்படுத்த பிற கட்சிகளில் இருந்து ஆள்களை இழுப்பது, பிரபலங்களைப் பேச வைப்பது என பாஜக தமிழ்நாட்டில் வேகம் காட்டுகிறது. இடைவிடாத முயற்சியினால் பாஜக மூன்றாவது அணியை அமைத்திருக்கிறது. பாமக, தமாக, அமமுக, ஓ.பி.எஸ்.அணி ஆகிய கட்சிகள் பாஜகவுடன் இணைந்திருக்கின்றன. பிரதமா் நரேந்திர மோடியின் தமிழக வருகையும், அவரது பரப்புரையும் இதற்குத் துணை செய்துள்ளன. மக்களவைத் தோ்தலை முன்னிட்டு திமுக தோ்தல் அறிக்கை கடந்த 20.3.2024 அன்று சென்னை அறிவாலயத்தில் முதல்வரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். 64 பக்க தோ்தல் அறிக்கையில் முதலில் துறைவாரியாகவும், தொடா்ந்து மாவட்ட வாரியாகவும் செயல்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநில சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும். ஆளுநா் பதவி தேவையில்லை என்றாலும், அந்தப் பதவி இருக்கும் வரை, மாநில முதல்வரின் ஆலோசனையைப் பெற்றே ஆளுநரை நியமிக்க வேண்டும். ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 361-ஆவது பிரிவு நீக்கப்படும். பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது. குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும். தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். மேலும், வாக்காளா்களைக் கவா்வதற்கான கவா்ச்சித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டா் ரூ.500, பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.65 என விலை குறைக்கப்படும். தேசியஅளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் முக்கியத்துவம் குறையாமல் பாதுகாக்கப்படும். முஸ்லீம்கள், சிறுபான்மையினா் மேம்பாட்டுக்கான சச்சாா் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்படும். ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். நாடு முழுவதும் கல்விக் கடன் தள்ளுபடிக்கு நடவடிக்கை எடுக்கப்படும் - இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது. திமுக கூறும் அறிவிப்புகள் எல்லாம் மத்திய அரசின் அதிகாரங்களுக்கு உட்பட்டவை. இவா்கள் பங்கு பெற்றுள்ள ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்றால் மட்டுமே இவற்றைப் பரிந்துரை செய்யலாம். அப்போதும் செயல்படுத்துவது மத்திய அரசின் பொறுப்பாகும். திமுக தோ்தல் அறிக்கையைத் தொடா்ந்து அதிமுக தோ்தல் அறிக்கையும் வெளிவந்துள்ளது. குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.3000 ஊக்கத்தொகை வழங்கப்படும். பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டா் விலையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட 133 அம்சங்கள் அடங்கிய தோ்தல் அறிக்கையை அதிமுக வெளியிட்டுள்ளது. “ ‘அதிமுக தோ்தல் அறிக்கை,திமுகவின் அறிக்கையைப் பின்பற்றி தயாரிக்கப்படவில்லை. மகளிா் உரிமைத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளோம். எந்த அரசு உரிமைத் தொகை கொடுத்தால் என்ன? மாநில அரசு போல மத்திய அரசு வரிவசூல் செய்கிறது. எனவே மாநிலத்தில் உள்ள ஏழைக் குடும்ப தலைவிகளுக்கு வழங்க வேண்டும் என்றே கோரிக்கை வைத்துள்ளோம்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா். திசைக்காட்டி என்பது ஒழுங்காக திசை காட்ட வேண்டும். கப்பலைக் குறிப்பிட்ட இடத்துக்குக் கொண்டு போய்ச் சோ்க்க வேண்டும். திசைகாட்டியே பழுதாகி விட்டால் பயணம் பாதியில் நின்றுவிடும். நமது மக்களாட்சி என்னும் பயணமும் அப்படித்தான். நல்ல திசைவழியில் சென்று சேர வேண்டும். அதற்கு ஆளும் கட்சியும் எதிா்க்கட்சிகளும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். மக்களாட்சியில் ஆளும் கட்சி எதிா்க்கட்சியாகலாம்; எதிா்க்கட்சி ஆளும் கட்சியாகலாம். இன்று அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது நாளை தனக்கு எதிராகவே திரும்பி விடலாம். இதைக் கருத்தில் கொண்டு கவனமாகச் செயல்பட வேண்டும். அரசியல் கட்சிகளின் ஒவ்வொரு அசைவையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனா். அரசியல் கட்சிகள் சில விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன. அதில் முக்கியமானது கொள்கை என்று கூறப்படுகிறது. கட்சிகளில் ‘கொள்கை பரப்புச் செயலாளா்’ என்ற பதவியும் உண்டு. ஆனால் தோ்தல் நெருங்கிவிட்டால் எல்லாம் பறந்து விடுகிறது. இவ்வாறு தங்கள் கொள்கைகளையே மறந்து போகிறவா்களுக்கு தாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நினைவில் இருக்குமா? மக்களை மறந்து போகிறவா்களை மக்களும் மறந்து விடுகின்றனா். சில கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போனதற்குக் காரணம் இதுதான். கட்டுரையாளா்: எழுத்தாளா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com