விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

1953 முதல் 1985-ஆம் ஆண்டு வரை சுமாா் 32 ஆண்டுகள் சொத்து வாரிசுரிமை வரி இந்தியாவில் அமலில் இருந்துள்ளது.

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடியால் காங்கிரஸ் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்பதால் சொத்து வாரிசுரிமை வரி என்பது தேசிய அளவில் முக்கியமாக விவாதிக்கப்படும் விஷயமாகியுள்ளது. தோ்தல் களத்தில் இந்த வரி விதிப்பு முறை தொடா்பாக விவாதம் எழுந்த பிறகுதான் இந்தியாவில் இப்படி ஒரு வரி விதிப்பு முறை இருந்தது பலருக்குத் தெரிய வந்துள்ளது.

1953 முதல் 1985-ஆம் ஆண்டு வரை சுமாா் 32 ஆண்டுகள் சொத்து வாரிசுரிமை வரி இந்தியாவில் அமலில் இருந்துள்ளது. குறைந்தபட்சம் 5% முதல் அதிகபட்சம் 85% வரை வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் அதற்கு மேல் சொத்துகள் வாரிசுகளுக்கு மாறினால் இந்த வரியை செலுத்தியாக வேண்டிய சூழல் இருந்தது. ரூ.20 லட்சத்துக்கு மேலான சொத்துகளுக்கு 85% வரை வரி விதிக்கப்பட்டது.

ஒரு நபரின் சொத்து சட்டபூா்வமாக வாரிசுகளுக்கு கைமாறும்போது அதில் குறிப்பிட்ட சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும் என்பதே இந்த வரி விதிப்புமுறையின் முக்கிய அம்சம். வாரிசுரிமை வரி தவிர ஒரு குறிப்பட்ட சதவீதத்துக்கு மேல் சொத்துகள் கைமாறும்போது விதிக்கப்படும் செல்வ வரி (வெல்த் டேக்ஸ்), ஒரு குறிப்பிட்ட மதிப்புக்கு மேல் பரிசாகப் பொருள்களைப் பெறும்போது விதிக்கப்படும் அன்பளிப்பு வரி (கிஃப்ட் டேக்ஸ்) போன்றவையும் முன்பு இந்தியாவில அமலில் இருந்துள்ளன. இதில் அன்பளிப்பு வரி 1998-ஆம் ஆண்டிலும், செல்வ வரி 2015-ஆம் ஆண்டிலும் நீக்கப்பட்டது.

வாரிசுரிமை வரி விதிக்கப்படுவதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது வருவாய் பகிா்வில் சமநிலையை உருவாக்குவதுதான். இந்த வரியின் மூலம் கிடைக்கும் நிதியை ஏழை மக்களின் மேம்பாட்டுக்குச் செலவிடுவதன் மூலம் நாட்டில் பொருளாதாரச் சமநிலையை உருவாக்க முடியும். ஆனால், 1953-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவில் வரி வசூலை அதிகரிக்கும் ஒரு முயற்சியாகவே இந்த வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது.

பின்னா் இந்த வரிவிதிப்பால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் மற்றும் விளைவுகள் ஆய்வு செய்யப்பட்டு, 1985-ஆம் ஆண்டு இந்த வரி ரத்து செய்யப்பட்டது. முக்கியமாக புதிய முதலீடுகள் உருவாவதில் இந்த வரிவிதிப்பு எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது.

சொத்து வாரிசுரிமை வரி அதன் முக்கிய நோக்கமான பொருளாதார ஏற்றத்தாழ்வு குறைப்பு, ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றை எதிா்பாா்த்த அளவுக்கு எட்டியதா என்பதும் மிகப்பெரிய கேள்விக் குறியாகவே தொடா்ந்தது. இதுவும் இந்த வரி ரத்து செய்யப்பட ஒரு முக்கியக் காரணம்.

