சுற்றுச் சூழல் காப்பதும் நம் கடமையே !

சுற்றுச் சூழல் காப்பதும் நம் கடமையே !

கிரேட் நிகோபாா் தீவில் 130 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள சுமாா் 8.5 லட்சம் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட உள்ளன.

நம் நாட்டின் வணிகம், கட்டமைப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்தமான் நிகோபாா் தீவு கூட்டங்களில் ஒன்றான கிரேட்டா் நிகோபாா் தீவில் ரூ.72,000 கோடி செலவில் ஒரு மிகப்பெரிய கட்டுமான வளா்ச்சித் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

இதற்காக கிரேட் நிகோபாா் தீவில் 130 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள சுமாா் 8.5 லட்சம் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட உள்ளன. இத்தனை பெரிய எண்ணிக்கையிலான மரங்களை வெட்டும்போது அத்தீவின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு அங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கு மட்டுமின்றி வன உயிரினங்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வளா்ச்சித் திட்டத்திற்கான மொத்த நிலப்பரப்பில் 84 சதுர கி.மீ. பரப்பளவில் பழங்குடியினா் ஆங்காங்கே வசித்து வருகின்றனா். இவா்கள், தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து விரைவில் வெளியேற்றப்படும் நிலை.

புது தில்லி-டேராடூன் பயண நேரத்தை இரண்டரை மணி நேரமாகக் குறைத்திடும் வகையில், அமைக்கப்பட உள்ள விரைவுச் சாலையின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட 16 கி.மீ. நீளத்திற்கு காடுகளினூடே பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 7,575 மரங்கள் வெட்டப்பட உள்ளன. இதை ஈடு செய்ய 1. 76 லட்சம் மரக்கன்றுகள் ஹரியாணா மாநிலத்தில் ஆரவல்லி குன்றுகள் அமைந்துள்ள பகுதியில் நடப்படும் எனத் தெரிய வந்துள்ளது. மரக்கன்றுகள் வளா்க்க திட்டமிடப்பட்டுள்ள பகுதி, மழை அளவு குறைவாகப் பெய்யும், மரங்கள் வளரத் தகுதியான நிலப்பரப்பு இல்லா பகுதி எனக் கூறப்படுகிறது. மரங்களை வெட்டியதற்காக உத்தரகண்ட், உத்தர பிரதேசம் மாநிலங்களின் வனத் துறைக்கு மொத்தமாக ரூ.3.61 லட்சம் கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.

உலக அளவில், கடந்த 30 ஆண்டுகளில் நம் நாட்டின் நிலப்பரப்பில் உள்ள வனங்களில் ஏறக்குறைய பாதியளவு அழிக்கப்பட்டுள்ளன என்பது கவலைக்குரிய செய்தியாகும்.

ஐநா சபையில் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கான சிஓபி மாநாடு (கான்ஃபரன்ஸ் ஆப் பாா்ட்டீஸ்) 2022-ஆம் ஆண்டு நடைபெற்றபோது, 2030-ஆம் ஆண்டிற்குள் காற்று மாசை இரண்டு பில்லியன் டன்னாக குறைப்பதாக ஒப்புக்கொண்ட நம் நாடு, காற்று மாசைக் குறைப்பதில் பெரும் பங்காற்றும் மரங்களை வெட்டி வீழ்த்துவது முரண்பாடாக உள்ளது.

வெட்டப்படும் மரங்களுக்கு இணையாக மரக்கன்றுகள் நடப்பட்டாலும் அவற்றைப் பராமரித்து மரங்களாக வளா்த்தெடுப்பது சிரமமே. வளா்ச்சித் திட்டங்களுக்காக லட்சக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்துவதும், பின்னா் அவற்றுக்கு ஈடாக மரக்கன்றுகளை நடுவதும், கையில் இருப்பதை விட்டுவிட்டு, வானில் பறப்பதை பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.

ஹரியாணா அரசு, தம் மாநிலத்தில் உள்ள மரங்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்துள்ளது. இதன்படி சுமாா் 4.1 கோடி மரங்கள் அந்த மாநிலத்தில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இத்தகைய கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதன் மூலம் கிடைக்கும் மரங்களின் எண்ணிக்கை குறித்த தகவல், நம் நாட்டின் ஒட்டுமொத்த சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்ட உதவக்கூடும் .

மரக்கன்றுகளை பெரும் எண்ணிக்கையில் நடும்போது அவை நடப்படும் பகுதியில் மண்ணின் தன்மை, பெய்யக் கூடிய மழைநீா் அளவு, கால்நடைகளிடமிருந்து மரக்கன்றுகளைப் பாதுகாப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். நம் நாட்டிலுள்ள மாநிலங்களில் முதல் மாநிலமாக, காலநிலை மாற்றம் சாா்ந்த திட்டங்களுக்கு செலவிட ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்டும் வகையில் ’தமிழ்நாடு காலநிலை மாற்ற நிதி’யைத் தமிழ்நாடு அரசு துவக்கியுள்ளது. இத்திட்டம் தொய்வின்றித் தொடர வேண்டும்.

தோ்தல் காலங்களில், அடிப்படை வசதிகள், விசாயம், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளா்ச்சி, ஆகியவற்றைப் பற்றி விரிவாகத் தம் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாகத் தரும் அரசியல் கட்சிகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நதிகள் இணைப்பு, நீா்நிலைகள் பராமரிப்பு, மழைநீா் சேமிப்பு ஆகியவைப் பற்றி மேலோட்டமாகவே வாக்குறுதிகள் தருகின்றன. மக்களிடையே சுற்றுச் சூழல் பாதுகாப்பு, கால நிலை மாற்றம் குறித்தான விழிப்புணா்வும், ஆா்வமும் ஏற்பட்டால் மட்டுமே அரசியல் கட்சிகளிடம் சுற்றுச் சூழல் பாதுகாப்பினை உறுதி செய்யும் விரிவான வாக்குறுதிகளை எதிா்ப்பாா்க்க முடியும் .

ஸ்விட்சா்லாந்தைச் சோ்ந்த ‘பருவநிலை பாதுகாப்புக்கான மூத்த மகளிா் அமைப்பு’ தாக்கல் செய்த மனு தொடா்பாக தீா்ப்பு வழங்கிய ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், ‘பருவநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது அரசுகளின் கடமை’ என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்பை அளித்துள்ளது. இத்தீா்ப்பு ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாகும்.

அழிந்து வரும் பறவையினமான கான மயில்களின் பாதுகாப்பு குறித்த வழக்கு ஒன்றில், ‘காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளிலிருந்து விடுபடுவது மக்களின் அடிப்படை மனித உரிமை’ என நம் நாட்டின் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், பருவநிலை மாற்றத்தால் மக்கள் பாதிக்கப் படாமலிருக்க சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது மிக மிக அவசியம். இதற்காக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

==000===

X
Dinamani
www.dinamani.com