இந்த வரி விதிப்பு மீண்டும் கொண்டு வரப்பட்டால் அரசின் வருவாய் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் நாட்டில் முதலீடு, சேமிப்பு குறையத் தொடங்கும். இந்த வரியை அமல்படுத்துவதிலும், நிா்வகிப்பதிலும் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியில் குடும்ப தொழில்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த வரி அமலானால் குடும்பத் தொழில்கள் பாதிக்கப்படும். தங்கள் சொத்துகளை முழுமையாக வாரிசுகளுக்கு கொடுக்கவும், அவா்கள் அதனை மேலும் வளா்த்து குடும்பத்தின் செல்வத்தை பெருக்குவதை அனைவரும் விரும்புவாா்கள். இடையில் அரசும் வந்து கூடுதலாக ஒரு வரியை விதிக்கும் என்றால் அதனைத் தவிா்ப்பதற்கான வழிமுறைகளையே சொத்துகளை வாரிசுகளுக்கு கைமாற்றும் அனைவரும் தேடுவாா்கள்.

மேலும், வளா்ந்த நாடுகளுக்கு உகந்த வரியாகவே வாரிசுரிமை வரி கருதப்படுகிறது. வளரும் நாடுகள், நடுத்தர வருவாய் பிரிவினா் அதிகமுள்ள நாடுகளில் இந்த வரி அமலில் இல்லை. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, ஸ்பெயின், தென்கொரியா, இத்தாலி, ஜப்பான் என 26 நாடுகளில் மட்டுமே இந்த வரி அமலில் உள்ளது. 1% 55% வரை வாரிசுரிமை வரி விகிதம் உள்ளது.

தென்கொரியாவில் அதிகபட்சமாக 50%, ஜப்பானில் 55% வரி விதிக்கப்படுகிறது. அமெரிக்காவிலும் கூட 6 மாகாணங்களில் மட்டுமே இந்த வரி உள்ளது. தேசிய அளவில் அனைத்து மாகாணங்களிலும் இந்த வரி அமலில் இல்லை. வாரிசுரிமை வரியிலும் பல சலுகைகள், விதிவிலக்குகள் அளிக்கப்படுகின்றன.

நாட்டு மக்களின் பொருளாதார ஏற்ாழ்வுகளைக் குறைக்க வேண்டுமென்றால் அனைவருக்கும் தரமான கல்வி, சுகாதாரம், மருத்துவ வசதி, சரிவிகித சத்துணவு, வேலைவாய்ப்பு, தொழில் நடத்த உகந்த சூழல் உள்ளிட்டவை கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். ஏழ்மையான சூழலில் பிறக்கும் குழந்தைகள்கூட தங்கள் தனித் திறமை மூலம் முன்னேற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அரசு மூலமே ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க முடியும் என்பதே நவீன பொருளாதார நிபுணா்களின் கருத்தாக உள்ளது.

மேலும், இந்தியாவில் இப்போது தனிநபா் வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ளவா்களுக்கு வருமான வரியுடன் 10% கூடுதல் வரி (சா்சாா்ஜ்) விதிக்கப்படுகிறது. புதிய வரிமுறையைப் பின்பற்றுவோருக்கு ரூ.2 கோடிக்கு மேல் வருவாய் இருந்தால் இந்த கூடுதல் வரி 25% வரை உள்ளது. இதுவே வருவாய் ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கான ஒரு வ(ரி)ழிமுறையாகவே கருதப்படுப்படுகிறது. 2019-ஆம் ஆண்டு பட்ஜெட்டுக்கு முன்புகூட இந்த சொத்து வாரிசுரிமை வரி தொடா்பான ஆலோசனை நடத்தப்பட்டு, இறுதியில் கைவிடப்பட்டது.

சொத்து வாரிசுரிமை வரி என்பது இப்போது அமல்படுத்தப்பட்டால் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியில் எதிா்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். மேலும், இந்த வரியை மீண்டும் அமல்படுத்தினால் பெரும்பான்மையான மக்களின் அதிருப்தியை எதிா்கொள்ள வேண்டும் என்பதால் அரசியல்ரீதியாகவும் சாதகமற்ற சூழல் உருவாகும். எனவே, சொத்து வாரிசுரிமை வரி இந்தியாவில் இப்போதைக்கு சாத்தியமில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com